அகதிகள் குடியுரிமை தான் கேட்கிறார்கள் என உங்களுக்கு எப்படித் தெரியும்?அரசியல் தத்துவத்தில் புலமை கொண்ட ஒரு நண்பரிடம் இந்த மசோதா பற்றி விசாரித்தேன். அவரது பார்வை எனக்கு பெரிய மனத்திறப்பாக அமைந்தது. அவர் சொன்னதை சுருக்கமாகத் தருகிறேன்:
1) கேள்வி: இது போன்று மதத்தை வரையறையாக வைத்து ஒருவரை அகதியாக தீர்மானிப்பது முன்பு உலக நடைமுறையில் இருந்ததுண்டா?
பதில்: ஆம், ஆரம்பத்தில். சொல்லப் போனால் பதினாறாம் நூற்றாண்டில் பிரான்ஸில் கத்தோலிக்க மதம் ஆதிக்கம் செலுத்திய போது பிற மதத்தவர் கடுமையாக ஒடுக்கப்பட அவர்கள் அகதிகளாய் அடைக்கலம் நாடி புலம்பெயர்ந்து போனார்கள். இப்படி மதத்தின் அடிப்படையில் ஒருவரை அகதியாய் காணும் போது இருந்திருக்கிறது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லர் மதத்தின் பெயரால் யூதர்களை திட்டமிட்டு கொன்றொழித்த பிறகு மத அடிப்படையில் சிலரை மட்டும் அகதிகளாய் ஏற்பது, பிறரை நிராகரிப்பது எனும் போக்கு உலக அளவில் பின்னடைவு பெற்றது; அரசியல் காரணங்களுக்காய் ஒடுக்கப்படுவோரோ அகதிகள் எனும் வாதம் வலுப்பெற்றது. இப்போது மோடியின் ஆட்சியில் நாம் மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் போகிறோம் என்பதே வருத்தத்துக்குரியது.

2) கேள்வி: ஒருவருக்கு குடியுரிமை வழங்குவது ஒரு புறமிருக்க, அவர்கள் உடனடியாய் வாக்குரிமை பெறுவது நியாயமா? வாக்குரிமைத் தகுதிக்காக அவர்கள் சில வருடங்களாவது கூடுதலாக காத்திருக்காமல் உடனடியாய் வாக்களித்தால் அவர்களுக்கு அந்த உரிமையை அளித்த அரசு அவர்களை தேர்தல் கூலிகளாக பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தாதா? மேலும் அவர்கள் குடியுரிமை பெற்றாலும் மனதளவில் அவர்கள் இந்த மண்ணுடன் பிணைப்பு கொள்கிறார்கள், இங்குள்ள அரசியல் சூழலோடு இணக்கமும் அக்கறையும் அது குறித்து புரிதலும் கொள்கிறாரக்ள் என்பதற்கு என்ன உறுதி? தேர்தலில் வாக்களிக்க செல்லும் போது அவர்களின் இதயம் இந்தியாவில் தான் இருக்குமா?
பதில்: இரண்டு விசயங்களை இங்கே குறிப்பிட வேண்டும்: உடனடியாக குடியுரிமையுடன் வாக்குரிமையும் பெறுவார்கள் என்பது நிதர்சனம். ஆனால் சட்டத்தின் படி வாக்குரிமையை உடனடியாக அளிப்பது கட்டாயம் அல்ல. .தா. சிறையில் இருப்போருக்கு வாக்குரிமை இல்லை தானே; அதை ஒரு அடிப்படை உரிமையாக நம் அரசியலைமைப்பு காண்பதில்லை. ஆகையால் பத்து-இருபது வருடங்களுக்குப் பிறகு கூட வாக்குரிமையை அளிக்க முடியும். இதற்கு அரசு ஒரு தனிச்சட்டம் கூட கொண்டு வரலாம். சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை கூட இது தான்
இது ஒரு புறமிருக்க, மற்றொரு கேள்வி முக்கியமானது: அகதி உரிமை கோரி வரும் மக்கள் குடியுரிமையை கோருகிறார்கள் என இந்த மசோதா மறைமுகமாய் கோருகிறது. இது அபத்தம். அது எப்படி மத்திய அரசுக்கு உறுதியாகத் தெரியும்? அரசு இங்கே அகதிகளின் பக்கமிருந்து யோசிக்காமல் தன் அரசியல் வியூகத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறது. அகதி நிலை என்பதே தற்காலிகமானது. ஒருவர் தன் நாட்டில் உயிர் வாழும் நிலை மோசமாக இருப்பதால், தான் ஒடுக்கப்படுவதால் அகதி உரிமை கோரி வேறு மண்ணுக்கு புலம் பெயர்கிறார் - அவர் தன் குடியுரிமையை மறுத்து புது நாட்டின் குடியுரிமையைக் கேட்டு இங்கு வரவில்லை. இரண்டும் வேறு வேறு. மத்திய அரசு இரண்டையும் குழப்பிக் கொள்கிறது. ஒரு பாகிஸ்தானியர் நாளை இங்கே குடியுரிமை பெற்று விட்ட பின் அவர் திரும்ப தன் நாட்டுக்கே செல்ல விரும்பலாம். அப்போது என்னவாகும்? அவர் இங்குள்ள குடியுரிமையை துறந்து அங்கு மீண்டும் குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்க நேரும். பொதுவாக மக்கள் தம் சொந்த நாட்டுக்குத் திரும்புவதையே விரும்புவார்கள் - அவர்களுக்கு குடியுரிமை தருகிறேன் என ஆசை காட்டுவதே புண்ணை சொறிந்து விடுகிறது காரியம். புண்ணை ஆற அனுமதித்து ஆளை வீட்டுக்கு அனுப்புவதே ஒரு மருத்துவர் பண்ண வேண்டிய காரியம். மோடி-ஷா கூட்டணி நோயாளிகளை தன்னுடனே வைத்து கட்சிக்கு ஆள் சேர்க்க முயல்கிறது. அகதி நிலை என்றால் என்னவெனும் தெளிவே அவர்களுக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது.


Comments

Anonymous said…
Sir pls read jeyamohan sir old articles.now a days your points going to DMK supported