அசோகமித்திரன் யாருக்கு ஆதர்சமாக இருக்க முடியும்?
அசோகமித்திரன் யாருக்கு ஆதர்சமாக இருக்க முடியும்?

பெப்பர்ஸ் டிவி யுடியூப் சேனலில் ஜெயமோகன்படித்ததில் பிடித்ததுஎனும் நேர்காணலில் பேசுவதைக் கேட்டேன். அதில் ஓரிடத்தில் தன் ஆசான் என அசோகமித்திரனையே குறிப்பிடுகிறார். அவரது படத்தை காந்தியின் படத்துடன் தன் வாசிப்பறையில் மாட்டி வைத்திருப்பதாயும் ஒவ்வொரு நாள் காலையும் அவரைப் பார்க்கும் போது தனக்கு பெரும் உத்வேகம் கிடைப்பதாயும் சொல்கிறார். அதற்கு அவர் சில காரணங்களைக் குறிப்பிடுகிறார்:
கடும் வறுமையிலும் அவமானங்கள் நடுவிலும் அசோகமித்திரன் தன்னை எழுத்துக்காக ஒப்புக்கொடுத்து போராடியது - அந்த துணிச்சல், அர்ப்பணிப்பு. ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்.
அடுத்து, தமிழர்கள் பொதுவாகவே எல்லாவற்றையும் மிகையாக உக்கிரமாகப் பேசியே பழக்கம் என்றிருக்க அசோகமித்திரன் சன்னமான குரலில் அடக்கமான தொனியில் சுருக்கமாய் எழுதியவர்.


ஆனால் உண்மையில் அசோகமித்திரன் தமிழ் பொதுப்போக்குக்கு மாறாக எழுதியவர் அல்ல, அவர் ஜெயமோகனுக்கு நேர் எதிரான பாதையில் பயணித்தவர்
ஜெயமோகன் எதையும் மிகையாக ஆவேசமாக பிரம்மாண்டமாக சித்தரிப்பவர்; அசோகமித்திரன் கைக்குழந்தையின் தலைமயிரைத் தடவி விடுவதைப் போல மொழியை கையாண்டவர்; மிகவும் உணர்ச்சிகரமான இடங்களைக் கூட அழுத்தி சொல்லாமல் கடந்து போகிறார்.
 ஜெயமோகன் நியோகிளாசிக்கல் ரொமாண்டிக் பாணி எழுத்தை கையாண்டார், அசோகமித்திரன் மினிமலிஸ்ட் (“வெண்முரசைஅசோகமித்திரன் எழுத முயன்றால் 350 பக்கத்துக்குள்ளாவது முடிக்க முயன்று கைவிட்டு விடுவார்). ஜெயமோகனின் ஐரோப்பிய முன்மாதிரிகளும் அசோகமித்திரனின் முன்மாதிரிகளும் வேறுவேறு. அசோகமித்திரனிடம் காமு, ரேமண்ட் காரர், ஹெமிங்வே போன்றோரின் தாக்கம் தூக்கலாகத் தெரியும். இந்திய வாழ்வின் எதிர்பாராமைகள், போதாமைகள் ஆகியவற்றின் நடுவே மத்திய வர்க்கம் / கீழ் மத்திய வர்க்கம் மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து கடப்பதை அசோகமித்திரன் இருத்தலியல் பாணியில் எழுதினார் எனலாம். அவ்வாறு அவர் இருத்தலியத்தை இந்தியப்படுத்தினார் என சொல்லலாம்
ஆனால் ஜெயமோகன் இருத்தலியத்தை ஏற்காதவர்; இருத்தலிய எழுத்துக்கள் மீது அவருக்கு ஒரு பகடியான புறமொதுக்கல் உண்டு. அதற்குக் காரணம் அவர் இருத்தலியத்தை ஒற்றைத்தன்மையான பார்வை என கணிக்கிறார் என்பது. அதற்கு மாற்றாக அவர் பன்முக வாழ்க்கை நோக்குகள் சுழித்தோடும் ஒரு புனைவு வெளியை கட்டமைக்க நினைக்கிறார்; அவருக்கு வரலாற்றெழுத்தில் உள்ள பேரார்வமும் இதற்கு துணை போகிறது. ஆக வரலாற்றில் பல்வேறு போக்குகளுடன் மோதி தன்னை அழித்து இறுதியில் நிலைப்பட்டு ஆன்ம அமைதியை கண்டடைகிறவனே ஜெயமோகனின் நாயகன் ஆகிறான். அசோகமித்திரன் வரலாறு என்று அன்றாட வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் எடுக்க நேரும் சிக்கலான தேர்வுகள்; ஜெயமோகனின் வரலாறு பல ஊடுபாய்ச்சல்கள் கொண்ட அசலான காலம்; அந்த கால நீரோட்டத்தில் நீந்தும் மனிதர்கள் தனித்தனியாக தமக்கான தீவுகளைக் கண்டடைவதும் இந்த போராட்டமே வியர்த்தம், காலம் தான் நிஜமான நாயகன், காலம் தமக்கு மேலாக அனைத்தையும் கடந்து போகிறது என புரிதலைப் பெறுகிறார்கள். (ஜெயமோகனின் எல்லா நாவல்களையும் கிட்டத்தட்ட இந்த டெம்பிளேட்டில் பொருத்திட முடியும்). இப்படி வாழ்க்கையை பார்ப்பதற்கு அவரது மார்க்ஸிய பின்புலம் காரணம் எனலாம்
சுருக்கமாக சொல்வதானால் materialistic dialectics  (பொருள் முதல் ஏரணம்) ஜெயமோகனுக்கு முக்கியம். அசோகமித்திரன் தன் பாத்திரங்கள் இந்த பொருண்மையான முரணெதிர்வை (வறுமையை அவர் வரலாற்று, பொருளாதார காரணிகளால் ஏற்படுகிற ஒன்றாகப் பார்க்காமல் ஒரு அக-வறுமையாக மாற்றுகிறார்) எதிர்கொள்வதை விட கடந்து செல்வதில், அதை உணராமல் நிம்மதியாக வாழ்வதையே முக்கியமாகக் காட்டுகிறார்
காலத்தை எதிர்த்து நிற்பது ஜெயமோகனின் பாணி என்றால் காலத்தோடு அடித்து செல்லப்படுவதை புன்னகையுடன் உணர்த்துவது அசோகமித்திரனின் பாணி.


இப்படி நேரெதிரான போக்கைக் கொண்டவர் ஜெயமோகனுக்கு எப்படி ஆதர்சமாக இருக்கிறார் என்பது விசித்திரமே, அதேவேளை எனக்கும் இது நடந்துள்ளதை சொல்ல வேண்டும் - நான் நாவல் எழுதும் போது எனக்கு நேரெதிரான மொழியைக் கொண்டவர்களையே வாசிக்க விரும்புகிறேன். அப்போது கிடைக்கும் அகத்தூண்டுதல் ஈடற்றது. அதாவது நம் ஆதர்ச நாயகர்கள் நம்மைப் போன்றவர்களாக இருக்க அவசியம் இல்லை. இது எல்லா எழுத்தாளர்களுக்கும் (படைப்பூக்கம் கொண்டவர்களுக்கும்) பொருந்துமா எனத் தெரியவில்லை.  

Comments