ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும்சீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமீபமாக கூறியது இதுதான்: “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்”.

ராஜீவின் அயலுறவு முடிவுகள் முன்னுக்குப் பின் முரணானவை, நிதானமான தெளிவான நோக்கற்றவை, அதன் பலனாகத் தான் ஈழத்தில் கடுங்குற்றங்களை நமது அமைதிப்படை நிகழ்த்தியது; அயல் நாட்டுனான உங்களது ராஜதந்திர நகர்வுகளை பொதுமக்களை பகடையாக்கி செய்யக் கூடாது. ஆனால் இதை எல்லா வளர்ந்த நாடுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. அமைதிப்படை (பயங்கரவாதிகளையே கொல்கிறோம் எனும் தோரணையில், அதுவரை நட்புப் படையினராக இருந்தவர்களை தாக்குகிறோம் எனும் முரணுடன்) ஈழத்தில் பொதுமக்களை தாக்கியது, பெண்களை பலாத்காரம் பண்ணியது. எத்தனை எத்தனையோ படுகொலைகள். ஒரு உறுதி செய்யப்படாத கணக்கு மொத்தம் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாய் சொல்கிறது.இந்திய ராணுவ குற்றங்களில் ஒன்றே ஒன்றை இங்கு உதாரணமாக தருகிறேன்:
1987இல் அக்டோபர் மாதம் 21, 22 நாட்களில் யாழ்ப்பாண மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய மரணவேட்டை. புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த இந்திய ராணுவம் எதிர்பாராமல் யாழ்ப்பாண மருத்துவமனைக்குள் நுழைந்து சுமார் மருத்துவர்கள், செவிலியர், நோயாளிகள் உள்ளிட்டு 70 பேரை சுட்டு வீழ்த்தியது. கொலைகளைக் கண்டு அஞ்சி அழுத குழந்தைகளையும், சத்தமெழுப்புகிறார்கள் எனும் காரணத்துக்காக, சுட்டுக் கொன்றது. தண்ணீர் கேட்டவர்களையும் சுட்டனர். ரேடியாலஜி பிளாக்குக்குள் பதுங்கி இருந்த பொதுமக்களையும் படை யோசிக்காமல் சுட்டி வீழ்த்தியது. அடுத்து உயிருடன் இருக்கும் நோயாளிகள் முன்னிலையிலேயே பிணங்களை எரித்தது. மருத்துவர் சிவபாத சுந்தரம், மூன்று செவிலியருடன், கைகளை உயர்த்திய நிலையில் சரணடைய வந்தார். அவரையும் உடனடியாய் அமைதிப்படை சுட்டு வீழ்த்தியது.
மேலும் இதே வருடம் கொக்குவில் கிராமத்தில் 40 பொதுமக்களை சுட்டுக் கொன்றது.  1989ஆம் வருடம் வெல்வெட்டித்துறையில் குழந்தைகள் உள்ளிட்டு 64 பேரைக் கொன்றது.
இதற்கு, ராணுவம் பின்னர் அளித்த விளக்கம்எங்களுக்கு பொதுமக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை; புலிகள் பொதுமக்களுக்கு இடையில் பதுங்கி இருந்து தாக்குகிறார்கள்என்பது. மருத்துவமனையில் பதுங்கி இருக்கும் குழந்தைகள், மருத்துவர், செவிலிகள் எல்லாம் உங்களுக்கு புலிகளா?

 இது குறித்த சர்வதேச விசாரணையை இன்னமும் யாரும் நடத்தவில்லை. இந்திய அரசும் இந்த படையினரை விசாரிக்கவோ தண்டிக்கவோ இல்லை. (சிலரை தண்டித்திருக்கிறோம் என இந்திய ராணுவம் பெயரளவுக்கு சொன்னாலும் குற்றம் சாட்டப்பட்ட பலரையும் இந்திய ராணுவம் பின்னர் சர்வதேச அமைதி படைகளுக்கு அனுப்பி இருக்கிறது.)
 இந்த பின்னணியில் சீமான் பேசியதில் நிச்சயம் நியாயமுள்ளது - அதாவது எளிய மக்களின் உயிரிழப்புக்கு, பெண்கள் மீதான தாக்குதலுக்கு நீதி வழங்கப்படவில்லை, ராஜீவின் குடும்பமும் இதற்கு மன்னிப்பு கோரவில்லை எனும் பொருளில். ஆனால் இந்த பிரச்சனை இத்தோடு முடிந்து போகிற ஒன்றில்லை.
காஷ்மீரியரை இதே போல் கொன்றும் கண்ணில் பெல்லெட் குண்டுகளால் சுட்டும் பெண்களை பலாத்காரம் பண்ணியும் அழித்ததற்கும், இந்திரா படுகொலையை ஒட்டி பஞ்சாபியரை கொத்துக்கொத்தாய் கொன்றொழித்ததற்கும், பல பழங்குடிகளையும் போராடும் மக்களை சுட்டுக் கொன்றதற்கும், மதக்கலவரங்கள் எனும் பெயரில் பல்வேறு சிறுபான்மையினரை குண்டர்களால் தாக்கியும் வீட்டுக்குள்ளும் கடைக்குள்ளும் வாகனங்களுக்குள்ளும் வைத்து கொளுத்தி கொன்றதற்கும் இதுவரை எந்த அரசும் அதிகாரிகளும் மன்னிப்புக் கோரியதில்லை. இது தொடர்ந்து இறையாண்மை பொருந்திய நமது அரசுகள் நிகழ்த்தும் கொடுங்குற்றங்களின் கரும்பக்கம்
ராஜீவின் அரசு இதையே மற்றொரு நாட்டில் நிகழ்த்தியது. இதற்கு பல அதிகாரிகளும் துணை போயினர் என்பது மட்டுமே வித்தியாசம். இங்கு நாம் அமைதிப்படையின் குற்றங்களைப் பற்றிப் பேசும் போது இந்தியாவுக்குள் இவர்கள் நிகழ்த்தும் கொடுங்கொலைகளையும் பட்டியலிட வேண்டும். அந்த பின்னணிக்குள் வைத்தே இதையும் பேச வேண்டும். காங்கிரஸை மட்டும் பழிக்கக் கூடாது.

இந்த நோக்கில் தான் சீமானின் பேச்சில் ‘கடுகளவாவது’ நியாயமுண்டு என நினைக்கிறேன். அதாவது இத்தகைய உணர்ச்சிகர அறிக்கைகளால் தான் ஓரளவாவது இவர்களை சற்று நெளிய வைக்க முடியும்.

ஆனால் எந்த ஜனநாயக அரசமைப்புக்குள்ளும் நீதி கோருபவர்கள் பழிக்குப் பழி வாங்குவதை நியாயப்படுத்த முடியாது. அப்படி செய்தால் இந்த அரச பயங்கரவாதங்களை, வெளியுறவுத் துறையின் மீறல்களை, இனப்படுகொலைகளை கேள்வி கேட்கும் தகுதியை நாம் இழந்து விடுவோம். சீமானின் பேச்சின் பிரச்சனை அது சட்டென தமிழ்க் குரலை ஒரு காட்டுமிராண்டிக் குரலாக திரித்துக் காட்டுகிறது என்பது

அதே நேரம் சீமான் முன்வைத்ததை சற்று நாகரிகமான நிதானமான மொழியில் நாம் தேசிய, சர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து பேச வேண்டும். ராணுவம், காவல்துறை, வெளியுறவுத்துறை ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மட்டற்ற அதிகாரத்தை கண்டித்து, அந்த அதிகாரத்தை மட்டுப்படுத்த கோரிக்கை வைக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் நமது காவல்துறையும் ராணுவமும் நம் மண்ணிலும் வெளிமண்ணிலும் நடத்திய அத்தனை படுகொலைகளுக்கும், பாலியல் குற்றங்களுக்கும் அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். இதை ஒவ்வொரு கட்சியும் தம் ஆட்சியில் நடந்த குற்றங்களுக்காக செய்ய வேண்டும்; எவ்வளவு பெரிய போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக துப்பாக்கியை நீட்ட மாட்டோம் என உறுதிமொழியை இந்த ராணுவமும், காவலர்களும் இவர்களுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரிகளும் தலைவர்களும் எடுக்க வேண்டும். சாலையை சுத்தமாக வைப்போம் என்பது போன்ற உறுதிமொழிகளை விட இதுவே முக்கியம்.


Comments