எழுத்தும் பித்தும் (2)

எழுத்தாளனைப் பொறுத்தமட்டில், பித்தும் ஆளுமைப் பிறழ்வுகளும் எப்படி மிகைப்படுத்தப்பட்டன, அதன் வணிக நோக்கம் என்ன என பார்த்தோம். அடுத்து ஒரு கேள்வி: எழுத்தாளனுக்கு படைப்பூக்கம் மனப்பிறழ்வில் இருந்தே வருகிறது எனும் உளவியல் கூற்றில் உண்மையில்லையா?  
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நேன்ஸி ஆண்டிரியாசென் முப்பதே கலைஞர்களை பேட்டி கண்டு அதன் மூலம் படைப்பாற்றலுக்கும் மன அழுத்தத்துக்கு தொடர்பு உண்டு என கூறினார். பின்னர் கேய் ரேட்பீல்ட் ஜேமிசன் தனது ஆய்வில் படைப்பாற்றலுக்கும் bipolar disorder உளநோய்க்கும் தொடர்பு உண்டு என சொன்னார். இவர்கள் இருவருமே பைத்திய மேதை என படைப்பாளிகள் சித்தரிக்கப்படுவதற்கான கோட்பாட்டு பலத்தை அளித்தவர்கள். ஆனால் இவர்களின் ஆய்வு முடிவுகள் மிகையானவை மற்றும் ஆபத்தானவை என இன்றைய அறிஞர்கள் கருதுகிறார்கள். மனவியாதி வந்தவர்களுக்கே தெரியும் அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து தீவிரமாக எழுத முடியாது எனும் உண்மை. ஆனாலும் ஏன் இந்த தொன்மம் தொடர்ந்து பிரசித்தமாக உள்ளது என நாம் கேட்க வேண்டும்.


சின்ன சின்ன பிறழ்வுகளும் சமூக மீறல்களும் நம் வாழ்க்கைக்கு அவசியமாக இருக்கின்றன. அன்றாட வாழ்வில் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு பைத்தியக்காரத்தனங்கள் வெளிப்பட்டபடியே இருக்கின்றன

சின்ன வயதில் நான் நாய்க்குட்டியை தெருவில் இருந்து எடுத்து வளர்த்தேன். வீட்டுக்குள் வைக்க அனுமதி இல்லாததால் சோறு போட்டு அதனோடு நான் விளையாடும் வேளை தவிர அது பெரும்பாலும் தெருவில் தான் திரியும். விடுமுறையில் அதனோடு நான் வெளியே போனால் அது என்னை உற்சாகமாக பல்வேறு புதிய தெருக்களுக்கு அழைத்துப் போகும். ஒரே நாளில் இவ்வளவு இடங்களுக்குப் போகிறாயா நீ என வியந்து போவேன். ஒவ்வொரு தெருமுனையிலும் அதற்கு சில தோழமைகள் இருந்தனர். அந்த நாய்களுடன் வாலால் சம்பாஷித்து விட்டு சற்று நேரம் மணல்மேடுகளிலும் வறண்ட ஓடைகளிலும் ஓய்வு கொண்டு விட்டு சில தேநீர் கடைகளுக்கு பிஸ்கட் வாங்கித் தின்னும். மாலை நாலு மணிக்கு நான் பள்ளி விட்டு வரும் வேளையில் சரியாக வீடு திரும்பி விடும். பின்னர் நாங்கள் வீடு மாறிச்சென்ற போது நாயை பழையபடி ஊர்சுற்ற விட முடியவில்லை. கட்டிப் போட்டால் அது ஒப்பாரி வைத்து பெரிதாய் ஆர்ப்பாட்டம் பண்ணியது. வெளியே விட்டால் தன் பழைய இடங்களை தேடிப் போய் மூன்று நாட்கள் கழித்தே வீட்டுக்கு வரும். அதற்குப் பிறகு நான் வளர்த்த நாய்கள் எளிமையான, “சமூக விதிகளுக்குஏற்ப ஒழுகும் பிராணிகள். வீடே அவற்றுக்கு உலகம். திறந்து விட்டால் கூட வெளியே எட்டிப் பார்த்து விட்டு திரும்ப உடனே ஓடி வந்து விடும்
ஜி.நாகராஜன் குறித்து சுந்தர ராமசாமி ஓரிடத்தில் சொல்லும் போது ஜி.நாவின் இரவு அலைச்சல்களை குறிப்பிடுகிறார். இரவானால் ஜி.நாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவர் வேட்டையாட கிளம்பி விடுவார். போதையை ஏற்றிக் கொண்டு ரயில் நிலையம், இருட்டான பிரதேசங்கள் என விலைமகளிரை நாடி அலைவார். அவர்களை அடைவதில்லை, அவர்களுக்காக காத்து நிற்பது, அவர்களை தேடி அலைவதே அவருக்கு மிகப்பெரிய கிளர்ச்சியை அளிக்கும். விடிகாலையில் அரைகுறையான ஆடைகளுடன் மோசமான கோலத்தில் ரயில் நிலையத்தில் கிடப்பார். பகலில் மீண்டும் நல்ல தோற்றத்தில் இயல்புநிலைக்கு மீண்டு விடுவார். சமீபத்தில் ஒரு இளம்பெண் நிர்வாணமாக ஸ்கூட்டி ஓட்டிச் சென்ற காணொளி சமூகவலைதளங்களில் பரபரப்பை உண்டு பண்ணியது. (காவல்துறை அவருக்கு எதிராக வழக்கும் தொடுத்தது.) இது போன்ற ஏராளமான மீறல் சம்பவங்கள் அனுதினமும் நடக்கின்றன; மிகச்சில மட்டுமே நம் பார்வைக்கு வருகின்றன. எனக்கு இந்த இருட்டு சாகசங்களைக் காணும் போது என் முதல் நாயின் தெரு வாழ்க்கை நினைவுக்கு வரும். நமது அன்றாட வாழ்க்கை எவ்வளவு பெரிய சிறைவாழ்க்கை என்பது நமக்கு பெரும்பாலும் புலனாவதில்லை. சுதந்திரம் உள்ளதாக ஒரு தோற்றம் நம்மை ஆறுதல்படுத்துகிறது. ஆனால் ஒருகாரணம்இல்லாமல் நம்மால் பொதுவெளியில் சத்தமாக சிரிக்கக் கூட முடியாது என்பதே உண்மை. எழுத்தாளன் மீறல் என்பதை கலைக்குள் தொடர்ந்து நிகழ்த்த எத்தனிப்பவன்; ஒரு எல்லைக்கு உட்பட்ட மீறலே சுவாரஸ்யமான வாசிப்பனுபவம் ஆகிறது. சில படைப்பாளிகள் அன்றாட வாழ்விலும் மீறலை நிகழ்த்தும் உரிமை தனக்குள்ளதாக கருதலாம். அதை சமூகம் அனுமதிக்கையில் அவன் கொண்டாடப்படுவான் (கேரளாவில் பஷீருக்கு நடந்ததைப் போல); அல்லது பரிகசிக்கப்படுவான் (பிரான்சிஸ் கிருபாவுக்கு இங்கு நடந்ததைப் போல).

நாம் புரிந்து கொள்ள வேண்டியதை இதைத் தான்: பைத்தியக்காரத்தனங்களே நம் அன்றாடத்தை மகிழ்ச்சியாக்கின்றன; ஆழமும் அர்த்தமும் கொண்டதாக்குகின்றன. ஒரு எழுத்தாளனின் வாழ்விலும் அப்படித்தான், ஒரே வித்தியாசம் பித்து அவனுக்கு ஒரு selling point ஆகவும் இருக்கிறது.


நன்றி: தடம், ஆகஸ்ட், 2019

Comments