இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது மட்டுமல்லஇலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது என்னை பெரிதாய் ஆச்சரியப்படுத்துவதில்லை. உங்களையும் தான்
ஒவ்வொரு இதழ் தொடங்கப்படும் போதும் அதன் நிறுவனர் / ஆசிரியருக்கு ஒரு கணக்கு இருக்கும், இலக்கு, தேவையின் பொருட்டான கணக்குகள் இருக்கும். சிற்றிதழென்றால் அது குழுநடவடிக்கையின் நீட்சியாகவே இருக்க முடியும். குழு நடவடிக்கையென்றால் அரசியல் நடவடிக்கை அல்ல, இலக்கிய ஆர்வம் கொண்டோர் சில கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து இதழ் ஒன்றை நடத்துவது, அதன் வழி நாம் நம்பும் வகையில் இலக்கிய தடமொன்றை அமைக்க முயல்வது. அந்த குழு உடையும் போதோ உறுப்பினர்கள் ஆர்வம் இழக்கும் போதோ இதழ் நின்று போகும். நானே இரு சிறுபத்திரிகைகளை நண்பர்களுடன் இணைந்து சில மாதங்களில் இருந்து ஒன்றரை வருடம் வரை நடத்தி இருக்கிறேன். இதைப் படிக்கும் உங்களில் சிலர் கூட செய்திருக்க கூடும். நீங்கள் இணைய இதழாகவே நடத்தினால் கூட அன்றாட வாழ்க்கையின் கட்டாயங்களுக்கு மத்தியில் அதை செய்வது ஒரு கட்டத்தில் உங்களை சோர்ந்து போகவே செய்யும்

இது பணம் சம்மந்தப்பட்டது மட்டுமில்லை. யாராவது லாபமோ வருமானமோ இல்லை என்பதற்காக குடி, சிகரெட் போன்ற கேளிக்கைகளை நிறுத்தியதாக கேட்டிருக்கிறீர்களா? சூதாடிகள் என்றாவது நிறுத்தி இருக்கிறார்களா? இலக்கிய நாட்டத்திலும் இன்பம் உண்டு. அதிலும் ஒரு மெல்லிய போதை உண்டு. ஆனால் அதை தக்க வைக்க முடியாமல் பண்ணுவது அதன் தீவிரமும் எண்ண / உணர்வுக்குவிப்பும். ஒரு சிறுபத்திரிகையை ஒருவர் நடத்துவதோ அல்லது குறைந்த பட்சம் அதை படிப்பதில் சிலர் நினைப்பது போல வாசிப்பு ஆர்வம் சம்மந்தமாக அல்ல. அது அவரை ஆட்கொள்ளும் ஒரு லட்சியம், ஒரு கனவு. வெட்டவெளியில் புயல் முன்பு போய் நின்று உறுதியை நிரூபிப்பது போலத் தான் இலக்கியத்தில் இருப்பது. வெறுமனே இலக்கிய பத்திரிகை ஒன்றை புரட்டிப் பார்த்து அது குறித்து சிந்திப்பவர்களைக் கூட நான் இவ்வாறே பார்க்கிறேன். நமது அன்றாட வாழ்க்கை சற்றே லகுவாக இருந்து, இப்படி புயலிடம் ஒப்புக் கொடுக்கும் திராணியை தந்தால் தான் நீங்கள் இலக்கியவாதியாக நிலைக்க முடியும். அல்லாவிடில் அன்றாடத்தை முழுக்க புறக்கணிக்க வேண்டும்

தடம்போன்ற வெகுஜன நிறுவனங்களின் இலக்கிய இதழ்கள் குறித்து ஒரு ஐயம் எனக்கு என்றுமே உண்டு. இதே போன்ற பளபளப்பான வண்ணத்தாள்களில் அதிக செலவுடன் அச்சிடப்படும் இலக்கிய இதழ்கள் சிலவற்றில் முன்பு நான் வேலை செய்து விரைவிலே இதழ் நிறுத்தப்பட்டதும் வேலையையும் இழந்திருக்கிறேன் என்பதால் இந்த முயற்சிகளின்வணிக நோக்கத்தைஅனுபவ ரீதியாக புரிந்து கொண்டிருக்கிறேன். “தடத்தின்பின்னணி விபரங்களை அறியேன் என்பதால் நான் இங்கு அது நிறுத்தப்படுவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. (இது போன்ற சந்தர்பங்களில் ஊகங்களை விநியோகித்து நாம் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.) 

தடத்தின்நோக்கம் எதுவாகினும் அதன் இலக்கியதடத்தைபாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். நல்ல கட்டுரைகள், கதைகள், கவிதைகள், பேட்டிகள் என தரமான இலக்கியத்தை அது நமக்கு அளித்திருக்கிறது. (சில படைப்புகள் அலுப்பு தந்தன என அதை விமர்சிப்பது ஒரு பெண்ணை முகம் அழகு தான், ஆனால் காலில் உள்ள மயிர்கள் அருவருப்பு என சொல்வதைப் போல. ஒரு பெண் என்றால் எல்லாமும் தான்.) “தடத்தில்வரும் கருத்துக்களுக்கு இங்கு உடனடியாக ஒரு தாக்கம், அதிர்வு ஏற்படுவதையும் கவனித்திருக்கிறேன் (தமிழ் ஹிந்துவைப் போல). ஆகையால் அது நடத்தியவர்களை, முதலீடு பண்ணியவர்களை, ஆசிரியர் குழுவில் இருந்தவர்களை பாராட்டுவோம், அவர்களுக்கு நன்றி சொல்வோம். எதிர்காலத்திலும் எந்த ஒரு இலக்கிய இதழ் விழுந்தாலும் நாம் அதை தொட்டு வணங்க வேண்டும், எச்சில் உமிழக் கூடாது. இந்த இறுதி விசயத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.

அராத்து, கேபிள் சங்கர் போன்றோர் இந்த இதழை கவைக்கு உதவாத வீண முயற்சி என பேஸ்புக்கில் சித்தரித்து எள்ளி நகையாடுவதன் காரணம் இதழ் மீதான அவர்களின் ஒவ்வாமை அல்ல, தீவிரமான எந்த ஒன்றின், கடுமையான மனக்குவிப்பை, அறிவுழைப்பை கோரும் எதன் மீதும் அவர்கள் கொண்டுள்ள ஒருவித அச்சத்தை தான் தான் இது காட்டுகிறது. இணையத்தில் பரவலாக பகிரப்படும் உடனடி வாசிப்புக்கான எழுத்துக்கள் மட்டுமே வாழ்க்கையை நிறைவு செய்யாது. ( அராத்து இதைபோஸ்ட்மாடர்னிசம்என்றெல்லாம் நியாயப்படுத்துவது வேடிக்கை. பின்நவீனத்துவத்தின் தத்துவப் பின்புலத்தை அறிந்தால் அதை அவ்வாறு அவர் வெற்று கேளிக்கைக்கான மாற்றுச்சொல்லாக பயன்படுத்த மாட்டார்.) இதை அவர்களும் அறிவார்கள்; ஆனால் அந்த புரிதலில் இருந்து தப்பிச் செல்ல விரும்பும் எஸ்கேபிஸ்டுகள் இவர்கள். பேய் நேரில் வந்தால் கூட சிரித்து கைகுலுக்கி கொள்வார்கள், ஆனால் தம் மனம் இசையிலோ இலக்கியத்திலோ கலையிலோ தெரியாமல் சில நொடிகள் ஆழமாக லயித்து விட்டால் உடனடியாக அந்த இடத்தை விட்டே ஓடி வந்து விடுவார்கள் என நினைக்கிறேன். இருவரும் வெளிப்படுத்தும் இந்த இலக்கிய விரோதம் ஒரு சுயவிரோதம் தான். ஒரு காகிதம் காற்றில் படபடத்துக் கொண்டே இருக்கிறது. அது தன்னை சுற்றி அமைதியாக வீற்றிருக்கும் பொருட்களைக் கண்டு எள்ளி நகையாடுகிறது. “பார் நான் எடையற்று எவ்வளவு ஜாலியாக இருக்கிறேன்என சீண்டுகிறது. ஆனால் அப்படி எடையின்றி இருப்பதே தான் பறந்து காணாமல் போய் விடுவோமோ எனும் பதற்றத்தை அவர்களுக்குள் உண்டு பண்ணுகிறது. அதுவே காற்றில் படபடக்க வைக்கிறது. தாம் உள்ளுக்குள் நிலையின்றி படபடக்க பக்கத்தில் உள்ளவர்கள் மீது கோபம் திரும்புகிறது. இந்த கோபம் இலக்கியம் வாசிப்பவனை நோக்கி  “பேட்டிக் கொடுத்து போட்டோ போட்டதினால் ஒரு காப்பி வாங்கியவர்கள்”, “கதை கட்டுரை வெளியாகி தானும் ஒர்முக்கியமானவர்களில் முக்கியமானவர் என்று சொல்லிக் கொள்ளமுனைபவன்,
இலக்கியத்துக்காகவே உயிர்வாழ்பவன் என்று வெளிப்படுத்திக் கொள்ளும் சூடோ மனப்பான்மை கொண்டவர்கள்.” என்றெல்லாம் காறி உமிழ வைக்கிறது.
 இப்படி யோசிக்கும் படி தள்ளப்படுவது ஒரு பரிதாப நிலை என்பதே உண்மை.

வெகுஜன துய்ப்புக்கு பயன்படாத எதுவும் தேவையில்லை என்பதே இவர்கள் சொல்வதன் சாராம்சம். எனில் நீங்கள் இன்று கொண்டாடும் எந்த படைப்பாளியும் இசைக்கலைஞனும் சினிமா படைப்பாளியும் தோன்றியிருக்க முடியாதே. வெகுஜன துய்ப்பின் உரத்தை காலங்காலமாக அளிப்பது தீவிரமான கலை செயல்பாடுகள் தாம். தீவிரமான, “நான்கு பேர் மட்டும் புழங்கும்கலை முயற்சிகள் அழித்தொழிக்கப்பட்டால் அதற்கடுத்து அழிவது வெகுஜன கலைகளாகவே இருக்கும்

ஆகையால் இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது மட்டுமல்ல (நான் தடத்தை மட்டுமே சொல்லவில்லை). அது நம் மொழி வெளிப்பாட்டின் அடிவேர் ஒன்றை அசைப்பது. மரம் வேறு வேர் வேறு அல்ல. மரத்தின் கிளைகளில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்கள், கனிகளை உண்பவர்கள், விழுதுகளில் ஊசலாடுபவர்கள் இதையும் யோசிக்க வேண்டும்

Comments