இந்தியாவின் உலகக்கோப்பை குடை சாய்ந்தது!


ஆம், சற்றும் எதிர்பாராத வேளையில் ஒரு பெரிய கனவு முடிவுக்கு வந்து விட்டது. இந்தியாவின் உலகக்கோப்பை விருட்சம் நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் முளையில் கிள்ளப்பட்டது

முதல் மூன்று மட்டையாளர்களை மட்டும் சார்ந்திருத்தல், சிரமமான ஆட்டச்சூழலில் ரன் சேகரிக்க 4-6 வரையில் அனுபவம் / திறன் கொண்ட மட்டையாளர்கள் இல்லாதது இந்தியாவை முக்கியமான வேளையில் கர்ணனின் தேர்க்கால் முறிந்தது போல வந்து தாக்குகிறது. பழைய படங்களில் ஹீரோ மாரில் குண்டு பாய்ந்த பிறகு ஐந்து நிமிடங்கள் மூச்சு விடாமல் வசனம் பேசுவது போல ஜடேஜா-தோனி கூட்டணி கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் முடிவு நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்திருந்தது தான்


மீண்டும் ஒரு வாய்ப்புக்கு அடுத்த நான்கு வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அப்போது தினேஷ் கார்த்திக், ஜாதவ், தோனி போன்ற வயதான, ஆட்டத்திறன் மங்கியவர்களை நம்பி இராமல் புது வீரர்களை கண்டுபிடித்து மத்திய வரிசை ஆட்டத்தை மெருகேற்ற வேண்டும். பேட்டிங் ஆல்ரவுண்டர்களை உருவாக்க வேண்டும்
தலைமையிலும் ஒரு மாற்றம் நல்லது - ரோஹித் ஷர்மா என்னுடைய தேர்வு. ஏனென்றால் கோலியின் கீழ் நீண்ட ஆட்டதொடர்களில் அரை இறுதி / இறுதிப் போட்டிகளில் இந்திய அணி சொதப்புகிறது. முக்கிய காரணம் நம்மால் நெருக்கடியை சிக்கலான சந்தர்பங்களில் கையாள முடியாதது.

 நியுசிலாந்துக்கு நம்மை விட நிதானம் அதிகம் உள்ளது இன்றைய ஆட்டத்தில் தெளிவாக தெரிகிறது. இறுதிப் போட்டியை வெல்லும் திறன் அவர்களுக்கு இல்லாமல் போகலாம், ஆனால் சரியான நேரத்தில் கூலாக ஆடுகிறார்கள். இந்தியாவோ இன்று சற்று choke ஆகி விட்டது.
 நமக்கு இன்னும் நிதானமான தொலைநோக்கு கொண்ட தலைவர் தேவை. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீக்கப்படுவதும் அவசியம். கோலி-ரவிசாஸ்திரி கூட்டணியால் உச்சபட்சமாக செய்ய முடிவது இது தான். பெரிய ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணி தம்பட்டம் பண்ணி கடைசியில் பாடை தூக்கி சுடுகாட்டை நோக்கி நடைபோடுவார்கள். இது இப்போதல்ல திரும்பத் திரும்ப நடக்கிறது - சேம்பியன்ஸ் டுரோபி நினைவுள்ளது. ஒரு தலைவராக தோனி உலகக்கோப்பையை வெல்ல காரணம் அவருக்கு ஒரு அணியை இறுதி கட்டம் வரை எடுத்துச் செல்ல முடியும், அவர் ஏற்கனவே நீண்ட தொடர்களை, டி-20 உலகக்கோப்பை உட்பட, வென்றிருந்தார் என்பது. கோலியின் வரலாறு நேர்மாறானது. சீக்கிரமே உணர்வுவயப்படும், திடீர் திடீரென முடிவுகளை மாற்றும் அவரது குழப்ப மனநிலை குறுந்தொடர்களுக்கு மட்டுமே ஏற்றது. ரோஹித் ஷம்ர்மாவின் மும்பை இந்தியன்ஸ் தொடரை தொடர்ந்து பலமுறை ஒரு தலைவராக வென்றளித்துள்ள அனுபவம் அவருக்கு உலகக்கோப்பை போன்ற தொடர்களில் வெகுவாக உதவும்.மஹிள ஜெயவர்த்தனே / ரிக்கி பாண்டிங் போன்ற ஒருவரை அணியின் பயிற்சியாளராக்க வேண்டும். ரவி சாஸ்திரி கோலிக்கு ஒரு டப்பிங் கலைஞர் மட்டுமே.

வேறென்னெல்லாம் காரணங்கள், பரிந்துரைகள்? பகிருங்கள்!

Comments

மாறும் நிறங்கள் எழுதிய ஆசிரியர் அல்லவா. சுருக்கமாகவே எல்லாவற்றையும் சொல்லி விட்டிர்கள்