இந்திய அணியின் மத்திய வரிசை சறுக்கலுக்கு யார் பொறுப்பு?


அன்புள்ள அபிலாஷ் ,
                          நியுஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்றதற்கு காரணம் 4ஆம் இடத்தில் ஸ்திரத்தன்மையோடு ஆடும் மட்டையாளர்இல்லாதது காரணமா அல்லது விஜயஷங்கர்  காயம் மத்தியவரிசையை பலவீனமாக்கி விட்டதா?

ஜானகிராமன்

அன்புள்ள ஜானகிராமன்
எண்கள் 4 மற்றும் 5 கடந்த சில வருடங்களாக நமக்கு வழுக்குப்பாறையாக உள்ளன. உலகக்கோப்பையிலும் இதுவே நமது பிரதான பலவினமாக இருந்தது.
இதற்கு இரு காரணங்கள்:
1) மத்திய வரிசையில் போதுமான திறமையானவர்களை நம்மால் அடையாளம் காண இயலவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் மத்திய வரிசை மட்டையாட்டம் போஷாக்காக இல்லை. ரஞ்சியில் வருடா வருடம் அதிக ரன்கள் குவிப்பவர்கள் ஒன்று துவக்க வீரர்கள் அல்லது மத்திய வரிசையில் யாராவது சோபித்தாலும் அவர்கள் திறமையானவர்களாக இல்லை. .பி.எல்லில் பாருங்கள், கொல்கொத்தா, பெங்களூர் போன்ற அணிகளில் கூட மத்திய வரிசையில் துவக்க வீரர்களே ஆடுகிறார்கள்.

2) இருக்கிற வீரர்களில் இருந்து திறமையான இளம் வீரர்களுக்கு கோலி அதிக வாய்ப்புகள் அளித்திருக்க வேண்டும். உதாரணமாய், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்றோருக்கு குறைந்தது 25 ஆட்டங்களாவது வாய்ப்புகள் அளித்திருக்க வேண்டும். ஆனால் பண்டை பாதி உலகக்கோப்பையில் கொண்டு வந்தார் கோலி. ஷ்ரேயாஸை அவர் அறிமுகமாகி பாதியிலேயே கழற்றி விட்டார். விஜய் சங்கரை கூட கோலி எதேச்சையாகவே கண்டுபிடித்து அணியில் வாய்ப்பளித்தார். ஆனால் அதுவும் போதுமான சாதனைகளுக்குப் பிறகு நம்பிக்கை உருவான பிறகு அல்ல. ராயுடுவின் இடத்தில் சங்கர் தேர்வான பிறகு அவர் தொடர்ந்து அவநம்பிக்கைக்கு உள்ளாகி பகடி பண்ணப்பட்டது இதனால் தான்.
மட்டையாட்டத்தைப் பொறுத்தமட்டில் கோலியின் தொலைநோக்கற்ற மேலாண்மை, தொடர்ச்சியற்ற தேர்வுகள் அணியை பாதாளத்தில் தள்ளின. கோலி தலைவரான பின் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு சிறந்த மட்டையாளராக உருவாகிய ஒருவர் கூட இல்லை. ஆனால் வீச்சாளர்களை அவர் நன்றாக கையாண்டுள்ளார். ஆச்சரியமாக மட்டையாளர்களை அவர் சரியாக புரிந்து கொள்வதாய் தெரியவில்லை.

கோலியின் மற்றொரு தவறு அவர் பிடிவாதமாய், கண்மூடித்தனமாய் தோனியின் 2011 உலகக்கோப்பை டெம்பிளேட்டை பின்பற்றியது. 2011இல் இந்திய அணியில் வயதான சீனியர் வீரர்கள் அதிகமாக இருந்தனர்; அவர்களுக்கு ஈடாக சில இளம் வீரர்களும் அணியின் ஆற்றலை பெருக்கினார். சச்சின், சேவாக், யுவ்ராஜ், நெஹ்ரா, சஹீர், கம்பீர், ஹர்பஜன் போன்ற வீரர்கள் அனுபவமும் திறனும் மிக்கவர்கள். இவர்களுடன் ரெய்னா, அஷ்வின், ஶ்ரீசாந்த் போன்ற இளைஞர்களும் புத்துணர்வூட்டினார்கள். கோலி இதே பாணியில் முப்பது வயதுக்கு மேற்பட்ட மத்திய வரிசை மட்டையாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளித்தார். இவர்களில் பலர் (கார்த்திக்கை போல 15 வருடங்களுக்கு மேலாக) தொடர்ந்து தம்மை அணியில் நிரூபித்து நிறுவிக் கொள்ள முடியாதவர்கள். இதன் விளைவு தான் இந்த உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் எண் 5இல் ஒரு நெருக்கடியான கட்டத்தில் கார்த்திக் ஆட வந்து பந்துகளையும் வாய்ப்புகளையும் வீணடித்தது. ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் நாம் கார்த்திக்கிடம் கண்ட அதே தேவையற்ற பதற்றம், மனக்குழப்பம், முதிர்ச்சியின்மை தான் இம்முறையும் அவரை வாய்ப்பை தாரை வர்க்க செய்தன. அனுபவத்தையும் வயதையும் கோலி குழப்பிக் கொண்டது தான் இது போன்ற தேர்வு அபத்தங்களுக்கு காரணம். ஜாதவ் விசயத்திலும் இவ்வாறே கோலி வைத்த அபரித நம்பிக்கை இவ்வாறு வீண் போனது.

கோலியின் அணித்தேர்வு மட்டுமல்ல அவர் அணியின் ஆட்டவரிசையை தீர்மானிப்பது கூட பலத்த விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. இந்த அரை இறுதி ஆட்டத்தில் எண் 7இல் அனுபவசாலியான தோனியை அனுப்பியது யாருக்கும் புதிதான விசித்தர முடிவு. அதுவும் இதுவரை நெருக்கடியான கட்டங்களில் எண் 4 / 5இல் அதிக ரன்கள் எடுத்து பழக்கமில்லாத, உலகக்கோப்பையில் பத்து ரன்களைக் கூட தாண்டாத கார்த்திக்கை அரை இறுதியில் அணி தத்தளிக்கையில் எண் 5இல் அனுப்பியது அனைவரையும் சிண்டை பிய்க்க வைத்தது. வித்தியாசமான முடிவுகளை எடுக்கலாம், தவறில்லை, ஆனால் அதற்கு ஒரு தர்க்க ஒழுங்கும் தொடர்ச்சியும் வேண்டும். கடந்த ஆட்டத்தில் இந்தியா நிச்சயம் வெல்லும் எனும் நிலை இருந்த போது கார்த்திக் அல்லது பாண்டியாவை எண் 3 / 4இல் அனுப்பி ஆட்ட அனுபவத்தை கொடுத்திருக்கலாம். அப்போது கோலி இறங்கி வந்து வாய்ப்பை முழுங்கி விட்டு, இப்போது ஊரே பற்றி எரியும் போது பிள்ளைப்பூச்சியை களத்தில் இறக்கி விடுவது என்ன மாதிரியான தீர்மானம்? கோலி அளவுக்கு எதிர்பாராத வகையில் முடிவெடுக்கிற, எடுக்கிற முடிவுகளை அதைவிட எதிர்பாராத வகையில் மாற்றுகிற மற்றொரு அணித்தலைவர் உலகில் இல்லை.

கோலியிடம் இருந்து இந்திய கிரிக்கெட்டை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!

அன்புடன் 
ஆர்.அபிலாஷ்


Comments