மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (3)

மிஷிமாவுக்கு மன்னர் மீது தனிப்பட்ட பிரியமோ மன்னராட்சி மீது மயக்கமோ இல்லை. ஆனால் நவீன கார்ப்பரேட் தாக்கம், எந்திரமயமாக்கலால் மக்கள் அடிமையாகி, ஆன்ம சாரத்தை இழக்கும் நிலை, பாண்பாட்டு வேர்கள் அறுக்கப்பாட்டு சமூகம் மலினப்படும் சூழல் ஆகியவற்றை எதிர்ப்பதற்காக அவர் மன்னரை, அவர் மீதான வழிபாட்டை, ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார். இந்த செப்புக்கு மூலம் மிஷிமா தெரிவித்த உண்மையானது ஹைடெக்கார் தனது தத்துவத்தில் பேசியது தான். நீட்சே ஜெர்மனியில் இருந்தபடிகடவுள் இறந்து விட்டார், மீமனிதன் தோன்ற வேண்டிய காலம் அருகாமையில் உள்ளதுஎன அறைகூவியது தான்.

ராணுவம் என்பது அன்றாடம் மரணத்துடன், பௌதீகமான போராட்டங்களுடன் சம்மந்தப்பட்டது; இதை நவீன கார்ப்பரேட் யுகத்தின் குளிர்பதனப்பெட்டிக்குள் இருக்கும் காய்கறி போன்ற மனித வாழ்க்கைக்கு மாற்றாக மிஷிமா பார்த்தார். கோட் சூட் அணிந்து வெள்ளைக்காரனுக்காக ஜப்பானில் இருந்து வேலை செய்வதை விட ஆயுதமேந்தி மரணத்தை தழுவுவது ஆத்மார்த்தமான, ஆழமான திருப்தி தரும் வாழ்க்கை என அவர் நம்பினர்
ஆனால் போரின் போது மட்டுமே ராணுவத்தினர் கூட மரணத்துக்கு அருகாமையில் செல்ல முடியும்; அதை ஸ்பரிசிக்க முடியும். ஜப்பானிய ராணுவம் போரில் ஈடுபடக் கூடாது என்பது அவர்களின் அரசியலமைப்பு சட்டம் சொல்வது. கார்ப்பரேட் ஆன்ம சீர்கேட்டில் இருந்து தேசத்தைக் காப்பாற்ற ஒரே வழி போர் தான் என நினைத்த மிஷிமா மீண்டும் மீண்டும் ராணுவத்தை ஆயுதமேந்தி போரிட்ட அனுமதிக்கும்படி அரசியலமைப்பை மாற்ற வேண்டும் கோரினார். அதற்காக நிறைய பத்திரிகைக் கட்டுரைகள் எழுதினார், கூட்டங்களில் பேசினார், அரசியல் தலைவர்களிடம் மன்றாடினார்; ஆனால் யாரும் செவி சாய்க்காத நிலையில் அவர் தானாகவே ஒரு ராணுவ வீரனாக கடும் பயிற்சிகள் மேற்கொண்டு, ஒரு சின்ன தனியார் ராணுவத்தை உருவாக்கி அவர்களின் தலைமையில் ஒரு சாமுராய் கலகம் செய்ய முயன்றார். இதுவே அவரது தற்கொலையில் போய் முடிந்தது.

முடிவாய், நாம் இன்னொரு கேள்வியையும் கேட்க வேண்டும். மரணம் ஏன் இவ்வளவு வசீகரமாய் இருக்கிறது?
மரணத்தை நாம் என்றுமே அறிய / அனுபவிக்க முடியாது; எதை அறியவே முடியாதோ அதுவே எல்லையற்ற முழுமை ஆகிறது. இறைவனை ஒவ்வொரு மதமும் அறிய முடியா இருப்பாய் காண்பது இதனாலே. மரணமும் இறைவனுக்கு அடுத்தபடியாய் முழுமையின் வாசலாய் உள்ளது. ஆனால் மரணத்தை அறிவதில் ஒரு பிரதான சிக்கல் உண்டு. மரணம் என்றால் என்ன என முழுக்க உணரும் முன்பே நாம் பரலோகத்தின் அழைப்பு மணியை அடித்துக் கொண்டிருப்போம். இப்போது, நகைமுரணாய், இந்த அசாத்தியமே முழுமையின் மிகப்பெரிய வசீகரத்தை மரணத்துக்கு அளிக்கிறது. அதனால் தான் நாம் மரணத்தை எதிர்கொள்கையில், துக்க வீட்டுக்குள் நுழைகையில், சிதைக்கு எரியூட்ட தயாராகையில் திகைப்படைகிறோம். இந்த திகைப்பை சமாளிக்கவே நிறைய ஈமச்சடங்குகளை நமது பண்பாடுகள் உருவாக்கி தந்துள்ளன. அவற்றையும் தாண்டி மரணம் என்றுமே நமது அன்றாட மனவொழுக்கின் அடியில் கிடந்து நம்மை வா என அழைத்தபடி இருக்கிறது
ஆக, மனித மனம் மரணத்தை நாடுவது ஒரு முழுமையை நாடுவதாகிறது. மிஷிமாவின் மனமும் அவ்வாறே முழுமையை நாடியது - ஆரம்பத்தில் கலையில், இலக்கியத்தில் நாடிய மனம் அவை போதாது என உணர்ந்து இப்போது பௌதீக உலகில், சமூக மனத்தில், தன் பண்பாட்டின் ஆழத்தில், இறுதியில் தன் தேகத்தின் அழிவில் முழுமையை நாடியது. இது எப்படி சாத்தியமாகும்?
நீங்கள் ஒரு பொருளையோ மனிதரையோ சாதனையையோ நாடுகையில் அது / அவர் கிடைத்ததும் அலுத்து விடுகிறது. நம் தேடல் அடுத்தடுத்த நாட்டங்கள், இலக்குகள் எனத் தொடர்கிறது. இதில் நாம் ஒரு முழுமையின்மையை, கசப்பை, அர்த்தமின்மையை மெல்ல மெல்ல உணரத் துவங்குகிறோம். இதற்கு ஒரு தீர்வு கனவுகளில் இருக்கிறது. சாத்தியமே இல்லாத அரசியல் சமூகப் புரட்சிகள், இலக்கிய இலக்குகள் தொடர்பான கனவுகளை பின் தொடர்வ்தில் இருக்கிறது. இந்த பின் தொடரும் முயற்சிகளில் ஆக உன்னதமானது மரணத்தை பின் தொடர்வது. அதை ஒருநாளும்அடைந்துவிட முடியாது என்பதே அதை முழுமையின் வாசல் ஆக்குகிறது. இதுவே மிஷிமாவின் வாழ்நாள் தேடல், ஏக்கம், கனவு என பிளானகன் தன் நூலில் நுணுக்கமாய் நமக்கு உணர்த்துகிறார். மிஷிமாவின் அந்த கொடூரமான முடிவுக்கு அவர் ஒரு அழகான, ஆழமான விளக்கத்தை அளிக்கிறார்.
மிஷிமாவின் ஒரே தவறு மரணத்தை திட்டமிட்டு அடைய முயன்றதே. அவ்வாறு அடைந்து விட்டால் இந்த மனித வாழ்வில் என்ன மீதி இருக்கிறது? நாம் மனிதராகவே பின்னர் இருக்க முடியாதே.

Yukio Mishima எனும் இந்நூலை படித்து முடிக்கையில் நமக்கு வாழ்வதும் சாவதும் எப்படி ஒரே சமயம் அபத்தமாக இருக்கிறது எனத் தோன்றுகிறது.

நன்றி: விகடன் தடம், ஜூன் 2019

Comments