ஜீவஜோதி விவகாரம்: குற்றங்களுக்கு காரணம் ஒழுக்கமின்மையா? (3)

நாம் பெரும்பாலான செய்திக்குறிப்புகளில் காண்பது போல அண்ணாச்சி எதேச்சையாக தெருவில் பார்த்த ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு அவளுக்காக இவ்வளவு அபத்தமான (அத்துடன் கொடூரமான) குற்றமொன்றை பண்ணி காட்டிக் கொண்டிருக்க மாட்டார்ஆணின் மனம் முடிவுறாத காமத்தின் மீது பைத்தியமாக அலையக் கூடியது. பெண்ணின் காமத்துக்கும் கூட இந்த இயல்பு உண்டு தான் என்றாலும் ஆணைப் போல் ஒரு பெண் வேட்டை மனத்துடன் தன் இணையை துரத்துவதில்லை. ஜீவஜோதிக்கும் அண்ணாச்சியுடன் நெருங்கிப் பழகிய பிற பெண்களுக்குமான வித்தியாசம் ஜீவஜோதி தன் சுதந்திரத்தை முக்கியமானதாக கருதுகிறார், தன்னை நிரந்தரமாக யாரும் அடிமையாக்க அவர் விரும்பவில்லை என்பது. அடிமையாகும் பெண்ணிடம் ஆணுக்கு அன்பும் விருப்பமும் இருக்கும், ஆனால் காமம் குறையும். தன்னிடம் இருந்து அவர் தொடர்ந்து தப்பித்துச் செல்வதே அண்ணாச்சியை மூர்க்கம் கொள்ள வைக்கிறது. ஒரு வேட்டைக்காரனின் மூளை துரத்திச் செல்லும் போது தான் கூர்மையாகும், அப்பிராணியை கொல்வதை விட துரத்தும் திகில் தான் அவனை உத்வேகமாக வைக்கும். அண்ணாச்சி இப்படி சிந்திப்பவர் எனத் தெரிகிறது. மற்ற பெண்களைப் போல் அல்லாமல் ஜீவஜோதி துவக்கத்தில் இருந்தே அண்ணாச்சியை பிடிக்குள் முழுக்க அடங்காமல் தப்பிச் சென்றபடி இருக்கிறார். அவ்வப்போது நம்பிக்கை ஊட்டி, ருசி காட்டி விட்டு சட்டென விலகிச் சென்று காய விடுகிறார். சவால் விடுகிறார்


மேலும், அண்ணாச்சி தன் நிறுவன ஊழியர்களின் பொழுதுபோக்கு நேரம், விடுமுறை, உடல்தோற்றம், அவர்களின் குழந்தைகளின் படிப்புக்கான உதவி என ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்துபவர்; இது அடிப்படையில் ஒரு நிலச்சுவாந்தார் மனநிலை. ஆகையால் தான் தன் காதலியை மற்றொரு ஆண், அவன் கணவனே ஆனாலும், புணரக் கூடாது என நினைக்கிறார். அண்ணாச்சியின் அதிகார வட்டத்துக்குள் செல்லும் ஒவ்வொருவரின் உடலும் அண்ணாச்சிக்கே சொந்தம். இது காமத்துக்கான கோரிக்கை மட்டுமல்ல. அண்ணாச்சிக்கு தனிமனித சுதந்திரத்தின் அவசியம் எல்லாம் புரிய வாய்ப்பில்லை

ஜீவஜோதி அடிப்படையில் கலகமனம் கொண்டவர். இத்தகைவரிடம் எதையும் வற்புறுத்திச் சொன்னால் முரண்டுபிடிப்பார்கள். தாம் வலியுறுத்தப்படுகிறோம் எனும் எண்ணமே அவர்களுக்கு மூச்சுத்திணறலாக மாறும். அதனால் தான் சாந்தகுமாருடனான காதலை தன் பெற்றோர் ஏற்கவில்லை என்றதுமே ஓடிப் போகிறார்; காதலனின் பெற்றோரும் ஏற்கவில்லை என்றதும் அவர் அவசரமாக பதிவுத்திருமணம் பண்ணிக் கொள்கிறார். ஒருவேளை அண்ணாச்சி இவ்வளவு ஆவேசமாய் ஜீவஜோதியின் தனிப்பட்ட வாழ்க்கையை கட்டுபடுத்த விழையாவிடில் அவர் சாந்தகுமாரை இவ்வளவு அவசரமாய் மணம் புரிந்திருக்க மாட்டார் எனத் தோன்றுகிறது.

ஜீவஜோதி திருமணத்துக்குப் பின் அண்ணாச்சியுடன் மீண்டும் நெருங்கி இருக்க வேண்டும். அப்போது அண்ணாச்சி மேலும் மூர்க்கமாய் அவர் மீது கட்டுப்பாட்டை விதிக்கிறார். “எனக்குக் கட்டளையிடுவது போலவே அவரது பேச்சுக்கள் இருக்கும். எனது கணவரிடமிருந்து என்னைப் பிரிக்கும் நோக்கிலேயே அவரது பேச்சுக்கள் இருக்கும்.”
எந்த இடத்திலும் அண்ணாச்சி எப்படி என் மீது மோகம் கொள்ளலாம் என அவர் சீறி எழுவதில்லை. பெரும்பாலான பெண்கள் இந்த இடத்தில் அந்நிய ஆணின் பின் தொடரை ஒரு அவமதிப்பாக கருதுவார்கள். ஆனால் ஜீவஜோதி வேறு விதமாக சிந்திக்கிறவர். அவரது பிரதான கவலை தான் கட்டுப்படுத்தப்படுவது, “கட்டையிடப்படுவதுகுறித்தே. இந்த கட்டளைகளில் இருந்து அவர் தப்பித்து ஓடியபடியே இருந்திருக்கிறார்.

அண்ணாச்சியுடையது ஒரு ஒருதலைக் காமம் என்றோ, ஜீவஜோதி அபலை என்றோ பேசுவது ஒருதலைப்பட்சமானது என இப்போது தெளிவாகிறது. இது திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்டகள்ளஉறவு என்பதே உண்மையாக இருக்க வேண்டும். சோதிட நம்பிக்கையின் காரணமாய் அண்ணாச்சிக்கு நேர்ந்த சறுக்கல் என இந்த வழக்கை பார்ப்பது ஒரு முட்டாள்தனம். சோதிட பலன்களை அவர் நம்பி இருக்கலாம். ஆனால் சோதிடத்துக்காக சம்மந்தமில்லாத பெண்ணொருத்தியின் கணவனை ஒருவர் கொலை பண்ண மாட்டார்
ஒழுக்கக் கேட்டினால் விளைந்த குற்றம் என்றும் நான் இதைக் காணவில்லை. எல்லா பெண்களும் அடிமைத்தனத்தை உறவில் விரும்ப மாட்டார்கள். அப்பெண்கள் உங்களிடம் கடன் பெற்று, உங்களது செல்வாக்கின், நிதியுதவியின் கீழ் வாழ்ந்தாலும் கூட. இத்தகைய பெண்கள் நெருக்கடியின் போது தம் உடலை விட்டுத் தரலாம். ஆனால் அடிமையாக இருப்பதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. சாந்தகுமாருடன் ஓடி வந்து இவ்வளவு பாடுகள் பட்டு, களங்கப்பட்டு வேதனைப்பட்டு இரண்டாவது திருமணத்தில் குழந்தை இறந்து இப்போது சொந்தமாக தொழில் செய்து வாழத் தொடங்கி உள்ள ஜீவஜோதி பேசாமல் அண்ணாச்சியின் மூன்றாம் மனைவியாக வாழ்ந்திருந்தால் சொத்தும் செல்வாக்குமாய் படோபமாய் வாழ்ந்திருக்கலாமே என முகநூலில் சிலர் பின்னூட்டங்களில் கேட்டிருப்பதை கவனித்தேன். சாந்தகுமாரின் மீதுள்ள உண்மையான காதலினால் அப்படி வசதியான ஒரு வாழ்வை அவர் மறுத்து விட்டாரா?
திருமணமான ஒரு பெண்ணை கற்பொழுக்கமானவளாய் காணும் விருப்பம் நம்மில் பலருக்கும் இருக்கலாம் என்றாலும் எதார்த்தம் நம் கனவுகளுக்கு உட்படுவதில்லை. அண்ணாச்சியுடன் ஒரு உறவு துவங்கி இருந்த போதும் கூட அவர் தன் விருப்பப்படி, சமூகம் ஏற்கும் ஒரு குடும்ப வாழ்வில் ஈடுபடவே நினைத்திருப்பார். இந்திய மத்திய வர்க்க சமூகப் பெண்கள் எல்லாரின் கனவும் சமூக மதிப்பும் சுதந்திரமும் பொருந்திய வாழ்க்கை தனக்கு வேண்டும் என்பதே. அண்ணாச்சியின் பணத்தை ஏற்றிருந்தால் ஜீவஜோதிக்கு சொகுசு வாழ்க்கை அமைந்திருக்கும், நிச்சயம் நிம்மதி இருந்திருக்காது, ஏனென்றால் அவருக்கு நிம்மதி என்பது யாரும் தன்னை கட்டளையிட்டு தன் உடலை கட்டுப்படுத்தாமல் இருப்பது. அதனாலே அவர் ஆரம்பத்தில் இருந்தே வணிகத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்

இரு முரண்பாடான ஆளுமைகள் - ஒருவர் தனக்கு கீழுள்ளோரின் தலைமயிரை கூட கட்டுக்குள் வைப்பவர், மற்றொருவர் தன்னை யாரும் ஏறி நின்று மிதிப்பதை, ஆதிக்கத்தை விரும்பாதவர் - ஒரு கொடுக்கல் வாங்கல் உறவுக்குள் நுழையும் போது என்ன நடக்க முடியுமோ அதுவே ஜீவஜோதி-அண்ணாச்சி விசயத்தில் நடந்தது என நினைக்கிறேன். இதில் சாந்தகுமாரே பலிகடா.

திருமணம் கடந்த எத்தனையோ பந்தங்கள் உலகெங்கும் அன்றாடம் அரங்கேறுகின்றன. அவற்றில் மிகச்சில மட்டுமே கொலையில், வன்முறையில், வதையில் போய் முடிகின்றன. ஆக, உழைப்பால் உயர்ந்த ஒரு வியாபார காந்தம் தனது ஒழுக்கமின்மையால் வீழ்ந்து விட்டாரே என நாம் முதலைக்கண்ணீர் வடிப்பது ஒழுக்கவாதத்துக்கு கொடிபிடிக்க உதவலாம். ஆனால் அது ஒரு பொய். ஒழுங்கீனம் என்பது நமது அத்தனை ஒழுக்கங்களின் பின்னாலும் ரகசியமாய் இருக்கிறது. பாலுறவுகளிலும் கூட.
 “ஒழுக்கக் கேடுஎன்பது பெயரளவில் மட்டுமே கேடு. பிறகு கேடு ஏன்கெடுகிறது”? ஒருவர் உறவில் தன் அசௌகர்யத்தை மிக நுட்பமாய் காட்டும் போது அதை ஏற்று விலகும் பக்குவம் அவளது இணைக்கு வேண்டும். கணிசமான ஆண்களுக்கு / பெண்களுக்கு பிரிவுகளை சுலபமாய் ஏற்க முடிவதில்லை. ஆனால் உலகில் ஒரு மேஜை டிராயர் இழுத்து மூடப்படுவது போலத் தான் உறவுகள் தோன்றி முடிகின்றன. சில உறவுகள் பாதி மலர்ந்த நிலையில் வாடுகின்றன. அதை செய்வது ஆணோ பெண்ணோ கண்ணியமாய் வாடிய மலரை மூட விட வேண்டும்.

மலரினும் மெல்லிது காமம்என வள்ளுவர் எழுதினார். காதல், காமம், உடல் நெருக்கம் எல்லாம் ஒரு மெல்லிய கோட்டை தாண்டி சென்றால் கடும் வன்முறை, தாள முடியாத ஆதிக்க வெறி என ஆகி விடும். கோட்டுக்கு ரெண்டு பக்கமும் கால்களை வைத்து நிற்பவர்கள் துர்பாக்கியவான்கள். அவர்கள் ரத்தத்தில் குளித்தே கரையேற முடியும்.

Comments

Ganesh said…
nice sir...