எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (2)

நான் ஒரு போன் பேசத் தான் வந்தேன்எனும் தலைப்பில் மார்க்வெஸின் ஒரு அட்டகாசமான சிறுகதை உண்டு. ஒரு நெருக்கடியான சந்தர்பத்தில் தொலைபேசியில் பேசும் நோக்கில் ஒரு மனநல மருத்துவமனைக்கு செல்லும் பெண் அங்கேயே மாட்டி பைத்தியமாக கருதப்பட்டு சிறைவைக்கப்படும் கொடூரத்தை அக்கதை சித்தரிக்கும். பல சமயங்களில் இலக்கிய பாராட்டு விழாக்கள் அப்படித் தான் அமையும். எழுத்தாளனைப் பார்த்தால் ரொம்ப மரியாதையுடன்நானும் எழுத்தாளன் தானுங்கஎன பீடிகை போடுகிறவர்களிடம் காட்டிக் கொள்ளவே கூடாது. விக்கிரமாதித்யன் தன்னை ஒரு அமைப்பு விருது தருகிறேன் என அழைத்து நாற்சந்தியில் கூட்டம் போட்டு நள்ளிரவு வரை அதன் ஒருங்கிணைப்பாளர்களே மைக்கில் முழங்கி சுயவிளம்பரம் பண்ணி விட்டு பேருந்துக்கு கூட பணம் தராமல் நடுரோட்டில் கைவிட்ட கதையை ஒரு பேட்டியில் சொல்கிறார். இலக்கிய ஆர்வலர்களில் வெள்ளாந்தியானவர்கள் நல்லவர்கள், சுயமோகிகள் கடித்து வைக்கும் பைத்தியங்களைப் போன்றவர்கள் - இவர்களிடையே வேறுபாடு கண்டு தப்பிக்க தெரிய வேண்டும்.


 இந்த உலகம் இப்படித் தான் இயங்குகிறது. இதன் அளவுகோல்கள் சில நேரம் அநீதியானவை. முன்பும் இப்படித் தான் இருந்தது என்பதை பாரதியின் வாழ்வைப் பற்றி படிக்கையில் அறிகிறோம். இனிமேலும் அப்படித் தான் இருக்கும்
 ஆனால் இதைத் தாண்டின அங்கீகாரங்களை, சலுகைகளை கோராத வரையில் சிக்கல் இராது. ஏனென்றால் மரியாதையும் நட்பு பாராட்டும் ஆர்வமும் எழுத்து, அறிவு, கலை ஆகியவை மீது நம் சமூகத்துக்கு உள்ள பக்தியில் இருந்து வருவது. எழுத்தை, புத்தகத்தை சரஸ்வதியாக வணங்கும் மரபு நம்முடையது. ஆனால் தெய்வத்தையே ஐந்து நிமிடத்துக்கு மேலாக பொருட்படுத்தாதவர்கள் நம்மவர்கள். “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்கதையில் பு.பி கையாள்வது எழுத்தாளன் இந்த தமிழ் சமூகத்தில் எதிர்கொள்ளும் புறக்கணிப்பைம் அபத்தங்களைத் தான். கடவுளுக்கு எப்படி மண்ணில் இறங்கி வந்தால் மதிப்பில்லையோ அது போல தமிழ் சமூகத்தில் எழுத்தாளனுக்கும் இல்லை. சிவபெருமானை அதிகமாய் வெறுப்பவர்கள் மதவாதிகளும் பக்தசிரோன்மணிகளுமே. அவர்களுக்கு சிவனின் பிம்பம் போதும், நிஜ சிவன் வேண்டாம்
கலையை நுகரத் தெரியாத தமிழ் சமூகமும் அப்படித் தான் யோசிக்கிறது. அதற்கு எழுத்தாளன் வேண்டும், எழுத்தும் வேண்டும், ஆனால் ஒரு எல்லைக்கு உட்பட்டு மட்டுமே. எழுத்தாளன் இங்கு இதை அறிந்து அந்த எல்லைக்கு உட்பட்டு நின்று விளையாட வேண்டும்.
இதற்கு நேர் எதிரான சூழலை கேரளாவில் பார்க்கிறோம். அங்கு கடந்த தலைமுறை வரையிலாவது இலக்கியத்தை பொதுமக்களும் படிக்கிற வழக்கம் இருந்தது. இதனால் எழுத்தாளன் அவன் பிம்பத்தை கடந்து படிக்கப்பட்டான், பரவலாக. புரிந்து கொள்ளப்பட்டான், போற்றப்பட்டான். வாசகர்களுக்கு அவனது கலாச்சார முக்கியத்துவத்தை உணரும் அளவுக்கு ஆழமான வாசிப்பு இருந்தது அல்லது ஆழமான தீவிரமான இலக்கிய / அரசியல் / சமூக செயல்பாடுகள், உரையாடல்கள் மீது மதிப்பு இருந்தது. வேலை, வேலை முடிந்ததும், சினிமா / வம்பு / மது / திண்ணையை பார்த்துக் கொண்டிருத்தல் என செயல்படும் நமது தமிழ் சமூகம் அந்த நிலைக்கு போக இன்னும் பல பத்தாண்டுகள் ஆகும். அதுவரை நாம் எளிய பிம்ப நிலையை கடந்து எழுத்தாளனை எதிர்கொள்ள மாட்டோம். அந்த முதல் கட்ட பிம்பத்தை தாண்டி அவன் நமக்கு வெளியாள், மற்றமை, புரிந்து கொள்ள முடியாதவன்.

நான் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலை படிக்கும் போது அங்கு ஆய்வு மாணவராய் ஒரு நண்பர் இருந்தார். அவர் சரியாய் சவரம் பண்ணாமல் லுங்கி அணிந்து கையில் இலக்கிய நூல்களுடன் கடற்கரை பக்கமாய் சாலையில் போய்க் கொண்டிருந்த போது ஒருமுறை காவல்துறையினர் மடக்கி அவரை விசாரித்தனர். நண்பர் கோபமாகிநான் ஒரு சிந்தனையாளன், இலக்கிய வாசகன், ஆய்வு மாணவன், வெறும் தோற்றத்தை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள்!” என கொதித்து எழுந்தார். அவர்கள் அவரை இன்ஸ்பெக்டரிடம் அழைத்துப் போனார்கள். இன்ஸ்பெக்டர் இளைஞர்ஓரளவு இலக்கிய பரிச்சயம் கொண்டவர். நண்பர் கையில் இருந்தகாலச்சுவடைஅடையாளம் கண்டு சிநேகமாய் பேசினார். “இவ்வளவு படிக்கிறீங்க, ஆனால் ஷேவ் பண்ணாம, ரௌடி மாதிரி லுங்கி கட்டிக்கிட்டு இருக்கீங்களேஎன இன்ஸ்பெக்டர் என் நண்பருக்கு அறிவுரை வழங்கினார். அது நண்பருக்கு ஒரு முக்கிய படிப்பினை. இந்த சமூகத்துக்கு இலக்கியத்தை ஒரு மலராக கண்டு ரசிக்கத் தெரியும், ஆனால் அதை நுகர்ந்து அதன் வாசனையை உணரும் திறன் இல்லை என்று அவர் என்னிடம் கண்டு கொண்டார். ஆம், உண்மை தான்.
இலக்கியத்தின் சாரத்தை அறியும் திறன் அற்றது நம் சமூகம். இங்கு தோற்றமே முக்கியம் - அதிகாரத்தின், செல்வாக்கின், பணத்தின், தளுக்கின், அறிவாற்றலின் தோற்றம் இலக்கியத்துடன் இணைய வேண்டும் நமது சமூகத்துக்கு சாரம் அல்ல தோற்றமே முக்கியம். இந்த சூழலில், எழுத்தாளர்கள் அதிக எண்ணிக்கையில் செல்வாக்கு மிக்கவர்களாய் அறியப்படுவது, அவ்வாறு தம்மை முன்வைப்பது தமிழ் சமூகத்தில் எழுத்து ஒரு மைய இடம் பெற அவசியம் உதவும்.

நான் என் வகுப்புகளில் மாணவர்களுக்கு என்னை எப்போதுமே ஒரு எழுத்தாளனாக மட்டுமே அறிமுகப்படுத்துவேன். நான் ஆசிரியன் அல்ல, கல்வி போதிக்கும் ஒரு எழுத்தாளனே என்பேன். எழுத்தே என் பிரதான பணி என திரும்பத் திரும்ப சொல்வேன். அவர்கள் உடனடியாக என்னை கவனிப்பார்கள்; சிலர் என்னைக் குறித்து இணையத்தில் தேடிப் பார்ப்பார்கள். இவர்கள் என் வாசகர்கள் ஆக மாட்டார்கள்; ஆனால் என் பிம்பத்தின் மீது ஈர்க்கப்படுவார்கள். இது முக்கியம், எழுதும் ஆர்வம் கொண்ட மாணவர்களையும் தம் பிம்பத்தை இவ்வாறு கட்டமைக்குமாறு கோருவேன். தினமும்நான் தனியானவன், மேம்பட்டவன், இவர்கள் எல்லாரையும் விட மகத்தானவன்என தமக்கே அவர்கள் சொல்லிக் கொள்ள வேண்டும். எழுத்தாளனுக்கு செருக்கு முக்கியம், அதை அவன் மிக நுணுக்கமாக வெளிப்படுத்த வேண்டும். சாமான்யர்களுடன் சாமான்யனாக அவன் இருந்தவாறே தான் சாமான்யன் அல்ல என அவன் உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். தன் எழுத்தை அவன் மறைத்து வைக்கக் கூடாது; அதை ஒரு பதாகையாக, ஆயுதமாக அவன் முன்னெடுக்க வேண்டும். “நான் இன்னின்ன படைப்புகளை, நூல்களை எழுதி இருக்கிறேன்என சின்ன வாய்ப்புகள் அமைந்தாலும் சொல்ல வேண்டும். பிரசுரங்களைக் கண்டு வியக்காத சாமான்யனே இந்தியாவில் இல்லை என்பேன். எழுத்தாளன் தன்னைப் பற்றியும் தன் எழுத்தை பற்றியும் தொடர்ந்து பேசுவது முக்கியம், அவனே தன்னைக் குறித்த ஐயங்களை கொண்டிருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ள கூடாது.  
மேலோட்டமாய் மட்டுமே நம்மை மதிப்பிடும் இந்த சமூகத்தை நாம் பிம்ப ரீதியாகத் தான் எதிர்கொண்டு கவர வேண்டும். அடுத்து, அரசியல் சமூக தளங்களில் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க நம்மால் இயல வேண்டும், மக்களுக்காக பேசும் போராடும் குரலாகவும் நாம் காணப்பட வேண்டும்

எழுத்தாளனை சமூகம் நடத்தும் விதத்தில், எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும்; லட்சக்கணக்கில் அவர்களது நூல்கள் விற்கும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது (அன்று நாம் இருக்க மாட்டோம் என்பது வேறு விசயம்). நம்மில் ஒவ்வொருவரும் அதற்கான அடித்தளத்தை தான் இப்போது அமைத்து வருகிறோம்!


Comments

/எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும்; லட்சக்கணக்கில் அவர்களது நூல்கள் விற்கும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது/ உங்களின் நம்பிக்கை பலிக்கட்டும். ஆனால் அதெல்லாம் ஒரு சுகமான கனவு என்றுதான் தோன்றுகிறது.