எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (1)

இந்த கேள்வியை முன்னிட்டு, ஜெயமோகன் சமீபத்தில் எழுதியுள்ள விரிவான கட்டுரை - “எழுத்தாளனும் சாமான்யனும்முக்கியமானது (https://m.jeyamohan.in/124194#.XTqKMsrhWhA). எழுத்தாளனின் கொள்கைநிலை விளக்கமாக அதை பார்க்கிறேன். ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் அதைப் படிக்க வேண்டும்.
தமிழகத்தில் எழுத்தாளர்கள் அந்நியப்படுவதை, பொருளியல், பண்பாட்டு ஆதரவின்றி சிறுமைப்படுவதை, ஒடுக்கப்படுவதை ஜெயமோகன் குறிப்பிடுகிறார். அறிவுத்தளத்தை ஒரு சமூகம் பொருட்படுத்தினால் அது எழுத்தாளன் உள்ளிட்ட அறிவுத்தள / கலை செயல்பாட்டாளர்களுக்கு தனி இடமொன்றை அளிக்கும். இந்த செயல்பாட்டாளர்களே ஒரு சமூகத்தின் ஆன்மாவாக, கனவுகள் பிறக்கும் நிலமாக திகழ்பவர்கள். சமூகத்தின் அறம் என்பது இந்த படைப்பு, அறிவுசார் குரல்களில் மையம் கொண்டிருக்கும் என்பது ஜெயமோகனின் கூற்று.

ஒரு எழுத்தாளரும் பிறரைப் போல சமுக கடன்களை ஆற்ற வேண்டும் தான், அவன் சமூக பண்பாட்டு விதிகளுக்கு உட்பட்டவனே. ஆனாலும் அவனுக்கு சற்றே விதிவிலக்குகளை அளித்து பாதுகாப்பது அவசியம். அதற்கு ஈடாக அவன் தன் பொருளியல் வெற்றிகளை கலைக்காக தியாகம் பண்ணுகிறான். அவன் கடுமையான அலைகழிப்புகளுக்கு, அவமதிப்புகளுக்கு ஆளாகிறான். ஜெயமோகன் அளிக்கும் இந்த சித்திரம் மார்க்ஸிய அறிவுஜீவி பிம்பத்துக்கும், இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றி எழுச்சி பெற்ற கலை மேதை / தொழில்சார் எழுத்தாளன் கதையாடலுக்கும் வெகு அருகில் வருவதை நாம் காணலாம். இந்தியாவின் துறவு மரபுடன் அவர் எழுத்தாளனின் இருப்பை இணைப்பதையும் நாம் கவனிக்கலாம். எழுத்தாளனுக்கு சமூகம் ஒரு தனி மதிப்பை, பொருளாதார ஆதரவை, சலுகைகளை நல்க வேண்டும் என்பதன் சாராம்சத்தை நான் ஏற்கிறேன். ஒரு பண்பாட்டுக் குறியீடாக, லட்சிய கலங்கரை விளக்காக ஒரு படைப்பாளி ஒரு தலைமுறைக்கே ஆதர்சம் என்பதை முழுக்க ஏற்கிறேன். ஆனால் எழுத்தாளனை அப்படி ஏற்பதில் நமக்குள்ள சிக்கல்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளவும் விழைகிறேன்.

சுருக்கமாக, ஒரு எழுத்தாளனாக நான் சாமான்யனிலும் சாமான்யனே. அதே நேரம் நான் பொதுப்போக்குகளில் இருந்து விடுபட்டவனாக, உதிரியாகவும் இருக்கிறேன், இதைச் சொல்லும் போதே எழுத்தாளன் எனும் இந்த இருப்பு முழுக்க கட்டமைக்கப்பட்ட ஒன்று, நான் எனக்குள் இந்த கட்டமைப்பை உடைத்து வெளியேற ஏங்குகிறேன் என்பதையும் உணர்கிறேன். எவ்வளவு சிக்கலான ஒரு பிரகிருதி நான்!

 இதனால் தான் எழுத்தாளனை சிறப்பான தகுதி பெற்ற மகத்தானவனாக ஏற்பதில் அவனுக்கே முதலில் மாறுபட்ட கருத்திருக்கும். ஒவ்வொரு எழுத்தாளனும் தனது மகத்தான ஒளிவட்டத்தை சேற்றில் வீச விழைகிறான். சமூகமும் தன்னையறியாதே அவனை இப்படி நடத்த முற்படுகிறது. கர்த்தர் தோன்றியதும் எப்படி கல்வாரி மலையில் சிலுவைகளும் முளைத்தனவோ அதைப் போன்றது தான் இதுவும். ஆனால் இங்கு தான் எழுத்தாளன் கவனமாக சிலுவைகளில் இருந்து தப்பித்துச் செல்ல அறிந்திருக்க வேண்டும்.

ஒரு எழுத்தாளனாக நான் எந்த சிறப்பு மதிப்பையும் கோருவதில்லை; ஆனால் முடிந்த இடங்களில் எல்லாம் என் எழுத்தாள பிம்பத்தை, அது அளிக்கும் கலாச்சார முதலீட்டை அறுவடை பண்ண நான் தயங்குவதில்லை. நான் வேலை பார்த்த இடங்களில் எல்லாம் என் எழுத்தாள பின்னணி வெகுவாக உதவுவதை உணர்ந்திருக்கிறேன். உடனடியாக ஒரு மரியாதை, நட்பு வட்டம் ஆகியவை அமைகின்றன.

 நான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் கிட்டத்தட்ட தினமும் ஒரு டி.வி  சேனலில் பேச அழைத்து செல்வார்கள். என் கருத்துக்கு என்று ஒரு தனி மதிப்பில்லை, ஆனால் ஒரு எழுத்தாளனாக நான் அதை சொல்வதில் தோன்றும் புருவ உயர்வை கவனித்திருக்கிறேன். ஒரு கட்சி பிரதிநிதிக்கு கூட இந்த இடத்தை ஊடகங்கள் முன்பு வழங்குவதில்லை; இவர்களில் கணிசமானோர் டிவியில் சில நிமிடங்கள் தோன்றி பேச கடும் முயற்சிகள் எடுப்பார்கள். ஆனால் படைப்பாளிக்கு இந்த ஏக்கங்கள் இல்லை. அவனுக்கு மையநீரோட்ட கருத்துமேடைகள் மீது ஒரு அலட்சியம் உள்ளுக்குள் உண்டு. ஆனால் அவனுக்கான கருத்து மேடை நாற்காலி மரியாதையுடன் அளிக்கப்படுகிறது. நான் நீயா நானா நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக நான் செல்லும் சந்தர்பங்களில் அங்கு சில நொடிகள் முகம் காட்டும் பொருட்டு நீண்ட தூரம் பயணித்து சரியான உணவோ தூக்கமோ இன்றி வந்து காத்துக் கிடக்கும் குடும்பங்களை பார்த்திருக்கிறேன். இவர்களை எது செலுத்துகிறது? புகழ் வெறியா? பணம், செல்வாக்குக்கான முனைப்பா? இல்லை. சமூகம் சில நிமிடங்களாவது தமக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதற்காக வருடக்கணக்காய் ஒரு வித்தையை பழகுகிறவர்களை, அதற்காக தியாகங்கள் பண்ணுகிறவர்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன், நான் இவர்கள் அளவுக்கு சமூக கவனத்தை கோரியதில்லை, அதற்காக தவம் கிடந்ததில்லை. ஆனால் இவர்களை விட சுலபத்தில் எனக்கு அது அமைந்துள்ளது. (என்னை விட சுலபமாக, தகுதிக்கு மீறி சினிமாக்காரர்களுக்கு ஊடக கவனம் அமைகிறது.)
எனக்கு சாகித்ய அகாதெமி யுவ புரஷ்கார் கிடைத்த போது தொடர்ந்து மூன்று நாட்கள் யாராவது அறிமுகமில்லாதவர்கள் என்னை போனில் அழைத்து வாழ்த்தியபடி இருந்தார்கள். இவ்வளவு இலக்கிய வாசகர்களா எனக்கு என நான் அப்போது வியக்கவில்லை - இவர்கள் எனது இந்த அங்கீகாரத்துடன் தம்மை மறைமுகமாக தொடர்பு கொண்டு அந்த வெளிச்சத்தில் தம் இறகுகளை சொற்ப நேரம் உலர்த்தி கொள்கிறார்கள் என புரிந்து கொண்டேன். இவர்கள் தினமும் படிக்கிறவர்களோ எழுதுகிறவர்களோ அல்ல, ஆனால் அப்படி இருக்க கனவு காண்கிறவர்கள். நான் இவர்கள் ஏறிச் சென்று தொட விரும்பும் புகழேணியின் படிக்கட்டில் சிறிய உயரம் ஒன்றை ஏறி இருக்கிறேன், அதை உணர்ந்து இவர்கள் என் தலையத் தொட்டு ஆசீர்வதிக்கிறார்கள் என உணர்ந்தேன். அதனால் தான் நான் சளைக்காமல் ஒவ்வொரு அலைபேசி அழைப்புக்கும் மதிப்பளித்து பேசினேன். நன்றி சொன்னேன். இந்த கவனம் விரைவில் முடிந்து போகும் என நான் அறிந்திருந்தேன். ஆனால் இந்த தற்காலிக மேடையை நான் அங்கீகரித்து வணங்கிட வேண்டும். அதன் பின் அதில் இருந்து இறங்கிப் போய் விட வேண்டும்.
ஒரு துறவி பிச்சைப் பாத்திரத்தை நீட்டலாம் - உணவிருப்பவர்கள் எல்லாம் தர அவசியம் இல்லை; தராதவர்களை அவன் இன்முகத்துடன் கடந்து விட வேண்டும் (எழுத்தாளனை பிச்சைக்காரன் என நான் சொல்ல வரவில்லை). தருகிறவர்களைக் கொண்டு அவன் தன்னை மதிப்பிடலாகாது. தராதவர்களைக் கொண்டு அவன் தான் நிராகரிக்கப்படுவதாய் மருகக் கூடாது. அது அவனுக்கானது அல்ல என்பதால் அது மறுக்கப்படும் போது அவன் கண்ணீர் விடவும் கூடாது. உதாரணமாய், சாகித்ய அகாதெமி விருதுத் தொகையை விட அதிகமான உதவிக் தொகைகளை  நண்பர்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள். சமீபமாய் எனக்கு சக்கர நாற்காலி ஒன்று வாங்கி உதவி செய்த நண்பர் ஒருவர் என் நேரடித் தொடர்பில் இல்லாதவர். என்னிடம் பதிலுக்கு எதையும் கோராமல் அவர் பணம் அனுப்பினார். எனக்கு நன்றாய் தெரிந்தவர்களிடம், இலக்கியம், கலை, சமூகம் என நீட்டி முழங்குகிறவர்ககளிடம், நான் உதவி நாடி நின்ற போது அவர்கள் அவமரியாதையாக நடத்தியதும் நடந்தது

இலக்கியத்துடன் நேரடியாக தொடர்பு இல்லாதவர்களே அதன் மதிப்பை அதிகமாய் அறிந்தவர்கள். நூற்றுக்கணக்காய் புத்தகங்களை வாசிக்கிறவர்கள் அல்லது அப்படி காட்டிக் கொள்கிறவர்களிடம் நான் உரையாடுவேன், ஆனால் அவர்களிடம் இருந்து விலகி இருக்கவே விரும்புவேன். ஏனோ அவர்களுக்கு எழுத்தாளர்கள் மீது ஆழமான கசப்பு உள்ளது. “நானும் எழுதுவேன், படிப்பேன், பத்திரிகை நடத்துவேன்...” என்று பேசுகிறவர்களை வணங்கி உடனே விலகி வந்து விடுவேன். படிக்காத பொதுமக்களை விட இவர்களே அதிக இலக்கிய விரோதிகளாக ஏனோ இருக்கிறார்கள். இலக்கியவாதிக்கும் பொதுசமூகத்துக்குமான உறவு இப்படி மிக மிக சிக்கலானது, குழப்பமானது.

Comments