இந்தியா-பாகிஸ்தான்: இன்றைய உலகக்கோப்பை ஆட்டம்


92இல் இருந்தே உலகக்கோப்பை ஆட்டங்களில் இந்தியா பாகிஸ்தானை டவுசர் கழற்றி உள்ளது என்பதால் மட்டுமே இந்தியா மேலான அணி அல்ல - கடந்த சுமார் முப்பதாண்டுகளில் பாகிஸ்தான் நல்ல அணிகளை உருவாக்கி உள்ளது; மிகச்சிறந்த துவக்க மட்டையாளர்களை, வேகவீச்சாளர்களை களமிறக்கி உள்ளது; தொண்ணூறுகளில் பாகிஸ்தானே இந்தியாவை விட பலமடங்கு மேலான அணி. ஆனால் உலகக்கோப்பை ஆட்டம் என்றால் மட்டும் பாகிஸ்தானின் பேஸ்மெண்ட் நடுங்க ஆரம்பித்து விடும். இம்முறை, அதாவது இன்று நடக்க உள்ள ஆட்டத்தில், எந்த அணி தன் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நிதானமாய் வைத்து நன்றாய் ஆடுமோ அதுவே வெல்லும்

மோசமான வானிலை காரணமாய் ஆட்டம் நடைபெறுமா எனும் ஐயம் வலுவாய் எழுந்துள்ளது என்றாலும், வானம் தெளிவாகும் பட்சத்தில் இந்திய அணியில் யாரெல்லாம் ஆட வேண்டும்? இதைத் தான் விவாதிக்கப் போகிறோம்.


ஷிக்கர் தவன் காயமுற்றிருக்கிறார். அரை-இறுதிப் போட்டியில் தான் அடுத்து அவர் களமிறங்குவார். அதுவரை ராகுல் தான் துவக்க மட்டையாளர். ராகுலின் மத்திய வரிசை இடத்தை எந்த பேட்ஸ்மேன் பெறுவார்? இப்போதைக்கு சங்கர் அல்லது கார்த்திக். இன்றைய ஆட்டத்தில் பெரும்பாலும் சங்கரே எண் நான்கில் களமிறங்குவார். நிதானமான, பந்தை நன்றாய் டைமிங் செய்யக் கூடிய பேட்ஸ்மேன். ஸ்விங் இருக்கும் பட்சத்தில் சங்கரின் மிதவேக பந்து வீச்சு எடுபடும். அவர் நல்ல களத்தடுப்பாளரும் கூட. இன்றைய ஆட்டத்தில் மட்டையாட்டத்தை விட நாம் பந்து வீச்சில் சற்று கூடுதலாய் கவனம் செலுத்த வேண்டும்

இன்றைய ஆடுதளத்தில் அதிகமாய் புற்கள் இருக்காது என்றாலும், தொடர்ந்து சில நாட்களாய் இங்கிலாந்தின் மேன்செஸ்டர் மைதானத்தில் மழை பெய்து வருகிறது; ஆடுதளம் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால் அதற்கு வியர்க்கும்; காற்றில் ஈரப்பதம் இருக்கும்; மேகமூட்டமும் உண்டெனில் பந்து கூடுதலாய் ஸ்விங் ஆகும். இதன் பொருள் நாம் 35-40 ஓவர்களாவது வேகவீச்சாளர்களை வீச வைக்க வேண்டும். பாகிஸ்தானின் பலவீனமும் ஸ்பின்னை ஆடுவதல்ல ஸ்விங் பந்தை ஆடுவது தான். ஆக, இந்தியாவுக்கு மூன்றாவது முழுநேர வேகவீச்சாளர் அவசியம். அது ஷாமியாக இருக்கலாம்

ஒரு சம்பிரதாயமான தேர்வு முதல் பத்து ஓவர்களுக்குப் பிறகு (ஷாமிக்கு பதில்) சங்கர் மற்றும் பாண்டியாவை மிதவேக பந்துகளை வீச வைப்பது; பந்து ஸ்விங் ஆகும் பட்சத்தில் இது ரன்களை கட்டுப்படுத்த உதவுமே அன்றி விக்கெட் எடுக்க உதவாது. ஆக, மூன்றாவது வேகவீச்சாளர் அவசியம். யாரிடத்தில் ஷாமியை கொண்டு வருவது
ஒரு கால்சுழலரின் இடத்தில். அது யார்? சாஹல் மற்றும் குல்தீப் இருவரில் யாரை நீக்குவது என்பதில் எனக்கு தெளிவில்லை. சாஹல் நல்ல ஆட்டநிலையில் இருக்கிறார், ஆனால் குல்தீப்பின் பந்து வீச்சு முறை பாகிஸ்தானுக்கு அவ்வளவாய் பழக்கமில்லாதது. இருவரில் யார் ஆடினாலும் ஓகெ என்று நினைக்கிறேன். பொதுவாக பாகிஸ்தான் கால்சுழலர்களை ஆதிக்கம் பண்ணும்; ஆக, இருவரையும் சேர்த்து ஆட வைக்கலாகாது. இதன்படி நான் தேர்வு செய்யும் அணி இவ்வாறிருக்கும்.

 1. ராகுல்
 2. ரோஹித்
 3. கோலி
 4. சங்கர்
 5. தோனி
 6. ஜாதவ்
 7. பாண்டியா
 8. புவனேஷ்வர்
 9. ஷாமி
 10. சாஹல் / குல்தீப்
 11. பும்ரா

இந்த அணியில் ஒரு பலவீனம் எண் 6. ஜாதவ் நல்ல ஆட்டநிலையில் இல்லை. அவரது பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஒரு சிக்கலான கட்டத்தில் அவரால் எந்தளவுக்கு மட்டையாட்டத்தில் பங்களிக்க முடியும்? தெரியவில்லை. ஆக, அவரிடத்தில் ஜடேஜாவை கொண்டு வரலாம். இது சங்கரை ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக மட்டுமே ஆட வைக்க உதவும். அணியில் இடதுகை மட்டையாளர் இல்லை எனும் குறையை நீக்கும். கால்சுழலர் ஷதாப் வீச வரும் போது நாம் தோனிக்குப் பதில் பாண்டியா மற்றும் ஜடேஜாவை களமிறக்கி அடித்தாட முடியும். மூன்று வேக வீச்சாளர்கள் + ஒரு கால்சுழலர் = 40 ஓவர்கள். மீத 10 ஓவர்களில் பாண்டியா 5 ஓவர்களும் மீத ஓவர்களை ஜடேஜாவும் வீசலாம். இது நமது பந்து வீச்சின் பலவீனத்தை பெருமளவுக்கு குறைக்கும். ஆடுதளம் மிகவும் தட்டையாக அமைந்து வானிலையும் சீராக இருந்தால் 300 ரன்கள் அடிப்பது சுலபமாகும். அப்போது சங்கரும் பாண்டியாவும் மத்திய ஓவர்களில் 10 ஓவர்கள் வீசினால் சுமார் 70 ரன்கள் கொடுப்பார்கள், ஆனால் ஷாமியும் பாண்டியாவும் மத்தியில் வீசுகையில் கூட ஜடேஜாவையும் வீச வைத்தால் அது பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும். பத்து ஓவர்களில் 50 ரன்கள், ஒரு விக்கெட் கிடைக்கலாம்.
ஆக, தட்டையான ஆடுதளம், சீரான வானிலை, 300 ரன்கள் சுலபம் என்றால் நான் தேர்வு செய்யும் அணி இது:

 1. ராகுல்
 2. ரோஹித்
 3. கோலி
 4. சங்கர்
 5. தோனி
 6. ஜடேஜா
 7. பாண்டியா
 8. புவனேஷ்வர்
 9. ஷாமி
 10. சாஹல் / குல்தீப்
 11. பும்ரா

யார் இன்று மைதானத்தில் ஆடுவார் - இந்தியா-பாக் அணிகளா, வருணபகவானா - எனப் பார்ப்போம்.Comments