ஜெயமோகன் மீதான தாக்குதல்


ஜெயமோகன் ஊர்ப்பிரச்சனைகளில் தலையிடுகிறவரோ பொதுவெளியில் வம்புக்கு போகிறவரோ அல்ல; தக்கலை-நாகர்கோயிலில் அவர் வாழ்ந்த ஆரம்ப வருடங்களில் நானும் அதே ஊரில் இருந்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் - சுவரில் ஒரு பல்லி போவது போல தனியாக தன் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவராக முயற்சி எடுத்து எல்லாரிடமும் (சகபணியாளர்கள், சுற்றம், ஊர் பொதுஜனம்) பழக மாட்டார். இது நகரங்களில் வாழும் மனிதர்களின் பழகுமுறை. ஆனால் ஜெயமோகன் ஊரில் நடக்கும் எல்லா விசயங்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பார்.

 நான் ஊரில் இருக்கையில் தான் அவரை முதலில் சந்தித்தேன். அப்போது எனக்கு 16 வயதிருக்கும். ஜெயமோகனை இரண்டாவது முறை சந்தித்த போது அவர் என் அப்பாவைப் பற்றி போகிற போக்கில் குறிப்பிட்டது நினைவுள்ளது. அவருக்கு என் குடும்பத்தினரை பழக்கமில்லை, ஆனால் தன்னை ஒருமுறை கடந்து போகிறவரது பின்னணியையும் விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வார். என் வீட்டுக்கு வெகு அருகில் நடந்த ஒரு நள்ளிரவு மாந்திரிக சடங்கு பற்றி ஒருநாள் குறிப்பிட்டார்; அதை நானே பார்த்திருக்கவில்லை, யாரும் கவனித்து என்னிடம் சொல்லவும் இல்லை. அதேநேரம் ஜெயமோகன் அறிந்திருந்தார். அவர் நாட்டுநடப்புகளில் கலந்து கொள்ள, சமூகமாக்கல் பண்ண மெனக்கெட மாட்டார். நடைமுறைக் காரணம் தான் என நினைக்கிறேன் - தன் நேரம் குறித்து மிதமிஞ்சிய அக்கறை கொண்டவர் அவர். ஒவ்வொருவரிடமாய் குசலம் விசாரித்து அண்ணா, தம்பி, மாமா, மச்சான் என உறவு பாராட்டினால் அது அவரது நேரத்தை பறிக்கும்; அடுத்து அவர் தன்னைப் போன்று தீவிரமான மனநிலையும் ஈடுபாடும் கொண்டவர்களிடத்தே பழக வேண்டும், அல்லாவிடில் அது தன்னை நீர்க்கச் செய்யும் என நினைக்கிறார்

இதை நான் தவறெனக் கூற மாட்டேன். நமது மனம் விசித்திரமானது, ஒரு மனிதனின் தீவிரமும் மனக்குவிப்பும் குலைய ரொம்ப நேரம் எடுக்காது - நமது நட்பு வட்டம் நம் தேர்வுக்குள்ளானதாய் இருந்தால் நம்மால் மிகுந்த ஆற்றலுடன் பணி செய்ய முடியும். தினமும் வெட்டிப்பேச்சு பேசுகிறவர்களுடன் எட்டு மணிநேரம் பேசுங்கள், ஒரே வாரத்தில் ஒன்று உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் அல்லது பெரிய கனவுகள் சிதைந்து சாமான்யமாகிப் போவோம். சுருக்கமாய், ஜெயமோகன் சாமான்யர்களை கவனிப்பார், அவர்களுடன் இருப்பார், அவர்களைப் பற்றி எழுதுவார், ஆனால் அவர்களுடன் சம்பாஷித்து அவர்களைப் போன்றே தன்னை காட்டிக் கொள்ள மாட்டார். இதன் விளைவு தான் ஊரில் அவர் மீது சிலருக்கு உள்ள பகை.

இதை நான் தக்கலையில் அவர் தொலைபேசித் துறையில் பணி செய்யும் போதே கவனித்திருக்கிறேன். அவர் ஒரு பெரிய நாவலை கையில் ஏந்தி படித்தபடி சாலையில் நடப்பார். என் உறவினர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தால் (என்னை புண்படுத்தும் நோக்கில்) இதைச் சொல்லி ஜெ.மோவை பகடி பண்ணுவார். பத்மநாபபுரத்தில் அவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டவர்களுக்கும் அவர் அந்நியர் தான். ஒருவேளை ஜெயமோகன் சென்னையிலோ பெங்களூரிலோ வாழ்ந்திருந்தால் இந்த அணுகுமுறையினால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது. ஆனால் ஊரில் நீங்கள் மற்றமையாக, பொருந்தாதவராக, உதிரியாக, அன்னியோன்யமாய் பழகாதவராக இருந்தால் வெறுக்கப்படுவீர்கள்; ஏனென்றால் அது சாதி அடையாளங்களுடன், யாருடைய இடம் என்ன, யாருடைய தாத்தா, பாட்டனார் யார் என்பது வரை தெரிந்து வைத்துக் கொண்டு பழகும் மனிதர்களால் ஆனது. அங்கு நீங்கள் ஒன்று சாதியமைப்பு ஒன்றின் உறுப்பினராகவோ அல்லது அதற்கு வெளியாளாகவோ மட்டுமே இருக்க முடியும். ஜெயமோகனைப் போன்றவர்கள் இந்த இருமைக்குள் மாட்டாதவர்கள். மற்றபடி அவரது திமிரோ சமூகமாக்கல் திறனின்மையோ அவரை அப்படி ஊரில் இருந்து விலக்கி வைப்பதாய் நான் நினைக்கவில்லை

இதை ஏன் வலியுறுத்தி சொல்கிறேன் என்றால், ஜெயமோகன் அண்டை அயலாருடன் நன்கு பழகி பிரசித்தமாய் இருப்பவர் என்றால், அந்த கடைக்கார அம்மணியிடமும் சுமூகமாய் பேசி நைசாய் விசயத்தை சமாளித்திருப்பார். இந்த பிரச்சினையும் காவல் நிலையம் வரை சென்றிருக்காது; ஊர் பிரமுகர்கள், அயலாருடன் சேர்ந்து இந்த பிரச்சனையை பேசி முடித்திருக்கலாம்; ஆம் அது ஊர்க்காடு அல்ல, நாகர்கோயில் டவுன்; ஆனால் அது இன்னமும் பாதி ஊர் தான்.

அடுத்து, அந்த ஊர் மக்களிடம் கண்ணியமான professionalism, நுகர்வோரை பவ்யமாய் நடத்தும் பொலிவை எல்லாம் காண முடியாது. ஊரிலேயே அங்கு பிறந்த வளர்ந்த என்னையே அங்குள்ள கடைக்காரார்கள் வெகுவாக கடுப்பேற்றி இருக்கிறார்கள். ஒட்டல் சர்வரில் இருந்து பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர் வரை சிங்கம் சூர்யா போலத் தான் பேசுவார்கள்; காசு கொடுக்கிறவரை கடன் வாங்க வந்தவரைப் போல் அலட்சியமாய் நடத்துவார்கள் (கவிஞர் நட.சிவகுமார் இதை தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்), ஆனால் அன்பாய் கனிவாய் பழகினால் ஓடி ஓடி வேலை செய்வார்கள். இதனால் தான் ஊரில் நீங்கள் வெற்றிலை பார்க்கு வாங்க போனாலும் அங்கே உட்கார்ந்திருப்பவரைமாமா, அண்ணேஎன விளித்து அணுக்கமாய் பழகி வர வேண்டும், அப்போது தான் உடனே வெற்றிலை பாக்கை நீட்டுவார்கள், பாக்கு தலைக்கு ஏறி செருக வைக்கிறது, வேற கொடுங்க என கேட்டு வாங்கலாம், முறைத்தபடி இதையே சொல்லில் கேட்டால்போலே புண்டாமோனேஎன அநாயசமாய் வைவார்கள். நான் படித்தவன், பெரிய வேலையில் இருக்கிறவன் என்றெல்லாம் அவர்களிடம் சொன்னால் புரியாது. இதனால் தான் நீங்கள் தக்கலையிலோ நாகர்கோயிலிலோ ஓட்டலில் நல்ல மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் சர்வர்களை பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கோப்பையை வைப்பார்கள், ஆனால் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். தட்டு அழுக்காக இருக்கிறது என்றால் முறைத்து விட்டுப் போவார்கள். சாப்பாடு கொண்டு வருவதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவார்கள்
இறுதியாக, எங்கள் ஊர் மக்கள் எடுத்ததெற்கெல்லாம் கை நீட்டுவார்கள். கடந்த முறை என் உறவினர் ஒருவர் பெங்களூரில் இருந்து ஊருக்கு சென்றிருந்த போது தெருவில் போகும் ஒரு குடிகாரனுக்கும் அவனுக்கும் கைகலப்பாகி விட்டது. இதை அடுத்து அந்த நபரின் உறவினர்கள் கும்பலாய் அடிக்க வந்து விடுவார்க்ளோ என அவரது பாட்டி பயந்தபடி இருந்திருக்கிறார். சென்னையில் ஏதாவது தகராறென்றால் இரு தரப்பினரும் எட்டி நின்று கால் மணிநேரம் கத்தி விட்டு நேரமானதும் கிளம்பி சென்று விடுவார்கள். ஆனால் ஊரில் இமையை மூடும் முன்பு கையை நீட்டி விடுவார்கள். வசைச்சொற்களும் அடியும் ஒரே நொடியில் கிளம்பி வரும். சின்ன மனஸ்தாபத்துக்காக தெருவில் கிடந்து புரண்டு சண்டை போடுகிறவர்களை என் இளமையில் பார்த்திருக்கிறேன். என் குடும்பத்துக்குள்ளே நான் அடிதடியை பார்க்காத நாளில்லை. ஒருமுறை அப்பா ஒரு புத்தகத்தை என் கால் மீது வீசிட, நான் கோபத்தில் நான் ஒரு ஸ்பெனரை தூக்கி அப்பாவின் முகத்தில் வீச அவரது உதடு பெரிதாக கிழிந்து விட்டது. அப்பா என்னை உடனே மன்னித்து விட்டார். ஆனால் ஊரிலோ நான் என் அப்பாவை அடித்து உதட்டை கிழித்து விட்டதாய், “ஆள் பயங்கர சட்டம்பியாக்கும்என செய்தி பரவி விட்டது. நான் எங்கு போனாலும் கேலியாய் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போன்ற அப்பிராணிகளுக்கே இப்படியான வரலாறு இருக்கும் போது சொந்தமாய் கடை வைத்திருக்கும், அரசியல் பின்னணி கொண்ட ஒரு வியாபாரியை சொல்லவா வேண்டும்?
இந்த அனுபவப் பின்புலத்தில் இருந்து கொண்டு எனக்கு அன்று ஜெயமோகனுக்கு வசந்தம் ஸ்டோர்ஸில் என்ன நடந்திருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது.  
இச்செய்தியை கேட்டதில் இருந்தே ஒரு பக்கம் அதிர்ச்சி, வருத்தம், இன்னொரு பக்கம் ஊரில் வைத்து ஜெயமோகனுக்கு இப்படி நிகழ்ந்து விட்டதே என அவமானமாகவும் உள்ளது. நாகர்கோயிலே கொண்டாட வேண்டிய மேதை அல்லவா அவர்
அது ஜெயமோகன் பிறந்த வளர்ந்த மண்ணும் தான், ஆனால் சுபாவத்தில் அவர் அந்த மண்ணின் மைந்தர் அல்ல. அவர் மொழியில் குமரிக்காரர், ஆனால் சுபாவத்தில் நகரவாசி. எதிர்காலத்தில் ஜனங்களுக்கு அவர் மீது கூடுதல் மரியாதையும் அக்கறையும் விளைய வேண்டும், அவரும் ஊர் மக்களுடன் நெருங்கி பழகும் சந்தர்பங்கள் அமைய வேண்டும்.
இது ஒரு வாடிக்கையாளருக்கும் வியாபாரிக்குமான கைகலப்பு, இதில் எழுத்தாளர் எங்கே வந்தார் என முகநூலில் சிலர் கேட்பதை கவனித்தேன். புறமே பார்க்க அப்படித் தெரியலாம், ஆனால் எழுத்தாளன் நுட்பமானவன், மென்மையானவன், போற்றி பாதுகாக்க வேண்டியவன், இதை நுண்ணுணர்வு கொண்ட சமூகங்கள் அறிந்திருக்கும். அவனது குழந்தைத்தனங்களை அது பொறுத்துக் கொள்ளும். அவனால் கிடைக்கும் பெருமையும் கலாச்சார பங்களிப்பும் குமரி மண்ணின் வாசனை இலக்கிய அந்தஸ்து பெறுவதும் இதற்கான பெறுமதியாக இருக்கும். இன்றும் நான் நாகர்கோயிலைப் பற்றி குறிப்பிடுகயில் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் சு.ரா, ஜெ.மோ, இன்னும் சில படைப்பாளிகளின் பெயரைப் பற்றி கேட்டு எப்படி இத்தனை எழுத்தாளர்கள் ஒரே மண்ணில் இருந்து என வியப்பார்கள். இந்த மாதிரியான பெருமை தோசை மாவு விற்பவர்களால் வராது. பணத்துக்காக மட்டும் வேலை செய்பவர்களால் வராது. முசுடான பல எழுத்தாளர்களை அறிவேன் - எம்.டி கேரளாவில் அப்படித் தான் இருக்கிறார், கிரிஷ் கர்நாட் கர்நாடகாவில் அப்படியே வாழ்ந்தார், எதிரில் வருபவர்களை தலையுயர்த்திக் கூட பார்க்க மாட்டார்கள். அதற்காக அம்மக்கள் எம்.டியையோ கர்நாடையோ மிதிக்க மாட்டார்கள், மதிப்பார்கள்

எழுத்தாளனிடம் யாருக்கும் பிரச்சனை வரக் கூடாது என்றோ, எழுத்தாளனுடன் தகராறு வந்தால் ஊர்க்காரர்கள் தலைகுனிந்து வணங்கி பணிய வேண்டும் என நான் கோரவில்லை. ஆனால் இப்படியான தகராறு, தாக்குதல் நிகழும் போது நாம் அதிகம் யோசிக்காமல் ஒரு கலைஞனை, அறிவுஜீவியை, எழுத்தாளனை ஆதரிக்க வேண்டும். அதுவே ஒரு பண்பட்ட சமூகத்துக்கு அழகு

Comments

சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்களும் அந்தக் கடையில் வேலை பார்ப்பவர்கள் இடமும் விசாரித்தபோது, பிரபலமானவர், எழுத்தாளர் என்பவருக்கு பொது இடத்தில் பெண்களிடத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்பது தெரியவில்லையே என்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இது போன்றவர்களை ஆதரித்தால் சாமான்ய மக்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நீதி கிடைக்குமா என்றனர்
Anonymous said…
அந்த கடைக்காரர் திமுகவை சேர்ந்தவர் என்பது இந்த சம்பவத்தை
மேலும் ஸ்வாரஸ்யமாக்குகிறது. ஒரு நாடறிந்த எழுத்தாளருக்கே
இந்த கதி என்றால் சாதாரண மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டிய
காலகட்டம் இது.
Anonymous said…
in karnataka ....they respect grt writers.....TRUE.....sometimes they got killed too....remember gowri lankesh...kalburgi.....!!!!