பிக்பாஸ்: காதல் வரும் வேகம் (2)

தமிழ் பிக்பாஸின் இரண்டாம் பருவத்தில் காதலை விட அதிகமாய் பேசப்பட்டது நித்யா-பாலாஜியின் இல்லாத தாம்பத்ய பாசமும் இருக்கிற பரஸ்பர கசப்பும். அவர்களை ஒருவிதமாய் செயற்கையாய் சேர்த்து வைத்து, அவர்களது குழந்தையை மையமாக்கி டிராமா செய்ய வேண்டும் எனும் பிக்பாஸின் வியூகம் பரிதாபகரமாய் தோற்றது. இதை அடுத்து வீட்டில் உள்ள இளைய தலைமுறையினரில் யார் காதல் வயப்படுவார்கள் எனும் கேள்வி எழுந்தது. யஷிகா-மஹத் காதல் அப்படித் தான் மெல்ல மெல்ல வெகு தயக்கமாய்நிகழ்த்தப்பட்டது”. பிக்பாஸ் வரலாற்றின் மிக அபத்தமான காதல் இது. ஏனென்றால் மஹத் ஏற்கனவே வெளியே ஒரு காதலியை கொண்டிருக்கிறார். அதைப் பற்றி அவர் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே விவாதித்திருக்கிறார். அப்பெண் பிக்பாஸ் நிகழ்ச்சி வார இறுதியில் மேடையில் நிகழும் போது பார்வையாளர் தரப்பில் வருவதுண்டு. அவர் இருக்கையிலே, தினமும் டிவியில் மஹத்தை கவனிக்கையிலே அவர் யஷிகாவை நேசிப்பது கிட்டத்தட்ட அசாத்தியம். மேலும், இது குறித்த விசாரணையின் போது யஷிகா எந்தவொரு உணர்ச்சியும் இன்றியே தனக்கு மஹத் மீதுள்ள பிரியத்தைப் பற்றி பேசினார்

ஐஸ்வர்யா-ஷாரிக் உறவும் இப்படி வெகு தயக்கமான காதல் நாடகமாய் அரங்கேறியது. ஒருவேளை இவர்களுக்கு வெளியே காதலன்  / காதலி இருக்கலாம். இந்த காலத்தில் 13 வயது குழந்தைகளுக்கே நிலையான காதலன் / காதலிகள் உண்டு. பதினெட்டு வயதுக்குள் அவர்கள் பலவிதமான அனுபவங்களை கடந்திருப்பார்கள். பிக்பாஸ் போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவுக்குள் வந்து காதலைத் தேடும் அளவுக்கு அவர்கள் வறண்டு போய் இல்லை; எல்லா பங்கேற்பாளர்களும் ஓவியாவைப் போலவளர்ந்தவிடலைகள் அல்ல. இவர்கள் வெகுவாய் யோசித்து இணையை தேர்கிற முதிர்ச்சி கொண்டவர்கள். ஆக ஒரு கட்டாயத்தின் பேரில், நித்யா-பாலாஜி உறவு நமுத்துப் போன பின்னர் இவர்கள் காதல் ஜோடி வேடத்தை ஏற்கிறார்கள். அது தம்மை மக்களிடம் பிரசித்தமாக்க, இணக்கமாக்க உதவும் என நம்பியே செய்கிறார்கள். இது, பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் ஜோடிகள் கட்டாயமற்ற கட்டாயத்தில் காதலிப்பதைப் போன்றது. ஆனால், யஷிகா-மஹத், ஐஸ்வர்யா-ஷாரிக் விசயத்தில், தாமதமாக தயக்கமாக ஆரம்பித்ததனாலோ என்னவோ இந்த இருவரின் காதல் அவர்களது பிக்பாஸ் இடத்தை உறுதிப்படுத்தவோ இறுதிக் கட்டம் வரை கொண்டு செல்ல உதவவோ இல்லை.

ஆனால் தமிழ் பிக்பாஸ் மூன்றாம் பருவ போட்டியாளர்களைப் பாருங்கள். பட்டியலில் உள்ள இளைஞர்களைக் கண்டதுமே இவர்கள் தான் சீக்கிரம் பரஸ்பரம் காதலிக்கப் போகிறார்கள் என நமக்குத் தோன்றி விடுகிறது. ஏனென்றால், காதல் ஒரு தவிர்க்க முடியாத வியூகமாக, என்னை தரித்துக் கொள் என கோரும் ஒரு ஆடையாக, என்னை எடுத்து பயன்படுத்து எனக் கோரும் ஒரு பளபளப்பான கத்தியாக அவர்கள் முன்பு இருக்கிறது; அது அப்படி இருப்பதை நாமும் அறிந்தே இருக்கிறோம். இப்படி ஒரு வியூகம் தொடர்ந்து வெற்றிகரமாய் பயன்படுத்தப்படும் போது அதை மக்கள் தம்மை அறியாமலே பயன்படுத்த துவங்குவார்கள். அதை உட்கிரகித்து (internalize) தமதானதாக்குவார்கள் (சம்ஸ்கிருதமயமாக்கலில் ஜனங்கள் பிராமணர்களின் அடையாளத்தை தம்மையறியாமலே வரிப்பது போல). முதல் பருவத்தில் ஹிமா பண்ணியதைப் போல இனி போட்டியாளர்கள் திட்டமிட்டு காதலிக்க மாட்டார்கள். இவர்கள் இத்திட்டத்தை உள்வாங்கி திட்டமிடாமலே முன்னெடுப்பார்கள், வெகு-இயல்பாக, சரளமாக, அநிச்சையாக

உதாரணமாய்தமிழ் பிக்பாஸ் மூன்றாம் பருவத்தின் இரண்டாம் நாளென்றே அபிராமி தனக்கு கவினை பிடிக்கும் என்று தன் தோழிகளுடன் விவாதிக்கிறார். பிடிக்குமென்றால் போய் பழக வேண்டியது தானே! ஆனால் பிக்பாஸில் நாம் காதல் நிகழ்த்தப்படுவதை விட பேசப்படுவதையே, அதுவும் பெண்களால் பேசப்படுவதையே, காண்கிறோம். ஏனென்றால் நிகழ்த்துவதை விட பேசுவது சிக்கல் குறைவானது. இரு தரப்பும் ஒரு வியூகத்தை தயக்கமின்றி, தம்மையறியாது முன்னெடுக்கும் போதே நிகழ்த்துதலில் ஒரு அர்த்தம் இருக்கும். இப்போதைக்கு அபிராமியும்-கவினும் அந்த நிலையில் இல்லை. ஆக, அபிராமி காதலைபேசிநிகழ்த்துகிறார். அதன் மூலம், தன்னை முக்கியமானவராக அந்த வீட்டில் நிலைநிறுத்த முயல்கிறார். பிக்பாஸ் வீட்டுக்கு வரும் போதே இந்த திட்டத்துடன் வந்திருப்பார் என நான் கூறவில்லை. ஆனால் வீட்டுக்குள் வந்ததுமே அது ஒரு விதிமுறையாக அவரது மனதுக்குள் ஏற்றப்பட்டு, அதை யோசிக்காமலே செயல்படுத்துகிறவராகிறார் - கோயிலில் ஆராதனைத் தட்டு சுற்ற்றப்படும் போது நீங்கள் அநிச்சையாய் தீபத்தை தொட்டு வணங்குகிறீர்களே அதைப் போல. பிக்பாஸ் வீடு ஒரு நாடக அரங்கு எனில், அதன் விதிமுறைகளை இரு பருவங்களாய் பார்த்து பார்த்து, இப்போது போட்டியாளர்களை அவற்றைப் பற்றி நினைக்காமலே தம் இயல்பை அவற்றுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள்.


என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எவ்வளவு வேகமாய் ஒரு காதல் முடிவுக்கு வருகிறார்கள் என்பது. ஒரு வாரம் பழகி கவனித்து ஏற்றுக் கொண்ட பின் காதலிக்கும் பொறுமை கூட இல்லை. பிக்பாஸில் எல்லாமே அவ்வளவு வேகமாய் உள்ளது

Comments

Ponmahes said…
வணக்கம் அண்ணா,
அருமையான அலசல் அண்ணா ...
வாழ்த்துக்கள் ....
ஒரு சிறு சந்தேகம் ...

அனால் அபிராமி தனக்கு கவினை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே தெரியும் என்றும் "சரவணன் மீனாட்சி" தொடர் நாடகம் மூலம் தான் கவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் சொன்னார். அப்பறம் எப்பிடி இதை பார்த்ததும் காதல் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியும். வேணுமென்றால் ஒரு தலைக் காதல் என்று சொல்லலாமே ???!!

அன்புடன்!!
பொன் மகேஷ்வரன்
நல்லதொரு பகிர்வு...
இந்தக் காதல் எல்லாம் பிக்பாஸின் திரைக்கதையே...
ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆரம்பிக்க எண்ணம்...