ராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்


பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை ஒட்டி ராகுல் காந்தி தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொண்டு ராஜினாமா பண்ணுவார் என்றும், ஆனால் ராகுலின் இந்த முடிவை அவரது தாயார் சோனியா நிராகரித்தார் என்றும் ஒரு செய்தியை நேற்று முன் தினம் படித்தேன். அப்போதே இது நடக்காது என எனக்குத் தெரியும். இப்போது ராகுலின் ராஜினாமா நாடகம் அவ்வாறே நடந்து முடிந்துள்ளது. வெட்கக்கேடு!

 பத்தாண்டுகளுக்கு முன்பு அதிமுக தோல்வி அடைந்தால் ஜெயலலிதா ராஜினாமா செய்திருப்பாரா? அப்படி அவர் செய்ய முயன்று தொண்டர்க்ளும் தலைவர்களும் அதை நிராகரித்ததால் ஜெயலலிதா தன் முடிவை மாற்றினார் என்றால் நாம் அதை நம்புவோமா? ஜெயலலிதா தான் அதிமுக, அதிமுக தான் ஜெயலலிதா. அதே போலத் தான் காந்தி குடும்பமே காங்கிரஸ். ராகுலின் இந்த ராஜினாமா நாடகம் குழந்தை அம்மாவிடம் போய் அம்மா எனக்கு அப்பாவோட பிஸினஸை எடுத்து நடத்த பிடிக்கல, எனக்கு வேறு விசயங்களில் தான் ஆர்வம் என்று அழ, அம்மா ஆறுதல்படுத்தி அவரை சி.ஓ.வாக தொடரக் கோருவது போல இருக்கிறது. காங்கிரஸ் என்பது அவர்களின் சொத்து, ஒருமுறை வருமானம் குறைந்து விட்டது என்பதற்காக அவர்கள் சொத்தை தெருவில் போகிறவருக்கா எழுதி வைக்க போகிறார்கள்? ம்க்கும்.

ஆனால் ராகுல் மட்டுமல்ல ப்ரியங்காவும் அதே போல காலங்காலமாய் காங்கிரஸை உறிஞ்சி வாழும் மூட்டைப் பூச்சிகள் அனைவரும் விலகுவது உசிதம். இந்த முறை பாஜகவுக்கு அனுகூலமாய் அமைந்தது பாஜகவின் தேநீர்க் கடைக்காரரின் மகன் பிரதமர் ஆகிறார் எனும் பிரச்சாரம். மாறாக ராகுல் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் எனும் பிம்பம் உள்ளது. இது உண்மையும் தான். அவராக போராடி காங்கிரஸின் தலைவராகவில்லை; அவரது பாட்டியும் அப்பாவும் அம்மாவும் கூட அப்படித் தான் தலைமைப் பொறுப்பை கேள்வியின்றி பெற்றுக் கொண்டார்கள். காங்கிரசின் சிறந்த தலைவர்கள் ராஜீவ் குடும்பத்தி இருந்து மட்டுமே வர முடியும் என்பது வெறும் புருடா. காந்தி குடும்ப வாரிசு என்றாலே மக்கள் அரவணைத்து ஏற்பார்கள் என்பதில் உண்மையெனில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர்கள் தோற்றிருக்க மாட்டார்கள்.
வாரிசு அரசியலின் அனுகூலங்களை நான் ஏற்கிறேன்; ஆனால் அதே நேரம் காங்கிரசைப் பொறுத்தமட்டில் இந்த மாதிரியான ஜமீந்தார் மகன் ஜமீந்தார் எனும் காலம் முடிந்து விட்டது என்பதை அவர்கள் ஏற்றே ஆக வேண்டும்.

சிலநேரம் வாரிசு முறையில் ஒரு நல்ல தலைவர் தோன்ற முடியும், இந்திரா காந்தியைப் போல வசீகரமான ஒருவர் தோன்றி கட்சியை வழிநடத்த முடியும். ஆனால் அவருக்கு பிறகு ராஜீவில் இருந்து ராகுல் வரை சரியான தலைமைப் பொறுப்பு இல்லாதவர்களே காங்கீரஸை வழிநடத்தி இருக்கிறார்கள். மேலும் கட்சியில் வேறு திறமையான தலைவர்கள் இளைய தலைமுறையினரிடம் இருக்கிறார்களா இல்லையா என்பதை நீங்கள் ஒரு வாய்ப்பு அளித்தாலே அறிய முடியும். காங்கிரஸ் இன்று வரை அந்த துணிச்சலை காட்டவில்லை (மன்மோகன் சிங்கை நான் ஒரு தலைவராகவே காணவில்லை).

ராகுலின் தலைமைப் பண்பின்மையைப் பற்றி நிறைய எழுதப்பட்டாகி விட்டது. அது சோனியா அம்மையாரைத் தவிர இந்த உலகமே நன்கு அறிந்த உண்மை. வரும் ஆண்டுகளில் அவர் மேம்படலாம். ஆனால் ஒருநாளும் அவர் ஒரு வசீகரமான தந்திரமான தலைவர் ஆக முடியாது - அது அவரது ஆளுமையில் இல்லை. ஒரு திறமையான இரண்டாம் நிலை தலைமை ராகுலை வழிநடத்தினால், மத்தியில் மோடியின் அலை ஓய்ந்து, மோடி அரசியலில் இருந்து மக்களால் துடைத்தெறியப்பட்டால் ராகுல் ஓரளவு சமாளிக்க முடியும்; பிரதமர் நாற்காலிக்கு அருகில் போக முடியும். ஆனால் மோடியின் முன்பு தன்னை ஒரு சமமான போட்டியாளராய் அவரால் காட்டிக் கொள்ள முடியாது. (மோடியை விட இவர் நல்ல மனிதராய் இருக்கலாம், ஆனால் அது போதாது.)

ராகுலின் சிறுவயது வளர்ப்பு, பொதுமக்களிடம் பழகாமல் தனித்து கண்னாடிக் கூண்டுக்குள் அவர் பாதுகாப்பாய், உலக நிதர்சனம் புரியாமல், காயப்படாமல் வளர்க்கப்பட்ட விதம், அவருக்கே இயல்பாக உள்ள தனக்குள் ஒடுங்கி போகிற சுபாவம், மக்களின் ஆழ்மன உணர்வுகளுடன் உரையாடத் தெரியாத விடுபட்ட தன்மை,  உறுதியின்மை, எதையும் உருக்கு உறுதியுடன் மக்களிடம் எடுத்துச் செல்கிற தன்னம்பிக்கை இன்மை, உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாடு இல்லாமை. ராகுலின் பெரிய குறை அவர் நினைக்கிறதை அப்படியே அவரது முகபாவனைகளூம் சொற்களும் படம்பிடிக்கும் என்பது. ஒரு தலைவனுக்கு இது பெரிய பலவீனம். நீங்கள் கலைஞரின் பல பேட்டிகளை பார்த்திருப்பீர்கள் - அவர் என்றுமே தன் உணர்ச்சிகளை கொட்டி விட மாட்டார்; தன் சலனங்களை, தத்தளிப்பை அவர் அம்பலபடுத்த மாட்டார். மக்களின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் இருப்பவனே தலைவன்; எதைச் சொன்னால் அது மக்களின் சொல்லாக இருக்கும் என அவன் அறிந்திருப்பான். உ.தா., ஜெயலலிதா ஒரு எலைட்டிஸ்ட் தான். அதை மக்களும் அறிந்திருந்தார்கள்; தன்னை மக்களில் ஒருவர் என்றெல்லாம் அவர் காட்ட முயன்றதில்லை. ஆனால் தான் மக்களுக்காக பணி செய்கிறேன், என்னால் மக்கள் இப்படியெல்லாம் பலன் பெற்றிருக்கிறார்கள் என தயங்காமல் உறுதியாக மேடையில் பேசுவார். அது சின்ன பிள்ளைகளை ஒரு தாய் மிரட்டுவது போல, ஒரு பிடிவாதமான மேலதிகாரி தன் கீழதரிகாரிகளிடம் பேசுவது போல இருக்கும்; ஆனால் அதில் குழப்பமோ, தடுமாற்றமோ இராது. அதனால் அது மக்களுக்கு பிடித்திருந்தது.
ஒரு தலைவன் குழப்பவாதியாய் இருக்கக் கூடாது. ராகுல் சமீபமாய் சென்னையில் உள்ள ஒரு பெண்களின் கல்லூரியில் வந்து கலந்துரையாடியது புகழ்பெற்றது. அவரது வெளிப்படைத்தன்மை, அவர் கூலாக, இறங்கி வந்து பேசியது நமக்கு பிடித்திருந்தது; ஆனால் சற்றே சிக்கலான கேள்விகள் வந்ததும் அவர் பதறுவதும் அப்போது வெளிப்படையானது. உ.தா., வதேராவின் மீது பாஜக வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள். இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் அவர் மீது நேர்மையான விசாரணை நடத்தப்படும், அவர் குற்றம் செய்தால் தண்டிப்போம் என ராகுல் பதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ராகுல் புலம்ப ஆரம்பித்து விட்டார், எங்கள் குடும்பம் வேண்டுமென்றே தாக்கப்படுகிறது, என் அக்காவின் கணவர் என்பதாலே அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறார், நான் அவரை முழுமையாய் ஆதரிப்பேன் என்றெல்லாம் அவர் தத்துபித்தென்று பேசினார். இதற்குப் பதில் அவர் காங்கிரஸின் முகத்தில் காறித் துப்பி இருக்கலாம்.

போகும் இடமெல்லாம் தன் அப்பா மற்றும் பாட்டியின் படுகொலைகளைப் பற்றி பேசுவது ராஜீவுக்கு அவரது காலத்தில் உதவியிருக்கலாம், ஆனால் ராகுல் இன்று அதை சொல்லும் போது அதைக் கேட்டிருக்கும் எத்தனை கோடி மக்கள் ராஜீவின் தொண்டராக தம்மை நினைப்பவர்கள்? தன் பாட்டியை, அப்பாவை இழந்த பின் ராகுல் நல்ல கவனிப்புடன் வசதியுடன் தானே வளர்ந்தார், அவர் மீது பச்சாதாபப்பட என்ன தேவை மக்களுக்கு இருக்கும்? இந்த ஊரில் ரெண்டு பெற்றோருமே இல்லாமல் வளர்கிற எத்தனையோ அனாதைகள் உண்டு. தெருவில் கிடந்து உழன்று உழைத்து மேலே வந்தவர்கள் உண்டு. இவர்களை விட இந்த ராகுல்கள் என்ன பெரிதாக போராடி விட்டார்கள்? சரி, அவரது துயரத்தை, இழப்புணர்வை நாம் பரிகசிக்க வேண்டாம். ஆனால் இந்த சுயபச்சாதாபம் மக்களிடத்து இவரை ஒரு பலவீனமான தலைவராக அல்லவா முன்வைக்கக் கூடும்?

ஒரு டிவி பேட்டியில் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்பான கலவரத்தில் காங்கிரஸின் குண்டர்கள் நடத்திய வெறியாட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு ராகுலின் பதில் என்ன எனக் கேட்கப்படுகிறது. அதற்கு ராகுலின் பதில் அதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்காது என்பதே. இங்கே தமிழகத்தில் எழுவர் விடுதலை குறித்து விவாதம் எழும் போது ராஜீவைக் கொன்றவர்களை நாங்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் பிரதிநிதிகள் கூவுகிறார்கள். கொன்றதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டீர்கள், கொன்றதாய் கூறப்படுபவர்களையும் மன்னிக்க மாட்டீர்கள். மன்னிக்கவே தயாராகாத ஒரு கட்சித் தலைமையை மக்கள் எப்படி ஏற்பார்கள்? மன்னிப்பு கேட்க மனமில்லை என்றாலும் மன்னிப்பு கோருகிறோம் என ராகுல் கூறி இருந்த்தால் கொல்லப்பட்டோர் குடும்பத்துக்கு அது ஆறுதலாய் இருந்திருக்காதா?

ஸ்டாலின் கூட ஒரு திறமையான மேடைப்பேச்சாளர் இல்லை தான், ஆனால் அவருக்கு கட்சி மீது நல்ல கட்டுப்பாடு உள்ளது; கூட்டணி அமைப்பதில் சாமர்த்தியம் உள்ளது; தன் வாயை எப்போது திறக்க வேண்டும், எதைச் சொல்ல வேண்டும் எனத் தெரிகிறது. அவர் ஒரு மிக ஆகர்சமான தலைவராய் வராவிட்டாலும் நல்ல நிர்வாகியாய் இருப்பார், மக்களுக்கு நம்பிக்கையை தருபவராக இருப்பார். ஆனால் இந்த பண்புகளும் ராகுலிடம் இல்லை.
இதனால் தான் ராகுல் ஒரு மேலான தலைவர் ஆக கனகாலம் ஆகும் என நினைக்கிறேன்.

ராகுலும் பிரியங்காவும் ஒரேயடியாய் தலைமை நாற்காலியை விட்டுத் தர வேண்டியதில்லை; அவர்கள் பின்னணியில் இருக்கலாம்; சரியான நேரம் வரும் போது வெளிப்படலாம். அப்போது அவர்களுக்கு துணையாகவும் ஓரளவு போட்டியாகவும் செயல்பட அடுத்த கட்ட தலைவரக்ள் தோன்றி இருப்பார்கள். ஆனால் சாவு வீட்டிலும் நானே பிணமாக இருப்பேன் எனும் மனநிலையே இப்போதைக்கு காந்தி குடும்பத்தாரிடம் தெரிகிறது. போகாதீங்க அம்மா, போகாதீங்க ஐயா, நீங்க போனால் எங்கள் மாநிலத்து தொண்டர்கள் தற்கொலை பண்ணிப்பாங்க என கூவும் அடிமைகளை அருகில் வைத்துக் கொண்டு நீரோ மன்னனைப் போல பிடில் வாசித்தபடி இருப்பார்கள். ஒருநாள் எல்லாம் எரிந்தடங்கும். அன்று காங்கிரஸ் விழித்துக் கொள்ளும்!

Comments