தேர்தல் முடிவுகள்


பாராளுமன்ற தேர்தல் முடிவுகளைப் பொறுத்தமட்டில், எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. இரண்டு விதமாய் மத்தியில் பாஜகவின் எதிர்காலம் ஊகிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்பான அலையில் இந்துத்துவா அரசியல் பெரிய எழுச்சி பெற்று பெருவாரியான வெற்றியை மோடி பெறுவார்  என்பது ஒன்றுஅடுத்து, மக்களுக்கு பரவலாக இந்த ஆட்சி மீதுள்ள ஏமாற்றத்தினால் பாஜக போன தடவை பெற்றதை விட குறைவான இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் அல்லது பலவீனமான அரசாக தொடரும். நான் இயல்பாகவே இரண்டாவது ஆருடமே நிகழட்டும் என ஏங்கினேன். ஆனால் பாஜக தென்னகம் தவிர தேசம் முழுக்க தனது ஆதிக்கத்தை நிறுவி உள்ளது


இந்த முடிவுகள் தந்துள்ள துணிச்சலினால் பாஜக அடுத்து என்னவெல்லாம் பண்ணும் எனும் அச்சம் பரவலாக எழுந்துள்ளது. .தா., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுமா முழுமையான சர்வாதிகாரத்தை அவிழ்த்து விடுமா என என் நண்பர்கள் சிலர் பதற்றத்தோடு விவாதிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எப்படியும் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தானே! எப்படி காங்கிரஸ் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததோ அதுவே பாஜகவுக்கும் நிகழும் என அரசியல் நோக்காளர்களும் பாஜகவினரும் கூறி வந்தது தானே. இப்போது நம்முள் உள்ள கேள்வி மூன்றாம் முறை பாஜக தொடர்ந்து வெற்றி பெறுமா என்பதே. அது நிச்சயம் நிகழாது என நம்ப விரும்புகிறேன்.

இந்த ஆட்சியில் மோடி என்னவெல்லாம் கொடுமைகள் செய்வார் என கற்பனை செய்ய நான் விரும்பவில்லை. முழங்கால் வரை நனைஞ்சாச்சு, மூழ்கி விடுவோமே என மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். மேலும் இப்போதைக்கு மத்தியில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை. ராகுலை இன்னும் ஒரு தலைவராக யாரும் ஏற்க தயாராக இல்லை. மற்றபடி மேற்கு வங்கம் உட்பட்ட மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள பெருவெற்றிகளை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் அவர்கள் தேசம் முழுக்க வலுவாகவே (பாஜக அளவுக்கு இல்லையென்றாலும்) திகழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் வீழ்ச்சி துவங்கியதும் முழுமையாய் தடயம் இன்றி காணாமல் போகவில்லையா? இதுவே விரைவில் பாஜகவுக்கும் நிகழும்

இந்த கசப்பான முடிவுகளுக்கு மாற்றாய் ஆறுதலாக தமிழக முடிவுகள் உள்ளன. திமுகவுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றிருக்கும் எழுத்தாள நண்பர்கள் தமிழச்சி, ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக முழுமையாக துடைத்து நீக்கப்படும் எனத் தெரிந்தும் பாஜக தொடந்து எடப்பாடிக்கு ஆதரவளிக்கப் போகிறதா? இதை மக்களின் விருப்பமாக ஏற்று அதிமுக அரசு ஆட்சி விலகுவதே நலம். மாநிலத்தில் திமுக விரைவில் ஆட்சியமைப்பதே தமிழகத்துக்கு விடியலைக் கொண்டு வரும். அல்லாவிடில், இந்த தேர்தல் வெற்றியால் என்ன பயன் பெரிதாக இருக்க முடியும்?


Comments

bandhu said…
//இந்த கசப்பான முடிவுகளுக்கு மாற்றாய் ஆறுதலாக தமிழக முடிவுகள் உள்ளன. திமுகவுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றிருக்கும் எழுத்தாள நண்பர்கள் தமிழச்சி, ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக முழுமையாக துடைத்து நீக்கப்படும் எனத் தெரிந்தும் பாஜக தொடந்து எடப்பாடிக்கு ஆதரவளிக்கப் போகிறதா? இதை மக்களின் விருப்பமாக ஏற்று அதிமுக அரசு ஆட்சி விலகுவதே நலம். மாநிலத்தில் திமுக விரைவில் ஆட்சியமைப்பதே தமிழகத்துக்கு விடியலைக் கொண்டு வரும். அல்லாவிடில், இந்த தேர்தல் வெற்றியால் என்ன பயன் பெரிதாக இருக்க முடியும்?
//
அரசியல் ஒரு வியாபாரம். அவ்வளவு தான். தார்மீக பொறுப்பேற்று பதவி விலகல்.. எல்லாம் யார் பண்ணுவார்கள்? அதெல்லாம் ஒரு காலம்.

யாருக்கும் முழுமையான சந்தோஷத்தை தராத குழப்பமான வெற்றி!