குழந்தைப்பேறு விவாகரத்துக்கு வித்திடுமா?


நடிகர் விஷ்ணு தனது மனைவி ரஜினியை திருமணம் செய்து குறுகிய காலத்தில் பிரிந்து விவாகரத்தானது  பற்றி ஒரு தோழி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் விஷ்ணுவின் விசிறி. விஷ்ணுவும் மனைவியும் கல்லூரியில் இருந்தே பழகி காதலித்து மணம் புரிந்தவர்கள். இவ்வளவு தீவிரமான ஒரு உறவு எப்படி குழந்தை பிறந்த பின் முறிந்திட முடியும் என தோழி புலம்பினார். விவாகரத்து கோரியது மனைவியே; அவர் அதற்கு சொன்ன காரணம் திருமணமான ஒரு வருடத்தில் விஷ்ணு ஆளே மாறி விட்டார் என்பது; விஷ்ணுவின் தரப்பு தான் தன் சக நடிகைகளுடன் மனம் விட்டு பேசத் துவங்கியதை, பெண்களிடத்து கூச்சமாய் ஒதுங்கி போகும் தன் மனப்போக்கை தான் மாற்றிக் கொண்டு கலகலப்பாய் மாறியதையே மனைவி தவறாய் புரிந்து கொண்டார் என்பது. அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் ரகசியங்களை, நிஜங்களை நாம் அறியோம். ஆனால் ஒன்றை அறிவோம் - ஒரு பந்தம் உடைந்து மனிதர்கள் திசைக்கொன்றாய் தனித்தனி தீவுகளாய் மிதந்து விலகுவதற்கு இது போதுமான காரணம் அல்ல என்பது; அதே போல, இத்தகைய அற்ப காரணங்களின் பொருட்டு இன்று ஜோடிகள் அதிகமாய் பிரிகிறார்கள், திருமணமான சில வருடங்களிலேயே பெண்கள் ஒருவித மூச்சுத்திணறலை உணர்ந்து தனித்திருப்பதே சிறப்பு எனும் இடத்துக்கு வந்து சேர்கிறார்கள் என்பதையும் நாம் இன்று அறிவோம். இந்த போக்கைப் பற்றி உளவியலும் சமூகவியலும் நமக்கு கூறுவதென்ன என முதலில் பார்ப்போம்.

முதலில் குழந்தைப் பேறு. திருமணத்துக்குப் பின் குழந்தை பிறந்ததும் தம்பதிகள் இடையில் நெருக்கமும் பிணைப்பும் உடலளவில் குறைந்து போகிறது; இதனால் அவர்கள் பிரிவதும் அதிகமாகிறது என சமீபத்தைய ஆய்வுகள் சொல்கின்றன. குழந்தைப் பிறப்பினால், இன்னொரு பக்கம், தம்பதியினருக்கு சமூகத்தில் தாம் ஒரு முழுமையான குடும்பமாய் ஏற்கப்படும் திருப்தியும் உறுதிப்பாடும் கிடைக்கும். ஆக, குழந்தைப் பேறு குடும்ப அமைப்பை வலுவாக்கும், ஆனால் கணவன் மனைவி இடையே இச்சையை, இணக்கத்தை குறைக்கும். இது இயல்பே - குழந்தை வளர்ப்பு 24 மணிநேரா வேலை. தாய்க்கு உறங்கவோ தன் தேவைகளை கவனிக்கவோ நேரம் இருக்காது. தாய்மார் உறக்கச் சடவை சதா கண்களில் சுமந்து திரிவர். மேலும் தனியாய் குழந்தையை கவனித்துக் கொள்ள தான் பல தியாகங்களை செய்ய கணவன் நிம்மதியாய் சுதந்திரமாய் இருப்பது கண்டு அவர்களுக்கு கோபம் வரலாம்

ஒருவேளை குழந்தையை கவனித்துக் கொள்ள தாதி இருந்தாலும் கூட, மனைவிக்கு தன் கணவன் மீது பாலியல் விருப்பம் நிச்சயம் குறையும். காரணம், அவர் உணர்வுரீதியாய் முழுக்க குழந்தையிடம் ஆட்பட்டிருப்பது. இந்த திடீர் அந்நியத்தன்மை கணவனையும் நிச்சயம் மனைவியிடம் இருந்து அகற்றி, வேறு பெண்களிடம் ஆர்வம் கொள்ளச் செய்யும். ஆனால் இதன் பொருள் எல்லா நவீன தம்பதிகளும் குழந்தைப்பேறுடன் பிரிகிறார்கள் என்றல்ல. உளவியல் ஆய்வுகள் சொல்வது என்னவெனில், இந்த ஆரம்ப கட்ட நெருக்கடியை தாண்டும் ஜோடிகள் கூடுதலாய் நெருக்கமாகிறார்கள்; குழந்தை அவர்களின் பந்தத்தை மேலும் வலுவாக்கும். குழந்தையின் சேட்டைகள், விளையாட்டுகள், தேவைகள் பெற்றோரின் உலகில் புத்துணர்ச்சியை வண்ணங்களை கொண்டு வரும். பரஸ்பரம் மிகுந்த வெறுப்பு வரும் போது கூடகுழந்தைக்காகஎன காரணம் காட்டி அவர்கள் இணைவார்கள்; பொதுவான இலக்கு அவர்களை தன்னலம் மீறி சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும். தன்னலம் மீறிய இந்த முனைப்பு அவர்களின் வாழ்வை மிகுந்த மகிழ்ச்சி கொண்டதாக்கும். ஆக, புதிதாய் திருமணமானோரைப் பொறுத்தமட்டில், குழந்தையின் வருகை ஒரு இரு-முனைக் கத்தி - அது காயம் ஏற்படுத்தும், காப்பாற்றவும் செய்யும்

நம் முன்னோர்கள் இச்சிக்கலை எப்படி சமாளித்தார்கள்?

நம் பெற்றோர், தாத்தா பாட்டிகள் ஒரு பெரிய கூட்டுகுடும்ப அமைப்புக்குள் வாழ்ந்தார்கள். கூட்டுக்குடும்பம் ஒரு தம்பதியின் சுதந்திரத்தை பறிக்கும் என்றாலும், அன்றாட உறவாடல்களை சுலபமாக்கும், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள, பிரச்சனைகளை தலையிட்டு சீர் செய்ய பல தீர்வுகளை தரும். கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பம் ஆன பின்னர் கூட மாமனார், மாமியார், உறவினர்கள் என பலரும் புதிதாய் திருமணமானதில் இருந்து பல வருடங்களுக்கு எல்லா விசயங்களிலும் உதவிக்கரம் நீட்டுபவர்களாய் இருந்தார்கள். என் அப்பா அம்மாவை மிகவும் தொந்தரவு பண்ணி காயப்படுத்தும் போதெல்லாம் அம்மா மனவருத்தத்தில் பிரிந்து போய் விடா முடிவெடுப்பார்; ஆனால் அடுத்த நாள் காலை மந்திரம் போட்டது போல என் தாத்தா வந்து விடுவார். அவர் தன் மகனை கண்டிப்பார், மிரட்டுவார், மருமகளை அமைதிப்படுத்துவார், அவர் வந்து ரெண்டு வார்த்தை பேசினதுமே அம்மாவின் முகம் ஒளிபெற்று விடும். அவருக்கு சிற்றுண்டி பண்ணிக் கொடுத்து உபசரித்து தன் நன்றியை செலுத்துவார்; அவரது சொற்கள் அல்ல அவரது அப்போதைய இருப்பே அம்மாவுக்கு பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும். அதன் பிறகு என் அத்தை வருவார். அத்தை போன பிறகு தெருவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவராய் வந்து அப்பாவை வைது அம்மாவை சமாதானம் பண்ணுவார்கள். இது ஒரு பெரிய நிகழ்வாக இருக்கும். அப்பா மாலையில் வந்ததும் ஊரே அம்மாவுக்குப் பின்னால் திரண்டு நிற்பதை உனர்ந்தவராய் பின்வாங்குவார்; குற்றவுணர்வை முகத்தில் காட்டி அன்பாய் பேச முயல்வார். கொஞ்ச நேரம் பிகுபண்ணினாலும் சில நிமிடங்களில் அம்மா பரவசமாகி அப்பாவை விழுந்து விழுந்து கவனிப்பார்
இன்றைய நகர்சார் குடும்பங்களில் இத்தகைய ஆதரவு அமைப்புகள் இல்லை; மாமனார் மாமியார் கூட தத்தமது பிரச்சனைகளில் பிஸியாக இருக்கிறார்கள். ஆண்டை வீட்டினருக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே தெரிந்திராது. ஆக, கணவன் மனைவி மத்தியில் பிரச்சனை பெரிதான பின்னர் தான் பெற்றோர் தலையிடுவார்கள். அப்போது வெள்ளம் தலைக்கு மேல் சென்றிருக்கும். ஆகையால், அவர்கள் செய்வதெல்லாம் விவாகாரத்துக்கு தம்மை தயாராக்கி வந்திருக்கும் மகள் / மகனை கைகுலுக்கி வரவேற்பதே. விவாகரத்து வேறு இன்று டிவி விளம்பரகளைப் போல மலிந்து விட்டது. திருமணம் செய்வதில் உள்ள சிரமங்கள், பொருளாதார செலவுகள், நியாயங்கள் விவாகரத்தில் இருப்பதில்லை. ஆயிரம் முறை யோசித்து ஒருவரை தேர்ந்து மணமுடித்த பின் எதையும் யோசிக்காமல் விவாகரத்துக்கு விண்ணப்பிப்பதே இன்றைய ஸ்டைல்.
 இவ்விசத்தில் பெற்றோருக்கு அதிர்ச்சியே இருப்பதில்லை. சுலபத்தில் எதிர்தரப்பை குற்றம் சாட்டி விட்டு தத்தமது பிரச்சனைகளை கவனிக்க போய் விடுகிறார்கள்
குழந்தைப் பேறுக்குப் பின்பான பாலியல் வறட்சி முந்தைய தலைமுறைகளிலும் இருந்திருக்கும். அவர்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? இத்தனைக்கும் அன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் பத்து குழந்தைகள் சராசரியாய் பெறுவார்கள். ஏன் அவர்கள் முதல் குழந்தையுடன் பிரியவில்லை?


ஒரு காரணம், அன்று நிறைய குழந்தைகள் பெறுவதே காலாகாலத்துக்கான வளம். குழந்தைகளே அன்றைய தம்பதிகளுக்கு சொத்து. ஆகையால், முதல் குழந்தைக்குப் பின்னர் அடுத்த குழந்தைக்குத் தயாராகும் அழுத்தம் அன்றைய மனைவியருக்கு இருக்கும். இது மறைமுகமாய் அவர்களின் பாலியல் இச்சையை அதிகப்படுத்தும். குழந்தையை சதா தூக்கி அலையும் கட்டாயமும் இராததால் ஒவ்வொரு வருடமும் அல்லது இரு வருடங்களுக்கு ஒருமுறை பெண்கள் கர்ப்பமாகி விடுவார்கள். இன்று ஒன்றே போதும் எனும் மனநிலை இருப்பதால் செக்ஸுக்கு பயன்மதிப்பு வெகுவாய் குறைந்து விட்டது. இன்றைய சமூகத்தில் செக்ஸ் வெறும் பொழுதுபோக்கு தான். செக்ஸுக்கு இணையான பல பொழுதுபோக்குகளும் கவனச்சிதறல்களும் சமூகவலைதளங்கள், சுற்றுலா, உணவகங்கள் என தோன்றி விட்டன. முன்பை விட இன்றைக்கு செக்ஸ் வறட்சி அதிகம் - செக்ஸ் ஒரு உடல் தேவையாக மட்டுமே இன்று உள்ளது; சமூக உளவியல் கலாச்சார பயன்மதிப்பு இன்று செக்ஸுக்கு இல்லை. ஆக, ஒன்றுக்கு மேல் குழந்தைகள் வேண்டாம் எனும் தேசம் தழுவிய பிரச்சாரங்களும் நம்மை இந்த இடத்துக்கு தள்ளி விட்டன எனலாம்.  

Comments

Ponmahes said…
அருமையான பதிவு அண்ணா. வாழ்த்துக்கள்!!💐💐