தோனியின் திடீர் ஆவேசம்: கார்ப்பரேட் சூழல் நம்மை என்ன செய்கிறது? (1)11-4-19 அன்று இரவு சென்னைக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான T20 ஆட்டம் முடியும் தறுவாயில் இருக்கிறது. முதலில் ஆடியிருந்த ராஜஸ்தான் சென்னைக்கு நியமித்த இலக்கு 151. ஆரம்பத்தில் தடுமாறிய சென்னை பின்னர் தோனி மற்றும் ராயுடுவின் கூட்டணி மூலம் வெற்றி விளிம்பில் கைப்பற்றிக் கொண்டு ஏற முயன்ற போது, கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை எனும் நெருக்கடி நிலையில், தோனி தோனி அவுட் ஆனார். அடுத்தாட வேண்டியவர்கள் ஜடேஜாவும் சேண்ட்னரும். அவர்கள் பெயர் பெற்ற மட்டையாளர்கள் அல்ல. அவர்கள் பொலார்டோ ரஸலோ அல்ல. ஆகையால் தோனியின் விக்கெட் ஒரு பெரிய சரிவாக அமைந்தது

தோனி டக் அவுட்டில் இருந்து ஆட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தார். முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்த பின், தோனியின் விக்கெட்டுக்குப் பின் அடுத்த பந்தில் நோ பால் என அறிவிக்கிறார் நடுவர் உல்லாஸ் காந்தி. ஒரு உபரி எண் மற்றும் free hit கிடைக்கும். இது ஒரு முக்கியமான சந்தர்பம். எல்லாம் சரியாகப் போனால் இந்த பந்துடன் ஆட்டம் நிச்சயம் சென்னையில் சட்டைப் பையில் விழுந்து விடும். தோனி அதையே எதிர்பார்த்திருப்பார். ஆனால் ஒரு திருப்பம்.
 ஸ்கொயர் லெக் நிலையில் உள்ள நடுவர் புரூஸ் ஆக்ஸன்போர்ட் இந்த நோ பாலை ரத்து செய்வதாய் அறிவிக்கிறார். யாருடைய தீர்ப்பு சரி? குழப்பம். ஆனால் இந்திய நடுவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆக்ஸன்போர்டின் முடிவை ஏற்கிறார். மேலும் நோ பால் குறித்து தீர்ப்பு வழங்குவது ஸ்கொயர் லெக் நடுவரின் பொறுப்பு என்பதே விதிமுறை. ஆகையால், அதுவே நியாயம். இந்த சந்தர்பத்தில் குழப்பம் விளையக் காரணமே வழமையை மீறி காந்தி நோ பாஸ் அறிவித்தது தான். பொதுவாக நடுவர் ஸ்கொயர் லெக் நடுவரின் ஆலோசித்து விட்டே முடிவை அறிவிப்பார். திருமணத்தின் போது மனைவி தாலியை பிடுங்கி கணவருக்கு கட்டி விட்டு பின்னர் கணவர் அதைப் பறித்து மனைவிக்கு கட்ட முயல்வது போன்ற அபத்த நகைச்சுவையாக இது முடிந்திருக்க வேண்டும்.
 ஆனால் டக் அவுட்டில் பார்த்துக் கொண்டிருந்த தோனி கோபத்தின் உச்சிக்கே போனார். தன் மீதான கட்டுப்பாட்டை இழந்தார். குழாயடியில் சிண்டைப் பிடித்து அறைய குடத்துடன் ஆவேச நடையிட்டு செல்லும் பெண்களைப் போல அவர்ஆடுதளம் நோக்கி கிளம்பினார்நடுவர்களுடன் கோபத்தில் உரையாடினார். நடுவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டு எப்படி முடிவை மாற்ற முடியும் என திரும்பத் திரும்பக் கேட்டார். இது ஒரு அபத்தமான எதிர்வினை என்பது தோனிக்கு பின்னர் விளங்கி இருக்கும். ஆனால் அந்த சந்தர்பத்தில் அவர் தோனியைப் போன்றே இல்லை. அவர் சில நிமிடங்கள் கோலியின் ஆவி தனக்குள் புகுந்தது போல நடந்து கொண்டார். இறுதியில் ஆக்ஸன்போர்ட் பிடிவாதமாய் தோனியிடம் தன் முடிவை மாற்ற முடியாது எனக் கூறி அவரை திரும்ப அனுப்பினார்
உலகமே உற்று கவனிக்கும் ஒரு ஆட்டத்தொடர் இது. முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், நிர்வாகிகள் என பலரும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர் (பந்து வீச்சாளர் இங்கிலாந்தை சேர்ந்தவர், நடுவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியர்). தோனி என்னதான் நட்சத்திர வீரர் என்றாலும் அவர் தன்னை நடுவர்களுக்கு மேலாக கருத வேண்டியதில்லை, இது ஒரு மோசமான உதாரணத்தை அடுத்து வரும் வீரர்களுக்கு அளிக்கும் என்பது போன்ற பார்வைகள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவின் சார்பில் பிஷன் சிங் பேடி - கிரிக்கெட் வாரியம் மற்றும் நட்சத்திர வீரர்களின் பிம்பத்தை சுக்குநூறாய் உடைத்து விளாச விரும்பும் பிஷன் சிங் பேடி - கடுமையாய் தோனியை விமர்சித்தார். கங்குலியோதோனியும் மனிதர் தானே, இதை பெரிது படுத்த வேண்டாம்என்றார்
மேட்ச் ரெபரி இது குறித்து விசாரணை நடத்தினார். இத்தகைய குற்றத்துக்கான அதிக பட்ச தண்டனையாக ஒன்றிரண்டு ஆட்டங்களில் தோனியை தடை செய்யலாம், அல்லது குறைந்த பட்ச தண்டனையாக 50% ஆட்ட கட்டணத்தை அபராதமாக விதிக்கலாம். இந்த குறைந்த பட்ச தண்டனைக்காக மேட்ச் ரெபரியும் கண்டனத்துக்கு உள்ளானார். ஒரே கலவரச் சூழல்!
 பார்வையாளர்களுக்கு யாரை ஆதரிப்பது, இது தோனியே தானா என்பது போன்ற குழப்பம். வழக்கமாய் நடப்பது போல, ராஜஸ்தான் ரசிகர்கள் கூட எதிர்பக்கம் எடுக்கவில்லை. சென்னை ரசிகர்கள் நடுவர்களை வைது விட்டு விலகிக் கொண்டார்கள். பரவலாக ஏற்பட்டிருந்த உணர்ச்சி ஒருவித ஆச்சரியம். “தோனிக்கு என்ன ஆச்சு?”

இந்த சர்ச்சையில் பத்ரிநாத் தெரிவித்த கருத்து தான் முக்கியமானது. அவர் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர். தோனியின் கீழ் ஆடியவர். “தோனி இப்படி கொந்தளிப்பது முன்பே டிரெஸ்ஸிங் ரூமில் நடந்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் வெளிப்படையாக ஒரு நடுவரிடம் அவர் மோதியது ஆச்சரியம் அளிக்கிறதுஎன்றார் பத்ரிநாத். தனது சுயசரிதையான 281 and Beyond எனும் நூலில் வி.வி.எஸ் லஷ்மண் தோனியை தான் கீழே ஆடிய  அணித்தலைவர்களில் சிறந்தவர் என்கிறார். அதற்கு அவர் குறிப்பிடும் முக்கிய காரணம் தோனியும் அலுத்துக் கொள்ளாத இயல்பு - அவருக்கு பந்தா இல்லை, மிக நிதானமாய் திட்டமிட்டு செயல்படுவார், வீரர்களிடம் கனிவாக இருப்பார், அணி மிக மோசமாய் ஆடித் தோற்றாலும் அவர் ஜோக் அடித்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொள்வார்; அதே நேரம் வீரர்களிடம் தன் கருத்தை வலுவாக தெரிவித்து பிழைகளை திருத்தும்படி கேட்டுக் கொள்வார், ஆனால் அவர்களின் கடமையுணர்வை கேள்வி கேட்க மாட்டார். தோனியால் எப்படி இவ்வளவு சுயகட்டுப்பாட்டுடன் ஒரு ஐஸ் மனிதன் போல இருக்க முடிந்தது என லஷ்மண் ஆச்சரியப்படுகிறார்
தோனியின் கீழ் இந்திய அணி அடைந்த மிக மட்டமான தோல்விகளுடன் (உலகக்கோப்பையை வென்ற பின் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து இந்திய அணி அனைத்து ஆட்டங்களையும் இழந்தது) ஒப்பிடுகையில் இந்த ஒரு .பி.எல் ஆட்டத்தின் முடிவு ஒன்றுமே இல்லை எனலாம். அந்த நோ பால் தீர்ப்பினால் அந்த ஒரு ஆட்டத்தை சென்னை இழந்திருந்தாலும் கூட சென்னையால் நிச்சயமாய் இறுதிப் போட்டியை அடைய முடியும், வெல்லவும் முடியும். ஆனால் தோனி ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டும்? ஏன் புறாவுக்காக போரிட வேண்டும்? அதுவும் இந்திய அணி தலைவராக அவர் மிக அமைதியானவராகவும் சென்னை அணியின் .பி.எல் தலைவராக அவர் அவ்வப்போது நிதானம் இழப்பவராகவும் (பத்ரிநாத் சொல்வதை கருத்தில் கொண்டால்) ஏன் இருக்கிறார்? ஒரு சர்வதேச ஆட்டம் அளிக்காத நெருக்கடியை .பி.எல் ஆட்டம் தோனிக்கு அளிக்கிறதா? ஆம் என்றால் ஏன்?

இதற்கு விடைகாண நாம் இன்றைய கார்ப்பரேட் பணிச்சூழல் மனிதர்களை ஆட்டுவிக்கும் விதத்தை அலச வேண்டும். வேலைச் சூழல்களில் நாம் இன்று நீக்கமறாது காண்பவை நெருக்கடி, பயம், பாதுகாப்பின்மை, பரஸ்பர சந்தேகம், சகமனிதரை துச்சமாக பாவிக்கும் மனப்பான்மை, தன் முன்னேற்றத்துக்காக யாரையும் பயன்படுத்தலாம், தன் பாதுகாப்புக்காக யாரையும் வெறுக்கலாம் எனும் மிதப்பு, எந்திரத்தனமான உறவுகள், பிளாஸ்டிக்கான புன்னகைகள், கசப்பான முகங்கள், வெறுப்பை உமிழும் கண்கள், பரஸ்பர அண்மையின் வெக்கை தாள முடியாத அசூயைஅமெரிக்காவில் எண்பதுகளில் ஜனாதிபதி ரீகனின் தலைமையில் தபால் துறை கார்ப்பரேட்மயமாகத் துவங்கிய போது ஊழியர்கள் மத்தியில் மன அழுத்தமும் நெருக்கடியும் பாதுகாப்பின்மையும் உச்சம் பெற்றன. அப்போது தான் ஊழியர்கள் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும், மேலதிகாரிகளை சுட்டு விட்டு தற்கொலை பண்ணிக் கொள்வதும் அதிகமாயின. இச்சம்பவங்கள் ஒரு தனி போக்காக உருக்கொள்ள இப்படியான வேலையிட கட்டுப்பாடற்ற கோபச் செயல்களை சுட்ட going postal எனும் சொற்றொடரே ஆங்கிலத்தில் தோன்றி பிரபலமானது.
 கடந்த கால்நூற்றாண்டில் உலகமெங்கும் நடந்துள்ள வேலையிட துப்பாக்கி சூடுகள், கொலைகள் மற்றும் தற்கொலைகளில் பிரான்ஸ், ரஷ்யா, துருக்கி, சீனா, பிலிப்பைன்ஸ், அப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் இடம்பெற்றிருந்தாலும் முதலிடம் அமெரிக்காவுக்குத் தான். இதற்குக் காரணம் அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் மட்டுமல்ல கார்ப்பரேட் வேலையிட சுரண்டலும் தான். சதா கண்காணிக்கப்படும், மதிப்பிடப்படும் பதற்றம், தனது அன்றாட செயல்பாடுகளின் அடிப்படையில் கராறாய் மதிப்பிடப் படுகிறோம் எனும் உணர்வு, சின்ன சின்ன தவறுகளுக்குக் கூட நாம் மிகப்பெரிய அளவில் விலைகொடுக்க வேண்டி வரும் எனும் பயம் ஆகியவை இன்றைய பண்பாட்டில் ஊறிப் போய் விட்டவை. எந்த அளவுக்கு என்றால் மிக இயல்பான கனிவான மனிதர்கள் கூட டிவி ரியாலிட்டி ஷோக்களில், விளையாட்டுப் போட்டிகளில், சினிமா சம்மந்தப்பட்ட சர்ச்சைகளில், ஒரு படமோ நிகழ்ச்சியோ வெற்றி பெற்றாக வேண்டும் எனும் நெருக்கடியில் வினோதமாய் நடந்து கொள்வதை பார்க்கிறோம். காரணம் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் எனும் உயிர்போகும் ஆவேசம் நம் அனைவரின் மென்னியை பற்றி நெரிக்கிறது. அது எளிய ஊழியர்களை மட்டுமல்ல பெரும் கலைஞர்கள், விளையாட்டு வீரர்களையும் தம் இயல்பை மாற்றிக் கொண்டு வெறியாட்டம் ஆட வைக்கிறது. இந்த காலத்தின் மிக ஆபத்தான சொல்லாகவெற்றிஉருமாறி விட்டது. ஏன்?

Comments