உடல் எடை குறைப்பதன் மிகப்பெரிய சவால் (1)எதுவுமே ஆரம்பத்தில் சற்று சுலபமாய் படும். முதல் நாள் பள்ளிக்குப் போவது, காதலியுடன் முதல் நாள் வெளியே சுற்றுவது, ஒரு புதிய டயட்டை பின்பற்றுவது. போகப் போக ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் வரும். இடைப்பட்ட உண்ணாநோன்புக்கு (intermittent fasting) இது வெகுவாக பொருந்தி வரும். இடைப்பட்ட உண்ணாநோன்பை பழகினால் எடைகுறைப்பு, உடல் நலத்தை பேணல், நேரத்தை சேமிப்பு என பல பலன்கள் வரும். குறிப்பாய், ஆரம்ப சில மாதங்களுக்கு. சொல்லப் போனால், பேலியோ உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவற்றை விட உண்ணாநோன்பினால் அதிக பலன்கள் உடனடியாய் கிடைக்கும். என் விசயத்தில், முதல் மூன்று மாதங்களில் மிக சுலபமாய் 16 கிலோ எடை குறைத்தேன். நான் உணவருந்த்தும் போது எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றவில்லை. விருப்பப்படி சாப்பிட்டேன். உடற்பயிற்சியையும் ஒழுங்காக தினமும் பண்ணவில்லை. எடை குறைகிற வேகம் எனக்கு வேறெதுவும் தேவையில்லை எனும் நம்பிக்கையை அளித்தது. உண்ணாநோன்பை மிகப்பெரிய வரப்பிரசாதம் என நினைக்கத் தொடங்கினேன். அதன் பிறகே, ஒரு பெரிய சிக்கல் ஆரம்பித்தது - உடல் எடை அப்படியே உறைந்து போனது, கணினி சிலநேரம் அப்படியே உறைந்து போய் நிற்குமே அப்படி


நான் இதன் பிறகு உடற்பயிற்சியை தினமும் செய்தேன். நாளுக்கு ஓருமுறை மட்டும் உணவருந்தும் One Meal a Day (OMAD) உணவு முறையை பின்பற்றி வந்தேன். அந்த உணவை பேலியோவுக்கு மாற்றினேன். மாதத்தில் சில நாட்கள் (சுமார் 6-10 நாட்கள்) நீடித்த உண்ணாநோன்பை பின்பற்றிப் பார்த்தேன். ஆனால் விளைவில் பெரிய மாற்றங்கள் இல்லை. எடை கூடுதலாக ஏறாமல், 75-76இல் நின்றது. ஆனால் எதிர்பாராமல் ஒரு உதிரி பலன் ஏற்பட்டது - கடந்த சில ஆண்டுகளாகவே டிராபிக்கில் பொறுமையின்றி உறுமும் வாகனம் போல தூங்கும் போது குறட்டை விட்டுக் கொண்டிருந்தேன். அருகில் படுத்திருப்போருக்கு பெரும் தொந்தரவு
குறட்டை கேட்காதபடி தடுக்கும் வாயில் பொருத்த வேண்டிய கருவி ஒன்றை வாங்கலாமா என யோசித்தேன். இணையத்தில் இதைக் குறித்து வாசித்தேன். ஒருநாள் ஒரு மருத்துவரைப் பார்த்தேன். அவர் இது மூச்சுப்பிரச்சனையால் ஏற்படலாம் என்றார் அவர். அதாவது உறங்கும் போது தொண்டைக்கும் மூச்சுக் குழாய்க்கும் நடுவே காற்றின் பரிவர்த்தனையில் இடறு வரலாம். அப்போது நாம் குறட்டை விடுவோம். குறிப்பாய், மூச்சுப் பகுதியிலோ தொண்டையிலோ உள்ள தசைகள் பலவீனமாய் இருந்தாலோ கூடுதலாய் அவசியமற்ற தசைகள் வளர்ந்திருந்தாலோ இது ஏற்படலாம். லேசர் சிகிச்சை, சோம்னோபிளாஸ்டி முதல் அறுவை சிகிச்சைகள் வரை மருத்துவ தீர்வுகள் உண்டு. ஒரு குறட்டைக்காக ஒரு போரா என வியந்தபடி வந்து விட்டேன். உண்ணாநோன்பை - குறிப்பாய் நீடித்த நோன்பை - பின்பற்றிய பின் இரவில் நான் மூச்சு விடுவது மேம்பட்டுள்ளதை நானே உணர்ந்த்தேன். முக்கியமாய் குறட்டை அறவே நின்று போனது. கொக்கை குறிவைத்து சுட்டால் காக்காய் விழுந்தது போல இது முடிந்து போனது
குறட்டையை விரட்ட எடைகுறைப்பு உதவியிருக்கலாம் அல்லது உண்ணாநோன்பினால் விளைந்த ஒரு விளங்காத மாற்றத்தினால் இருக்கலாம். எப்படியோ கிடைத்தவரை மகிழ்ச்சி என எண்ணிக் கொண்டேன். கூடுதலாய், நமது இன்றைய உணவுப்பழக்கங்கள் எப்படி குறட்டைப் பிரச்சனையை எல்லாம் ஏற்படுத்தி வாய்ப்பூட்டு போன்ற கருவிகள் முதல் அறுவை சிகிச்சை வரை தேவைப்படும் அளவுக்கு நம்மை தள்ளுகின்றனவே என வியந்தேன். இன்று நாம் எதிர்கொள்ளும் கணிசாமான உடல்நல இடர்களுக்கு எந்த பிரத்யேக சிகிச்சையும் தேவையில்லை. கொஞ்ச நாள் வாயை கட்டுப்படுத்தினாலே போதும்.
சரி, நகர மறுத்த யானையான என் உடல் எடைக்கு மீண்டும் வருவோம்.
 உடலின் இந்த பிடிவாதத்தை எப்படி புரிந்து கொள்வது? இதைக் குறித்து நான் கூடுதலாய் வாசித்தேன். நமது எடை என்பது கொழுப்பால் ஆனது. கொழுப்பு ஆற்றல் சேமிப்பு. சேமிப்பை தக்க வைப்பது உடலுக்கு அவசியம். அதாவது இன்றைய நவீன வாழ்க்கை முறையில் இது தேவையில்லை என்றாலும் நீங்கள் உணவே இல்லாமல்  ஒரு தீவிலோ பாலைவனத்திலோ மாட்டிக் கொண்டால் இந்த சேமிப்பே ஒன்று-ஒன்றரை மாதங்கள் உங்கள் உயிர்வாழ்தாலுக்கான வங்கி இருப்புத் தொகை

நீடித்த உண்ணாநிலை நோன்புகளின் போது இதை நான் உணர்ந்தேன். ஐந்து நாட்கள் துளி கூட கலோரிகள் உட்கொள்ளாத போதும் உடல் பதறுவதில்லை நீங்கள் நீண்ட தூரம் நடக்கலாம், அலையலாம், உடற்பயிற்சி செய்யலாம். களைப்பே இருக்காது என்பது மட்டுமல்ல உணவருந்தும் ஆட்கள் களைத்து அமர்ந்து விட விரதம் இருப்பவரோ துடிப்பாய் இயங்கிக் கொண்டிருப்பார். இது தான் நம் உடம்பு ஆற்றலை பயன்படுத்தும் அதிசயம். இது போன்ற சந்தர்பங்களுக்காகத் தான் உடல் என்றுமே தயாராக இருக்கிறது. .தா., சென்னையிலும் கேரளாவிலும் வெள்ளப்பெருக்கு வந்த போது பல்லாயிரம் பேர் உணவின்றி உறைவிடமின்றி தவித்தனர். இவர்களுக்காக உணவுப்பொட்டலங்கள் ஹெலிகாப்டரில் இருந்து தூக்கிப் போட்டார்கள். லாரி லாரியாய் சமூக சேவகர்கள் ரொட்டியும் பிஸ்கெட்டும் அரிசி மூட்டையும் கொண்டு போய் கொடுத்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் மிகவும் வயதானவர்கள் மற்றும் மிகச் சின்ன குழந்தைகள் தவிர பெரும்பாலானோரால் உணவின்றி 10 நாட்கள் சுலபமாய் சமாளித்திருக்க முடியும். பட்டினி என்பது ஒரு பண்பாட்டு கட்டமைப்பு மட்டுமே.

உணவருந்தாத போது உடல் சில ஹார்மோன்களை சுரந்து நமக்கு பசி உணர்வை ஏற்படுத்தும். ஆனால் அப்போது உங்கள் ரத்த சர்க்கரையை சோதித்துப் பார்த்தால் கச்சிதமாய் இருக்கும். தலைசுற்றுவது போல ஒரு உணர்வு வரும், ஆனால் உடம்பு செயல்படுவதற்கான தேவையான கலோரிகளை உடம்பு உற்பத்தி பண்ணிக் கொண்டு தான் இருக்கும். நம்மை உணவைத் தேட வைக்கும் பொருட்டு உடல் இப்படியான பொய்த்தோற்றத்தை அளித்து தவிக்கச் செய்யும். அரைமணிநேரம் தான், அதைக் கடந்து விட்டால் பசி இருக்காது. மீண்டும் 2-3 மணிநேரங்கள் கழித்து பசிக்கும். அப்போது கவனத்தை திருப்பிக் கொண்டால் பசி நடையைக் கட்டும். இது நமது மொபைல் போன் Wi Fi தொடர்பு இல்லாத போது விடாமல் அருகில் உள்ள இணைய தொடர்புகளை தேடி அலசுவதைப் போன்றது. அலசி விட்டு நம் வீட்டு அழைப்பு மணியை அடித்து விளையாடும் அண்டை வீட்டுக்கு குழந்தைகளைப் போல பசி வந்து வந்து நம்மை சீண்டும். அது நம்முடன் விளையாடுகிறது என்பதை உணர்வது அப்போது அவசியம்.

 உணவு என்பது அன்றாடத் தேவை அல்ல - இதை உணர்ந்து கொண்டு தான் உணவற்ற நாட்களுக்காக நம் உடல் மிகவும் தயாராக இருக்கிறது. நம் உடல் எப்போதுமே தேவைக்கு அதிகமான கொழுப்பை சேமித்து வைக்கிறது. வெள்ளப்பெருக்கின் போது அரசாங்கம் உணவுப்பொட்டத்தை வழங்கும் என உடல் எதிர்பார்ப்பதில்லை. 40-50 நாட்களுக்கான ஆற்றல் மிக்க உனவுப் பொட்டலங்களை நம் உடலுக்குள்ளே சதா வைத்திருக்கிறோம். இந்த பொட்டலங்களை நாம் உடம்பிடம் இருந்து பறிக்க முயன்றால் அதை உடம்பு ஏற்காது, முரண்டு பிடிக்கும், மறுக்கும். இதைத் தான் எடை குறைப்பு ஆய்வில் set point (நிர்ணயிக்கப்பட்ட எடை) கோட்பாடு என்கிறார்கள்.


Comments