ஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா?
கடந்த மூன்று மாதங்களில் நான்நிறையஎழுதினேன். ஆனால் பிளாகை தொடர்ந்து அப்டேட் செய்ய வில்லை. மொத்தமாய் 8 பதிவுகள் தான். இதற்கு முந்தின மாதங்களில் சராசரியாய் மாதத்துக்கு 30 பதிவுகள் ஏற்றுவேன். கடந்த சில மாதங்களில் நான் தமிழில் எழுதியது வெகுவாய் குறைந்து போனது. ஏன் இந்த வித்தியாசம்? காரணம் எளிது, சுவாரஸ்யமானதும் கூட. இது என்னைப் பற்றி வித்தியாசமான ஒன்றை எனக்கு சொல்லித் தந்தது. முதலில் காரணம், அடுத்து படிப்பினை.


கடந்த மூன்று மாதங்களில் நான் ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஹைடெக்கர் குறித்து ஒரு ஆங்கில நூலை நண்பர்கள் இருவருடன் இணைந்து எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். நூல் முடிந்து இறுதி கட்ட வேலைகள் நடக்கின்றன. இரண்டு வாரங்களில் வெளிவரும். ஜூன் மாதம் பல்கலைக்கழகம் திறந்த பின் நூலை வெளியிட உத்தேசம். இந்த காலகட்டத்தில் நான் தினமும் தத்துவம் வாசிப்பது, நண்பர்களுடன் கூட்டாய் வாசிப்பது, விவாதிப்பது, வீட்டுக்கு சென்று எழுதுவது என்றிருந்தேன். இது வழக்கமே என்றாலும் நான் ஆங்கிலத்தில் இப்படி முழுக்க புழங்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு இரு ஆங்கில நூல்களுக்கு சில பக்கங்கள் பங்களித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தீவிரமாய் அதிகமாய் ஆங்கிலத்தில் முன்பு எழுதினதில்லை.

இது என் மனத்தின் திசையை மெல்ல மாற்றி விட்டிருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன். ஆகையால், எழுதும் தூண்டுதல் ஏற்படும் போதெல்லாம் நான் அதை ஹைடெக்கர் நூலை நோக்கி திசை மாற்றி இருக்கிறேன். உதாரணமாய், புல்வாமா தாக்குதல் நடந்த போது நான் ஆழமாய் தூண்டப்பட்டேன். ஆனால் அதை தமிழில் எழுதாமல் மரணம் குறித்து ஹைடெக்கரும் பிறரும் சொல்வதென்ன என தேடி அறிந்து, பின்னர் என் எண்ணங்களை ஒரு தனி அத்தியாயமாய் ஆங்கிலத்தில் எழுதினேன். தலித் அரசியலின் சிக்கல், அடையாளம், பெண்மை மனநிலை, பெண் மொழி குறித்தெல்லாம் நான் தமிழில் எழுத வேண்டியது இந்நூலில் வேறு வடிவில் இடம் பெற்றன. அதன் பிறகு இரண்டு மொழியாக்க நூல்களில் (தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு) வேலை செய்யத் தொடங்கினேன். அவற்றில் ஒன்றை முடித்தேன். இந்த ஈடுபாடுகள் மெல்ல மெல்ல என்னை வேறு பக்கம் இழுத்து விட்டன.
 இது சரியா தவறா, ஒரு தமிழ் எழுத்தாளன் தன் ஆற்றலை ஆங்கிலத்தில் மடைமாற்றலாமா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் வேறு சில விசயங்களை தெரிந்து கொண்டேன்.
  1. மொழி நமது மனப்போக்கை, விருப்பங்களை, மனத்தின் பாய்ச்சலை வெகுவாக தீர்மானிக்கிறது. ஆங்கிலம்-தத்துவம்-ஹைடெக்கர் என ஒரு தடம் உருவானதும் எங்கு போகும் தேவை ஏற்பட்டாலும் கால்கள் அந்த தடத்தில் நடக்கவே பிரியப்படுகின்றன. அதாவது, நாம் செல்ல வேண்டிய இடம் அல்ல, நாம் அமைக்கும் பாதையே நம் அகப்பாய்ச்சலை, போக்கை தீர்மானிக்கிறது. அது ஒரு neural networkஆக நமக்குள் அமைந்து விடுகிறது. அதைத் தாண்டி சென்று இரு குதிரைகளில் பயணிப்பது, ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் எழுதுவது, சுலபமல்ல.
  2. மொழியில் ஒரு சுகம் உள்ளது. ஆங்கிலத்தின் சுவையும் சௌகர்யமும் வேறு, தமிழின் சுவையும் லாவகமும் வேறு. ஒன்றில் சற்று காலம் பயின்றால் அதன் மடியில் விழுந்து விடுவோம். அதில் இருந்து எழுந்து மீள்வது சுலபமல்ல. ஒவ்வொரு நாளும் காலையில் நான் யோசிக்காமலே மடிக்கணினியை திறந்து தமிழில் சரளமாய் எழுதி வந்தேன். இதுவே என் மொழி, இதில் பயில்வதே எனக்கு அளிக்கப்பட்ட பணி, இது என் பிறவிக்கடன் என்றெல்லாம் சொல்லி வந்தேன். ஆனால் ஒரு புதுக்காதலி வந்ததும் மனம் தடுமாறுகிறது. என்னை அறியாமலே நான் ஆங்கிலத்திடம் வசியப்படுகிறேன்.
  3. இந்த படிப்பினை எல்லாருக்கும் உதவும் என நான் கூறவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு, போதை மனநிலை கொண்டவர்களுக்கு, மொழியின் சுவையில் சொக்கிப் போகிறவர்களுக்கு, ஒரு சொல்லை எழுதும் போதே அதன் தேன்சுவை நரம்பில் ஊறுவதை உணர்பவர்களுக்கு, சொற்களில் திளைத்துக் கொண்டிருக்கவே மணிக்கணக்காய் பேசவும் எழுதவும் ஏங்குகிறவர்களுக்கு, இது உதவும். இரு மொழிகளில் ஒரே சமயம் இயங்குவது ஆரோக்கியமானது அல்ல.
  4. இதற்கு முன்பு ஆங்கிலத்தில் அதிகமாய் எழுதும் சில பேராசிரிய தமிழர்கள் மீது எனக்கு கோபம் வந்ததுண்டு. அவர்கள் ஆங்கிலத்தில் புழங்கினால் கிடைக்கும் அங்கீகாரத்துக்காக, வசதிக்காக தமிழை புறக்கணிக்கிறார்கள் என நான் நினைத்ததுண்டு. ஆனால் அப்பார்வை தவறாக இருக்கலாம் என இப்போது புரிகிறது.ஆரண்ய காண்டத்தில்அந்த வசனத்தில் சொல்லப்படுவது போல நீங்கள் ஒன்று கமலாக இருக்கலாம், இல்லை ரஜினியாக இருக்கலாம், இரண்டும் வெவ்வேறு மொழிகள், மனம் ஒரு சமயம் ஒன்றுக்கு தான் வசப்படும். எதுவென்பது உங்கள் தீர்மானம்.
  5. இனி நான் ஆங்கிலத்தில் புழங்கும் முன் அது என்னை எங்கே எடுத்துச் செல்லும் என்பதில் தெளிவாக இருப்பேன். ஒன்று முழுக்க ஆங்கிலத்தில் எழுதுவதை கைவிடுவேன். அல்லது, ஒரு துல்லியமான காலத்தை தீர்மானித்து அப்போது மட்டும் ஆங்கிலத்தில் எழுத முயல்வேன். அல்லது ஆங்கிலத்தில் எழுதத் துவங்கும் போது தமிழில் அதை விட அதிகமாய் எழுதி, ஒரு போதையை இன்னொன்றால் முறியடிக்க முயல்வேன்.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்கு தானே மருந்து
(குறள் எண் 1102) [இவள் தந்த காதல் நோய்க்கு இவளே மருந்தாவாள்]

எந்தமருந்துவேலை செய்யும் என முயன்று பார்த்து சொல்கிறேன்.
Comments