மீ டூ - சில விமர்சனங்கள் - முன்னுரை


#metoo: சில விமர்சனங்கள்

சற்று நீளமான முன்னுரை

MeToo பாலியல் தொந்தரவு, தாக்குதல் மற்றும் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஒரு இயக்கம்.
2016இல் டரானா புர்க் எனும் கறுப்பின அமெரிக்க போராளி இந்த MeToo பிரச்சாரத்தை சமூக வலைதளங்களீல் ஆரம்பித்தார். ஒரு பதிமூன்று வயதுப் பெண் அவரிடம் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை பகிர்ந்து கொள்ள புர்க்நானும் தான் பாதிக்கப்பட்டேன்என சொல்ல நினைத்து மனதுக்குள் புதைக்கிறார். இதைப் பின்னர் அவர் MeToo ஹேஷ்டேகில் இணையத்தில் பகிர்ந்து கொள்ள அது பற்றிக் கொள்கிறது. ஆனால் விளிம்புநிலையினரின் எல்லா பிரச்சாரங்களை போல, இதுவும் பெருமளவில் சமூக கவனம் பெற சினிமாத் துறையினர் அப்பதாகையை ஏந்த வேண்டி வந்தது.

 அக்டோபர் 2017இல் நியு யார்க்கர் மற்றும் நியு யார்க் டைம்ஸ் பத்திரிகைகள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெயினுக்கு எதிராய் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. கடந்த முப்பது வருடங்களில் 80க்கு மேற்பட்ட சினிமாத் துறை பெண்களிடம் அவர் அத்துமீறியதாய் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வெயின்ஸ்டெயின் தனது நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 2018இல் ஆறு பெண்கள் அளித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டார். பொதுவாகவே சினிமாத் துறையில் பெண்கள் செக்ஸ் பாவைகள் என சமூக பொதுப்புத்தியில் பதிந்து போய் உள்ள நிலையில் ஒவ்வொரு நடிகையும் இப்படி தயாரிப்பாளருடன் படுத்து எழுந்தால் தான் வாய்ப்பு கிடைக்கிறது என மக்கள் மத்தியில் உள்ள பிம்பம் இதற்கு ஒத்துப் போக, வெயின்ஸ்டெயின் விவகாரம் பெரும் பரபரப்பானது.
இதே வேளையில் தான் ஹாலிவுட் நடிகை அலிஸா மிலானோ MeToo ஹேஷ்டேகை பயன்படுத்தி பாலியல் தொந்தரவு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி பெண்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து சுமார் ரெண்டு லட்சம் பேர் இந்த ஹேஷ்டேகில் சமூக வலைதளங்களில் தமது துயர அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்கள். ரெண்டு லட்சம் என்பது மிகப்பெரிய எண். உலகம் முழுக்க இந்த இயக்கம் பரவிட, வானுக்கு கீழ் உலவும் ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தாக்குதலுக்குள்ளாகிறாள் எனும் சித்திரம் ஏற்பட்டது. இந்த இயக்கத்தை விண்ணில் ஏவிய போராளிகளும் இந்த மிகையான சித்திரத்தை தான் எதிர்பார்த்தார்கள் எனலாம். இது பெண்கள் மீது நிச்சயமாய் நடைபெறும் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டவும், அவற்றின் பால் சமூகத்தின் கவனத்தை திருப்பவும் உதவும் என நம்பினார்கள். இதைப் பின்னர் டரானா புர்க்கே ஏற்றுக் கொள்கிறார்.
உலகமெங்கும் கொந்தளிப்புகளை ஏற்படுத்திய இந்த இயக்கம் பின்னர் இந்தியாவிலும் பரவியது. இந்தியாவிலும் ஒரு பக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட சில பெண்களுக்கு தம் பிரச்சனைகளைப் பேசும் அதிகாரத்தை அளித்தது என்றாலும், வழக்கம் போல பிரபலங்களின் செக்ஸ் வாழ்வை அலசுவது, கிசுகிசு பேசுவது, சேற்றை வாரித் தூற்றுவது என நான்காம் தரா வாரப்பத்திரிகை சினிமா துண்டுச் செய்தியாய் MeToo சுருங்கிப் போனது. அரசியல்வாதி, பத்திரிகையாளர், ஊடகவியலாளர், நடிகர், சங்கீத வித்வான் என வி..பிகளை அம்பலப்படுத்தும் கிளுகிளுப்பு செய்தியாக மாறிப் போனது. MeToo இயக்கத்தை பிரபலமாக்க உதவினாலும், ஆண்கள் குறித்த ஒற்றைபட்டையான எதிர்மறை சித்திரத்தை திணிப்பதே பிரதான பணியானது. இதனாலே தமிழகத்தில் ஆண் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மத்தியில் இந்த இயக்கம் குறித்த அவநம்பிக்கையும் வருத்தமும் பரவலாக தோன்றி உள்ளது.
நியாயமாய், நீதியுடன், சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தானவை. “பெண் மட்டுமே பாதிக்கப்படுபவள், ஆணின் நீதியைக் குறித்து இப்போது பேசத் தேவையில்லைஎனும் MeToo போராளிகளின் மூர்க்கமான நிலைப்பாடு ஆண்களை அச்சுறுத்தி தனிமைப்படுத்தி உள்ளது. அச்சம் என்பது குற்றவாளியின் அச்சம் அல்ல; தமக்கு நீதி உத்தரவாதம் இல்லை, ஒரு சின்ன டிவீட் வந்தால் அதன் உண்மைத்தன்மையை கூட விசாரிக்காமல் தாம் அசிங்கப்படுத்தப்படுவோம், வேலை நீக்கம் செய்யப்படுவோம் எனும் அச்சமும் தான் இது; பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி தாமும் ஒருநாள் நசுங்கி சாக நேரிடுமோ என ஒருவருக்கு தோன்றும் அச்சம் தான் இது.
 தமிழகத்தைப் பொறுத்தமட்டில், MeToo இயக்கம் பெரும் ஆதரவை இன்னும் பெறாததத்ற்கு தேசிய அளவில் அது அநீதியாய் செயல்படும் விதம் ஒரு காரணம். இந்தியாவில் MeToo இயக்கத்தை ஏவிய ரயா சர்க்கார் எனும் அமெரிக்க-வாழ் மாணவியின் போராட்ட முறை இதற்கு ஒரு உதாரணம். ரயா சர்க்கார் தனது பேஸ்புக் பக்கத்தில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாய் அத்துமீறும் ஆண் ஆசிரியர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அந்த நீண்ட பட்டியலில் நூற்றுக்கணக்கான கல்வித் துறையினர் பெயர்கள் இருந்தன. ரயா உண்மையா பொய்யா, சாட்சி உண்டா என்றெல்லாம் அலசி ஆராய மாட்டார். நான் ஒரு பெண் பெயரில் அக்கவுண்ட் ஆரம்பித்து ஒரு பேராசிரியர் பெயரைக் கூறி அவர் என்னை பலாத்காரம் செய்ததாய் சொன்னால் கூட அவர் அதை வெளியிடுவார். எல்லா வெளிப்படுத்தல்களும் இப்படியானவை என நான் கூறவில்லை. ஆனால் ஆசிரியர்களால் பல காரணங்களுக்காக அலைகழிக்கப்படும் மாணவிகள் உண்டு. மதிப்பெண் குறைவாய் பெற்றவர்கள், கண்டிக்கப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள், அட்டெண்டென்ஸ் இல்லாமல் தேர்வெழுத அனுமதிக்கப்படாதவர்கள், காப்பி அடித்து சமர்ப்பித்ததால் முனைவர் பட்ட அறிக்கை நிராகரிக்கப்ப்பட்டவர்கள் என ஏராளமான மாணவிகள் உண்டு. இவர்களில் பலரும் தாம் அநியாயமாய் தண்டிக்கப்படுவதாய் கருதுவார்கள். அதுவே மாணவர்களின் மனப்பாங்கு. ஒரு சின்ன விசயத்துக்காக தாம் தண்டிக்கப்படுவதாய் அவர்கள் நம்புவார்கள். இவர்கள் மத்தியில் பாலியல் தாக்குதலுக்கு, நெருக்கடிக்கு உள்ளாகும் மாணவிகளும் இருப்பார்கள். சர்க்காரின் பட்டியலில் இப்படி எல்லாரது குற்றச்சாட்டுகளுக்கும் ஒரே மதிப்பு தான். குற்றவாளி, அப்பாவி எல்லாருக்கும் ஒரே சமூக அவமதிப்பு தண்டனை தான். இத்தகைய குருட்டு அணுகுமுறை ஒரு கட்டத்தில் பெண்ணிய இயக்கத்தையே கவிழ்த்து விடும், சட்ட விசாரணை அமைப்புகளில் ஓரளவு நம்பிக்கை வைத்து போராடுவது முக்கியம் என நம்புகிற நிவேதிதா மேனன், கவிதா கிருஷ்ணன், அயெஷா கித்வாய், நந்தினி ராவ் ஆகிய முக்கியமான பெண்ணியவாதிகள் சர்க்காரின் இந்த போராட்ட முறையை கடுமையாய் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். பெண்ணியத்தை தெருச்சண்டையாய், விசாரணையற்ற தண்டனையாய் மாற்றுவது தவறு, முகத்தில் கரியை பூசுவது, ஊர்வலமாய் அழைத்து சென்று காறித் துப்புவது போன்ற பிற்போக்கு சமூக தண்டனை முறைகளை பெண்ணியவாதிகளும் பின்பற்றல் ஆகாது என்பது இவர்களின் வாதம்.
சர்க்கார் இப்பெண்ணியவாதிகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாய் இவர்களைவெட்கங்கெட்ட சவர்ண பிராமணப் பெண்கள்”, ஆகையால் இவர்கள் ஆணாதிக்க கல்விப்புல அமைப்புகளை ஆதரிக்கிறார்கள் என்றார். இது தான் விமர்சகர்களை எதிர்கொள்ளும் பாங்கா? விமர்சிப்பவர் ஆண் என்றால் அவன் வெளிப்படாத ரேப்பிஸ்ட், பெண் என்றால் அவள் பிராமண சாதி வெறியர்! மேற்சொன்ன பெண்ணியவாதிகளின் வாழ்நாள் கருத்தியல் பணியை பிராமணியம், சாதிய மேலாதிக்கம் என ஒற்றை வார்த்தையில் சுருக்கி நிராகரிக்க முடியுமெனில் சர்க்காரைப் போன்ற MeTooவாதிகளின் புரிதலை நாம் எப்படி ஏற்பது? யோசனையின்றி மூத்த பெண்ணியவாதிகளையேபிராமண சாதியவாதி”, “பிராமண கணவர்களையும் சகோதரர்களையும் காப்பாற்ற பாயும் போலி பெண்ணியவாதிஎன வசைச்சொல் எறிந்து தாக்க முயலும் இவர் இந்த ரேப்பிஸ்ட் பட்டியலை மட்டும் யோசித்து ஆராய்ந்து புரிந்து கொண்டா வெளியிட்டிருப்பார்?
ஆனால் கவிதா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் கருத்தாடல்களிலும் ஆண்கள் எல்லாரும் பாலியல் குற்றவாளிகள் எனும் தொனி நிச்சயம் உள்ளதே. அவர்கள் அமைப்புரீதியான விசாரணைகளின் நீதியை நம்புகிறார்கள் என்பதே MeTooவினருக்கும் இவர்களுக்குமான ஒரே வித்தியாசம்.
இந்திய அளவிலும் தமிழகத்திலும் MeToo இயக்கம் வெளியிட்ட பெயர்கள், அக்குற்றச்சாட்டுகளின் நியாயம் பற்றி இப்புத்தகத்தினுள் விரிவாக பேசி இருக்கிறேன் என்பதால் இங்கு தவிர்க்கிறேன்.
 MeToo இயக்கத்தை துவங்கி வைத்த தரானா புர்க் தனது இயக்கம் அப்பாவிகளையும் குற்றம் சாட்டி இருக்கலாம் என்றாலும் அதை ஒரு சூனிய வேட்டை என முழுமையாக நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆதரிக்க வேண்டும் என கோருகிறார். ஒரு பிரச்சாரகராக அவருக்கு இலக்கே பிரதானம், அதை அடையும் வழி அல்ல. ஆகையால் அவர் இந்த இயக்கத்தின் பிரச்சனைகளை இப்போது விவாதிக்க வேண்டாம் என நினைக்கலாம். ஆனால் விமர்சனம் இன்றி அரவணைக்கப்படும் எந்த எழுச்சியும், போராட்டமும், இயக்கமும் ஆபத்துகளை ஏற்படுத்தும். ஊழலுக்கு எதிராக இந்திய அளவில் தோன்றிய அன்னா ஹசாரேவின் இயக்கமும், ராமதாஸ் தனது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நலனுக்காய் ஆரம்பித்த பாமகவும் MeTooவுக்கு இணையானவை அல்ல. ஆனாலும், ஒரு பெரிய சமூக இயக்கத்தை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வது பின்னர் ஆபத்துக்கு வழி வகுக்கும் என்பதற்கு அவை சரியான உதாரணங்கள்ஒரு இயக்கம் இந்துத்துவா வலுவாய் காலூன்றி ஆட்சியை கைப்பற்றி பல பேராபத்துக்குகளை விளைவிக்கவும் பெரும் ஊழல்களில் ஈடுபடவும் வழிகோலியது; மற்ற இயக்கம் தமிழகம் முழுக்க சாதிக் கட்சிகள் வலுப்பெறவும் தலித்துகளுக்கு எதிராய் கடும் தாக்குதல்களும் ஆணவக்கொலைகளும் நடக்கவும் காரணமாகியது. ஆகையால் MeToo விசயத்திலும் விமர்சனங்களை ஊடகங்கள் கவனப்படுத்த வேண்டியது அவசியம்.
MeToovஇன் எதிர்விளைவுகள் என்னென்ன என இந்த நூலில் அலசியிருக்கிறேன். அவை:
1)   ஆணுக்குப் பெண் சமம்; எல்லா சமூக பண்பாட்டு அரசியல் தளங்களிலும் பெண்கள் அதிகாரத்தை அடைய வேண்டும் என பெண்ணியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. பெண்ணியம் அளித்த அழுத்தத்துடன், நவமுதலாளித்துவ சூழல், தாராளமயமாதல், உலகமயமாதல் ஆகியவையும் இந்த சமத்துவம் இன்று பெருமளவு சாத்தியமாக உதவின. ஆனால் MeToo மீண்டும் பெண்கள் சுலபத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் பலவீனமான தரப்பு, அவர்கள் நசுக்கப்படும் தரப்பு எனும் சித்திரத்தை ஏற்படுத்த சமத்துவ வாதம்நாங்கள் பாதிக்கப்படுவோர்எனும் கூச்சல்களால் மௌனமாகிறது. உதாரணமாய், ஒரு அலுவலகத்தில் 100 பெண்கள் பணிபுரிகிறார்கள். தமது அன்றாட இடைஞ்சல்கள் பலவற்றைக் கடந்து அவர்கள் துணிச்சலுடன் முன்னேறுகிறார்கள். ஆனால் இந்த இயக்கம் வந்த பிறகு அந்த 100 பெண்களும் பாலியல் அத்துமீறல்களை அனுபவித்தே தினம் தோறும் பணி செய்கிறார்கள் எனும் பிம்பம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய அத்துமீறல்களை எதிர்கொள்ளும் திராணி அற்ற எளியோரே பெண்கள், அவர்களுக்கு ஆதவளிக்கும் சமத்துவ எண்ணமற்றவர்களே அனைத்து ஆண் ஊழியர்களும் என இந்த பிம்பம் வளர்கிறது. பெண்களால் பெண்கள் மட்டுமே உள்ள இடத்தில் மட்டுமே பாதுகாப்பாய் இருக்க முடியும், மகளிர் பேருந்து, மகளிர் கல்லூரி மட்டுமே பெண்களுக்கு உகந்தவை எனும் இடத்துக்கு நாம் இனிமேல் போய் நிற்க வாய்ப்புள்ளது. MeToo இயக்கத்தின் விசயத்தில் பெண்ணியம் தன் கண்ணை தானே குத்தி உள்ளது எனலாம்.
2)   ஆண்-பெண் எனும் இருமையை இந்த இயக்கம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. இதனால், ஆண் என்பவன் வன்முறையானவன், பெண் என்பவள் அந்த வன்முறையின் இலக்கு மட்டுமே எனும் சித்திரம் எழுகிறது. லெஸ்பியன்கள், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு இந்த இயக்கத்தில் இடமே இருப்பதில்லை. அவர்களின் குற்றச்சாட்டுகள் பொருட்படுத்தப்படுவதே இல்லை. உதாரணமாய், காயத்ரி சாய் எனும் நடிகை ஒரு ஆண் பத்திரிகையாளர் மீது Metoo குற்றச்சாட்டுகளை வைத்த போது அது மீடியா கவனம் பெற்றது. ஆனால் அதே காயத்ரி சாய் தன்னை பாலியல் ரீதியாய் தாக்கியதாய் விஸ்வதர்சினி எனும் பெண் பேஸ்புக் லைவிலும் யுடியூப் பேட்டியிலும் குற்றம் சாட்டிய போது அதை யாருமே பொருட்படுத்தவில்லை. லெஸ்பியன் இச்சை என்பது வேடிக்கையானது, அது பொருட்படுத்தத் தக்கது அல்ல, ஆணின் இச்சை மட்டுமே ஆபத்தானது என நமது பெரும்பான்மை சமூகம் நம்புகிறது. தான் இணங்காத போது காயத்ரி சாய் தன்னை போனில் அழைத்து கடுமையாய் வைத்ததாய், கூலிப்படையை ஏவுவேன் என மிரட்டியதாய் அப்பெண் கூறுகிறார். ஆனால் இத்தகைய மிரட்டலை ஒரு ஆண் தொடுத்தால் மட்டுமே அது பொருட்படுத்தத்தக்கது என நம் மீடியா நம்புகிறது. இதன் விளைவு என்னவெனில், இது நாள் வரையில் ஓரின சேர்க்கை போராளிகள் முயன்று பெற்றுள்ள கொஞ்ச நஞ்சம் இடமும் காலியாகிறது. மீண்டும் உலகமே ஆண்-பெண் இருபாலார் சம்மந்தப்பட்ட பாலுறவுகளால் மட்டுமானது எனும் நம்பிக்கை வலுப்படுகிறது.
3)   எல்லா ஆண்களும் இயல்பில் ரேப்பிஸ்டுகளே, எல்லா பெண்களும் இத்தகைய ஆண்களால் பாதிப்புக்குள்ளாகிறவர்களே, ஆகையால் எந்த பெண் குற்றச்சாட்டை வைத்தாலும் கேள்வியின்றி அதை நம்ப வேண்டும் என MeTooவினர் கோருகிறார்கள். தாகம் எடுத்தால் தண்ணீர் குடி என்பது போல MeToo என்றால் எல்லா ஆண்களும் குற்றவாளிகளே என்பதாக ஒரு கதையாடல் தோன்றுகிறது. இது ஆண்-பெண் நடுவிலான நம்பிக்கையை, புரிந்துணர்வை இன்று பெருமளவில் சிதைத்து விட்டது. ஒரு ஆண்ஹாய்அல்லதுஇல்ல டியர்என்று எதேச்சையாய் சொன்னாலே தான் பாலியல் தொந்தரவுக்குள்ளாவதாய் பெண்கள் இன்று உணர ஆரம்பிக்கிறார்கள். எதற்கு வம்பு என ஆண்கள் இவர்களிடம் இருந்து விலகிப் போகத் துவங்குகிறார்கள். MeToo பெரும் வெற்றி பெறுமானால் உலகம் முழுக்க அரபு தேசங்களைப் போல ஆகும். ஆண்களையும் பெண்களையும் தனித்தனி கூண்டுகளில் அடைப்பதே ஒரே தீர்வு என ஆகும் (அந்த எல்லைக்கு நாம் ஒருநாளும் போக மாட்டோம் என்றாலும்).
4)   ஆண் என்றால் அவன் ரேப்பிஸ்டே எனும் கதையாடல் ஓரின விருப்ப ஆண்களை இருட்டில் தள்ளுகிறது. இருபாலுறவாளர்கள் மட்டுமே இங்கிருப்பதான மிகை பிம்பத்தை கட்டமைக்கிறது. ஆண் என்றால் அவன் பெண்ணை அடைய வேண்டும் என்பதே MeTooவின் மைய தொனியாக இருக்கிறது.
5)   இந்த உலகில் பெண்கள் மட்டுமே அல்ல பாதிக்கப்படுபவர்கள். தலித்துகள், கறுப்பர்கள், சிறுபான்மையினர் என பலரும் இங்கே தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அவரகள் தமது பாதிப்பைப் பற்றிப் பேசும் போது நாம் அதை அப்படியே ஏற்பதில்லை. உதாரணமாய், குஜராத்தில் வசிக்கும் ஒரு இஸ்லாமியர் தனக்கு இந்துத்துவர்களிடம் இருந்து அச்சுறுத்தல் வருகிறது எனக் கோரினால் நாம் அதை உடனடியாய் ஏற்கப் போவதில்லை; கூடுதல் விபரங்களைக் கேட்போம்; இரு தரப்பின் வாதங்களையும் கவனித்து புரிந்து கொண்டு விட்டு முடிவெடுப்போம். நாளை ஒரு தலித் கயிற்றில் தொங்கினால் அது நிச்சயம் தற்கொலை அல்ல சாதிப் படுகொலை தான் என யாரும் ஆதாரமின்றி கோர முடியாது. இப்படி எல்லா பாதிக்கப்பட்டோர்  விசயத்திலும் நிதானம் காட்டும் நாம் MeToo விசயத்தில் மட்டும் ஏன் எந்த கேள்வியுமின்றி குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாய் தண்டிக்க நினைக்கிறோம்?
6)   செக்ஸ் என்றாலே ஆபத்தானது எனும் மறைமுக சமூக பீதியை இந்த இயக்கம் பரப்பி வருகிறது. இந்த இயக்கத்தை முன்னெடுக்கும் ரேடிக்கல் பெண்ணியவாதிகள் பலரும் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் போது அதிகாரத்தை செலுத்தி அவளை வீழ்த்துகிறானே அன்றி அதில் அன்போ காதலோ இல்லை, ஆகையால் செக்ஸ் என்றாலே ஒருவித ஆக்கிரமிப்பு என நம்புகிறார்கள். எழுபதுகளில் ஐரோப்பாவில் பெண்களின் சகோதரத்துவ இயக்கமாய் பெண்ணியம் வளர்ந்த போது ஆணே நமக்குத் தேவையில்லை எனும் எல்லைக்கு சிலர் சென்றனர். செக்ஸ் மீதான அச்சம், அவநம்பிக்கை, அசூயை என இது வளர்ந்தது. ஒரு பெண்ணியவாதி என்றால் கவர்ச்சியாய் தன்னை காட்டிக் கொள்ளக் கூடாது எனும் வஹாபிசமாக இது மெல்ல மாறியது. இன்று இந்த உடல் வெறுப்பு வாதம் MeToovஇல் புதிய முகம் பெற்று எழுந்து வருகிறது.
7)   பழிவாங்கும் பொருட்டு MeToo பயன்படுகிறது என நடிகர் விஷால் சமீபத்தில் கூறினார். திரைத்துறையில் கேஸ்டிங் கவுச், பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதை யாரும் மறுக்கவில்லை. இவை தண்டனைக்குரிய குற்றங்களே! பெண்கள் கடுமையான சமூக விலக்கத்தை, அவமானத்தை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலுடன் மட்டுமே MeTooவுக்கு வர முடியும், ஆகையால் பெரும்பாலானோர் அனாவசியமாய் ஹேஷ்டேக் போடப் போவதில்லை என்பதும் சரியே. ஆனால் கண்மண் தெரியாத கோபத்தில் ஒரு பெண் ஒரு இயக்குநர் அல்லது நடிகரின் பிம்பத்தை சிதைக்க முடிவு எடுத்தால் அவர் நிச்சயமாய் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்த முடியும். இங்கு இப்பெண்கள் மீது அல்ல தவறுஅவர்களை கேள்வியே இன்றி ஏற்று பிரச்சாரம் மேற்கொள்ளும் நாமே முட்டாளாகிறோம்; தவறுக்கு வழிவகுக்கிறோம்.
8)   சேத்தன் பகத் மீது MeToo குற்றச்சாட்டை வைத்த இரா திரிவேதி தொடர்ந்து அவருடன் ஆரோக்கியமான நட்பில் தான் இருக்கிறார். பகத் தன்னிடம் இச்சையை தெரிவித்த பின் அவரை பொறுத்துப் போவதே நல்லது என இராவுக்குப் படுகிறது. ஆனால் ஒருநாள் பகத்தின் பாலியல் பிறழ்வுகளை மற்றொரு பெண் இராவிடம் சொல்ல, அவர் கொதித்துப் போகிறார். தன்னிடம் மட்டுமே இச்சையை தெரிவித்தவர் மற்றொரு பெண்ணிடமும் அவ்வாறு இருந்திருக்கிறார் என்பது இராவை எரிச்சலாக்குகிறது. ஏனென்றால் அவர் தன்னை எல்லா பெண்களையும் போல ஒரு எளிய இலக்காகவே கண்டிருக்கிறார், தனக்கென்று ஒரு ஸ்பெஷல் தகுதி இல்லை எனும் எண்ணங்கள் அவரை துன்புறுத்தி இருக்கலாம். அப்போது தான் அவர் பகத்தை அம்பலப்படுத்த முடிவெடுக்கிறார். இங்கு ஒரு கேள்வி: இராவிடம் மட்டுமே அத்துமீறி விட்டு அதன் பின் அவர் உத்தமராகி இருந்தால் பகத் குற்றவாளி இல்லையா? குற்றத்துக்குள் கற்பு தனியாக உள்ளதா? இதே போலத் தான் நவாசுதீன் சித்திக்கி மீது அவரது முன்னாள் காதலி நிஹாரிக்கா வைத்துள்ள MeToo குற்றச்சாட்டும் உள்ளது. நிஹாரிக்காவிடம் உறவில் இருக்கும் போதெ நவாசுதீன் பல பெண்களுடன் காதல் உறவில் இருந்திருக்கிறார். இதை அறிந்து கொண்ட நிஹாரிக்கா ஆக்ரோசமாகி உறவைத் துண்டிக்கிறார். இதன் பிறகு காதல் உறவின் துவக்கத்தில் நவாசுதீன் தன் விருப்பத்தை மீறி தன்னை அணைக்க முயன்றதாய் சொல்கிறார். இதை எப்படி ஒரு குற்றச்சாட்டாய் கருத முடியும்? அணைக்க முயன்றது குற்றமா அல்லது பல பெண்களுடன் உறவில் இருந்தபடி அவரையும் அணைக்க முயன்றது குற்றமா? இப்படி மிக குழப்பமான பல குற்றச்சாட்டுகள் இன்று பிரபலங்களின் டிவிட்டரில் MeToo ஹேஷ்டேக்கில் தோன்றி வருகின்றன. இவை ருசிகரமானவை என்றாலும் பெண் விடுதலைக்கு இந்த முன்னாள் காதல் பஞ்சாயத்துகள் எப்படி உதவப் போகின்றன?
9)   MeToo இயக்கம் அடிப்படையில் குடும்ப அமைப்புக்கு சாதகமானதோ எனும் ஐயம் எனக்கு உள்ளது. உதாரணமாய், காதல் உறவில் நிகழும் சின்ன சின்ன பிரச்சனைகள், வலியுறுத்தல்கள், மோதல்கள் MeTooவுக்குள் வரும் போது ஏன் திருமணமான பெண்கள் மீது கணவர்களால் நிகழத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் வருவதில்லை? திருமணத்துக்கு வெளியே இவ்வளவு கராறாய் பாலியல் உறவாடல்களை (கள்ள உறவுகளை) கவனித்து மதிப்பிடும் நாம் ஏன் திருமணத்துக்கு உள்ளே நடக்கும் விவகாரங்களை, பாலியல் குற்றங்களை மயிலிறகால் வருடி உறங்க வைக்கிறோம்? ஏன் ஒரு குற்றச்சாட்டு கூட இன்னும் வரவில்லை? வந்தால் நாம் அதற்கு திருமணமாகா பெண்களின் குற்றச்சாட்டுக்கு இணையான அங்கீகாரத்தை அளிப்போமா? மாட்டோம் என்றே தோன்றுகிறது. ஒரு விபச்சாரி தனது வாடிக்கையாளர் தன்னை வற்புறுத்தி இணங்க செய்வதாய் குற்றம் சாட்டுகிறார் என வைப்போம் (இது பரவலாக நிகழும் வன்முறை தான்). இப்பெண்ணுக்கு MeTooவில் இடம் உண்டா? இருக்காது. திருமணமாகாத heterosexual பெண் என்பதே இப்போதைக்கு MeTooவின் பிரதான தகுதி. குடும்பத்தை பாதுகாப்பது, விபச்சாரத்தை ஒழுக்க கேடாய் பார்ப்பது, அதை நம்பி வாழும் விளிம்புநிலையினரை பொருட்படுத்தாதது, செக்ஸ் என்பது சமத்துவமான நியாயமான வெளி அல்ல என கருதுவது, பெண்ணுக்கு ஆணிடம் பாதுகாப்போ நியாயமோ கிடைக்காது என நம்புவது, பெண்ணுடலை (மட்டுமே, ஆணுடலை அல்ல) மறுக்க முடியாத இச்சைக்குரிய ஒன்றாய் வலியுறுத்துவது என MeTooவில் ஒரு மெல்லிய ஒழுக்கவாதம் / வலதுசாரித்தனம் ஓடுகிறது.
10) கள்ள உறவு வைத்திருப்பவர்களை மரத்தில் கட்டி வைத்து அடிப்பது, தொடர்ந்து அவர்களை பொதுவெளியில் அவமதித்து ஒடுக்குவது என நம் ஆண்-மைய சமூகங்களில் பாலியல் பிறழ்வுகள் தொடர்ந்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்படுகிறவை. இப்படி பாலியல் மூலம் ஒருவரை அசிங்கப்படுத்தி ஒடுக்குவதன் மூலம் பெரும்பான்மை சமூகம் விளிம்பில் இருப்பவர்கள் மீது அதிகாரம் செலுத்தி ஒடுக்க முயல்கிறது. காந்தி தன் சபர்மதி ஆசிரமத்தில் ஆணும் பெண்ணும் உறவு கொண்டால் அவர்களை பொதுவிடத்தில் பகிங்கரமாய் அதை ஒப்புக்கொள்ளச் செய்து, சம்மந்தப்பட்ட பெண்ணை மட்டும் மொட்டையடித்து விரதம் இருக்கச் செய்வார். இன்று இந்த வலதுசாரி கருவியை MeToo இயக்கமும் கையில் எடுத்துள்ளது. செக்ஸ் என்றால் அசிங்கம், பாவம் எனும் சமூக மூடநம்பிக்கையை அது ஆண் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராய் பயன்படுத்த உத்தேசிக்கிறது. “தேவடியாஎன ஏசி பெண்ணை ஒடுக்கிய ஆண்களின் வழியில் சென்று ஒவ்வொரு ஆணின் முகத்துக்கு எதிராய் போய் நின்றுபொம்பளைப் பொறுக்கிஎன கூவும்படி அது கேட்கிறது. என்னதான் உன்னத நோக்கம் என்றாலும் அதை பெண்ணிய போராளிகள் இவ்வளவு பிற்போக்கான முறையில் செயல்படுத்தும் போது நாம் மீண்டும் செக்ஸை அவமானகரமாய் கருதிக் கூசும் ஒரு பண்டைய சமூக நிலைக்கு மீள நேர்கிறது. இது சுலபத்தில்