2018இன் முதல் பத்து தமிழ் ஆளுமைகள்



இது என் தனிப்பட்ட தேர்வு மட்டுமே. 2018இல் தமிழகத்தில் என் கவனத்தில் பட்ட மனிதர்களை ஒரு சிறிய பட்டியலில் தொகுத்திருக்கிறேன்.

Image result for ராஜன் குறை

1)   சிறந்த பொது சமூக அறிவுஜீவி (public intellectual): ராஜன் குறை. ராஜன் குறை என்றுமே ஆழமான அறிவும் எழுத்துத் திறனும் கொண்டவரே. இவ்வருடம் அவர் மேலும் வெளிப்படையாய் தன் அரசியலுக்காக எழுத்தில் போராடினார் எனலாம். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திராவிட அரசியலை ஆதரித்தார். என்னை மாற்றி யோசிக்க வைத்தார். அவரது சமூக அக்கறையும் லட்சியவாதமும் நெகிழ வைப்பவை. என்னைப் போன்றோருக்கு ஒளி தருபவை.



Image result for ஸ்டாலின் ராஜாங்கம்

2)   சிறந்த வரலாற்றியல் எழுத்தாளர் - ஸ்டாலின் ராஜாங்கம். ஸ்டாலின் குறித்து நான் கூடுதலாய் சொல்ல ஒன்றுமில்லை. என் தலைமுறையின் ஒளிர்நட்சத்திரம் அவர். இவ்வருடம் அவர் தலித்திய நோக்கில் பல அரசியல் சமூக நிகழ்வுகளை மீளுருவாக்கம் செய்தது, அறியப்படாத மனிதர்களை பேட்டி கண்டு எழுதியது என்னை மிகவும் கவர்ந்தது.

Image result for woman facing away
ஸ்ரீவள்ளியை யாரும் இதுவரை பார்த்ததில்லை...
3)   சிறந்த கவிஞர்ஸ்ரீவள்ளி. சமகால கவிதையில் ஆவேசத்தின் மூர்க்கம் வேண்டும்; பேய்மழையின் வேகம் வேண்டும்; உன்மதத்தின் புயல் அதில் அடிக்க வேண்டும்; குறிப்பாய் அதில் வரும் உண்மை சுயமுரண் பொதிந்ததாய் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த குணங்கள் அனைத்தும் ஸ்ரீவள்ளியின் கவிதைகளில் உள்ளன. “பொகொன்றை பூக்க வந்த பேய்மழைஇவ்வருடத்தின் சிறந்த தொகுப்பு என்பதில் ஐயமில்லை.

Image result for director ranjith

4)   சிறந்த இயக்குநர் – “காலாவுக்காகரஞ்சித். காட்சிமொழியில் ரஞ்சித் காட்டியுள்ள அக்கறை, அதில் அவருக்குள்ள அபார ஆளுமை, அரசியல் கதையாடலையும் காட்சிமொழியையும் ஒன்றாக்கிய விதம், முற்றிலும் எதிர்பாராத ஒரு கிளைமேக்ஸ் ஆகியவைகாலாவை” நாம் காலத்துக்கும் மறக்க முடியாத திரையனுபவம் ஆக்கின.

Image result for mari selvaraj

5)   சிறந்த அறிமுக இயக்குநர் – “பரியேறும் பெருமாளுக்காக” மாரி செல்வராஜ். காட்சிமொழி மீதுள்ள பிடிப்புக்காகவும், அவர் திரையில் கொணர்ந்த தனித்துவமான வாழ்க்கைக்காகவும்.

Image result for ஆசிரியர் பகவான்

6)   சிறந்த பிரபலம் - ஆசிரியர் பகவான். ஊர்களில் ஆசிரியர்கள் பால் மாணவர்கள் கொள்ளும் தீவிர பந்தத்தை கண்டிருக்கிறேன். ஆனால் பகவானை போக விடாமல் மாணவ, மாணவியரும் அவர்களின் பெற்றோர்களும் காட்டிய ஆவேசமும் அவர் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையும் நெகிழவும் கலங்கவும் வைத்தது. கல்விப் புலத்தை சேர்ந்தவனாய் எனக்கு நம்பிக்கை ஊட்ட வைத்த நிகழ்ச்சி இது. இவ்வளவு பிரபலம் கிடைத்த பின்னரும் பகவான் எளிமையாக நடந்து கொண்டதும் என்னை கவர்ந்தது. தொழிலையும் பொதுநலனையும் ஒன்றாக்க முடிவது ஒரு பாக்கியம். பகவானைப் போல அது நம்மில் பலருக்கும் வாய்க்க வேண்டும்.

Image result for கே என் செந்தில்

7)   சிறந்த புனைகதையாளர்கே.என் செந்தில். செந்திலின் நெடுங்கதைசகோதரிகள்செண்டிமெண்டான படைப்பு என ஒரு பக்கம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் நுட்பமாய் அதை வாசித்தவர்கள் அதன் ஆழத்தை, சிக்கலை கண்டுணர்ந்தார்கள். என் வாசிப்பில் இவ்வருடத்தின் சிறந்த புனைகதை இது தான்.

Related image

8)   சிறந்த இணைய கட்டுரையாளர் - பெருந்தேவி. பெருந்தேவி எழுதும் பல விசயங்களில் (.தா., அவரது ரேடிக்கல் பெண்ணியம்) என்னால் உடன்பட முடிந்ததில்லை என்றாலும் அவர் தான் நம்புகிறவற்றை பிடிவாதமாய், தீவிரமாய் இவ்வருடம் எழுதியிருக்கிறார். பல ஆழமான, விரிவான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.

Image result for தினேஷ் அகிரா

9)   சிறந்த அறிமுக எழுத்தாளர்தினேஷ் அகிரா
தினேஷ் கேப்டன் டிவியில் பணி செய்த போது அவர் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பேச என்னை அழைத்திருந்தார். அப்போது அவரது கிரிக்கெட்டில் அவருக்குள்ள நிபுணத்துவம், புரிதல், அக்கறை, கேள்விகளை தொகுக்க அவர் எடுத்துக் கொண்ட கவனம் கண்டு வியந்தேன். ஆனால் அவர் ஒரு எழுத்தாளராக முன்வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவரை கண்டெடுத்த எழுத வைத்த பெருமை அரவிந்தனுக்கு தான் செல்ல வேண்டும். மின்னம்பலத்தில் தினேஷ் எழுதி வருகிற கிரிக்கெட் கட்டுரைகள் தரமானவை; தொழில்நுட்பரீதியானவை. நான் தடம் பதிக்காத களம் அது. ஆங்கிலத்தில் ஆகாஷ் சோப்ரா எழுதும் பத்திகளின் பாணியிலானவை தினேஷின் கட்டுரைகள். தகவல்களை சேகரிக்க அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை பாராட்டத்தக்கது.

Image result for அரவிந்தன் காலச்சுவடு

10) சிறந்த எடிட்டர்அரவிந்தனே தான். மின்னம்பலத்தில் நான் தொடர்ந்து எழுதியதால் சொல்லவில்லை. பொதுவாய் எடிட்டர்கள் நம்மிடம் கட்டுரை கேட்கும் commissioning editorsஆக மட்டுமே இருப்பார்கள். ஆனால் அரவிந்தன் நம் எழுத்தை கவனமாய் திருத்தி செதுக்குவார். சில விசயங்களில் பிடிவாதமாய் ஒரு தரப்பை எடுத்து லட்சுமணக் கோடு வரைந்து விடுவார். அதைத் தாண்டி நாம் செல்ல முடியாது. பெருந்தேவி, நவீனா, தினேஷ் என பலரையும் நிறைய நல்ல கட்டுரைகளை அவர் எழுத வைத்ததும் பாராட்டத்தக்கது. சமீபத்தில் இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழை அவை எடிட் செய்து கொணர்ந்துள்ள விதம் கண்டு அசந்து போனேன். அபாரமான பணி அது. காலத்துக்கும் வைத்து படிக்க வேண்டிய ஒரு மலராக அது வந்துள்ளது.



Comments