லீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்

Image result for சுசிகணேசன்


லீனா முன்வைத்த குற்றச்சாட்டு, அதன் உண்மைத்தன்மைக்குள் நான் போகப் போவதில்லை. metooவில் ஒருவரை அடையாளம் காட்டி அசிங்கப்படுத்தும் (name & shame) அரசியலுடன் எனக்கு உடன்பாடில்லை. பழைய கரும்புள்ளி செம்புள்ளி ஒழுக்கவாத அரசியலின் நவீன வடிவம் அது. ஆனால் சுசிகணேசனின் நடவடிக்கைகளில் இப்பிரச்சனையை வேறு திசையில் திருப்பி இருக்கிறது. நாம் அனைவரும் லீனாவை ஆதரிக்க வேண்டிய, சுசிகணேசனை கண்டிக்க வேண்டிய சந்தர்ப்பம் இது.
லீனா தன்னிடம் அத்துமீற முயன்றதாய் குறிப்பிட்ட நாளுக்குப் பின் அவர் தனது வெளியீட்டு விழாவில் தொகுத்து வழங்கியதாய் சுசிகணேசனின் கூறுகிறார். சுசிகணேசனை பகைக்க வேண்டாம் எனும் எண்ணத்திலும், அச்சத்திலும் தான் அப்படி செய்ததாய் நாளை லீனா சொல்லலாம். எப்படியோ இப்பிரச்சனையில் இரு தரப்பினருமே முழுத்தகவல்களையும் வெளிவைக்க வில்லை என எனக்குத் தோன்றுகிறது. சின்மயி விசயத்தில் போல, லீனா தொடர்ந்து நல்லுறவில் இருந்ததாலே சுசிகணேசன் குற்றமற்றவர் என ஆவதில்லை.

ஊடக சந்திப்பில் லீனா சற்று பதற்றமாய் இருந்தார். எதையும் முகத்திலடித்து பேசும் குணம் கொண்ட லீனாவின் இந்த பதுங்கல் அவர் தனிமைப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இத்தனைக் காலம் அவர் ஏன் அமைதி காத்தார் என்பதற்கு அது சான்றாகியது – வணிக சினிமா சுசிகணேசன் தயக்கமின்றி புழங்கும் இடம். அவர் ஊடகங்கள் முன்னிலையிலும் தன் துறை நண்பர்கள் இடத்தும் இயல்பாக தன்னம்பிக்கையோடு இருக்க முடிகிறது. லீனாவால் அது முடியவில்லை. அப்படி இருக்க, திரைப்பட சங்கத்தினரை மட்டும் லீனாவால் ஊக்கத்துடன் துணிச்சலுடன் எதிர்கொண்டிருக்க முடியுமெனத் தோன்றவில்லை.
ஊடக சந்திப்பில், தன் மீது பெண்களுக்குள்ள நம்பிக்கையை நிரூபிப்பதற்கென அவர் தன் மனைவியுடன் வந்திருந்தார். ஆனால் அவரை பேச விடவில்லை. ஒரு பொம்மை போல அவரை பக்கத்தில் வைத்திருந்தார்.
லீனா தன்னை குற்றம் சாட்டியபின் இரு நாட்கள் அவர் வீடு ஒரு துக்கவீடாய் இருந்ததாய், இச்சம்பவம் தன் நிம்மதியை, தன் குடும்பத்தின் நிம்மதியை குலைத்ததாய் அவர் சொன்னார். இப்படி ஆதாரமின்றி குற்றம் சாட்டி ஒருவரை அசிங்கப்படுத்துவது நியாயமல்ல, ஆண் மீது குற்றம் வைக்கப்பட்டதும் மொத்த சமூகமும் அவன் தரப்பை கேட்காமலே அவனை குற்றவாளி என உடனடியாய் முத்திரை குத்துகிறது என வருந்தினார். இந்த வருத்தம் நியாயமானது தான்.
ஆனால் இதை அடுத்து சுசிகணேசனின் தொனி மாறியது. லீனாவை ஆபாச கவிதை எழுதுபவர், ஆகையால் ஒழுக்கங் கெட்டவர், அற்ப புகழுக்காய் தன் மீது சேற்றை வாரி இறைக்கிறவர் என்றார். ஒரு சாதாரண மசாலா பட இயக்குநரான சுசிகணேசனின் இந்த இறுமாப்பு நாம் எந்தளவு பாமரத்தனமான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதைக் காட்டியது.
 கேரளாவில் நடிகர் திலீப் கவிஞர் மாதவிக் குட்டியை ஒரு ஆபாச கவி என எளிதில் கூறி விட்டு கடந்து போக முடியாது, ஊடகங்கள் கிழித்து அவரை தொங்க போட்டு விடும். ஆனால் இந்த ஊடக சந்திப்பிலோ ஒரு ஆளுக்குக் கூட லீனாவின் கவிதையோ இலக்கிய இடமோ தெரியவில்லை. இது தான் தமிழ்நாடு – பாமரர்களின் கூடாரம், படித்து பட்டம் பெற்று நிறைய அனுபவம் இருந்தும் எந்த இலக்கிய வாசனையும் அற்றவர்கள் தம்மை பத்திரிகையாளர், ஊடகவியலாளர் என அழைத்துக் கொள்ளும் மூடர் கூடம். ஒரு எளிய இலக்கிய அறிமுகம் கொண்ட ஊடகவியலாளர் இருந்திருந்தால் கூட சுசிகணேசனின் பாமர இலக்கிய அறிவைக் கேள்விக்குட்படுத்தி இருப்பார். உங்களுக்கு பின்நவீன இலக்கியம் என்றால் என்னவெனத் தெரியுமா, பெண் மொழி என்றால் தெரியுமா என வினவி இருப்பார். ஆனால் பாருங்கள், ஒரு நாலாந்தர சினிமா எடுக்கிற ஆள் இங்கே தீவிர இலக்கியத்தை விமர்சனம் பண்ண முடிகிறது.  
சுசிகணேசனிடம் நான் சொல்ல விரும்புவது இது: வணிக சினிமா உங்கள் ஏரியா. அங்கே உள்ள விசயங்களைப் பற்றி நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு காலத்தில் பத்திரிகையாளராய் இருந்தீர்கள் என்பதாலே, உங்களுக்கு எழுத்துக் கூட்டி படிக்கத் தெரியும் என்பதாலே ஒரு படைப்பாளியை விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. உங்களைப் போன்ற படிப்பறிவற்ற தற்குறிகள் இவ்வளவு அகந்தையோடு பேசும் சமூகத்தில் வாழ்கிறேன் என நினைக்கவே அசிங்கமாய் இருக்கிறது.
ஊடக சந்திப்பில் அவ்வளவு அப்பாவியாக பணிவாக, சகோதரி சகோதரி என அழைத்து பேசி விட்டு முகநூலில் லீனாவை சேற்றில் உழலும் பன்றி என அழைக்கிறீர்கள், அவர் புகழுக்காய் அலைபவர் என்கிறீர்கள். லீனாவே சொல்வது போல, சுசிகணேசன் நீங்கள் ஒன்றும் தமிழின் ஆகப்பெயர் பெற்ற இயக்குநர் அல்ல. ஊடகங்களுக்கு எல்லா சினிமாக்காரர்களும் ஒன்று தான். ஒரு காமிடி நடிகருக்கு எதிராய் metoo புகார் வந்திருந்தாலும் அது செய்தி ஆகியிருக்கும். அதில் நீங்கள்  பெருமைப்படவோ, உங்களை குற்றம் சாட்டுபவர் உங்களது புகழ் வெளிச்சத்தில் குளர் காய ஏங்குகிறவர் என கற்பனையில் திளைக்கவோ அவசியம் இல்லை. “திருட்டுப் பயலே” மாதிரியான நுண்ணறிவற்ற, ஆபாசத்தை வைத்து பெண்களை மிரட்டி சம்பாதிப்பவனை கொண்டாடி படமெடுக்கிற உங்களைப் போன்ற ஜந்துக்களுக்கே இவ்வளவு திமிர் என்றால் உங்களைச் சொல்லி குற்றமில்லை. நாங்கள் அப்படி சினிமாக்காரர்களுக்கு தகுதிக்கு மீறின அங்கீகாரம் கொடுத்திருக்கிறோம். அதன் விளைவு தான், உங்களைப் போன்றவர்களின் இந்த திமிர்ப்பேச்சையெல்லாம் இப்போது கேட்க நேரிடுகிறது.
இந்த பிரச்சனையில் பதிலளிக்கவும் வழக்குத் தொடுக்கவும் உங்களுக்கு உரிமையும் நியாயமும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் அறிவு மற்றும் படைப்புச் சூழலில் தொடர்ந்து தீவிரமாய் இயங்கும் ஒரு படைப்பாளியை, பெண் கவிதைக்கு புதிய அடையாளமொன்றை வழங்கிய ஒரு கவிஞரைப் பற்றி எந்த அடிப்படை வாசிப்போ அருகதையோ அற்ற நீங்கள் ஒரு சொல் கூட உதிர்க்க வெட்க வேண்டும். அவரைப் பன்றி என அழைக்கும் உங்களுக்கு அது எந்தளவு சாதிய இழிவை உள்ளடக்கிய சொல் எனப் புரியவில்லை. ஆனால் நீங்கள் அந்த பன்றி தின்னும் மலத்தை விட அருவருப்பான மனிதர் என நிரூபித்து விட்டீர்கள். லீனாவை முகநூலில் பன்றியெல்லாம் அழைக்கும் நீங்கள் ஊடக சந்திப்பில் போட்டது ஒரு நாடகம் என்பது தெளிவாகிறது. இன்னொரு புறம் நடிகர் சித்தார்த்தின் அப்பாவை அழைத்து மிரட்டி இருக்கிறீர்கள்.
சுசிகணேசன், உங்களை என்றாவது நேரில் சந்திக்க நேர்ந்தால் செருப்பால் அடிப்பேன்!

Comments

BALA said…
மிக நேர்மையான பதிவு.

அவர் உத்தமராக இருந்து விட்டு போகட்டும்..
குறைந்த பட்ச நாகரிகத்தை எதிரியின் மேல் செலுத்தாத அவர் உள்ளளவில் வன்முறையாளரே..

ஒரு பெண் தவறு செய்ததாக கூறும் அவர் பெண் இனத்தை உதவி இயக்குனராக வைக்க மாட்டேன் என கூறுபவர் ..
இதே குற்றசாட்டை ஒரு ஆண் அவர் மீது கூறினால் , ஆண் இனத்தை உதவி இயக்குனராக வைக்க மாட்டேன் என கூறுவாரா??
Unknown said…
வீடியோவை நீங்கள் முழுமையாக பார்க்கவில்லை என்று தெரிகிறது . சுசி கணேசன் பேசிய பின்பு அவரது மனைவி சில நிமிடங்கள் பேசுகிறார் .
Murugan R.D. said…
சமீபமாகவே இப்படிப்பட்ட முற்போக்கு பெண்ணீயவியாதிகளை தூக்கு தூக்குன்னு தூக்கி வச்சி எழுதுறீங்களே,
ஏதாச்சும் எதிர்பார்க்கிறீங்களா அவங்கள்ட்ட,,,