#metoo பிரச்சாரத்தில் நான் ஏற்பவையும் ஏற்காதவையும்


Image result for metoo campaign
1)   பெண்கள் தம் மீது இழைக்கப்பட்ட பாலியல் குற்றங்களை, அத்துமீறல்களை, அவமானங்களை பொதுவெளியில் முன்வைப்பதை நான் வரவேற்கிறேன். பெண்களின் சமூக அதிகாரத்தை வலுப்படுத்தவும் எதிர்ப்புணர்வை கூர்மைப்படுத்தவும் சமூக விழிப்புணர்வுக்கும் இது உதவும். இதுவரை துணிச்சலாய் குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்துள்ள பெண்களுக்கு என் பாராட்டுக்கள்.
2)   இந்த பிரச்சாரத்தில் எனக்குள்ள பிரச்சனை இது அனைத்து ஆண்களுமே ரேப்பிஸ்டுகள் எனும் சித்திரத்தை கட்டமைக்கிறது என்பது. “பல பெண்கள் தமக்கு நடந்துள்ள பாலியல் குற்றங்களை புதைத்து வைக்கிறார்கள். அதை வெளியே சொல்ல கூச்சப்படுகிறார்கள். அவர்கள் துணிச்சலாய் வெளிவர வேண்டும்” என சின்மயி பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவில் ஒரு பெண் எழுதுகிறார். இதன் மறைமுகப் பொருள் எல்லா துறைகளிலும் பெண்கள் விதிவிலக்கின்றி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிறார்கள் என்பது. இது உண்மையா? அத்தனை ஆண்களுமா அத்தனை பெண்களையும் கையைப் பிடித்து இழுக்கிறார்கள். இந்த பிரச்சாரத்தில் உள்ள மிகையும் கும்பலோடு கும்பலாய் சாத்தும் போக்கும் ஆபத்தானது. #metoo என போஸ்ட் போடாத பெண்கள் எல்லாம் பொய் சொல்கிறார்களா? எல்லா ஆண்களும் ரேப்பிஸ்டுகளா? ஆம் எனில் உங்கள் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி, கணவன், காதலன், மகன் எல்லாரும் ரேப்பிஸ்டுகளா? எல்லா ஆண்களும் இப்படித் தான் எனும் தொனி மிக வக்கிரமானது.

3)   லசித் மலிங்கா, வரைமுத்து, இயக்குநர் கோஹ்ல் என பலர் செய்துள்ளதும் குற்றங்களே. இவர்களை நாம் தண்டிக்கலாம். ஆனால் அதற்கு முன் அவர்கள் பக்கமிருந்தும் வரும் நியாயத்தை கேட்க வேண்டுமே? வேண்டாமா? ஆனால் ஆணுக்கு எதிராய் குற்றச்சாட்டு வரும் போதே எந்த கேள்வியுமின்றி “ஆமாம் ஆம்பளைன்னா அப்படித் தான் பண்ணியிருப்பான்” என நாம் நம்பி சாணியடிப்பது நியாயமா? இந்த பிரச்சார இயக்கத்தில் இல்லாதது நிதானமும் பொறுமையும்.
4)   வாசுகி பாஸ்கர் இதைப் பற்றி எழுதியுள்ள முகநூல் குறிப்பில் பல அபத்தமான வாதங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவர் ஒடுக்கப்படும் பெண்களையும் தலித்துகளை ஒரே தராசில் வைப்பது. அதற்கு அவர் “”வெள்ளை யானை” நாவலில் இருந்து உதாரணம் தருகிறார். காத்தவராயன் வெள்ளைக்கார துரையிடம் தலித்துகளும் அக்கிகார பெண்களும் ஒரே மாதிரி ஒடுக்கப்படுகிறவர்கள் எனச் சொல்வதை மேற்கோள் காட்டுகிறார்.
// ஜெயமோகனின் வெள்ளையானை நாவலில் தலித்தான காத்தவராயனிடம் பிரிட்டிஷ் அதிகாரி ஒரு பார்ப்பன தெருவில் நின்று கேட்பான் "இந்த வீட்டிலிருந்து பெண்கள் வெளியே வர மாட்டார்களா?"
அதற்கு காத்தவராயன் சொல்வான் "இல்ல துரை, அவர்களும் எங்களை போலத்தான்"//

 ஒடுக்கப்படும் எல்லாரும் தலித்துகளுக்கு இணையானவர்கள் என யோசிப்பது வசீகரமானதே; ஆனால் இது பிழையான வாதம். ஒரு வன்னியப் பெண்ணும் ஒரு தலித் ஆணும் ஒரே தராசில் வைக்கப்படுவதில்லை. அப்பெண் அவ்வுறவில் அதிக அதிகாரமும் பாதுகாப்பும் பெற்றவளாகவே இருக்கிறாள். இளவரசன், திவ்யா விவகாரம் ஒரு உதாரணம். அப்பெண் தன் அப்பா தற்கொலை செய்து கொண்டதும் தன் குடும்பம் இதற்கு மேல் பாதிக்கப்படக் கூடாது என அம்மாவுடன் போய் சேர்ந்து, நீதிமன்றத்தில் கணவனுடன் போக விருப்பமில்லை என சொல்லி விட்டார். திவ்யாவும் பாதிக்கப்பட்டவரே, தன் வாழ்க்கை குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவருக்கு இருக்கவில்லை தான்; ஆனால் உயிருடன் வாழும் அதிகாரம் அவருக்கு இளவரசனை விட அதிகமாகவே இருந்தது.
வாசுகி பாஸ்கர் சொல்வது போல பிராமணப் பெண்கள் தலித்துகளுக்கு இணையாய் ஒடுக்கப்படுபவர்கள் என்றால் பிராமணப் பெண் = தலித் என்றால், ஏன் பிராமணப் பெண்கள் தலித்துகளை மணந்து சாதாரணமாய் வாழ்வதில்லை? ஏன் தம் சாதிப் பெருமையை தூக்கிப் பிடிப்பவர்களாய் பிராமணப் பெண்களில் சிலர் இருக்கிறார்கள்? அவர்கள் பெண் எனும் நிலையில் பிராமணர் அல்லவே!
ஒடுக்குமுறை என்பது பால் அடையாளத்தினால் மட்டுமே உருவாவதில்லை – வர்க்கம், பணம், சாதி, மதம் என பல அளவீடுகள் ஒருவரது அந்தஸ்தை தீர்மானிக்கின்றன. சாதியுடன் மேற்சொன்ன பாகுபாடுகளையும் சேர்ந்தே ஒடுக்குமுறை உருவாகிறது. // ஆண் / பெண் சமத்துவம் என்பது சித்தாந்தங்களுக்கு அப்பாற்ப்பட்ட அடிப்படை என்று சொல்கிறேன்.// என வாசுகி பாஸ்கர் கோருவது ஏற்கத்தக்கது அல்ல.
முன்பு மீனவர்கள் தாக்கப்பட்ட போது சின்மயி “அவா மீனைப் பிடிச்சு தின்கிறா” எனச் சொல்லி, உயிரைக் கொல்லும் ஒரு சமூகத்தினரின் பாதுகாப்புக்காக நாம் அங்கலாய்க்க வேண்டியதில்லை என்றார். இந்த இடத்தில் சைவ உணவை மட்டும் ஏற்கிற ஒரு மேல்சாதிப் பெண் அசைவ உணவுக்காரர்களை கொலைகாரர்கள் எனச் சொல்கிறார். சின்மயிக்கு இங்கு சமூக அதிகாரம் உண்டா இல்லையா? எந்த மீனவராவது சைவ உணவுக்காரர்களை மட்டம் தட்டி பேசியதுண்டா? ஏன் இல்லை. ஏனெனில் அவர்களிடம் அவ்வாறு மட்டம் தட்டும் அதிகாரம் இல்லை. வாசுகி பாஸ்கர் சொல்வது உண்மையெனில் மீனவர்கள் சாவதில் தவறில்லை எனக் கூறிய இடத்திலும் அவர் ஒரு “பிராமண தலித்” தானா?
அம்பானி வீட்டில் வாட்ச்மேனாக உள்ள ஆண் அம்பானியின் மகளை ஒடுக்கும் அதிகாரம் கொண்டவரா? அவர் விரும்பினாலும் அதற்கு துணிய முடியுமா?
அதிகாரம் என்பது ஒரு fluidஆன விசயம். பால் அடையாளம் மட்டுமல்ல, பணம், செல்வாக்கு, பதவி, சாதி, மதம் என பல சமூக கட்டமைப்புகளுக்குள் அது வாழ்கிறது, ஒவ்வொன்றையும் அது ஊடுருவிச் செல்லவும் செய்கிறது. அது நிலையான ஒன்றல்ல, அது மாறிக் கொண்டே இருக்கும் ஒன்று. போகிற போக்கில் பெண்களைத் தவிர அத்தனை பேரும் அயோக்கியவர்களே என அடித்து விட்டுப் போகலாம், கைத்தட்டும் வாங்கலாம். ஆனால் அது மேம்போக்கான பிழையான கூற்று.
5)   // கலைஞருக்கு மூன்று மனைவிகள், அவரின் ஒரு நாள் schedule ல் கோபாலபுரத்தில் எப்போது இருப்பர், சிஐடி காலனியில் எப்போது இருப்பர், சட்டமன்றத்துக்கு எத்தனை மணிக்கு போவார் என்பது ஊரறிந்த விஷயம்.
உள்ளது உள்ளபடி மனசாட்சியோடு ஒரு பெண் முதலமைச்சர் காலையில் ஒரு கணவன் வீட்டிலும் மாலையில் ஒரு கணவன் வீட்டிலும் இருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அது சாத்தியமாகும் சூழல் நம் சமூகத்தில் இருக்கிறதா?// என்கிறார் வாசுகி பாஸ்கர்.
இதுவும் முதற்பார்வையில் காத்திரமான மறுக்க முடியாத வாதம் என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் உற்று நோக்கினால் பல்லிளிக்கிறது. சமூகத்தில் பெண்கள் மட்டுமே எதிர்க்கொள்ளும் பாகுபாடு அல்லது இது என்பது சற்று யோசித்தால் விளங்கும்.
ஆணாய் இருப்பதால் மட்டுமல்ல கலைஞருக்கு அந்த சமூக “முன்னுரிமை” தரப்படுகிறது. கலைஞரின் அரசியல் அதிகாரம், பணம், சமூக செல்வாக்கு, ஆளுமை என பல விசயங்கள் இந்த சலுகையை அளிக்கின்றன. அவர் இவை எதுவுமே இல்லாத ஆண் என்றால் அவர் எந்த மதிப்புமே இல்லாதவர், பையில் ஒரு ரூபா கூட இல்லாதவர், என்றால் ஒரு மனைவி கூட அவருக்கு வாய்த்திருக்காது. ஆணின் பால் அடையாளம் மட்டுமே அவனை “ஆண்” ஆக்குவதில்லை.
இன்னொரு விசயம் பல தார அந்தஸ்துக்காக கலைஞர் போற்றிப் புகழப் பட்டதில்லை. ஒரு சின்ன கிண்டலோடு தான் மக்கள் அவரை ஏற்றார்கள். வாசுகி பாஸ்கரின் இந்த கூற்றில் கூட ஒரு கேலி உள்ளது தான். ஆணுக்கு எத்தனை பெண்களை மனைவியாக்கவும் அதிகாரம் உண்டெனில் இந்த கேலி எங்கிருந்து வருகிறது?
பெண்களின் பாலியல் ஒழுக்கத்துக்கான மதிப்பீடுகள் வேறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். கலைஞரைப் போன்று ஏன் ஒரு பெண் தலைவர் செய்வதில்லை என்றால் நம் சமூக பொதுநீரோட்டத்தில் ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் மண்ந்து வாழும் வழமை இல்லை. (சில சாதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது; பண்டைய இந்தியாவில் நிச்சயம் இருந்தது. ஆனால் இன்று இல்லை). ஆண்வழி சொத்தை அடுத்த தலைமுறை கொண்டு செல்லும் மரபே இதற்கு பிரதான காரணம். இங்கும் பெண்நிலை அல்ல, சொத்தும், மண் மீதான உரிமையே பிரதான காரணி. இது ஒரு பெண்ணியப் பிரச்சனை என்பதை விட நிலவுடைமை சமூகத்தின் பிரச்சனை. ஆனால் பெண்ணையும் நிலவுடைமை அதிகாரத்தையும் இரண்டிரண்டாய் பார்க்கக் கூடாது என்பதையும் அறிவேன். ஆனால் “பெண்ணாய் இருப்பதானால் மட்டுமே” எனும் வாதம் எழுவதால் இச்சிக்கலை உணர்த்தும் பொருட்டு சொன்னேன்.
ஒருவேளை ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருப்பது நம் சமூகத்தில் ஏற்கப்பட்ட ஒன்றென்றால் கலைஞரைப் போல பட்டவர்த்தமாய் ஜெயலலிதாவும் இருந்திருக்கலாம்.
ஒரு பெண்ணுக்கு இரு கணவரை அனுமதிப்பது என்பது நிச்சயம் பெண்ணுரிமைக்கான சான்றுமாகாது.
இறுதியாக, அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்ணும் அதிகாரத்தில் இல்லாத பெண்ணும் பாலியல் மீறல் விசயத்தில் ஒரே போல பார்க்கப்படுவதில்லை.
ஒரு தலைவி மணம் புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு எளிய பெண் அப்படி இருந்தால் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தப்படுவாள்.
இந்திரா காந்தியின் பாலியல் பிறழ்வுகள் குறித்து ஒரு பேச்சு என்றுமே இருந்துள்ளது. இதைப் பாருங்கள்:

// It is a known fact that after Rajiv’s birth, Indira Gandhi and Feroze Gandhi lived separately, but they were not divorced. The book “The Nehru Dynasty” (ISBN 10:8186092005) by K. N. Rao states that the second son of Indira (or Mrs. Feroze Khan) known as Sanjay Gandhi was not the son of Feroze Gandhi. He was the son of another Muslim gentleman named Mohammad Yunus. Interestingly Sanjay Gandhi’s marriage with the Sikh girl Menaka took place in Mohammad Yunus’ house in New Delhi. Apparently Yunus was unhappy with the marriage as he wanted to get him married with a Muslim girl of his choice. It was Mohammad Yunus who cried the most when Sanjay Gandhi died in plane crash. In Yunus’ book, “Persons, Passions & Politics” (ISBN-10: 0706910176) one can discover that baby Sanjay was circumcised following Islamic custom. It is a fact that Sanjay Gandhi used to constantly blackmail his mother Indira Gandhi, with the secret of who his real father is. // (https://muut.com/i/indian-exponent/political:love-affairs-of-indira-gand)


அதற்காக மக்கள் அவரை பழிக்கவோ தேர்தலில் தோற்கடிக்கவோ இல்லை.
ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் முறையான மனைவி அல்ல என்பது எந்த வித்த்திலும் அவரது அரசியல் மதிப்பை குறைக்கவில்லை. ஜானகிக்கு ஓட்டளிக்காத மக்கள் ஏன் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தார்கள் என்பது பரிசீலிக்க வேண்டிய விசயம்.
ஒரு பெண் என்ற முறையில் ஜெயல்லிதா தொடர்ந்து அவமானங்களையும் தாக்குதல்களையும் சந்தித்தார். நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு கட்சியின் தலைவியான பின், முதல்வர் ஆன பின் அவர் பாலியல் பழிகளுக்கு ஆளானதில்லை. எம்.ஜி.ஆரின் துணைவி என்கிற நிலையில் இருந்து அவர் சட்டென “அம்மா” ஆகி விட்டார்.
ஜெயலலிதாவின் மகள் என ஒருவர் அவரது மரணத்துக்குப் பின் முன்வைக்கப்பட்டார் (அம்ருதா). தன்னை அவ்வாறு அங்கீகரிக்க வேண்டும் என கோரி அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். முறை தவறிய உறவில் பிறந்த பெண் எனும் செய்தி ஜெயல்லிதாவின் மாற்றை சற்றும் குறைக்கவில்லை. இதுவே அவர் வெறும் நடிகை என்றால் ஏகமாய் தூற்றப்பட்டிருப்பார். ஒழுக்கமற்ற நடிகை என மக்கள் காறித் துப்பியிருப்பார்கள். ஆனால் அவரது அரசியல் அந்தஸ்து ஜெயல்லிதாவை இந்த தூற்றல்களுக்கு அப்பாற்பட்டவர் ஆக்குகிறது. அதிகாரம் ஒரு பெண்ணை சற்றேறக்குறைய ஆணுக்கு இணையாக்குகிறது. இதை நாம் சுலபத்தில் மறுக்க முடியாது.  
எந்த சமூகப் பிரச்சனையையும் பெண்நிலை-ஆண்நிலை மட்டுமே சம்மந்தப்பட்ட ஒன்றாய் பார்ப்பது உடனடி பரபரப்புக்கு உதவும். ஆனால் அது பிழையானது, கண்மூடித்தனமானது, தட்டையானது. பெண்-நிலை என்பது பெண்ணுடல் சம்மந்தப்பட்ட்து மட்டுமே அல்ல, உடலைக் கடந்த சமூக அரசியல் பொருளாதார மொழி சார்ந்த கட்டமைப்பு தான் பால்நிலை என இன்றைய பெண்ணியவாதிகள் கூறி வரும் நிலையில் நாம், அதையெல்லாம் படிக்காமல், மீண்டும் “ஐயோ பெண்ணாக பிறந்த்தால் மட்டுமே எவ்வளவு கஷ்டப்படுகிறாள்” என கண்ணீர் வடிப்பது சமகால பெண்ணிய கருத்தியல்களை செருப்பைக் கழற்றி அடிப்பதற்கு சமம். கொஞ்சம் அப்டேட் பண்ணிக் கொள்வதில் தப்பில்லை தானே பாஸ்!


Comments

Anonymous said…
இரண்டு சங்கரச்சாரி பற்றி அவர்கள் இன பெண்கள் உட்பட பலர் பாலியல் குறை கூறினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே. திருட்டோ ,பாலியலோ, ஊழலோ இதுவெல்லாம் இவர்கள் செய்தால் தவறல்ல. மற்றவர் செய்தால் தவறு. மனு மறையவில்லை.