கருத்தே வேண்டாம்டா!


நமது சிறு மற்றும் இடைநிலை இதழ்களில் கடந்த இரு பத்தாண்டுகளில் வெளியான கட்டுரைகளை இப்படி வகுத்துக் கொள்கிறேன்.
1)   2005 வரை - எந்த பிரச்சனையையும் சிக்கலாகவே காணும் (சிலநேரம் சிக்கலாக்கிக் காணும்) கட்டுரைகள்; அரசியல், சமூகம், ஈழப் போர் மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் மற்றும் இலக்கிய கட்டுரைகள்; சன்னமான கோட்பாட்டு சாயல் கொண்ட கட்டுரைகள். நிபுணர்களின் இறுதிக் காலம் இது.  எல்லா தளங்களிலும் மதிப்பீடுகள், தனித்த பார்வை, சமரசமற்ற நிலைப்பாடு ஓரளவு வெளிப்பட்ட கட்டுரைகளின் காலம். ஒரு குறிப்பிட்ட துறையில் படித்து அதைப் பற்றி தொடர்ந்து கருத்து கூறும் இத்தகையோர் இன்று அருகி வருகின்றனர். இதற்கு அடுத்த காலகட்டத்தில் படிக்கத் தெரிந்தவர் அனைவரும் நிபுணர்கள்.

2)   சமீபம் வரை – எந்த பிரச்சனை அல்லது விசயத்தையும் பற்றி மலை மலையாய் தகவல்களை தொகுத்தளிக்கும் தரும் கட்டுரைகள். குறிப்பாய் அரசியல் சர்ச்சைகள் மற்றும் உலக சினிமா குறித்த கட்டுரைகள். இணையம் பரவலாகி பல இணைய படைப்பாளிகள் நிலைப்பட்டு விட்ட காலம் இது. விகடன், நக்கீரன் முதல் சிறு / நடுநிலை பத்திரிகைகள் வரை சமூக அரசியல் பிரச்சனைகள் பற்றி ஒரே வகையான தகவல்பூர்வ கட்டுரைகள் முகப்புக் கட்டுரைகளான காலம். மதிப்பீடு, நிலைப்பாடு, தனித்த கோணம் ஆகியவை பின்னிலைப்பட்டு, பாரபட்சமற்ற தகவல்தொகுப்பு முன்னிலைப்பெற்ற காலம். அதே போல அரசியல் வரலாறு, தன்வரலாறு ஆகிய எழுத்து வடிவங்கள் பிரதானப்பட்ட காலம்.
3)   தற்போது – இப்போது தகவல்பூர்வ கட்டுரைகளின் இடத்தில் எளிய விளக்க கட்டுரைகள் வந்து விட்டன. இன்று ஒரு அரசியல், சமூக சர்ச்சை ஏற்பட்டால் அதைப் பற்றி தெளிவான விளக்கக் கட்டுரைகள் வருகின்றன. இம்மாத உயிர்மையில் ரபேல் ஊழல் குறித்து அத்தகைய எளிய, கச்சிதமான கட்டுரை ஒன்றை ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ளார். இதுவரை வெளியான கட்டுரைகள் உண்மையிலே பிரச்சனை என்ன என நமக்கு புரியாத படி குழப்பத்துக்கு மேல் குழப்பம் விளைவித்தன. ஆனால் கார்ல் மார்க்ஸின் கட்டுரையில் இந்த சர்ச்சை என்ன என ஒரு குழ்ந்தை கூட விளங்கிக் கொள்ளும் அளவுக்கு தெளிவாகவும், சங்கிகளால் சுலபத்தில் மறுத்திட முடியாத படி தர்க்கபூர்வமாகவும் எழுதியுள்ளார். இதே இதழில் வெளியாகியுள்ள, ஸ்ரீதர் சுப்பிரமணியத்தின், ஓரினச்சேர்க்கையாளர்கள் மணம் புரியலாம் எனும் சட்டம் பற்றின கட்டுரைக்கும் இதையையே சொல்லலாம்.

எந்த செய்தி என்றாலும் இன்று அது சர்ச்சை ஆகிறது. சர்ச்சை என்றால் எதிரெதிர் நிலை எடுத்து முகநூலிலும் தலையங்கத்திலும் டிவியிலும் விவாதிக்கிறார்கள். ஒரே மாதிரி பத்து தகவல்களை இருவிதங்களில் மறைத்தும் கூட்டியும் குறைத்தும் குழப்பியும் தம் வாதத்துக்கு ஏற்ப முன்வைக்கிறார்கள். கண்ணை மூடி கூகிள் செய்தால் ரபேல் ஊழல் நடக்கவே இல்லை என வாதிடும் (சங்கிகளின்) நூறு பதிவுகளை, குறிப்புகளை, தரப்புகளைப் பார்க்க முடியும். ஆக, இன்று தகவல்சார் கட்டுரை எழுதுவோர் இந்த வாத பிரதிவாதங்களை வாசகர்களுக்கு தொகுத்து அளித்து அதற்கான தம் தரப்பு விளக்கங்களையும் தருகிறார்கள். கடந்த சில வருடங்களில் இப்பணியில் நம் எழுத்தாளர்களுக்கு ஒரு நிபுணத்துவமே வந்து விட்டது. இன்று வெறுமனே ஒரு பிரச்சனையைப் பற்றி பேச முடியாது – அதை ஒட்டி நிகழும் பற்பல குழப்பங்களையும் இன்று தொகுத்தளிக்க வேண்டும். ஒரு மாதம் பிக்பாஸ் வீட்டில் போய் இருந்து விட்டு திரும்பி மாத இதழ் ஒன்றை எடுத்து கடந்த மாத சர்ச்சை என்ன என வாசித்தால் ஒரு அபாரமான தெளிவும் நிம்மதியும் கிடைக்கும் எனத் தோன்றுகிறது. இதை டிவி ஊடகத்தால் நிச்சயம் தர முடியாது.
அதே சமயம், இதே ஊழல் எண்பதுகளில் வெடித்திருந்தால் நிறப்பிரிகையிலோ, தொண்ணூறுகளில் என்றால் காலச்சுவடிலோ மிக வித்தியாசமான கோணத்தில், கூர்மையான, ஒரு கட்டுரை வந்திருக்கும்.
அது ஒரு கனாக்காலம் என்றெல்லாம் நான் பாடவில்லை. ஆனால் இன்று பார்வைகளும் கருத்துக்களும் மலிந்து போன நிலையில் “கருத்தே வேண்டாம்டா” என ஓய்ந்து விட்டோமா எனத் தோன்றுகிறது.

Comments