ஒரு புதிய தொடர்


Image result for maniratnam

எனக்கு ரொம்பவே திட்டமிடாமல் போகிற போக்கில் முடிவெடுக்கப் பிடிக்கும். ஒரு கோடை விடுமுறையின் போது அப்படித்தான் புரூஸ் லீ குறித்த நூலை எழுதினேன். அப்படித் தான், பிளாக்கில் ஏதோ கோளாறான போது புது பிளாக் ஆரம்பிக்கும் முயற்சியின் போது கவிதைக்கான ஒரு இணைய இதழை ஆரம்பிக்கும் ஐடியா இடையே வர,  “அட ஏன் செய்யக் கூடாது?” என நினைத்து நண்பர் சர்வோத்தமனின் உதவியுடன் இன்மை இதழை ஒரு வருடம் நடத்தினேன்.

சமீபத்தில் நண்பர் அரவிந்தன் மின்னம்பலம் இதழுக்காக ஒரு தொடர் எழுதக் கேட்டிருந்தார். ஒரு சீரியஸான தலைப்பில் எளிய சுவாரஸ்ய தொடர் எழுதலாம் என்றேன். “லாஜிக் – எளிய அறிமுகம்” அல்லது ஏதாவது ஒரு முக்கிய தத்துவவாதியை அறிமுகப்படுத்துவது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவருக்கு இந்த தலைப்புகள் பிடித்திருந்தன.  அத்தொடர்களுக்காக குறிப்பெடுக்கவும் துவங்கினேன். இப்போது எழுதி வரும் புத்தகம் முடிந்த பின் துவங்கலாம் என அரவிந்தனிடம் சொன்னேன். இந்த நிலையில் நேற்று ஒரு முக்கிய பத்திரிகையின் சிறப்பிதழுக்காக ரஜினியின் நடிப்பாற்றல் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிடிருந்தேன். அதற்காக “தளபதி” பார்த்துக் கொண்டிருந்த போது அப்படத்தின் திரைமொழியைப் பற்றி தனியாக இன்னொரு பக்கம் எழுதத் தொடங்கினேன். அது விரிவாக சுவாரஸ்யமாய் அமைய, ஏன் இதே போல மணியின் வேறு படங்களையும் ஆராய்ந்து எழுதக் கூடாதெனத் தோன்ற அப்படியே எனக்கு மிகவும் பிடித்தமான மிஷ்கினின் படங்களையும் சேர்த்துக் கொள்ளலாமே என ஆசை வளர்ந்தது. இவர்கள் இருவரின் திரைமொழியைப் பற்றி எழுத எனக்கு என்றுமே விருப்பம் இருந்ததுண்டு, ஆனால் இதுவரை நிகழவில்லை. நேற்று இப்படி ஒன்றை எழுதத் துவங்கி ஒரு புதுத் தொடருக்கான முகாந்திரமாய் அது போய் முடிந்தது. அரவிந்தனிடமும் சொல்லி விட்டேன். ” திரைமொழி: மணிரத்னம் மற்றும் மிஷ்கின்” என இப்போதைக்கு தற்காலிக தலைப்பு.

Image result for mysskin director
தொடர் என்பது ஒரு புத்தகத்தை மூன்று மாதக் காலத்தில் எழுதி முடிக்க ஒரு நல்ல பயிற்சியும் கூட. அதோடு இந்த சாக்கில் நான் மிகவும் விரும்பும் படங்களை மீள மீள பார்ப்பதும் ஒரு சுகம். இத்தொடரில் framing, blocking, ஒளியமைப்பு போன்ற விசயங்களில் கவனம் செலுத்த திட்டம். எப்படி அமைகிறது எனப் பார்ப்போம்.
தொடர் ஆரம்பிப்பது ஒரு புது உறவை ஆரம்பிப்பது போல புத்துணர்ச்சி தரும் காரியம். அதற்கு உங்கள் ஆதரவும் உற்சாகமும் மிக மிக அவசியம். என்னுடன் இருங்கள்!

Comments