96 படத்தில் பிராமணியமா?


Image result for 96 movie
கே.என். சிவராமன் முகநூலில் 96 படம் குறித்து ஒரு ஆர்வமூட்டும் பதிவை எழுதி இருக்கிறார். அப்படத்தின் இசையிலும் ஜானகியின் பாத்திரத்திலும் ஊடாடும் பிராமணிய சிலாக்கியம் குறித்து சில கேள்விகள் எழுப்புகிறார் அவர். என்னவெல்லாம் எனப் பார்ப்போம்.

1)   ஏன் இப்படத்தில் கர்நாடக ராகங்களின் அடிப்படையிலான இளையராஜா பாடல்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்?
2)   இம்மாதிரி கர்நாடக இசையை சிலாகிப்பது ஒருவித மயக்கநிலை; இது மக்களை சாதிய மனநிலையில் ஆட்படச் செய்வது; இளையராஜா பாடல்கள் பிராமணியத்தை ஒருவகையில் தூக்கிப் பிடிக்கின்றன. இப்பாடல்களை 96 பிரதானப்படுத்துகையில் கர்நாடக இசையை சொந்தம் கொண்டாடும் ஒரு சமூகத்தினர் முன்னிலைப்படுகின்றனர். கே.என் சிவராமன் இதற்கு மாற்றாக மாரி செல்வராஜின் “பரியேறும் பெருமாள்” படத்தின் அரசியல் உணர்வு பொருந்திய கலக இசையை முன்வைக்கிறார். இரண்டில் எது நமக்கு இப்போது தேவை என்பது அவரது கேள்வி.
3)   ஜானகியின் சாதி என்ன? ஜானகியின் குடும்ப பின்னணி, அவளது அப்பா, அம்மா குறித்த தகவல்கள் எவையும் படத்தில் இல்லை. மேலும் ஜானகி பாட்டுப் பாடும் பெண். இதைக் கொண்டு ஜானகி ஒரு பிராமணப் பெண்ணோ என சிவராமன் ஐயப்படுகிறார். இது சரியெனில், ஒரு மத்திய சாதி ஆணுக்கு தன்னை விட மேம்பட்டவள் என நம்பப்படும் ஒரு பிராமணப் பெண் மீதான மயக்கமாய், ஒரு சமிஸ்கிருதமயமாக்கல் விருப்பமாய் இப்படத்தின் கதையாடல் அமையாதா?
எனக்கு கே.என் சிவராமனின் கருத்துக்கள் / கேள்விகளுடன் முழுக்க உடன்பாடில்லை; ஆனாலும் ஒரு மாற்றுப் பார்வையை அளிக்கும், கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பும் குறிப்பு என்கிற வகையில் இது முக்கியமானது என நினைக்கிறேன்.
இனி எனது எதிர்வினை, அதே வரிசையில்.
1)   இளையராஜாவின் கணிசமான பாடல்கள் கர்நாடக ராகங்களின் அடிப்படையிலானவை தாம். அவர் ஒருவித இந்துத்துவ நோக்கு கொண்ட திரைக்கலைஞர் தான். ஆனால், கே.என் சிவராமன் செய்வது போல, கர்நாடக இசையை ஒரு சமூகத்துக்கு மட்டுமே உரித்தானதாய் பார்க்கலாமா? கலைஞர் கருணாநிதி கூட கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் கொண்டவரே (சிறிது காலம் இசை பயின்றிருக்கிறார்). தலித் கவிஞர்களில் முக்கியமானவரான என்.டி ராஜ்குமார் கர்நாடக இசை பயிற்றுநர், மிக நல்ல பாடகர். கர்நாடக இசை அனைவருக்குமானது என்பது என் பார்வை. அதில் ஒருவித சாதி அரசியல் உண்டு தான்; ஆனால் அத்தகைய அரசியல் தமிழ் நவீனத்துவ மேதைகளான பலரிடமும் உண்டு. மௌனி, லா.ச.ரா, தி.ஜா, கா.ந.சு என பலரிடமும். ஆனால் அவர்கள் (பாரதி உட்பட) வெறும் சாதியத்தில் ஊறினவர்கள் மட்டுமல்ல. சாதி அவர்களின் ஆளுமையின், சமூக அரசியல் இருப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே. “ஒரே பிராமணாள் (அல்லது பிள்ளைமார்) கதைகளாயிருக்கே” என ஒருவர் நவீனத்துவ இலக்கியத்தை முழுக்க நிராகரித்தால் எப்படி இருக்கும்? நாளை நான் லா.ச.ராவை சிலாகித்து எழுதினால் நான் பிராமணிய ஆதரவாளன் ஆகிடுவேனா? இல்லை. இத்தகைய தட்டையான பார்வைகள் ஆரோக்கியமானவை அல்ல சிவராமன்.
2)   இசையின் ஒழுங்கு, அதன் ஆதிக்க அரசியல், பிறழ்வையும் ஒழுங்கின்மையையும் பிரதானப்படுத்தும் விளிம்புநிலை இசையின் (இரைச்சல் எனும் இசையின்) அரசியல் தேவை என்பதெல்லாம் மிக சுவாரஸ்யமான பின்நவீனத்துவ கருத்துக்கள். இளையராஜா பற்றின பிரேம்-ரமேஷின் நூலில் இந்த கோணத்திலான கேள்விகள் வருகின்றன. சிவராமனின் கேள்வி எனக்கு அந்த காலத்தைய பின்நவீன அரசியல் நிலைப்பாடுகளை நினைவுபடுத்தின. நான் இதை ஏற்கிறேன். ஒரே சமயம் நமக்கு ஒழுங்கும் ஒழுங்கின்மையும் கலைக்குள் தேவை, ஒன்றின் அதிகாரத்தை மற்றது எதிர்த்து எழ வேண்டும். நமக்கு 96இல் இளையராஜாவின் சுகமான ராகங்களும் வேண்டும், கானா பாலாவின் ஒழுங்கின்மையின்-அழகியல்-கொண்ட இசையும் வேண்டும். விளிம்பிலுள்ள இசை மையத்துக்கு வர வேண்டும், அது மையத்தை தொடர்ந்து சிதைக்க வேண்டும். ஆனால் அதற்காக அரசியல் சரித்தனத்தை பேணும் போக்கை நாம் மறுக்க வேண்டும். கானாவும் தகர தப்பட்டையும் மட்டுமே ஆதரிக்கத் தக்கது என்பது ஒரு அவசியமற்ற அரசியல் சரித்தன்மை.
3)   படத்தில் ஜானகியின் சாதி குறித்த குழப்பம் நிச்சயம் உள்ளது. அது இயக்குநரின் அரசியல் அல்ல, புத்திசாலித்தனம். ஒருவித வெளிப்படை சாதி அடையாளமின்மை பார்வையாளர்களை தடையின்றி நினைவேக்கத்தில் ஆழ்த்த உதவுகிறது. சரி, சிவராமன் சொல்கிறபடி அப்பெண் பிராமணர் தானா? அவளுக்கு ஜானகி எனப் பெயர் வைக்கப்பட பெற்றோரின் இசை ஆர்வமே காரணம் என படத்தில் குறிப்பு வருகிறது. இது ராமாயண ஜானகி அல்ல, சினிமா பாடகி ஜானகி. அடுத்து அவள் எங்குமே பிராமண பாஷையை மறந்தும் பேசுவதில்லை. அவள் கணவன் பெயர் சரவணன். அப்பெயர் பிராமணர்களுக்கு அமைந்து நான் கண்டதில்லை. சிவராமன் சொல்வது போல, அவள் அக்கிரகாரத்தில் வாழ்வதாய் படத்தில் காட்டப்படுவதில்ல. இறுதியாய், அவள் சைவ உணவே வேண்டும் என எங்கும் கேட்பதில்லை. மாறாக, நண்பர்களின் கூடுகையின் போதான விருந்தில் அவளுக்கு ராமசந்திரன் ஒரு தட்டு நிறைய பிரியாணியும் கூட சிக்கன் (மட்டன்?) வைத்துக் கொடுக்கிறான். அவள் அதை ஸ்டைலாய் ரசித்து உண்கிறாள். ஒருவேளை அசைவப் பழக்கம் அவளுக்கு சிங்கப்பூர் சென்று ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், அதை ராமச்சந்திரன் அறிந்திருக்க வழியில்லை. தனக்கு அசைவமே போதும் என அவள் கூறுவதும் இல்லை. ஆக, அவனாகவே அசைவம் கொணர்ந்து அளிப்பது அவள் இயல்பிலேயே, இளமையில் இருந்தே, அசைவம் உண்கிறவள் எனக் காட்டுகிறது.
நீங்கள் குறிப்பிடும் இசையின் அரசியலை நான் ஏற்கிறேன் சிவராமன். ஆனால் இசையை முழுக்க சாதி-வயப்படுத்துவதை மற்றும் ஜானகி பிராமணப் பெண்ணே எனக் கோருவதை நான் ஏற்கவில்லை.

Comments

பாடல் தேர்வை வேண்டுமானால் சொல்லலாம்.
அவள் பிரமணப்பெண்ணாக இருந்தால் என்ன...
இங்கேய அவளின் குடும்ப பின்னணி எத்தகு..?
சாதீய குறியீடுகள் மலிந்து கிடந்த பரியேறும் பெருமாள் போன்ற படங்களை நாம் தூக்கி பிடிப்போம்... அதனாலதான் குறியீடுகள் இல்லை என்றால் என்ன சாதி என்று தேடுவோம்.
இப்போ கர்நாடக சங்கீதத்தை எல்லாரும் படுகிறார்கள். இது ஒரு சாதிக்கான பட்டு இல்லை.
ஒரு பத்திரிகை ஆசிரியர் இப்படியான தேடலை தவிர்த்தல் நலம்.
கே.என் சிவராமன் பார்ப்பனர்தானே?
Anonymous said…
இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜாவா?
இல்லை. கோவிந்த் மேனன்
//கே.என் சிவராமன் பார்ப்பனர்தானே?// தேவையில்லாத கேள்வி