ஷாக் (4)


Image result for hurt painting

அவள் புடவையின் சரசரப்பு. அவளது அந்த பிரத்யேக வாசனை. அவள் கதவை சாத்த மீண்டும் ஏஸி காற்றும் அதன் இரைச்சலும் அவளது இருப்பை கரைத்தது. அவளது வாடின முகம் என்னை எதிர்கொண்டது. நான் பேசத் துவங்கும் முன்னரே அவள் சொன்னாள், “ராஜினாமாவை விட சில நாட்கள் விடுப்பெடுத்து விட்டு பின்னர் வேணும்னா நீ வேலையில் சேர்ந்துக்கலாம். அவசர முடிவுகள் எடுக்காதே”.
தரையை நோக்கினேன்.

 நாம் கடைசியாக பேசிக் கொள்கிறோம் எனத் தோன்றுகிறது. அதனால் உண்மையை சொல்லி விடுகிறேன். ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. உன் மீது மொத்த ஆத்திரமும் தோன்றுகிறது. ஏன் எனத் தெரியவில்லை.”
ஏன்?”
 “…”
எனக்கு எந்த குற்றவுணர்வும் இப்போது இல்லை. ஒருவித வெறுமை மட்டும் தான். நீ ஏன் போக வேண்டும் என்கிறாய் எனப் புரிகிறது
என்ன?”
அவர் போனால் நீயும் போய்த் தானே ஆக வேண்டும்” – அவள் குரல் கசப்பில் கன்றி ஒலித்தது.
அங்கு ஹாலில் யாரும் பார்க்க விரும்பாத ஒரு பொருளைப் போல அவரது உடல் கிடத்தப்பட்டிருந்தது. சடங்குகளை முறையாய் செய்யும் பொருட்டு அவரை ஐஸ்பெட்டியில் இருந்து எடுத்து வெளியே வைத்து புது வேட்டி சட்டை அணிவிக்க முயன்று கொண்டிருந்தார்கள். அவரது வலது கை எதையோ வேண்டும் பாவனையில் திறந்த நிலையில் நீண்டு நின்றது. இரண்டு பேராக அவரைத் தூக்கி கிடத்த முயன்று, இந்த கை அதற்கு இடைஞ்சலாக அவரை அப்படியே திறந்த பெட்டியில் கோணலாய் கிடத்தி விட்டு போய் விட்டனர்.
மாரில் அறைந்தழும் ஆயிரம் பெண்டிரைப் போல மழை பூமியை மோதியது. வீட்டில் படுக்கை அறைக்குள் பெண்களின் கூட்டத்தை விலக்கி நுழைந்தேன். ப்ரியா என்னைக் கண்டதும் துவண்டு போய் தன் அருகில் நின்ற ஒரு அத்தையின் தோள் மீது மீது சரிந்தாள். கண்கள் மீண்டும் பொங்கி வழிய ஒரு குழந்தை போல தேம்பத் துவங்கினாள். அப்போது எனக்குப் பின்னே வந்து நின்ற ஒரு மத்திய வயது ஆள் முன்னே வந்துஅழாதேம்மா. இப்போ தான் நீ உறுதியா இருக்கணும்.” எனக் கூறியபடி அவளை நெருங்கினார். நான் அங்கிருந்து விலகிக் கொண்டேன். கூட்டத்துக்கு வெளியிலும் அவளது அழுகைக்குரல் துல்லியமாய் தனித்துக் கேட்டது. அவளுக்கு தொண்டை கட்டிப் போயிருந்தது.
 தொடர்ந்து பெய்யும் மழையில் அந்த பழைய வீட்டின் சுவர்கள் நனைந்து ஒழுகின. ஹால் தரை முழுக்க நசநசத்தது.
நான் பதற்றமாய் வெளியே சென்று என் செருப்புகளைத் தேடினேன். ஆனால் யாரோ செருப்புகளை தள்ளி ஒரு ஓரமாய் போட்டிருந்தனர். அத்தனை செருப்புகளில் எனதை தேடிக் கொண்டிருந்த போது ஒருவர் என்னை நாடி வந்தார்.
கணேசன் தம்பி தானே?”
நான் மறுத்து தலையசைத்ததை கவனிக்காமல் அவர் பேசினார். உடலை குளிப்பாட்டி ஆடை அணிவித்து மயானத்துக்கு எடுத்துச் செல்ல தயாரிக்க ஒரு கை வேண்டும் என்று உதவி கோரினார். நான் யோசித்து பதிலளிக்கும் முன்னரேசரி வாங்க வாங்கஎன்று என்னை கையைப் பற்றி அழைத்துச் சென்றார்.
செருப்பின்றியே அவருடன் சென்றேன். இதுவரையிலும் வாயிற்கதவின் இரும்பு கிராதிகள், இங்குள்ள  இரும்பு நாற்காலிகள், ஈரத்தரை, ஈரச்சுவர், ஈரமான சருமங்கள் எதுவும் என்னை பாதிக்கவில்லையே என ஆறுதல்பட்டுக் கொண்டேன்.  
தரையில் பாய் விரித்து போர்வையை அதன் மேல் போட்டு தலைமாட்டில் நிலவிளக்கும் சாம்பிராணியும் வைத்தோம். அவருக்கான புத்தாடைகள், குளிப்பாட்டுவதற்கான சோப்பு, எண்ணெய் என ஒவ்வொன்றையும் எடுத்து வைத்தோம். அவரை எப்படி தூக்குவது? ஒரு பெரிய போர்வையில் தூக்கி வைத்து எடுக்கவா? அல்லது பிண வண்டியில் இருந்து இதற்கென ஸ்டிரெச்சரை கொணரவா?
 இரண்டு விசயங்களையும் கொண்டு வர ஆட்கள் போனார்கள். ஆனால் அவர்கள் திரும்ப காலமானது. மேலும் மழையுடன் புயலும் சேர அது வலுத்தது. இனியும் தாமதிக்க வேண்டாம் என ஆளுக்கொரு காலையும் கையை பற்றிக் கொண்டு தூக்கிட முடிவு செய்தோம்.
அவருக்கு கால்கள்; எனக்கு கைகள். கோணலாய் நீட்டிக் கொண்டிருந்த ஒரு கையை சற்றே மடித்து மறுகையுடன் கட்டி விட்டு தூக்குமாறு என்னை அழைத்து வந்தவர் என்னிடம் சொன்னார். கைகளைக் கட்டுவதறாக ஒரு பிளாஸ்டிக் கயிறை எடுத்து தந்தார். அப்போது தான் பிணத்தின் முகத்தை நான் அருகாமையில் கவனித்தேன்.
முகம் வாடி கன்னம் ஒடுங்கி இருந்தது. சொல்லவியலா துயரம் ஒன்று உதட்டோரம் தேங்கி நின்றது. ஒரு பரிச்சயமான வாசனை. அதோடு அந்த உள்ளங்கையின் மிருதுவும்.
 இரு உள்ளங்கைகளையும் பற்றிக் கொண்டு இழுத்து ஒரே கோட்டில் கொண்டு வர முயன்றேன். அப்போது என் கையை அவ்விரல்கள் இறுக்குவதாய் தோன்றியது.
சீக்கிரம் கட்டுங்க. என்னால் ரொம்ப நேரம் தூக்க முடியல. டைம் ஆக ஆக உடம்புக்கு வெயிட் கூடிக்கிட்டு போகுது
அப்போது ஒரு மின் ஆற்றல் என்னைத் தாக்கியது. நான் பிறருக்கு ஷாக் கொடுத்தால் அவர்கள் பதறி கையை இழுப்பது போல இப்போது நான் இழுத்துக் கொண்டேன். எல்லாம் கால் நொடி தான். கிட்டத்தட்ட விடப் போனேன். ஆனால் சுதாரித்துக் கொண்டேன்.
கைகளைக் கட்டி இருவருமாய் தூக்கி குளியலறைக்கு கொண்டு சென்றோம். உடம்பை சுற்றியிருந்த வெள்ளைத் துணியை அவர் அகற்றி விட்டு நீரை மொண்டு ஊற்றினார்.
 உள்ளுக்குள் ஒரு பக்கம் விம்மலும் இன்னொரு பக்கம் நிம்மதியும் வியாபித்தது. அங்கே விறைத்து கிடப்பது நானே என ஒரு நொடி தோன்றியது. அதுவரை இருந்த தயக்கம் மறைய புதிய சோப்பை பிரித்து நுரைய வைத்து மாரில் இருந்து கழுத்து நோக்கி தேய்க்கத் துவங்கினேன்.

(முற்றும்)
நன்றி: தீராநதி  

Comments