ஷாக் (3)


Image result for hurt painting
முதல் நாள். மூன்றாவது மாடி செல்ல மின்தூக்கியின் பொத்தானில் கை வைத்தால் புலனாகாத பொறிகள் என் புலன்களை சுண்டின. அதுவும் நகத்தில் பாய்ந்து உள்ளே மென்சதையை அழுத்தும் அந்த வலி. தயங்கியபடி நின்றிருந்த போது அவள் வந்தாள். அவளிடம் என் சங்கடத்தை சொன்னேன். அவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவளுடன் மின் தூக்கியில் ஏறினேன்.

நிஜமாவா?”
என்னாலே நம்ப முடியல.”
அவள் என்னை அந்த மின் தூக்கியின் உள்ளே இருக்கும் பொத்தான்களை தொடக் கேட்டாள். தயங்கினேன்.
நம் அலுவலகத்தில் நிறைய மின் சாமான்கள் உண்டே. உங்களால் பவர் அவுட்ரேஜ் ஏற்பட்டு, ப்யூஸ் போய் மொத்த அலுவலகமும் இருட்டாயிட்டால்…”
சேச்சே
ஐயய்யோ, என்ன முகமே சிவந்திருச்சு? சும்மா விளையாட்டா சொன்னேங்க
அவர் சொன்னது காதில் விழாதது போன்ற பாவனையில் ஒரு பொத்தானைத் தொடச் சென்று பின்வாங்கினேன்.
அவள் என் தோளை லேசாய் தட்டி விட்டு சொன்னாள்,
ரிலாக்ஸ்
சற்று நேரத்தில் மின்தூக்கி கோளாறு செய்யத் தொடங்கியது. அது தானாக ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கு நிற்காமல் திறக்காமல் கீழே சமதளம் வந்து அங்கிருந்து மீண்டும் இரண்டு மூன்று ஐந்து என கண்ணாமூச்சி ஆடியது. எமெர்ஜென்ஸி பொத்தானை அழுத்தினோம். ஆனால் அது வேலை செய்யவில்லை. அவள் போனில் யாரையோ அழைத்து தகவல் தெரிவிக்க முயன்றாள். ஆனால் தொடர்பு இல்லை. எனக்கு லேசாய் தூக்கிப் போட்டது. முன்னும் பின்னுமாய் ஆடியது. நான் சுவரோடு சாய்ந்து கொண்டேன்.
யூ லுக் அஜிடேட்டட். ஒண்னுமில்ல. இது அடிக்கடி நடக்கிறது தான்.” அவள் எமெர்ஜென்ஸி பொத்தானை மீண்டும் அழுத்த அது இப்போது வேலை செய்தது. மின் தூக்கி கீழ்தளத்துக்கு சென்று திறந்து கொண்டது.
அவள் வெளியே போகும் போது என் தோளை உரசினாள். இதமான வெம்மை என்னை தற்காலிகமாய் தாக்கியது. புலப்படாத நெருப்பு ஒன்று என்னை சுற்றிக் கொண்டது. காற்றில் அது நின்று சுடர்ந்தது.
நான் சேர்ந்த வருடம் அலுவலக வளாகத்தில் கூடைப்பந்து அரங்குக்கு பின்னால் ஒரு சின்ன பூங்கா இருந்தது. (பின்னர் அது பலவகை உணவகங்கள் கொண்ட ஒரு வளாகமாகி விட்டது.) நான் மதியங்களில் உடம்பு வியர்க்க வேண்டும் எனும் நோக்கில் அங்கு போவேன். அவ்வேளையிலும் பாதி பூங்கா மூடுபனியில் பஞ்சுமெத்தை கிழிந்து சிதறியது போல் இருக்கும். உள்ளே நுழைந்ததும் சில்லென்ற காற்றடிக்கும். இடையிடையே வெயில் வாட்கள் பனியை பிளந்து என் உடலில் அங்கங்கே கிழிக்கும்.
 ஒருநாள் அவ்வாறு செல்லும் போது ப்ரியா தனியாய் ஒரு பெஞ்சில் அமர்ந்து உண்பதைக் கண்டேன். அருகில் சென்றேன். உட்கார் என என்னிடம் சொல்வது போல் அமர்ந்திருந்தாள். அமர்ந்தேன்.
நாம அடிக்கடி சந்திச்சுக்கிறோம் இல்லையா? நான் ஒரு வருடமாய் இங்கே சாப்பிட வருகிறேன். இந்த டைம்ல இங்கே வந்த முதல் ஆள் நீங்க தான்
உங்களை பின் தொடர்ந்து வரல. உடம்புக்கு வெயில் கிடைக்குமேன்னு. It helps with this static electricity thing…”
நோ நான் அப்படி சொல்லல. இட்ஸ் லைக் திஸ் – …” அவள் பாதியில் நிறுத்திக் கொண்டு என்னையே கண்ணிமைக்காமல் பார்த்தாள். எங்களைச் சுற்றிலும் பனிமூட்டம் அடர்ந்து கொண்டே வந்தது. உலகில் இருந்து எங்களை தனிமைப்படுத்தும் ஒரு வெண் திரைக் கூண்டு.
 சட்டென அவள் கண்ணிமைகளில் முத்தமிட்டேன். அடுத்து மூக்கு. மெல்ல உதடுகளைத் தொட்டேன். அது அந்த பனியை முத்தமிடுவது போன்றே அவ்வளவு சன்னமாய் இருந்தது.
எனது பயிற்சிக் காலம் முடிந்தது. புரொடெக்ஷன் அணிக்கு அனுப்பினார்கள். முதல் நாளே சி.பி.யுயை இயக்க பொத்தானை அழுத்தியதும் லேசாய் சுருக்கென அதிர்ச்சி தாக்கியது. அதன் பின் கீசெயினைத் தொடுகையில், வியர்வை படிந்த கைக்குட்டையை எடுக்கையில், மின் தூக்கியின் பொத்தானை அழுத்துகையில் என தொடர்ந்து என் விரல் நுனியில் இருந்து மின் பொறிகள் சர்ப்பம் போல் சீறி என்னையே திரும்பி கொத்தின.
 இதைப் பற்றி நண்பர்களிடம் பேசினேன். இணையத்தில் தேடித் தேடி வாசித்தேன். ஆடை வகை, செருப்பு, ஏன் சாப்பாட்டை கூட மாற்றிப் பார்த்தேன். மருத்துவரை நாடினேன். என் உடம்பில் பயோகெமிக்கல் மாற்றங்கள் நேர்கின்றன. இது தானே சரியாகி விடும் என்றார் மருத்துவர். கல்யாணமாகி விட்டதா என எதேச்சையாக கேட்டார். நான் பதிலளிக்கவில்லை. பாடி லோஷன் ஒன்று எழுதிக் கொடுத்தார். காலையிலும் மாலையிலும் வியர்க்க வியர்க்க நடக்கச் சொன்னார்.
அவளது குறுக்கிடல், கழுத்தின் பொன் மயிர் பிசிறுகள், மூக்கிலுள்ள அந்த பரு, மேலுதட்டை அழுத்தி லேசாய் மேலெம்ப வைக்கும் பற்கள், சிந்தனையில் ஆழ்ந்தபடியான உதட்டுச் சுழிப்பு,  கைவிரல்களை அடிக்கடி பின்னி விடுவிக்கும் மேனரிஸம்,  முக்கியமாய் எனது இருக்கை அருகே நின்றபடி என் வேலைத்திட்டங்களைப் பற்றி கையை உயர்த்தி தலைமயிரை சரி செய்தபடி அவள் அறிவுரைகள் தரும் போது என்னை அடித்துத் தூக்கும் அக்குளின் அந்த சன்னமான வாசனை… . ஆனால் சில நாட்கள் இவை எதுவுமே என்னை சலனம் கொள்ள வைக்காது. அவள் திடீரென ஒரு சாதாரண பெண்ணாகி விடுவாள். நான் உலோகங்கள், மின்சாதனங்கள், காற்றின் ஈரப்பதம், மின் அதிர்ச்சியின் வலி எதைப் பற்றியும் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் அது ஒரு போதாமை உணர்வையே தந்தது.
புரொடெக்ஷனில் சேர்ந்த சில மாதங்களுக்குப் பின் ஒருநாள் எனது வேலை உறுதிக் கடிதத்தை இதே சந்திப்பு அறையில் வைத்து தந்தாள். அன்று மேஜைக்குக் கீழே என் கையைப் பற்றியபடி பேசிக் கொண்டிருந்தாள். என்னைப் பற்றி நினைக்கையில் தன் கணவர், மகன் ஆகியோர் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை என்றாள். குற்றவுணர்வா? இல்லை, அவர்களுடன் ஒன்றாய் என் முகம் அவள் நினைவில் வரும் போது அவள் உடல் மிகவும் தூண்டப்படுவதாய் சொன்னாள்.
இன்று காலையில் இருந்தே அவர்களையும் உன்னையும் மாறி மாறி யோசிச்சு அல்லாடிக்கிட்டு இருந்தேன். ஆனால் இன்னிக்கு நீ உணவு வளாகத்துக்கு வரல. இல்ல சீக்கிரமா வந்து என்னைத் தேடினியா?”
தலையசைத்தேன்.
 இதோ இந்த பெருவிரலைப் பாருஅங்கிருந்து ஒரு வலி உச்சந்தலை வரை பரவுது. கொஞ்ச நேரம் செருப்பில்லாம நடந்தால் சரி ஆகிடுது. ஆனால் அந்த வலி சுகமாகவும் இருக்குஉனக்குப் புரியுதா?”
ம்ம்ம்
சும்மா தலையாட்டாதே, சரியா?”
இல்ல
நீ கட்டாயமா என் வீட்டுக்கு வந்து அவரோடவும் என் பையனோடயும் பழகணும்
சரி
அவங்க இல்லாம உன்னை பார்க்க முடியல. ஆனால் நீ போயிட்டால் என்னால் அவங்க கூடயும் இனி இருக்க முடியாதுன்னு தோணுது.”
காத்திருப்பு அறையின் வாயிலுக்குக் குறுக்கே அவள் நிழல் தோன்றியது. நினைவுச் சரடு அறுபட மீண்டேன்.
(தொடரும்)

Comments