செக்கச்சிவந்த வானம்


Image result for sekka sevantha vaanam
வேறெந்த மணிரத்னம் படமும், “கடலுக்குப்” பிறகு, எனக்கு இந்தளவுக்கு ஏமாற்றமளித்த்தில்லை. ஏன் என்பதை சுருக்கமாய் சொல்கிறேன்.
ஏன் என்பதை சொல்கிறேன்.

பாக்யராஜ் தனது “வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்” நூலில் anti-sentiments பற்றி குறிப்பிடுகிறார். நாம் என்னதான் புரட்சிகரமாய் கதை சொல்ல முயன்றாலும், பரீட்சார்த்த முயற்சிகள் செய்தாலும், கதைகூறலில் அடிப்படையான செண்டிமெண்டுகளை மதிக்க வேண்டும். காதலுக்காக ஒரு பெண் தன் பெற்றோரை விட்டு வருவதாய் காட்டினாலும் அப்போது அவளது தத்தளிப்பை, குழப்பத்தை, கண்ணீரையும் உணர்த்த வேண்டும் (“காதல்” படத்தில் போல). ஜாலியாய் பையை தூக்கிக் கொண்டு போனில் பாட்டுக் கேட்டபடி ஒரு பஸ் பிடித்து காதலனை சந்தித்து இருவரும் “லாலாலா” என பாடியபடி ஊரை விட்டு ஓடுவதாய் காட்டக் கூடாது. என்னதான் பெற்றோர் சித்திரவதைப் படுத்தினாலும் பெண் தன் பெற்றோரை விஷம் வைத்து கொன்று விட்டு ஓடிப் போவதாய் காட்டக் கூடாது. இவையெல்லாம் உலகத்தில் நடக்கிறது தான் – ஆனால் சினிமாவில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. பல படங்கள் (தன் படமும் உட்பட) இந்த anti-sentimentகளாலே தோல்வியுற்றுள்ளன என பாக்யராஜ் சொல்கிறார்.
 “செக்கச்சிவந்த வானத்தை” பொறுத்தவரையில் anti-sentimentகளின் இமய மலையாக உள்ளது. யார் யாரோ சாகிறார்கள், துப்பாக்கி வெடிக்கிறது, ரத்தம் கொப்பளிக்கிறது, கத்துகிறார்கள், அழுகிறார்கள் – ஆனால் பார்வையாளர்கள் ஏதோ அரசியல் போஸ்டரை வெறித்துப் பார்க்கும் பசுமாட்டைப் போல அமர்ந்திருக்கிறார்கள்.
உ.தா., அரவிந்த் சாமியின் மனைவி ஜோதிகா. அரவிந்த் சாமிக்கு அதிதி ராவுடன் கள்ளத்தொடர்பு. ஒருநாள் இந்த கள்ள உறவை கண்டுபிடித்து ஜோதிகா சின்னவீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். ஆனால் ஜோதிகாவுக்கு தன் கணவனின் கள்ளத்தொடர்பைக் கண்டு கோபமோ அவரைப் பார்த்து அதிதி ராவுக்கு அச்சமோ இல்லை – ஏதோ பக்கத்து வீட்டுக்கு வந்த விருந்தாளியைப் போல ஜோதிகாவை எதிர்கொண்டு பஞ்ச் வசனமெல்லாம் பேசுகிறார். ஜோதிகாவும் ஏதோ எதிர்வீட்டு ஆண்டி சின்னக் குழந்தையை பிடித்து ஏசுவது போல திட்டுகிறார். அவ்வளவு தான். இதற்கு அடுத்து ஜோதிகா தன் கணவனை குற்றம்சாட்டுவதோ கோபிப்பதோ இல்லை – ஒரு காட்சியில் லேசாய் கிண்டலடிக்கிறார். இந்த நிலையில் ஒருவேளை இவர்கள் இடையிலானது ஒரு உறவற்ற உறவோ, உணர்ச்சியற்ற திருமண பந்தமோ என நாம் நினைக்கிறோம். ஒருவேளை ஜோதிகா அரவிந்த் சாமியின் சகோதரியோ என்ற குழப்பம் கூட எனக்கு பாதி படம் வரை இருந்தது.
 ஒருவேளை அரவிந்த் சாமி அதிதியை தான் காதலிக்கிறாரோ? ஆனால் அரவிந்த் சாமிக்கும் அவரது சகோதரர்களுக்கும் மோதல் வர தம்பியான சிம்பு அண்ணனை மிரட்ட அதிதியை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறார். அரவிந்த் சாமி பதறுகிறார். உணர்ச்சிவசப்படுகிறார். ஓ, இவர் அவளை காதலிக்கிறார் என நாம் ஒருவாறு புரிந்து கொள்ள, அடுத்தடுத்த காட்சிகளில் அவர் அதிதி எங்கே போனார் என்றே கேட்பதில்லை, அவளைத் தேடுவதும் இல்லை, அதிதியும் தான் காதலிக்கும் அரவிந்த் சாமி எங்கே என்று கூட கேட்பதில்லை. தப்பித்து ஓடி விடுகிறார். இந்த பாத்திரங்கள் எல்லாரும் தன்னலமானவர்கள், போலியானவர்கள் என இயக்குநர் காட்டி இருந்தால் பரவாயில்லை, புரிந்து கொள்ளலாம். ஆனால் சீரியஸாய் அன்பு பாராட்டி விட்டு அடுத்த நிமிடம் எனக்கென்ன என இருந்து விடுகிறார்கள். தன் மனைவியை பற்றி அக்கறையே இல்லாமல் கள்ளக்காதலி மீது பாய்ந்து முத்தமிடும் அரவிந்த் சாமி, அப்பா அம்மாவைப் பற்றிக் கூட கவலையின்றி அப்பாவைக் கொன்று, அம்மாவை விதவையாக்கி என்னென்னமோ ரத்தக் களரியெல்லாம் செய்யும் அரவிந்த சாமி தன் மனைவி சுடப்பட்ட பின் திடீரென விழுந்து விழுந்து அழுகிறார். தன் மீதான தாக்குதல்கள் அதிகரித்த பின் அவர், ரொம்ப அக்கறையாய், தனது குழந்தைகளை தனியாய் ஊருக்கு அனுப்புகிறார். ஆனால் மனைவி இறந்த பின் குழந்தைகளுக்கு தகவல் சொல்லவோ அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என விசாரிப்பதோ இல்லை.
படம் முழுக்க இப்படித் தான் போகிறது. பாத்திரத்தின் உணர்ச்சி நிலை, பரஸ்பர ஒட்டுதல், நோக்கம் என எதைக் குறித்தும் தெளிவில்லை. இறுதி திருப்பம் சிறப்பு. ஆனால் கடைசியில் ஏன் விஜய் சேதுபதி தன் நண்பனையும் தனக்கு உணவளித்த நண்பன் குடும்பத்தையும் வேரறுக்க துணிய வேண்டும், அந்த சீக்ரெட் ஆபரேஷனில் ஈடுபடுவதன் மூலம் அவர் அடைவதென்ன என்பது குறித்த எந்த தெளிவும் இல்லை. தன் அப்பா ஒரு கேங்க்ஸ்டர் என சின்ன வயதில் அறிய வந்து தான் துடித்துப் போனதாய் சொல்கிறார் விஜய் சேதுபதி. அவரும் கேங்க்ஸ்டர் ஆகி விட மாட்டார் என தன் அம்மாவிடம் உறுதியளித்த்தாய், அதனாலே போலீசில் சேர்ந்ததாய் சொல்கிறார். ஆனால் என்னதான் நேர்மையான போலீஸ் என்றாலும் தன் நண்பனையும் அவன் குடும்பத்தையும் அழிக்கும் அளவுக்கு அவர் ஏன் செல்ல வேண்டும்? என்ன ” “தங்கப் பதக்கம்” சிவாஜியா? ஒருவேளை விஜய் சேதுபதியின் அப்பா இறக்க வில்லை என்று வைப்போம். இவர் போலீஸ் ஆகி விடுகிறார். ரொம்ப நாள் கழித்து தன் அப்பா ஒரு கேங்க்ஸ்டர் என தெரிய வருகிறது. அப்போது இதே போல ஒரு சீக்ரெட் ஆபரேஷன் செய்து தன் அப்பாவை போட்டுத் தள்ளி விடுவாரா, கூலாக?
அப்பா டானாக வரும் பிரகாஷ் ராஜின் பணத்தில் தான் மந்திரி சபையே நடக்கிறது என ஒரு வசனம் வருகிறது. ஆட்சி செய்பவர்களே பிரகாஷ் ராஜின் பினாமிகள். ஆனால் அவர் இறந்த பின் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எந்த சலனமும் இல்லை. ஒரு அரசாங்கத்தையே ஒருவர் தன் பணபலத்தால் இயக்குகிறார் என்றால் அவரது பிள்ளைகளை காவல் துறை அவ்வளவு சுலபமாய் ஒரு சீக்ரெட் ஆபரேஷன் மூலம் அழிக்க முடியுமா? பிள்ளைகள் இடையே போட்டி நிலவும் போது இவர்களால் பலன் பெறும் மந்திரிகள் தலையிடாமலா இருப்பார்கள்? இதைப் பற்றியெல்லாம் மணிரத்னம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
யாருடன் பார்வையாளர்கள் மனம் ஒன்ற வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்காக மனம் கலங்க வேண்டும் என்பதில் எந்த தெளிவும் இல்லை. ஆக, யார் செத்தாலும் பார்வையாளர்கள் அசையாமல் மலங்க மலங்க பார்க்கிறார்கள் – சிரிக்கிறார்கள், அடுத்து வரப் போகும் வசனத்தை ஊகிக்கிறார்கள். கிளைமேக்ஸ் வரை கேங்க்ஸ்டர்களை ஹீரோக்களாய் காட்டி விட்டு, கடைசியில் மட்டும் இவர்களை கொல்லும் பொருட்டே விஜய் சேதுபதி செயல்படுகிறார் என்றால் அதன் நியாயத்தை காட்ட வேண்டாமா? யார் ஹீரோ என்கிற குழப்பம் படம் முழுக்க உள்ளது. உ.தா., இந்த கேங்ஸ்டர்களால் சமூகத்துக்கு நேரும் தீங்கு, இவர்களின் கொடூரம் ஆகியவற்றை வலுவாய் காட்டி விட்டு கடைசி திருப்பம் வந்திருந்தால் அதை மக்கள் ஏற்றிருப்பார்கள். சகோதரர்களுடன் பரஸ்பரம் அடித்துக் கொள்கிறார்கள் என்பது ஒழிய இப்படத்து கேங்க்ஸ்டர்களின் தீமை என்ன, அவர்களை போலீஸ் ஏன் அழிக்க வேண்டும் என்பதை மணி சார் நீங்க காட்ட தவற விட்டீர்கள்.
தொழில்நுட்ப ரீதியாய் இப்படம் மிகச் சிறப்பு (எல்லா மணிரத்னம் படங்களையும் போல). கதைகூறலில் சில புதிய விசயங்களையும் முயன்று பார்த்திருக்கிறார்கள். காட்பாதர் போல துவங்கி அப்படியே உல்டா செய்து espionage படமாக மாற்றி உள்ளீர்கள். ஆனால் இந்தளவு அடிப்படைகளை கோட்டை விட்டு விட்டு ஒரு பரீட்சார்த்த படம் தேவையா சொல்லுங்கள்?
இப்படத்தின் ஒட்டாத போக்கு, எதற்கும் ஒரு உணர்ச்சிகரமான பின்கதை இல்லாமல் கதையை நகர்த்துவது ஆகிய கதைகூறல் அம்சங்கள் சமகால உளவியலை காட்டுவதாய் கெ.என் சிவராமன் பாராட்டுகிறார். குவிண்டின் டரண்டினோவும் அதைத் தான் செய்கிறார் – ஆனால் Kill Billஇல் உமா தர்மன் தலையில் சுடப்படும் போதும் நம் இதயமும் பதபதைக்கிறது; அதன் இரண்டாம் பாகத்தில் உமா தன் கணவரை கொல்ல நேரும் போது நமக்கு கண்ணீர் வருகிறது. அதில் உள்ள உணர்ச்சி ஆழம் நிச்சயம் மணிரத்னத்தின் இப்படத்தில் இல்லை.
நீங்கள் வித்தியாசமாய் படமெடுக்க முயன்றாலே இப்படி ஆகி விடுகிறது. பழையபடி ஒரு நல்ல காதல் படமே அடுத்து எடுங்கள் மணி சார்! குவிண்டின் டரண்டினோ வேலையை அவரே பார்த்துக் கொள்வார்.

Comments

veera said…
இது போன்ற ஒரு மட்டாமண குப்பை படம் பாரத்ததே இல்லை.ரிட்டயர் ஆகலாம்.ஆர்டிபிசியல்.நிஜ வாழ்கையில் இது போன்று பேசுபவர்கள் இருக்க வாய்ப்பே இல்லை. விசு எவ்வளவோ பெட்டர்