வாசிப்பு தரும் சவால்கள்


வாசிப்பின் சவாலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் - அ) உணர்வுரீதியான சவால், ஆ) புத்திக்கான சவால்.

நம் உணர்வுகள் முன்னுக்குப் பின் முரணானவை. நல்ல எழுத்து இந்தச் சிக்கலான உணர்வு நிலையைப் படம்பிடிக்கும். உதாரணமாக, லெவ் தல்ஸ்தோய் எழுதிய ‘அன்னா கரனீனா’ நாவலில் அன்னா தன் கணவனையும் குழந்தையையும் உதறிக் காதலனுடன் ஓடிப் போகிறாள். அந்த அளவு அவள் காதல் உக்கிரமானது, உண்மையானது. அவளது காதல் வாழ்வு மிகவும் கொந்தளிப்பாகவும் ஆழமான சுகம் அளிப்பதாகவும் உள்ளது. ஒருநாள் உணவகம் ஒன்றில் அன்னாவும் அவளது காதலனும் ஜாலியாக அன்பாய் பேசிக்கொண்டிருப்பதைக் காணும் ஒருவர் தன் நண்பரிடம் இவ்வாறு கூறுகிறார்: “இந்த உறவு நீண்ட நாள் நீடிக்காது. இவர்கள் விரைவில் பெரும் துயரத்தைத் தழுவுவார்கள்.”


உடனே நண்பர் அது எப்படி, இருவரும்தான் அந்நியோன்யமாய் இருக்கிறார்களே எனக் கேட்கிறார். உடனே இவர் சொல்கிறார், “மிதமிஞ்சிய மகிழ்ச்சியை மனித மனத்தால் தாங்க முடியாது. அது தன்னை அறியாது குற்றவுணர்வு கொள்ளும், உடனே வேதனையையும் சுய அழிவையும் கோரும். மிதமான மகிழ்ச்சியே நீடிக்கும்.”
அவ்வாறே நிகழ்கிறது. குற்றவுணர்வும் மகனைப் பிரிந்த வேதனையையும் அன்னாவை வாட்டுகின்றன. அந்தத் தாம்பத்திய மகிழ்ச்சிக்குத் தான் உகந்தவள் அல்ல என அவளுக்குத் தோன்றுகிறது. அவள் பதறுகிறாள்; தவிக்கிறாள்; அவளால் தன் காதலனை விடவோ, தன் குழந்தையை அடையவோ முடியாது. ஒருகட்டத்தில் அவளது எரிச்சலான நடவடிக்கைகள் தாங்காமல் அவளது காதலனும் அவளிடம் கோபிக்கிறான். அவள் சட்டென முடிவெடுத்து ரயிலுக்குத் தலை கொடுத்து உயிர் விடுகிறாள்.
அன்னா ஏன் அப்படி செய்தாள் எனும் கேள்விக்கு எளிதாய் விடை சொல்லலாம். ஆனால், அந்த விடை திருப்தி அளிக்காது. அது ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. ஏனெனில் அன்னாவின் மனம் முரண்பட்ட உணர்வுகள் நிரம்பியது. அன்னாவைப் பற்றி எழுதும் தல்ஸ்தோயும் அவ்வளவு முரண்பாடுகளையும் தன் எழுத்தில் கொண்டு வருகிறார். இந்த நாவல் நிச்சயம் உணர்வுரீதியாய் நமக்குச் சவாலானது. நம்மைத் திடுக்கிடவும் குழப்பவும் கண்ணீர் விடவும் செய்வது. நாம் பார்க்கும் மனிதர்களையும் இந்த அளவு சிடுக்குகளுடன் புரிந்துகொள்ளத் தூண்டுவது. ஆகையால், அது நல்ல வாசிப்பு.
புத்திக்குச் சவால் அளிப்பவை எவை என்பது உங்களது புத்திசாலித்தனம், சிந்தனைத் திறன், மற்றும் ஜீரண சக்தியைப் பொறுத்தது.
நமக்குப் புரிகிற ஆனால் முழுக்கப் புரியாத, தெரியாத ஒன்றை ஒரு புத்தகம் சொல்லும்போதே நாம் ஒருவித மனத்திளைப்பை அடைகிறோம். இது உடலுறவு உச்சத்துக்கு இணையானது. எனக்குத் தத்துவ நூல்கள் அப்படி அபாரமான திகைப்பை, திகிலை, பல குழப்பங்களை அளிக்கின்றன. ஒவ்வொரு பத்தியைப் படித்து முடிக்கையிலும் என் புத்திசாலித்தனமும், சிந்தனை ஆழமும் கூடிவிட்டதாய் உணர்கிறேன்.

இக்கட்டுரையை மேலும் வாசிக்க
வாசிப்பு குறித்த செண்டிமெண்ட்

Comments