பிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)


Image result for bigg boss tamil

வீட்டுக்குள் நாம் சண்டை போடும் போது கோபத்தை நேரடியாக காட்ட மாட்டோம். மாறாக, ஒரு பெரிய கோபத்தை ஒரு அற்ப கோபமாய் காட்டுவோம். நேற்று நீ என்னை அழ வைத்தாய் என்பதை நேரடியாய் சொல்லி சண்டை போட மாட்டோம். பதிலுக்கு, இன்று நீ என்னை வெங்காயம் நறுக்க செய்து அழ வைத்தாய் பாதகி / பாதகா என கூப்பாடு போடுவோம்.

ஒன்று, எதையும் நேரடியாய் சொன்னால் அது உறவுக்குள் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சுகிறோம். இரண்டு, அற்ப விசயங்களை நேரடியாய் குறிப்பிட்டு ஒருவரை வைவது நமக்கு எளிதாகவும் வசதியாகவும் உள்ளது. ஆனால் வெங்காயத்துக்காக நடக்கும் சண்டை வெங்காயத்துக்கானது அல்ல என இருவரும் அறிவார்கள். ஆனால் பிக்பாஸில் இந்த மாதிரி நுணுக்கங்களுக்கு இடமில்லை. பார்வையாளர்களால் அந்தளவு கோப நுட்பங்களை கவனிக்க முடியாது. இங்கே எந்த பிரச்சனையையும் நேரடியாய் சுட்டிக் காட்டி கோபிக்க வேண்டும். ஆதாரம் காட்ட வேண்டும். மறைமுக கோப தாபமெல்லாம் கூடாது. அல்லாவிட்டால் பிக்பாஸே குறும்படம் போட்டுக் காட்டி ஆதாரம் கொடுப்பார்.
எதையும் மறைமுகமாய் சாடும் போதே வன்மம் பெருகும். எரிச்சலும் ஏமாற்றமும் வருத்தமும் வெளிப்படையாய் இருக்கும் இடமே பிக்பாஸ் வீடு. இதனாலே, இங்கு வன்மம் தோன்றுவதில்லை. நீங்கள் கடும் வன்மத்துடன் புகைந்து கொண்டிருக்கும் இரு பகைவர்கள் என சிலரை ஒரு வாரம் பார்ப்பீர்கள். அவர்கள் கடுமையாய் பரஸ்பரம் தாக்கியும் கொள்வார்கள். ஆனால் சட்டென எந்த பகையும் இல்லாதது போல சிரித்துப் பேசவும் செய்வார்கள். ஒரு வாரம் பொன்னம்பலம் அனைவரது வெறுப்புப் பட்டியலிலும் இருப்பார். ஆனால் அடுத்த வாரம் அவர் அனைவரின் விருப்பப் பட்டியலுக்கு மாறுவார். இதனிடையே அவர் தன் சுபாவத்தை கிஞ்சித்தும் மாற்றி இருக்க மாட்டார். டேனியல், ஐஷ்வர்யா, யஷிகா ஆகியோர் உற்ற நண்பர்களாய் தெரிந்தாலும் அவர்கள் அணி மாறி செயல்படும் கட்டாயம் ஏற்பட்டதும் எந்த தயக்கமும் சிக்கலும் இன்றி அவர்களால் அதை செய்ய முடிகிறது.
 பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் இடையிலான சச்சரவுக்கான காரணங்கள் ஏன் இவ்வளவு அற்பமாய் உள்ளன என ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். உதாரணமாய், மும்தாஜ் தனக்கு ஏன் வைஷ்ணவி உவப்பில்லை என்பதற்கான காரணத்தை விளக்குகிறார்: “நான் இந்த வீட்டுக்கு வந்த நாளே வைஷ்ணவி என்னை ஒரு பார்வை பார்த்தாங்க. அந்த லுக்கே ரொம்ப கோவமா எரிச்சலா இருந்துது. அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சு she hates me. அதனால எனக்கு அவங்களை பிடிக்காது.” இப்படி சிலரை நமக்கும் பார்த்ததுமே கடுப்பு தோன்றவதுண்டு. ஆனால் எதார்தத்தில் இது ஒரு சீரியஸான பிரச்சனை. நம்மை சிலருக்கு இயல்பிலேயே பிடிக்காது, அதற்கு அவர்களுக்கு நமது தோற்றம், சமூக அரசியல் கலாச்சார பின்னணி உவப்பில்லாதது என பல காரணங்களை பட்டியலிடுவோம். நாம் இப்படி ஆதாரங்கள் கொடுப்பதற்கு ஒரு காரணம் அந்த கடுப்பே நமக்கு தெளிவில்லாமல் இருப்பதே. அவர் ஏன் எப்படி நம்மை அப்படி பார்த்தார், அவர் நம்மைப் பற்றி தனிப்பட்ட அரங்கில் என்ன பேசுகிறார் என எதுவுமே நமக்குத் தெரியாது. இந்த பூடகம் நம்மை அச்சுறுத்துகிறது; அச்சம் நம் வெறுப்பை பல மடங்கு ஆக்குகிறது.
 ஆனால் பிக்பாஸ் வீட்டில் இப்படி எந்த பூடகமும் சாத்தியமில்லை. வைஷ்ணவியின் ஒவ்வொரு சிறு நடவடிக்கையும் செயலும் பட்டவர்த்தம். அவரது ஒவ்வொரு சொல்லும் நமக்கு கேட்கிறது. ஆக, நடப்பில் சீரியஸாய் தெரியும் ஒரு கசப்பு பிக்பாஸ் வீட்டில் நமக்கு அற்பமாய் தெரிகிறது. விளையாட்டின் அடிப்படை விதி அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது. இப்படி வெளிப்படையாய் இருப்பதனாலேயே பிக்பாஸ் வீட்டில் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லும் விளையாட்டுத்தனமாய் ஆகிறது.
 அதாவது, பிக்பாஸ் வீட்டின் வெறுப்பு அது மிக வெளிப்படையானது என்பதாலே பொத்தலானது; காற்றடித்தாலே பறந்து காணாமல் போகும் காகிதக் குப்பை போன்றது. ஆனால் நடப்பு வாழ்வில் சீரியஸான உறவுகளில் இப்படி நேர்வதில்லை.
ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் நடந்த இரண்டு சர்ச்சைகள் சற்றே தீவிரமான பிரச்சனைகளாய் நமக்குத் தோன்றின. 1) நித்யாவை பாலாஜி கெட்டவார்த்தையால் ஏசினது. 2) ஐஷ்வர்யாவுடன் இரவில் படுக்கையில் மஹத் இருந்து பேசினதும், அதை பொன்னம்பலம் ஆபாசமாய் கண்டித்ததும். ஏன் இந்த பிரச்சனைகளை மட்டும் அற்பமாய், அர்த்தமற்றதாய், தேவையற்றதாய் நாம் கருதவில்லை?
ஏனெனில், இரண்டு சம்பவங்களிலும், உண்மை நமக்கு தெளிவாக இல்லை. கெட்டவார்த்தை பீப் செய்யப்பட்டது. மஹத் அங்கு என்னதான் செய்தார் என்பதை பிக்பாஸ் குறும்படம் இட்டுக் காட்டவில்லை. படுக்கையில் அமர்ந்து பெண்களுடன் அவர் இரவில் உரையாடியது ஆபாசம் அல்ல. ஆனால் அங்கு வேறென்னமோ நடந்தது எனும் தொனியை பொன்னம்பலத்தின் குற்றச்சாட்டு, அவரது பூடகமான குற்றச்சாட்டு, ஏற்படுத்தியது. பிக்பாஸும் இதை வேண்டுமென்றே தெளிவு படுத்தவில்லை. அவர்கள் முத்தமிட்டிருந்தால் கூட அதை வெளிப்படையாய் காட்டி இருந்தால், அதை பொன்னம்பலம் வெளிப்படையாய் குறிப்பிட்டிருந்தால், அது ஆபாசமாய் தெரிந்திருக்காது. “என்ன நடந்ததுன்னு ஓப்பனா சொல்லுங்கஎன ஐஷ்வர்யா திரும்பத் திரும்ப கேட்டார். ஒன்றை அரைகுறையாய் சொல்லும் போதே அது சிக்கலாகிறது என அவர் சொன்னார். பாலாஜியின் கெட்டவார்த்தைக்கும் இது பொருந்தும். இரண்டுமே எளிய பிரச்சனைகள்; ஆனால் வெளிப்படையாய் இல்லாததால் அவை பெரும் பிரச்சனைகளாய் வெடித்தன.
இந்த வெளிப்படைத் தன்மையை இன்றைய கார்ப்பரேட் வேலையிடங்களில் மிக முக்கியமாய் கருதுகிறார்கள். ஏனென்றால் நம்மிடம் கச்சிதமான தரவுகளைக் காட்டினால் நாம் வேலை செய்ய சுணங்க மாட்டோம். நான் முன்பு பணி செய்த இடத்தில் ஒரு பெண் மேலாளரிடம் சென்று புகார் செய்தாள். “சார் நான் காலை வந்தால் இரவு வரை இங்கேயே இருக்கிறேன். என்னால் இந்த நெருக்கடியை தாங்க முடியவில்லை. என் வேலைப் பளுவை தயவு செய்து குறையுங்கள்”. உடனே மேலாலர் கணினியில் அவளது productivity (உற்பத்தித் திறன்) மற்றவர்களை விட குறைவாக உள்ளதை சுட்டினார். அவளோ நான் அதிகமாய் வேலை செய்கிறேன், அந்தளவு இந்த வேலை சிரமமாய், சிக்கலாய் இருக்கிறது; “என்னால் இதை சுலபத்தில் செய்து முடிக்க இயலாது என வாதாடினாள். மேலாளர் சற்று நேரம் ஆராய்ச்சி செய்து அவளுக்கு கூடுதலான தகவல்களைக் காட்டினார். அவள் வேலைக்கு வரும் நேரம்; பிரேக் எடுத்துக் கொள்ளும் கால அளவு, அவள் பேண்டிரியில் இருக்கும் நேரம், அவள் கழிப்பறையில் கழிக்கும் நேரம் என ஒவ்வொன்றையும் கண்காணிப்பு கேமரா காட்சிகள், கைரேகை எந்திர தரவுகள், அவள் கணினியில் லாக் இன்னாக இருக்கும் நேரம் எனக் கொண்டு நிறுவினார். அவர் இறுதியில் சொன்னார், “நீ இங்கே 14 மணிநேரம் இருக்கிறாய், ஆனால் 5 மணிநேரமே வேலை பார்க்கிறாய், நீ 2 மணிநேரம் குறைவாக பணியெடுக்கிறாய். நியாயமாய் நான் உன்னை அழைத்து கண்டிக்க வேண்டும். நீ என்னிடம் வந்து புகார் அளிக்கக் கூடாது.” அப்பெண் திகைத்து விட்டாள். அவள் தன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டு தன் இருக்கைக்கு மீண்டாள்.
அவள் என்னிடம் இதைச் சொன்ன போது எனக்கு ஒன்று விளங்கியது. அவளுக்கு தான் மிகுதியாய் பணி செய்வதாய் ஏற்பட்டுள்ள உணர்வு நியாயமானதே. ஆனால் துல்லியமான தரவுகள் அவளுக்கு தான் குறைவாகவே பணி செய்யும் ஒரு பொய்த்தோற்றத்தை அளிக்கின்றன. இதைக் கொண்டே கார்ப்பரேட்டுகள் அவளைப் போன்றவர்களை ஏமாற்றி ஒடுக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அளித்து இந்தளவு நீங்கள் வேலை செய்தால் போதும் எனச் சொன்னால் நம்மால் அதை கூடுதல் வேலை எனக் காண முடியாது. ஆனால் இந்த எண் இல்லை என்றால் நாம் கூடுதல் பணியை எதிர்ப்போம்; போராடுவோம். வெளிப்படைத் தன்மை கார்ப்பரேட் அடிமையாக்கல் தந்திரங்களில் முதன்மையானது. இந்த வெளிப்படையான கண்காணிப்பு நம் வேலையை ஒரு விளையாட்டாய் நமக்கு தோற்றமளிக்க செய்கிறது.


Comments