“90களின் தமிழ் சினிமா” பேட்டி (11)(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for director ram 
ஆங்கிலத்தில் wolfcrow போன்ற யூடியூப் அலைவரிசைகளில் வெளிவரும் சினிமா மொழி அலசல்களைக் காண்கையில் இவையெல்லாம் எப்போது தமிழில் நிகழப் போகின்றன எனும் ஆதங்கம் எனக்கும் ஏற்படுகிறது.
நல்ல விமர்சன போக்கு எதிர்கால சினிமாவை செழுமைப்படுத்தும். அதையே ராம் கோருகிறார். நியாயம் தான்!  
சரி, இதை எப்படி இங்கே தமிழில் தோற்றுவிப்பது?

கல்விப் புலத்தில் மொழிப் பாடங்களுடன் காட்சி ஊடகங்களின் மொழியையும் கற்பிக்கலாம். வெகுஜன ஊடகங்களில் இது பற்றி எளிய அறிமுகங்கள் கொடுக்கலாம். விகடனில் யாராவது இதைப் பற்றி ஒரு எளிய தொடர் எழுதினாலே (வெறுமனே உலக சினிமா கதையை விவரித்து சுருக்காமல்) அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழில் சினிமாவின் தொழில்நுட்ப ரீதியான விசயங்களை, அதன் காட்சி வரலாற்றை அறிந்த நபர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் அதை எழுதுவதில்லை. நான் ராமை ஒருமுறை சந்தித்த போது பேரன்புபடத்தின் முதல் நாற்பது நிமிடங்களைப் போட்டுக் காட்டினார். நான் அதன் துவக்க காட்சிகள் பற்றி வினவிய போது, அந்த காட்சிகளின் பல்வேறு நுட்பங்களை அவர் ஒரு மணிநேரம் அற்புதமாய் எனக்கு விளக்கினார். காட்சி மொழி, திரைக்கதை பற்றி அவருக்குள்ள ஞானம் என்னை வியக்க வைத்தது. ஆனால் ராம் இதையெல்லாம் எழுதுவதில்லை; அவருக்கு அவகாசமில்லை. இது போன்ற நுட்பங்களை எழுதி பிரசுரிப்பவர்கள், அதை பதிப்பிப்பவர்கள் நமக்கு வேண்டும்.

1.   தமிழ் சினிமாவில் மண்சார்ந்த கதை சொல்லல் முறைகள் கொண்டுவரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? Asghar Farhadi போன்ற இயக்குனர்கள் சினிமாவுக்கும் நாடகத்துக்குமான கூட்டிணைப்பை ஆராய்கிறார்கள். தமிழ் மண்சார்ந்த கலைகளுக்கும், சினிமாவுக்குமான உரையாடலை எப்படி வலுப்படுத்துவது?

நீங்கள் குறிப்பிடும் மண்சார்ந்த கதைகூறல் தமிழில் என்றுமே இருந்துள்ளதுபல வெற்றிப்படங்கள் இதை பயன்படுத்தி உள்ளன. இன்னும் சொல்லப் போனால் இந்திய சினிமாவே கூத்து, நாடகம், நையாண்டி மேளம் என பல தொல்வடிவங்களில் இருந்து வரித்துக் கொண்ட நுட்பங்கள், அம்சங்களைக் கொண்டு தோன்றினது தான். மணிரத்னம் தனது பேட்டி ஒன்றில் இந்திய சினிமாவில் பாடல்கள் எப்படி மிகை-கற்பனையுடன் எடுக்கப்படுகின்றன; எதார்த்தமான ஒரு படத்தில் கூட பாடல் புகுந்ததும் சட்டென அது ஒரு மிகை எதார்த்த நிலைக்கு நகர்ந்து விடுகிறது; அப்போது நம்மால் எதார்த்த கதையாடலில் சாத்தியப்படாத பல விசயங்களை பாடல் வழியாய் சித்தரிக்க முடிகிறது; இது ஹாலிவுட்டுக்கு சாத்தியப்படாதது என்கிறார். இந்த பாடலே நமது மண்சார்ந்த கலைகளில் இருந்து தோன்றியதல்லவா! நாம் காலங்காலமாய் பாடியும் ஆடியும் தானே கதை சொல்லி வந்துள்ளோம்! நமது சங்கக் கவிதைகள் கூட கவிதைகள் அல்ல நாடக வடிவம் ஒன்றின் வசனங்கள் என்கிறார் பேராசிரியர் நிர்மல் செல்வமணி.
நமது பரீட்சார்த்தமான படங்கள் உலக சினிமாவை ஒரு மாதிரியாய் கொள்கின்றன. குமாரராஜாவின்ஆரண்ய காண்டம்படத்தை உதாரணம் காட்டலாம். என் கேள்வி நம்மால் இத்தகைய படங்களுக்கு நாட்டுப்புற வடிவங்களில் இருந்து, தமிழ் தொல் கதைகளில் இருந்து ஒரு புது கதைகூறலை, காட்சிமொழியை உருவாக்க முடியுமா என்பது. அப்படி செய்தால் அது தமிழன் கண்டுபிடித்த ஒரு புது பாணியாக ஆகும். இதை வெகுமக்கள் ரசிக்கும்படியாய் செய்தால் ஓரளவு வெற்றி பெறுகிற நடுநிலை படங்களையும் நாம் எடுக்கலாம்.

Comments