“90களின் தமிழ் சினிமா” பேட்டி (10)(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)
Image result for pather panchali train track
Image result for kattradhu thamizh


20. குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் எடுப்பது மலையாள சினிமாவின் வலிமை என்று சொல்கிறீர்கள். இது மலையாள சினிமாவுக்கு எப்படி சாத்தியமாயிற்று?
கேரளாவின் வலுவற்ற பொருளாதார சூழல் தான் அதற்கு காரணம். அம்மாநிலத்தைப் பொறுத்தமட்டில் அது ஒரு எதிர்மறை விசயம். ஆனால் அவர்களின் சினிமா அதனால் மறைமுக பயன் பெற்றுள்ளது. ஆனால் குறைந்த பட்ஜெட் மட்டும் அல்ல அனுகூலம்;
அதை பயன்படுத்தி வீரியமான, சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிற, பண்பாட்டு தத்துவார்த்த, சமூக உளவியல் சிக்கல்களைப் பேசுகிற படங்களை எடுக்கும் இயக்குநர்கள், அவர்களை ஆதரிக்கும் நட்சத்திர நாயகர்கள், அவர்களுக்கு நீடித்த ஆதரவை பல பத்தாண்டுகளாய் வழங்கும் பார்வையாளர்கள் என பல காரணிகள் இந்த சுண்டைக்காய் பொருளாதார அமைப்பைக் கொண்டு அற்புத படங்களை தொடர்ந்து எடுக்கும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அர்ப்பணிப்புள்ள, ஊக்கமுள்ள கலைஞர்களும், பண்பாட்டு ஓர்மையும் பொறுப்புணர்வும் கொண்ட பார்வையாளர் பரப்பும் தமிழகத்தில் உண்டென்றால் இந்த கடும் வியாபார போட்டி சூழலிலும் நம்மா காத்திரமான ஆழமான குறைந்த பட்ஜெட் படங்களை தர முடியும். நூறு கோடி சொத்து கொண்ட ஒரு குடும்பத்தினர் தினமும் பிச்சை எடுத்து உணவருந்துவது போன்ற நிலைமை நம்முடையது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை!

1.   தமிழ்நாட்டில் "film appreciation" இல்லை என்று இயக்குனர் ராம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த சினிமா ரசனையை மக்களிடையே எவ்வாறு வளர்க்கலாம்?
அவரது புகார் தமிழில் விமர்சனம் என்ற பெயரில் கதையை மட்டுமே அலசுகிறார்கள் என்பது.
 ராம் சொல்வது உண்மை தான். சினிமா என்பது அதன் கதையோ வசனமோ அல்ல. சினிமா ஒரு காட்சிபூர்வ ஊடகம். ஒரு படம் எப்படி சமூகம், மனித மனம், தத்துவச் சிக்கல்கள், அரசியல் பிரச்சனைகள் ஆகியவற்றை பேசுகிறது என்பதை முழுக்க காட்சி பிம்பங்கள், ஒளிப்பதிவு, காட்சித் தொகுப்பு, வேறு பல தொழிற் நுட்பங்கள் வழி பேச முடியும்.
 இப்படியான சினிமா மொழியின் தாக்கம் கூர்மையானது, வலுவானது; நீண்ட காலம் நம் மனதில் நீடிப்பவை சினிமா உருவாக்கும் பிம்பங்கள். “பதேர் பாஞ்சாலியில்நவினம் ஒரு கிராமத்தில் ஊடுருவதை சித்தரிக்க ரயிலை, ரயில் வரும் அதிர்வை இரண்டு பிள்ளைகள் தண்டவாளத்தில் காதுவைத்து உணரும் இடத்தை பயன்படுத்துவார் சத்ய ஜித்ரே. இது ஒரு தொன்மமாக மாறி நம் நினைவுகளில் நிலைத்து விட்டது. தமிழில் மூன்றாம் பிறையில்பாலு மகேந்திரா இந்த காட்சியை ஒரு ஹோமெஜ் போல் பயன்படுத்தி இருப்பார்.
 சத்ய ஜித்ரே காட்டும் ஒரு அழியும் சமூக பண்பாட்டு வாழ்வின் உருவகம் தான் அக்காட்சி மாரில் பாயும் கத்தி போல ரயில் அந்த ஊருக்குள் வருகிறது. ராமின் படங்களில் ரயில் மட்டுமல்ல மனிதர்கள் புது ஊர் ஒன்றுக்கு பயணப்படும் எல்லா வாகனங்களும் இழப்போடு, ஏக்கத்தோடு, எதிர்மறை உணர்வுகளோடு சம்மந்தப்பட்டிருக்கும். “கற்றது தமிழில் இருந்து தரமணிவரை இதைப் பார்க்கலாம். இந்த சின்ன ஒரு சரடை எடுத்துக் கொண்டு நீங்கள் விரிவாய் அவர் சினிமாவைப் பற்றி பேச முடியும். தமிழ் படித்ததால் வேலை இல்லை, வேலை இல்லாதவனுக்கு மதிப்பில்லை, ஐடி தொழில் மனித விழுமியங்களை சீர்குலைக்கிறது என்பதெல்லாம் அவர் சினிமாவில் மேல்பூச்சு. அதைக் கடந்து தன் படங்களை விவாதிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அது நிகழவில்லையே என ஆதரங்கப் படுகிறார்.
நான் சமீபத்தில் இருவர்படத்தின் ஒளிப்பதிவை மட்டுமே கொண்டு அப்படத்தை முற்றிலும் மாறுபட்டு அர்த்தப்படுத்தி ஒரு கட்டுரையை உயிர்மை பத்திரிகையில் வெளியிட்டேன். நான் சினிமா மொழியை பொருட்படுத்தி எழுத முயன்ற முதல் கட்டுரை அது. நான் இதை தொடர்ந்து செய்வேனா எனத் தெரியவில்லை. நான் முழுநேர சினிமா விமர்சகன் அல்ல. ஆங்கிலத்தில் wolfcrow போன்ற யூடியூப் அலைவரிசைகளில் வெளிவரும் சினிமா மொழி அலசல்களைக் காண்கையில் இவையெல்லாம் எப்போது தமிழில் நிகழப் போகின்றன எனும் ஆதங்கம் எனக்கும் ஏற்படுகிறது.
நல்ல விமர்சன போக்கு எதிர்கால சினிமாவை செழுமைப்படுத்தும். அதையே ராம் கோருகிறார். நியாயம் தான்!  

Comments