பிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (1)
பிக்பாஸ் நிகழ்ச்சி நமது நவீன கார்ப்பரேட் வேலை உலகை பெரிதும் ஒத்திருப்பதாய், அதனாலே அந்நிகழ்ச்சியை கவனிப்பது ஆர்வமூட்டுவது மற்றும் அவசியமானது என எனது பிளாக் பதிவொன்றில் எழுதி இருந்தேன். நண்பர் ஒருவர் இது சம்மந்தமாய் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார்: “பிக்பாஸில் யாரும் வேலை எதுவும் செய்வதில்லை; விளையாட்டுகள், அதுவும் அபத்தமான, தரை லோக்கலாய் இறங்கி பரஸ்பரம் அடித்துக் கொள்ளுகிற விளையாட்டுகள். திருடி அதிக பாயிண்ட்ஸ் சேர்த்து எதிரணியை நோகடிக்கும் விளையாட்டு, எதிரணி உறுப்பினர்களுக்கு முழுநாளும் உணவளிக்க மறுத்து காய விடும் விளையாட்டுகள், வாந்தியெடுக்காமல் ஜாங்கிரியும் மீனும் குழைத்து தின்னும் விளையாட்டுகள். இதுவும் நாம் செய்யும் சீரியஸான சிக்கலான வேலைகளும் ஒன்றா?”
இனி என் பதில்:
நேரடியாய் பார்த்தால் ரெண்டுமே ஒன்றல்ல தாம். ஒரே விசயத்தில் இரண்டுமே ஆனால் ஒன்றாகின்றன. கார்ப்பரேட் சூழலில் நாம் இன்று வேலையையும் ஒரு விளையாட்டாகத் தான் செய்கிறோம். கார்ப்பரேட்டில் நமக்கு அளிக்கப்படும் வேலைகளும் நமது தனிப்பட்ட திறன்களை மெருகேற்றும்படியாய் இருப்பதில்லை. விருப்பமில்லையெனிலும், நம் புரொஜெக்டின் தேவையை உணர்ந்து தகவமைப்பதே இன்றைய ஊழியர்களுக்கு அவசியமுள்ள பிரதான திறன்.
பல சமயங்களில் நமக்குள்ள உணர்வு நாம் செய்வது அற்பமான ஆனால் முக்கியமான வேலை என்பது. அற்பம் ஏனெனில் அதனோடு நம் மனம் ஒன்றுவதில்லை; அது நமது அனுபவத்தை, பயிற்சியை, திறன்களை சீண்டுவதில்லை. முக்கியம் ஏனெனில் அது நமது பதவி உயர்வை, ஊதியத்தை, நமது புரோஜெக்டின் வெற்றியை, அதன் மூலம் நிறுவனத்தின் நிலைப்பை தீர்மானிக்கிறது. கார்ல் மார்க்ஸ் பல வருடங்களுக்கு முன்பு சொன்ன விசயம் இது: எந்திரமயமாக்கத்தின் விளைவாய் ஊழியர்கள் தம் வேலையில் இருந்து அந்நியமாய் உணர்வார்கள். அதுவே இப்போது கார்ப்பரேட்மயமாக்கலில் நிகழ்கிறது.
மனம் ஊன்றி, முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டியதல்ல இன்றைய வேலை. சாமர்த்தியமாய், அதிகம் பட்டுக் கொள்ளாமல் செய்ய வேண்டியதே இன்றைய வேலை. எனது சிறுபத்திரிகை நண்பர்கள் பலர் மென்பொருள் வேலையில் இருந்து பத்திரிகை வேலைக்கு நகர்ந்தார்கள். அங்கு நாம் மொழியுடன் தொடர்பு கொண்டிருப்போமே என்று. ஆனால் அங்கும் அவர்கள் தமது நம்பிக்கைகளுக்கு, நுண்ணுணர்வுக்கு தொடர்பற்ற பல விசயங்களையே எழுதுகிறார்கள். அப்படியே சம்பாதித்து தாக்குப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வேலை முன்பொருள் வேலையை விட மேல் எனத் தோன்றுகிறது. அங்கு அவர்கள் முன்பிருந்தது போல அந்நியமாய் இல்லை என்பதே ஆறுதல்.
என் நண்பர் ஒருவர் மிக சீரியஸான சிறுகதையாளர், அவர் முழுக்க முழுக்க சினிமா கிசுகிசுக்களை வெளியிடும் இணைய இதழ் ஒன்றில் வேலை செய்தார். இரண்டிலும் அவருக்கு இருவேறான முகங்கள். நான் அவரை அவரது அலுவலகத்தில் அவரது வேலை செய்யும் இடத்தில் சென்று சந்தித்தேன். அவர் சினிமா கிசுகிசு பக்கம் ஒன்றின் இறுதி கட்ட வடிவமைப்பு பணியில் இருந்தார். வடிவமைத்தபடியே அவர் என்னிடம் வறட்சி மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். பிறகு அப்படியே நாங்கள் அயோத்திதாசர் திருக்குறளுக்கு கொடுத்துள்ள மாறுபட்ட விளக்கங்களுக்கு வந்தோம். அவர் அயோத்திதாசரை வெகுவாக மெச்சி பேசினபடி போனார். எனக்கு குழப்பம் ஏற்பட்டது. ரெண்டிலும் அவர் மிக தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். எது உண்மையான அவர்? விளையாட்டுத்தனமான ஒரு காரியத்தில் அவர் விளையாட்டுத்தனமாய் சீரியஸாய் இருந்தார். சீரியஸான ஒரு விசயத்தில் அவர் சீரியஸாய் விளையாட்டுத்தனமாய் இருந்தார். எது அவர்?
இந்த குணாதசியத்தை நான் இன்றைய தலைமுறையினரிடம் குறிப்பாய் காண்கிறேன். அவர்கள் முன்பைப் போல வேலையை சீரியஸான சீரியஸாய் எடுத்துக் கொள்வதில்லை. வேலை நேரத்தில் மட்டுமே வேலையில் இருக்கிறார்கள். இதை அவர்கள் smart work என்கிறார்கள். பிரவுஸரில் பல டேப்களை திறந்து வைத்திருப்பது போல அவர்கள் பல முகங்களை திறந்து வைத்திருக்கிறார்கள். சுலபத்தில் நேரத்துக்கு ஏற்றபடி ஒன்றை எடுத்து மாட்டிக் கொள்கிறார்கள். வேலையின் போது வேலை; கேளிக்கையின் போது கேளிக்கை. “இனி என் கிட்ட பேசாதே. Let us break up!” என்று கொதிப்பாய் காதலனிடம் சொல்லி விட்டு அடுத்த நிமிடம் ஒரு புன்னகையை சூடிக் கொண்டு அநாயசமாய் டீம் மீட்டிங்கில் கலந்து கொண்டு துடிப்பாய் பேச முடிகிறது; அது முடிந்ததும் அலுவலகத்தில் நிகழும் ஒரு சக ஊழியரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாய் ஹேப்பி பெர்த் டே பாடி விட்டு, மதிய உணவுக்கு தோழிகளுடன் ரெஸ்டெரெண்ட் போய் விட்டு இடையில் பாத்ரூம் போய் அழுது விட்டு கண்ணைத் துடைத்து மேக் அப் இட்டுக் கொண்டு வெளியே வந்து சகஜமாய் அனைவருடனும் பேச முடிகிறது. இவர்கள் போலியாகவோ பாசாங்கவோ இல்லை. இரண்டு எதிரெதிர் விசயங்களில் அவர்களால் ஒரே சமயம் உண்மையாய் இருக்க முடிகிறது.
Comments