புதுமைப்பித்தனும் சாஹிர் நாயக்கும்


Image result for pudhumai pithan

நான் எழுத வந்த பதின் வயதில் முதலில் வாங்கிய சிறுகதைத் தொகுப்பு “புதுமைப்பித்தன் கதைகள்” – அதை கிட்டத்தட்ட ஒரு விவிலியம் போல் தினமும் வாசித்தது நினைவுள்ளது. புதுமைப்பித்தனிடம் வலுவான ஆசிரியர் குரல் ஒலிக்கும் – அவரது நையாண்டியும் சாட்டை சொடுக்குவது போன்ற கூர் சொற்களும் கசப்பேறிய பகடியும் கொண்ட குரல் ஒரு கட்டத்தில் நம்முடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்து விடும். புதுமைப்பித்தன் நமக்கு சிறுவயதில் இருந்தே நன்கு பழக்கமான உறவினர் எனும் உணர்வு ஒரு கட்டத்தில் வந்து விடுமாகையால் அவரை “நம்ம புதுமைப்பித்தன்” எனும் அணுக்கமின்றி யோசிக்கவே முடியாது.

இது எனக்கு மட்டுமல்ல, எல்லா பு.பி வாசகர்களுக்கும் பொருந்தும். பல்கலையில் என்னுடன் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்கள் புதுமைப்பித்தன் என்றாலே மறுநொடி முகம் மலர்ந்து விடுவார்கள். பெருந்தேவி பு.பியை தன் காதலன் என்றே குறிப்பிடுகிறார். அவரது அபாரமான ஸ்டைல், நகைச்சுவை உணர்வு, ஆழமான எழுத்து ஆகிய அம்சங்கள் தாண்டி அவரது இடையறாது பின் தொடரும் குரலும் இதற்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.
 நான் அடுத்து வாங்கி வாசித்த சிறுகதைத் தொகுப்பு சுந்தர ராமசாமி சிறுகதைகள் – சு.ரா பு.பியை விட நளினமான கலைஞர் – ஆனால் அவர் தன் கதைகளில் சு.ரா கள்ளக் காதலன் போல நிழலோடு நிழலாக மறைந்திருப்பார். அவரை அலசி வடிகட்டினாலும் கண்டெடுக்க இயலாது. சு.ராவின் மொழியின் கலை நயத்தில் சொக்கிப் போனவர்களை, அவரது ஆளுமையின் ஆதிக்கத்தில் ஓய்வு கொண்டவர்களை நீங்கள் காணலாம் – ஆனால் சு.ரா என்றதுமே முகம் மலர்கிற, தானாகவே புன்னகைக்கிற வாசகர்களை காண இயலாது. சு.ராவின் குரல் ரொம்ப ரொம்ப அடங்கி ஒலிப்பது என்பது ஒரு முக்கிய காரணம்.
பு.பியின் வாழ்க்கைக் கதையை (ரகுநாதன்), பு.பி பற்றி அவரது மனைவி எழுதிய நினைவலைகள் ஆகியவற்றை ரசித்துப் படித்திருக்கிறேன். பு.பியை ஆளுமை பற்றி யார் எங்கே பேசினாலும் நான் என்னை மறந்து நின்று விடுவேன். நடுவே ராஜ் கௌதமன் பு.பியின் சாதியம் பற்றி எழுதிய கட்டுரை கிளப்பிய விமர்சன சூறாவளியின் போது நான் ஒரு மரக்கிளையை பற்றியபடி அச்சமுடன் வேடிக்கை பார்த்தது நினைவுள்ளது.
 இந்த இடைப்பட்ட காலத்தில் பு.பியை பலமுறை மீள மீள படித்திருக்கிறேன். அவர் ஒரு முழுமையாக மலராத மேதை எனும் எண்ணம் உறுதிப்படாத நாளில்லை. துப்பறியும் கதை, வேதாளக் கதை, தொன்மக் கதை, பகடி, சமூக விமர்சனக் கதை, வரலாற்று-அறிவியல் புனைவு, மீபொருண்மை தத்துவக் கதை இப்படி அவர் பயிலாத கதை வடிவம், பாணி, கருப்பொருள் இல்லை – அவரளவு இவ்வளவு வெற்றிகரமாய் பல்வேறு கதை வகைகளில் ஜொலித்தவர்களும் வேறில்லை. மௌனி, லாசாரா, சு.ரா, ஜெ.மோ என பல ஆளுமைகளிடம் பு.பியின் சாயல் உண்டு – சொல்லப் போனால் அவர்களின் கதை பாணிகளை பு.பி அப்போதே முயன்றி வெற்றி கண்டிருக்கிறார். நாம் அரைநூற்றாண்டாக பரிசீலித்த பல பரீட்சார்த்த அம்சங்களை அவர் அன்றே வெற்றிலை இட்டு மென்று துப்பி இருக்கிறார். அவசர அவசரமாய் பல ஆச்சரியங்களை சாதனைகளை நிகழ்த்தி விட்டு ஒரு கனவு போல் கலைந்து போனார் பு.பி.
புதுமைப்பித்தன் பற்றி இந்த நினைவுகளெல்லாம் இப்போது தோன்ற ஒரு காரணம் உண்டு. நாளை என் இந்திய இலக்கிய வகுப்பில் ஆங்கிலம் மட்டும் பேசும் மாணவர்களுக்கு புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்தப் போகிறேன். அதற்கு அடுத்த வகுப்பில் “சாப விமோசனம்” கதை (லஷ்மி ஹோம்ஸ்டுரோம் மொழியாக்கம்).
“சாப விமோசனம்” கதையை என் பதின் வயதில் முதலில் படித்தேன். எனக்கு அப்போது பு.பியின் சமூக பகடி, நகைச்சுவை, எதார்த்த கதைகள் அளவுக்கு இந்த மாதிரியான விமர்சன தொனி மிக்க கதைகள் பிடிக்கவில்லை. ஆனால் வகுப்புக்காக இப்போது திரும்ப படிக்கையில் எவ்வளவு அபாரமான கதை இதுவென புரிகிறது.
புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்துகையில் மிக மிக சுருக்கமாய் நமது அரைநூற்றாண்டு சிறுகதைப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், முக்கியமான சிறுகதை ஆளுமைகள் பற்றி பேசலாம் என்றிருக்கிறேன். இப்படி ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு ஒருநாள் பு.பியை கற்பிப்பேன் என நான் சத்தியமாய் நினைக்கவில்லை. அந்தளவுக்கு இந்திய மொழியாக்க இலக்கியத்துக்கு, பிராந்திய படைப்பாளிகளுக்கு கல்விப் புலத்தில் இடம் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம் எனக்கு இப்படி ஒரு சோதனை வாய்க்கும் என்றும் நான் கற்பனை செய்ததில்லை.
பு.பியின் பெயரை முதன்முதலில் கேள்விப்படுகிற மாணவர்களிடம் அவரைப் பற்றி பேசப் போகிறேன். எனது ஆவேசம், உற்சாகம், உணர்ச்சிவேகம் கண்டு அவர்கள் சற்றே மிரளப் போகிறார்கள். எப்படி முயன்றாலும் என்னால் நிதானமாய் பு.பியைப் பற்றி பேச இயலாது என நினைக்கிறேன். இது சாஹிர் நாயிக்கை சங்கிகளின் கருத்தரங்கில் உரையாற்ற சொல்வது போல.
எம்.எஸ்.எஸ் பாண்டியனின் Brahmin and Non-Brahmin நூலில் சுதந்திரத்துக்கு முன்பான அரை நூற்றாண்டில் சென்னை பிராந்தியத்தில் செயல்பட்ட கிறுத்துவ போதகர்கள் பற்றி ஒரு சித்திரம் வரும் – சந்தையில் சற்றே உயரமான மேடையில் நின்று கொண்டு தன்னைக் கடந்து போகும் கூட்டமான மக்களை நோக்கி “ஆதியிலே தேவன் பூமியையும் வானத்தையும் சிருஷ்டித்தார்” என கூவியபடி போதிப்பார்கள் இந்த தேவனின் ஊழியர்கள். மக்கள் ஏதோ விசித்திர பாணியை வேடிக்கைப் பார்ப்பது போல் இவர்களை சூழ்வார்கள், ஆனால் அடுத்து உடனே ஆர்வம் இழந்து கலைந்து விடுவார்கள். ஆனால் நம் போதகரோ இதனால் மனம் தளர மாட்டார். அவர் பாட்டுக்கு தேவ கிருபை பற்றி பேசிக் கொண்டே போவார்.
பு.பியை பற்றின என் வகுப்பு இப்படி அமைந்து விடக் கூடாது ஆண்டவரே!

Comments

Anonymous said…
Writer Abhilash, nowadays I'm interested English literature. William Shakespeare played major role in it. Can I know about what you think of him?