திமுகவை குறி வைக்குமா பாஜக?கலைஞரை காவேரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்த பின் அரங்கேறும் காட்சிகள் ஏனோ ஜெயலலிதாவின் அப்பல்லோ நிழல் காட்சிகளை நினைவுபடுத்துகின்றன (அவருக்கு அப்படி ஏதும் நிகழக் கூடாதே என இறைவனை பிரார்த்திக்கிறேன்.) ஒருவேளை நாம் விரும்பாத அந்த சேதியே உண்மையாகுமானால், தமிழகத்தில் என்னவெல்லாம் நிகழும்?

தமிழகத்தை பொறுத்தமட்டில், எப்போது ஒரு கட்சியின் தலைவருக்கு பலவீனம் ஏற்பட்டாலும், அதனால் கட்சியில் விரிசல்கள் தோன்றலாம் என நிலை ஏற்பட்டாலும் அதனால் எதிர்க்கட்சியை விட கூடுதலாய் மகிழ்வது மத்தியில் ஆளும் அரசாகவே உள்ளது. ஒ.பி.எஸ் காவேரி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்ததும் மோடி போன் மூலம் விசாரித்து ட்வீட் செய்ததும் இந்த ஐயங்களை உறுதிப்படுத்துகின்றன.
திமுகவின் உறுதியான செயல்தலைவர் அக்கட்சியை சிதறிப் போகாமல் பாதுகாப்பார் தான். அதாவது கழுகுகள் குறி வைக்காமல் இருக்கும் பட்சத்தில். அதிமுக அளவு திமுகவின் நிலை பரிதாபம் அல்ல. ஸ்டாலினுக்கு இணையான தலைவர்களும் கட்சியில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, பாஜகவின் கழுகுகள் திமுகவை சிதைக்க என்னவெல்லாம் செய்ய இயலும்?
1)   ஒரு பக்கம் கட்சியை உடைத்து கலக எம்.எல்.ஏக்களைக் கொண்டு ஒரு அதிமுக – திமுக கூட்டாட்சி உருவாக்க உதவுவோம் என ஆசை காட்டலாம்.
2)   மேற்சொன்னது ஒரு பக்கம் நிகழ, ஸ்டாலின் தரப்பிடம் பேசி ஆட்சியை கைப்பற்றத் தூண்டலாம். ஆனால் ஸ்டாலின் ஏற்கனவே பாஜகவின் இந்த ஆசை வார்த்தையை மறுத்துள்ளார். ஆகையால், அவருக்கு நெருக்கடி அளிப்பார்கள்.
3)   நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அழகிரி மீடியாவிடம் பேசின சொற்களில் ஒருவித கசப்பு தொனித்தது. அவரது காதில் பாஜகவினர் என்னவெல்லாம் ஓதுவார்கள்?
இதனால் பாஜகவுக்கு என்ன லாபம்? ஒன்றுபட்ட உறுதியான திமுக என்பது பாஜக தமிழகத்தில் காலூன்ற முக்கிய இடையூறு. ஆக, ஆட்சிப் பொறுப்பை தருகிறோம் என ஆசை காட்சி திமுகவை உடைத்தால் அதன் மூலம் பெருங்குழப்பத்தை விளைவிக்கலாம். அடுத்த தேர்தலில், திமுகவும் அதிமுகவும் இரண்டிரண்டு கட்சிகளாய் போட்டியிடச் செய்யலாம். இதனோடு மூன்றாம் நான்காம் அணிகளாய் சிறு கட்சிகளையும் சேர்த்தால் பாஜக நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் ஆட்களை தேர்தலில் ஜெயிக்க வைக்க இது உதவலாம். முக்கியமாய், இப்போது ஆளும் எடப்பாடி கட்சியினரை பதற்றமாக்கி கூடுதலாய் கட்டுப்பாட்டில் வைக்கவும் இப்போதைக்கு திமுகவுக்குள் சச்சரவுகளை உருவாக்குவது உதவலாம்.
ஒருவேளை கலைஞர் மீளவில்லை எனில்? பாஜக கழுகுகளின் தாக்குதல்கள் எவ்வாறு அமையக் கூடும்?
இவை என் ஊகங்கள்:
 தீபாம்மா, தினகரன் போன்றோரை திமுகவுக்குள்ளிருந்து வளர்த்தெடுத்து குழப்பங்களை உண்டு பண்ண பாஜக முயற்சி எடுக்கும். இந்த தீபாம்மா, தினகரன்களை களைந்து அமைதியை நிறுவுவார் ஸ்டாலின்.
ஆனால் அடுத்த சில மாதங்களில் மீடியாவுக்கு கொண்டாட்டம், ஆளும் அதிமுகவினருக்கு திண்டாட்டம். முதலமைச்சர் நாற்காலிக்கான ம்யூசிக்கல் சேர் ஆட்டம் தொடரும்.
 ஸ்டாலின் தன் படகு கவிழாமல் பார்த்துக் கொள்வார். இதனிடையே அவரது படகில் இருந்து சிலர் குதித்து நடுக்கடலில் நீச்சலடிப்பார்கள். அவர்களின் பேட்டிகளும் கூத்துகளும் நம் கவனத்தை ஆக்கிரமிக்கும்.

Comments

ஆதி said…
ஸ்டாலின்?