வாசக சாலை பெங்களூர் வரவு: முதல் கூட்டம்


Image may contain: 7 people, including Abilash Chandran, Kirthika Tharan and Tk Kalapria, people smiling, text
வாசக சாலையின் பெங்களூர் நுழைவு நல்ல விதமாய் சுவாரஸ்யமாய் அமைந்தது. இன்று மாலை கூட்டம் உல்சூரில் பெங்களூரு தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது.
வாசக சாலை அமைப்பு தோன்றின பின் தான் வாசக பேச்சாளர்கள் என ஒரு தனி உரையாடல்களாரர்களே தமிழில் தோன்றினார்கள். அதுவரை வாசகர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். கடிதம் எழுதுவார்கள், ஆனால் எப்போதும் நிழலில் நிழலாக மறைந்திருப்பார்கள். வாசக சாலை நம் சிறுபத்திரிகை உலகை, அதை ஒட்டி உருவாகி வரும் நடுநிலை வாசகப் பரப்பை ஜனநாயகப்படுத்தி உள்ளது. பெரிய அரசியல் உரசல், பிம்ப பெருக்கம், வெறுப்பரசியல் இல்லாத நட்பார்ந்த கூட்டங்கள் அவர்களுடையது.

 இன்னொரு விசயம் நேர்த்தி – தமிழ் இலக்கிய உலகில் எதுவும் தாமதமாய் குளறுபடியாய் திட்டத்திற்கு மாறாய் தான் நடக்கும். நூலைப் பற்றி பேச வரும் விமர்சகரே “இரவானால் என் மனைவிக்கு சிலர் போன் செய்து தொந்தரவு செய்யுறாங்க. இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்.” என தனிப்பட்ட ஆதங்கங்களை மட்டுமே பதிவு செய்த சிறுபத்திரிகை கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் வாசக சாலை கூட்டங்களில் பேச்சாளர் மட்டுமல்ல அத்தனை பங்கேற்பாளர்களும் பிரதியை படித்து விட்டு தயாராக வருகிறார்கள். இன்றைய கூட்டத்தில் பாவண்ணனின் கதை ஒன்று அவ்வளவு ஆர்வமாய் வாசகர்களால் விவாதிக்கப்பட்டது. பாவண்ணனுக்கு இது எப்படியான திருப்தியை கொடுத்திருக்கும் என என்னால் ஊகிக்க முடிந்தது. இப்படியான ஒழுக்கத்தை நான் விஷ்ணுபுரம் வட்ட கூட்டங்களிலும் பார்த்திருக்கிறேன். பாராட்டத்தக்க அம்சம் இது.
இன்றைய கூட்டத்தில் பேசிய இரா வினோத், பா. கண்மணி, கிர்த்திகா தரண் மற்றும் கருத்து தெரிவித்த வாசகர்கள் ஆகியோரும் கவர்ந்தார்கள். குறிப்பாக ஈழத்து இளம் பெண் ஒருவர் ஒடுக்குமுறை பற்றி பேசிய போது என் கண்கள் பனித்துப் போயின. ஒரு ராணுவ சிப்பாயின் வாழ்வில் நேரும் ஒடுக்குமுறை துயரங்களை பாவண்ணன் எழுத அது ஒரு ஈழ வாசகருக்கு தன் வாழ்க்கை அனுபவங்களை நினைவுபடுத்துகிறது என்றால் இலக்கியத்தின் ஆற்றல் தான் என்ன என வியந்து போனேன்.
இன்னொரு வாசகர் பேசுகையில் இந்த கதையின் சிப்பாய் தன் உயரதிகாரியுடன் ஏற்படும் கசப்பான அனுவத்தால் பதவி இறக்கம் செய்யப்படுவதை குறிப்பிடுகையில் ஒரு படத்தில் வடிவேலு தான் செய்யும் தவறுகளால் பதவி இறங்கி உயரதிகாரி வீட்டு தரையை துடைக்கும் அளவுக்கு அவதிப்படும் காட்சியை ஒப்பிட்டார். அதற்கு பார்வையாளர்கள் சிரித்து ஆமோதிக்கவும் செய்தனர். ஒருவிதத்தில் இது பொருத்தமற்ற ஒப்பீடே. ஆனால் ஒரு பெரிய தவறு ஒன்றும் அல்ல. நானும் கூடத் தான் நகைத்தேன். இன்றைய காலத்தில் இயல்பு இது. நாம் ஒரு தீவிர உணர்வை சந்தித்து மனம் கலங்குகிறோம்; ஆனால் மறுநொடி ஒரு ஜாலியான பகடிக்கு குலுங்கி குலுங்கி சிரிக்கிறோம். மீம்களை உருவாக்கி பகிர்கிறோம். நம் காலத்தின் துயரங்களை, அழுத்தங்களை வேறெப்படியும் நம்மால் எதிர்கொள்ள தெரியவில்லை. இதைப் பார்க்கையில் தொண்ணூறுகளில் நான் கண்ட இலக்கிய கூட்டங்கள் எப்படி இரங்கல் கூட்டம் போல இறுக்கமாய் இருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. நாம் இன்று வேறொரு இடத்துக்கு வந்து விட்டோம்.
நான் பேசுகையில் மூன்று கதைகளையும் தனித்தனியாய் அலசினேன். பாவண்ணனின் கதையின் தலைப்பான “கண்காணிப்பு கோபுரம்” என்பது ஒரு முக்கியமான திறவுச்சொல் என்றேன். அதைக் கொண்டு அதிகாரமும் கண்காணிப்பும் கைகோர்க்கும் ஒரு தளத்தை அக்கதையில் எப்படி திறப்பது என விளக்கினேன்.
 ஆதவனின் “புகைச்சல்கள்” கதையை அவரது “காகித மலர்கள்” நாவலுடன் ஒப்பிட்டு பேசினேன். எழுபது, எண்பதுகளின் ஒரு தலைமுறை எப்படி லட்சியங்கள் ஏதுமற்று, வாழ்வின் அர்த்தமின்மையை எதிர்கொள்ள முடியாது தத்தளிப்பதை எப்படி ஆதவன் ஆண் பெண் உறவுகளின் பின்னணியில் எப்படி பேசுகிறார் என்பதை சுட்டினேன்.
 தமிழவனின் “புத்திஜீவி கேயின் வாழ்வும் பணியும்” கதையை சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகளுடன்” மேலோட்டமாய் ஒப்பிட்டு விட்டு அக்கதை பேசும் புத்திஜீவியின் சமூகப் பிறழ்வுகள், மிகைகள் எப்படி தமிழில் ஆர்வமூட்டும் ஒரு கதையாடலாய் புழங்கி வருகின்றன என பேசினேன். கலக எழுத்தாளன், விசித்திர குணாதசியம் கொண்ட மேதை ஆகிய நம்பிக்கைகள் எதார்த்தத்தில் இருந்து தோன்றுகிறதா அல்லது அவை நாமாக கற்பிதம் பண்ணிக் கொள்ளும் விசயங்களா என வினவினேன். நமது அறிவுஜீவிகள், படைப்பாளிகளை ஒத்த சமூக கலகங்கள், விநோத செயல்களை நிகழ்த்தும் பொதுமக்களையும் அறிவேன். ஆனால் அறிவுஜீவி அளவுக்கு அவர்கள் தமது விநோதங்கள், பிசிறுகளை நாடகீயப்படுத்துவதில்லை; அவர்கள் மீது விழும் வெளிச்சம் குறைவு என்பதாலும் நாம் அதிகம் அதை கவனிப்பதில்லை.
உதாரணமாய், பாரில் வாஷ் பேஸின் மீது ஏறி நின்று அதில் ஒன்றுக்கு அடிப்பவர்களை கண்டிருக்கிறேன். இதை ஒரு அறிவுஜீவி செய்தால் அது கலகம் ஆகிறது; அது தொடர்ந்து கதையாடலாக உருப்பெற்று கல்வெட்டு அந்தஸ்தை பெற்று விடும். எங்கே போனாலும் யாராவது அதை வம்பாக பேசி ரசிப்பார்கள். பத்து வருடம் கழித்து அது ஒரு கட்டுரையில் இடம்பெறும் – ஒருவர் அதை வைத்து ஒரு கதை கூட எழுதலாம். இப்படி அறிவுஜீவி பிம்பங்கள் செயற்கையாய் தோன்றுவதை பகடி செய்யும் கதையே “புத்திஜீவி கேவின்…” எனத் தோன்றுகிறது. அதாவது, கலகக்காரன் எனும் புனைவில் இருந்து ஒரு சமூக பிம்பம் கட்டமைக்கப்பட அதில் ஒருவர் பொருந்திப் போகிறார்; அதைப் பற்றி பேசுவதில் நாம் அனைவரும் சுவாரஸ்யம் கொள்கிறோம்; பின்னர் அது ஒரு எழுத்தாளனின் பீடமாக உருப்பெற உதவுகிறது.
கூட்டம் முடிந்த பிறகு பாரதி மணியிடம் ஆதவன் பற்றியும் அருணிடம் “காலாவின்” படப்பிடிப்பில் ரஜினியின் நடிப்பை பழகும் பாணியைப் பற்றியும் உரையாடியது மிகவும் நிறைவளித்தது. ஊருக்கு போய் வந்த ஒரு உணர்வு!

Comments