“90களின் தமிழ் சினிமா” பேட்டி (5)

(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for gautham menon movies

8. பெண் இயக்குநர்களின் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் பெண்மை குறைந்தவர்களாகவும், ஆண் கதாபாத்திரங்கள் பெண்மை நிறைந்தவர்களாகவும் இருப்பதை ஒரு கட்டுரையில் சுட்டியிருக்கிறீர்கள். உங்களுடைய வேறொரு புத்தகத்தில், "தைரியமான உறுதியான பெண்ணும், நெகிழ்ச்சியான கவித்துவமான ஆணும் நம் எதிர்கால சமூகத்தின் லட்சியப் பிரதிநிதிகளாக இருப்பார்கள்" என்று எழுதி இருக்கிறீர்கள். அது பற்றி சொல்லுங்கள்.

ஆர். அபிலாஷ்: ஒரு பாலினத்துக்கு இது தான் அடிப்படை சுபாவம் என்று முன்பு உறுதிப்பாடுகள் இருந்தன. இன்று அது மாறி விட்டது. இன்னும் நெகிழ்வான நிர்மையான உறவுகளே இன்று வெற்றி பெறுகின்றன. அதற்கு ஆண்கள் பெண்களின் இடத்தையும் பெண்களின் ஆண்களின் இடத்தையும் (இந்த இடங்களே கற்பனையான வரையறை தான்) எடுத்துக் கொள்ள தேவையிருக்கிறது. இது இன்றைய காதலை லகுவாக அழகாக கவித்துவமாய் மாற்றுகிறது.
 ஆனால் துரதிஷ்டவமாய் நம்மால் முழுக்க இப்படி இருக்க முடிவதில்லை. இன்றைய ஆண்களின் மனம் பாதிக்கு பாதி பழைய காலத்தில் உறைந்திருக்கிறது. பெண்களும் அவ்வாறே. இது உறவுக்குள் சிக்கலை, போராட்டங்களை, குழப்பங்களை உண்டு பண்ணுகின்றன. எதிர்கால லட்சிய ஆணும் பெண்ணும் எப்படி இருப்பார்கள் என்ற எனது கற்பனையே நீங்கள் மேலே குறிப்பிட்ட எனது மேற்கொள்.

9. கவுதம் மேனன் தன் திரைப்படங்களின் கதாநாயகர்களுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்தவர். அவருக்குப் பிறகு வந்த இயக்குநர்கள் அதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லத் தவறிவிட்டார்களா?

ஆர். அபிலாஷ்: ஆம் அது உண்மையே. அதற்கு ஒரு காரணமும் உள்ளது. நாம் மேலும் மேலும் நகர்வயப்படும் போது கௌதம் மேனன் பாணி படங்களை அதிகமாய் இயக்குகிற இயக்குநர்கள் தோன்றுவார்கள். இப்போதைக்கு அவர் சிறுபான்மை பார்வையாளர்களுக்கான இயக்குநரே. ஆனால் கௌதம் மேனன் சித்தரிக்கும் சட்டென உடைந்தழும், பெண்ணிடம் சுலபத்தில் சரணடையும் மென்மையான அந்த ஆண்கள் முக்கியமானவர்கள்.

10. ஆண்களுக்கு இடையேயான புரொமான்ஸ் தமிழ் சினிமாவில் எப்படிக் காட்டப்படுகிறது என்பதை விளக்கி எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு புறம், பெண்களுக்கு இடையேயான நட்பு ஏன் பரஸ்பரம் பொறாமை நிறைந்த ஒன்றாகச் சித்தரிக்கப் படுகிறது?

ஆர். அபிலாஷ்: திரையரங்கில் நுழைவுச்சீட்டு வாங்கி இடங்களை ஆக்கிரமிப்போர் இன்றும் அதிகம் ஆண்கள் தாம். இதுவே நாம் ஆண்களுக்கான படங்களை இங்கு அதிகம் எடுக்க காரணம். பெண்களுக்கு இடையிலான பிரியத்தை, நட்புணர்வை காட்டும் படங்களை இங்கு எடுப்பது மிக மிக சிரமம். மலையாளத்தில் அத்தகைய ஒரு படத்தை பத்மராஜன் எடுத்திருக்கிறார்: “தேசாடன கிளி கரயாறில்ல”.
தமிழில் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற ஆப்களுக்காய் படங்கள் எடுத்து வெளியிடப்பட்டால் பெண் தரப்புக்காய் பெண்களைப் பற்றி மட்டுமான படங்கள் வர வாய்ப்புண்டு. ஒருவேளை எதிர்காலத்தில் நிகழலாம்.


Comments