“90களின் தமிழ் சினிமா” பேட்டி (4)


(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for kadhal movie
 “காதல்”

6. ஒரு பேராசிரியராகத் தமிழக இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துங்கள். ஒருவரை ஒருவர் காதலிக்கும் இரண்டு தனிமனிதர்கள் வாழ்க்கையில் ஒன்றிணைய முடியாமல் இருப்பது காதல் தோல்வியா? அல்லது, ஒருவரின் காதலை இன்னொருவர் ஏற்றுக் கொள்ளாதது காதல் தோல்வியா?

ஆர். அபிலாஷ்: காதலர்கள் தம் விருப்பத்தையும் கடந்து இணைய முடியாமல் போவது காதல் தோல்வி அல்ல; அது சமூக அவலம். அதனால் தான் பாலாஜி சக்திவேலின்காதல்உள்ளிட்ட படங்கள் சாதியைப் போன்ற சமூக அவலங்களை சாடுகின்றன. ராமின்கற்றது தமிழ்”, “தரமணிஆகிய படங்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் தடைகள், அகச்சிக்கல்கள் எப்படி காதலர்களை பிரிக்கின்றன என்பதைப் பேசுகின்றன.

மணிரத்னம், கௌதம் மேனன் ஆகியோர் காதல் தோல்வியை அகவயமாய் பார்க்கிறார்கள்; சூழல் எப்படி காதலர்களை அகற்றி வைக்கிறது, தவிக்க விடுகிறது, பரஸ்பரம் வெறுத்து புண்படுத்த வைக்கிறது என அவர்களின் படங்கள் பேசுகின்றனஇதுவே நிஜமான காதல் தோல்வி. ஆனால் இதுவும் கூட காதல் தோல்வி அல்ல, காதலர்களின் தோல்வி தான். காதல் என்றும் தோற்பதில்லை.

7. காதலைப் பற்றிப் பேசுவதால் கேட்கிறேன். 90களில் வெளிவந்த பிரசித்தி பெற்ற காதல் திரைப்படமான "காதலுக்கு மரியாதை" படத்துடனான உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆர். அபிலாஷ்: காதலுக்கு மரியாதை" என்னை பெரிதும் கவரவில்லை. மலையாளத்திலும் அதன் மூலமானஅனியத்தி பிறாவுபார்த்திருக்கிறேன்.
இப்படம் காதல் கதையின் பாவனையில் மரபான திருமணத்தை ஆதரிக்கும் ஒன்று. எல்லா காதல் திருமணங்களிலும் ஒரு சுயநலம் உள்ளது. காதலுக்குப் பின் இச்சுயநலத்தை ஜோடிகள் உணர்வார்கள். பெற்றோர்களை தவிக்க விட்டு விட்டோமே எனும் கவலை குற்றவுணர்வாகி அவர்களை அரிக்கும். தாம்பதிய பிரியமும் ஆசையும் ஒரு பக்கம், பெற்றோரை எதிர்த்து பிரிந்த தனிமை இன்னொரு பக்கம். இதனிடையிலான மோதலில் தான் காதல் திருமணம் பரிணமிக்கும்.
 "காதலுக்கு மரியாதை" படத்தில் திருமண ஜோடியின் இத்தவிப்பை திருமணத்துக்கு முன்பே நிகழ்வதாய், காதலர்கள் பெற்றோரிடமே மீள்வதாய் காட்டி இருப்பார்கள். காதலில் இருக்கும் பலரும் இதை உணர்ந்ததால், இப்படம் அவர்களது இம்மன உணர்வுகளை கற்பனை செய்து திளைக்க உதவியதால் வெற்றி பெற்றது. படத்தில் காதலுக்கு மரியாதை அளிக்கும் விதம் பெற்றோரே கடைசியில் காதலர்களை சேர்த்து வைப்பார்கள். இதன் மூலம் காதல் ஜோடிகள் நிஜத்தில் அனுபவிக்கும் அகப்போராட்ட்த்திற்கு ஒரு சுலப தீர்வையும் பாஸில் அளித்தார். அகப்போராட்டத்தை கடந்து வாழ்க்கைஎளிய தீர்வுகளின்றிஎப்படி நகர்கிறது என்று காட்டியிருந்தால் இது மேலும் சிறப்பான படமாக இருந்திருக்கும். “அலை பாயுதேஇதே அகச்சிக்கலை இதை விட அபாரமாய் கையாண்ட படம்.
 பாஸிலின் ஆரம்ப கால படங்களில் ஒன்றானவருஷம் பதினாறுஇதே காதலுக்கான குடும்ப எதிர்ப்பு சிக்கலை வேறு வகையில் கையாண்டிருக்கும். இப்படத்தின் மலையாள மூலமானஎந்நெந்நும் கண்ணேட்டென்றேஇன்னும் சிறப்பானது.


Comments