“90களின் தமிழ் சினிமா” பேட்டி (3)


(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for sivakarthikeyan

4. காதலை லட்சியமாகச் சித்தரிக்கும் புள்ளியில் இருந்து காதலைக் கொண்டாட்டமாகச் சித்தரிக்கும் புள்ளிக்குத் தமிழ் சினிமா வந்துள்ளது. இந்த மாற்றம் சமூக அளவிலும் நிகழ்ந்துள்ளதா?

ஆர். அபிலாஷ்: ஆம். நிகழ்ந்துள்ளதால் இப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. காதலை ஒன்று மிகவும் உணர்ச்சிகரமாய் சித்தரித்து, அதற்காய் வெம்பி வெதும்பி நிலையற்று தவிக்கும் பாணியிலான படங்கள் எடுக்கப்படுகின்றன (கௌதம் மேனனின் படங்கள்). இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு பாணி உள்ளது. காதலில் நிகழும் போராட்டங்களையும் விளையாட்டாய் லேசாய் எடுத்துக் கொண்டு வாழ்க்கையை கொண்டாடுவது இப்போக்கு. இரண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது என் பார்வை.


 இன்று நான் கவனிக்கும் காதலர்கள் எப்படியானவர்கள்? ஒன்று, காதலுக்குள் ஒரு அருவிக்குள் குதிப்பது போல் பாய்ந்து விடுகிறார்கள். வெறித்தனமான உன்மத்தனமான காதல் இது. ஆனால் இது அவர்களின் நாள் முழுவதையும் ஆக்கிரமிப்பது இல்லை. சொந்த வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளை அழுத்தங்களை (18 வயதிலேயே கடும் அழுத்தங்கள் இவர்களுக்கு) சற்று நேரம் கடந்து செல்வதற்கான பாலமாய் காதலை காண்கிறார்கள் இவர்கள். ஆகையால் காதலிக்கும் பொழுதில் பரஸ்பரம் கேள்வி கேட்டும் சோதித்தும் நோகடிக்காமல் ஜாலியாக குதூகலமாய் இருக்க முயல்கிறார்கள். காதலன் அல்லது காதலி தம்முடன் இல்லாத வேளையில் சகஜ வாழ்வுக்கு மீள்கிறார்கள். சினிமாவில் காதல் ஜோடியின் நினைவிலே 24 மணிநேரமும் வாழ்ந்த முரளியின் காலம் முடிந்து விட்டது. உன்மத்தமான காதல் ஒரு பக்கம், அது இருந்தும் மீளாத தனிமை இன்னொரு பக்கம்இதுவே இன்றைய காதல் உலகம். இவர்களின் வாழ்வை சொல்லும் சினிமாவில் காதல் மிகை உணர்வுகளும் கொண்டாட்டமும் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை.

5. மற்றொரு புறம் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் நடித்தத் திரைப்படங்களில், காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்களைத் திட்டித் தீர்த்தார்கள். இப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் மூலம் பெண்களை உடைமைகளாகக் கருதும் ஆபத்தான சிந்தனை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா?

ஆர். அபிலாஷ்: பெண்களை உடைமையாய் கருதுவதல்ல இந்த இளைஞர்களின் பிரச்சனை. இன்றைய காலகட்டத்து பெண்கள் தாம் அப்படி உடைமையாக்கப்படுவதை சுலபத்தில் அனுமதிப்பதில்லை; அதே நேரம் அவர்கள் அதை முழுக்க மறுப்பதும் இல்லை. இது ஆண்களுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்த பெண்களை எப்படி சமாளிப்பது என புரியாத இளைஞர்களின் தவிப்பு இந்த பெண்களை ஏசும் சிவகார்த்திகேயன் பாணி படங்கள் மற்றும் பாடல்களில் வெளிப்படுகிறது.

 நாம் இன்றும் முழுமையாக நிலவுடைமை காலத்தை விட்டு வெளிவர இல்லை என்பதே சிக்கல். நாம் பாதி அங்கும் மீதி இன்றைய கார்ப்பரேட் நகரமயமாக்கல் முற்போக்கு சமூகத்திலும் வாழ்கிறோம். இது இன்றைய ஆண்-பெண் உறவுகளில் கணிசமான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆண்களைப் பற்றி புலம்ப பெண்களுக்கு வாய்ப்பிருந்தால் இதை விட மோசமாய் ஆண்களை வையும் பாடல்கள் தமிழில் தோன்றும் என நினைக்கிறேன். உண்மையில், நம் நிலைமை இன்று ரொம்ப அவலமாய் உள்ளது.
 பெண்களை உடைமையாய் கருதுவது நியாயமா? நிச்சயமாய் இல்லை தான். உண்மையான காதலில் ஆண்களும் பெண்களின் உடைமையாய் இருப்பார்கள். அங்கு ஏற்பும் மறுப்பும் இல்லை. அங்கு ஆக்கிரமிப்பும் உரிமை கொண்டாடலும் இல்லை. அங்கு பரஸ்பர அத்துமீறலும் அதன் திளைப்புமே உள்ளது. இதை நாம் கௌதம் மேனனின் படங்களிலும் தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை மணிரத்னத்தின் படங்களிலும் காண்கிறோம்.


Comments