கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (3): தனியர்களின் அவசியம்


தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது.” (ஜெயமோகன்)
இந்த கூற்றை நுணுக்கமாய் நோக்கினால் சில சுவாரஸ்யமான விசயங்கள் புலப்படுகின்றன. ஒன்று நட்பார்ந்த கூட்டு செயல்பாடுகள் முக்கியம் என ஜெயமோகன் சொல்வது இந்த காலத்துக்கு எவ்வளவு பொருத்தமாய் உள்ளது என்பது.

ஜெயமோகனின் இந்த வாக்கியத்தை படித்த போது எனக்கு உடனடியாய் நினைவு வந்தவை இரு காட்சிகள்: 1) சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகளில்” ஜெ.ஜெ இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதும் பல இடங்களுக்கு அலையும் போதும் அவன் எப்படி யாருடனும் கலந்திடாமல் தனியனாகவே இருக்கிறான் என்பது.
2) தமிழக இடதுசாரி அமைப்புகளில் உள்ள படைப்பாளிகள் மற்றும் அறிவுஜீவிகள். குறிப்பாய் பொன்னீலனும் லஷ்மி மணிவண்ணனும். தனிப்பட்ட முறையில் எனக்கு அண்ணாச்சி மீது மிகுந்த மரியாதை உண்டு; அதே மரியாதை லஷ்மி மணிவண்ணன் மீது இல்லை. ஆனால், அதே நேரம், இருவரில் நவீன இலக்கிய படைப்பாளி யார் என்றால் அது லஷ்மி மணிவண்ணன் தான். (அண்ணாச்சி எழுதியது மார்க்ஸிய அமைப்பின் இயக்க சிறப்பை, லட்சியவாதத்தின் எழுச்சியை பேசிய இடைநிலை இலக்கியம்.) நான் நாளை ஒரு இலக்கிய கூட்டத்துக்கு உரையற்ற பேச்சாளர் வேண்டுமெனில் அண்ணாச்சியை அழைப்பேன். அவருக்கு பேச்சாற்றலும் தேர்ந்த இலக்கிய வாசிப்பும் உண்டு. அவர் என்ன பேசுவார் என ஓரளவு நாம் ஊகித்து தயார் செய்து கொள்ள முடியும். ஆனால் லஷ்மி மணிவண்ணன் எதிர்பாராமைகளால் செய்யப்பட்ட ஒரு அணுகுண்டு. நான் அவர் பேச்சை ரசிப்பேன் என்றால் ஒரு கூட்டத்தை ஒருங்கிணைப்பவன் என்றால் அவரைக் கண்டு, அவர் ஏற்படுத்தக் கூடிய குழப்பங்களைக் கண்டு, அஞ்சுவேன்.
தமிழின் இரு முக்கிய இடதுசாரி இலக்கிய அமைப்புகள் எனில் அவை கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இரண்டிலும், நவீன கோட்பாடுகள் மற்றும் இலக்கியத்துக்கு அதிக வரவேற்பை அளித்தது கலை இலக்கிய பெருமன்றமே. அங்கே தனியர்களும் அதிகம். அங்கிருந்தே முக்கிய தீவிர படைப்பாளிகள் ஒப்பீட்டளவில் அதிகம் வந்திருக்கிறார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தளவு உள்மோதல்கள் அதிகம் இல்லை. ஏனெனில் அது ஒரு கராறான வலிமையான அமைப்பு. அடிபணிதலை, ஒருமையை, இயக்க ஒழுக்கத்தை கோரும் அமைப்பு. கலை இலக்கிய பெருமன்றம் அளவுக்கு அவர்கள் பிறழ்வுகளை அனுமதிப்பார்களா என்பது ஐயமே!
தனியர்கள் ஏன் முக்கியம் என்பதற்கு என்.டி ராஜ்குமார் ஒரு நல்ல உதாரணம். கலை இலக்கிய பெருமன்றத்தில் இருந்து வந்த கவிஞர்களில் அவரே முதன்மையானவர். அவர் மன்றத்துள் இருந்தபடி அதிகம் செயல்பட்ட அளவு அதனுடன் அதிகம் முரண்பட்டு மோதக் கூடியவராகவும் இருந்திருக்கிறார்.
ஒரு அமைப்பின், நிறுவனத்தின் பொதுமையான போக்குகளுடன், நம்பிக்கைகளுடன், ஒழுங்குடன், சமூகமாக்கல் செயல்பாடுகளுடன் ஒத்துப் போக முடியாதவர்களாகவே கணிசமான படைப்பாளிகள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அப்படி இருந்தால் தான் எழுத்தாளன் என நான் கோரவில்லை. ஆனால் தனியனாய் இருப்பதே படைப்பாளியின் இயல்பாக உள்ளது. நீங்கள் தமிழின் எந்த ஒரு சிறந்த படைப்பாளியையும் எடுத்துப் பாருங்கள். அவர்கள் தனித்து நின்று வாள் வீசுகிறவர்களாகவே இருக்கிறார்கள். படைப்பாளிகள் பேசும் போது அதிக சர்ச்சை தோன்றுவதும், அவர்கள் அதிகம் தனிமையில் உழல்வதும், அவர்கள் புறக்கணிப்பு உணர்வுடன் வாழ்வதும் இதனால் தான். இது அவர்களின் வாழ்வில் இருந்து பிரித்தெடுக்க இயலாத அம்சம்.
இதற்கு ஜெயமோகனே ஒரு நல்ல உதாரணம். அவர் ஆரம்பத்தில் தொழிற்சங்கத்தில் செயல்பட்டிருக்கிறார். ஆனால் இயக்கம் கோரும் எந்திர ஒழுங்குடன் உடன்பட முடியாமல் அதில் இருந்து விலகினார். அந்த கசப்பான கொந்தளிப்பான அனுபவம் கொண்டு அவர் எழுதியதே “பின் தொடரும் நிழலின் குரல்”. அதில் மைய பாத்திரம் அருணாச்சலம் ஒரு இடதுசாரி. அமைப்புடன் முரண்பட்டுப் பிரிந்த ஒரு ஆளுமையினால் (வீரபத்ர பிள்ளை) ஈர்க்கப்பட்டு அவர் அதைப் பற்றி படிக்கத் துவங்கி மெல்ல மெல்ல அமைப்புடன் தானும் முரண்படுகிறார். ஆனால் இந்த முரண்பாடும் அதனால் நிகழும் இயக்கத்துடனான விரிசலும் அவரது மனத்தை சிதைக்கின்றன. அவர் இந்த உளச்சிக்கலில் இருந்து எப்படி அன்பின் வழி மீள்கிறார் என்பதே நாவலின் சுருக்கம். அருணாச்சலம் வீரபத்ர பிள்ளை பற்றி நூலெழுத நினைக்கையில் இயக்கம் அதை எதிர்க்கிறது; அவரை இயக்கத்துக்கு எதிராய் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்துகிறது. ஆனால் இயக்கமா உண்மையா எனும் கேள்வி வரும் போது அவர் உண்மையின் பக்கம் சாய்கிறார். அதாவது “தனியன்” ஆகிறார்.
எனக்கு இப்போது எழும் கேள்வி ஏன் ஜெயமோகன் தான் நாவலில் சித்தரித்த ஒன்றிற்கு நேர் எதிராக இப்போது பேசுகிறார் என்பது; இயக்கமா புகாரினா எனும் போது அவர் புகாரினை இப்போதைக்கு ஓரமாய் தூக்கிப் போடுவோம் என்கிறாரா? “இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம்.” – இது தோழர்கள் அருணாச்சலத்திடம் சொல்வது போன்றே உள்ளது. (இலக்கிய சர்ச்சைகளும் பல்லாயிரம் பேர் ரஷ்யாவில் கொல்லப்பட்ட அரசியல் உண்மையைப் பற்றி துணிந்து பேசுவதும் ஒன்று அல்ல என்றாலும் கூட!)
ஒருவேளை ஜெயமோகனே இரண்டு மனிதர்களாக இருக்கலாம்: 1) எழுத்தாளனாய் தனியனாய் இருக்கும் ஜெயமோகன்; 2) தன் வாசக அமைப்புக்காய் இணக்கத்தை கோரும், தனியர்களை களைய கோரும் ஜெயமோகன்.
தனியர்கள் எனும் போது நாம் லஷ்மி மணிவண்ணன், விக்கிரமாதித்யன் என மட்டும் கருதக் கூடாது; சு.ராவும் அசோகமித்திரனும் கூட கூட தனியர்கள் தாம். அசோகமித்திரனை ஐந்து நிமிடம் பேசக் கேட்டால் அது நிச்சயம் சர்ச்சையில் போய் முடியும், அவர் மிக அமைதியாய் பவ்யமாய் பேசுவதாய் தொனித்தாலும். சு.ரா அடிப்படையில் மென் இடதுசாரி என்றாலும் வாழ்நாளெல்லாம் இடது அமைப்புகளுடன் ஓயாது போரிட்டபடி இருந்தார்; அதனால் அவர்களால் தொடர்ந்து பழிக்கப்பட்டார். அமைப்புகளில் சதா புன்னகைத்து கைகட்டி இருந்தபடி எழுதும் ஒரு முக்கிய படைப்பாளியை சொல்லுங்களேன். எனக்கு சத்தியமாய் தெரியவில்லை.
தமிழ் எழுத்தாளர்களில் மிக ஸ்நேகமான மனிதர்கள் (வண்ணதாசன், பாவண்ணன்) கூட அவர்கள் அளவில் தனியர்களே. மனுஷ்யபுத்திரன் திமுகவில் இருந்தாலும் தன் இலக்கிய செயல்பாடுகளை தனித்து வைத்திருக்கிறார். அரசியல் களத்தில் திமுகவினருடன் முரண்பட மாட்டார்; ஆனால் இலக்கிய களத்தில் முரண்பட்டபடியே தான் இருக்கிறார்.
ஒரு வாசகனின் இலக்கு என்பது நான் மேலே குறிப்பிட்ட ஆளுமைகளின் அளவிற்கு தம்மை உயர்த்துவதும், தன் சிந்தனை மற்றும் படைப்புத் திறன்களை மெருகேற்றுவதும். அதற்கு வாசகன் தனியனாய் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் தேனீக் கூட்டை உருவாக்கும் தேனியாய் இருக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு இலக்கியத்தில் என்ன இடம்? ஒன்றுமில்லை. நீங்கள் தனித்து வேட்டையாடும் புலி என்றால் உங்களுக்கு ஓரிடம் உண்டு. 
நீங்கள் வெறும் அடிமைத் தேனீக்களா எனும் கேள்வியை நான் இந்த வாசகர்களை நோக்கி எழுப்ப விரும்புகிறேன்!

Comments