விஷ்ணுபுரம் கூட்டங்கள்: கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (2)முன்பு இருந்தது சிறு சிறு தீவிர குழுக்களின் சந்திப்புகள். ஆனால் இன்று உள்ள தேவை அறிவுஜீவிகள் சந்தித்துக் கொள்ள 60களில் நடந்த கொல்கொத்தா காபி கிளப் பாணி அறிவுஜீவி கூட்டங்கள் அல்ல. இன்று தீவிர இலக்கிய அறிமுகங்கள் தேடும் மத்திய மேல் மத்திய வர்க்கத்தினர் பலர் உள்ளனர். அவர்களுக்கு எளிய இலக்கிய வகுப்புகள் தேவைப்படுகிறது. அதாவது நீங்கள் BA English honors / BA Tamil (சிறுபத்திரிகை) honors (அப்படி ஒன்று இல்லை எனினும்) படிப்பில் சேர்ந்து ஆரம்ப நிலை இலக்கிய அறிமுகம் பெற இவர்கள் விரும்புகிறார்கள். இதற்கு வாசக சாலை கூட்டங்கள் (சின்ன அளவிலும்) விஷ்ணுபுரம் கூட்டங்கள் (பெரிய விரிவான அளவிலும்) உதவுகின்றன. மேலும் இது ஒரு இலக்கிய சமூகமாக்கல் தளமாகவும், இளம் எழுத்தாளர்கள் சந்தித்து ஊக்கம் பெறும் இடமாகவும் மாறுகிறது. விஷ்ணுபுரம் அமைப்பை பொறுத்தமட்டில் எந்தவொரு கல்லூரி / பல்கலைக்கழகத்தை விடவும் சிறப்பானதொரு தமிழ் நவீன இலக்கிய அறிமுகத்தை அது வழங்குகிறது என நம்புகிறேன்.

ஆனால் ஒரு கல்வி அமைப்பின் அடிப்படை இயல்புகளையும், நிறைகுறைகளையும் அது பெற்று விடுகிறது. பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் நின்று ஒரு குறிப்பிட்ட விதமாய் அங்கு பேச வேண்டும். உங்கள் நண்பரின் படைப்பை நீங்கள் விவாதிக்கையில் அவர் பெயரை குறிப்பிடல் ஆகாது. போகன் சங்கரை நான் சங்கர் என அழைக்க விரும்புகிறேன் என வையுங்கள். “சங்கரின் கதைகளின் அடிப்படையான குணாதசியம்” என்று ஆரம்பிக்கக் கூடாது. “எழுத்தாளர் போகன் சங்கரின் கதைகளின் அடிப்படையான குணாதசியம்” என்றே பேச வேண்டும். இம்மாதிரியான வழமைகள், விதிமுறைகள், சடங்குகள், கால அட்டவணை, சிலபஸ் என பல விசயங்கள் ஒரு கல்வி அமைப்பு சீராய் நடைபெற அவசியம் தான். நான் மறுக்கவில்லை. ஆனால் ஏற்கனவே வாசிப்பு மற்றும் சிந்தனை பயிற்சி கொண்ட அறிவுஜீவிக்கு இது அவசியம் இல்லை. ஆனால் விஷ்ணுபுரம் வட்டத்தில் நிறைய இளம் மாணவ / மாணவிகள் இருக்கிறார்கள். ஆக, ஜெயமோகன் அவர்களை அவ்வாறே நடத்துகிறார்.
ஒரு நல்ல பேராசிரியரைப் போல அவர் அவர்களின் தோளில் கையிட்டு ஜாலியாக ஒரு நண்பரை போல் இடமளித்து அரட்டை அடிக்கிறார். ஆனால் கூட்டம் துவங்கியதும் ஒரு கண்டிப்பான ஆசிரியர் ஆகிறார். ஒரு ஆசிரியனாக நான் பெரிய வகுப்புகளில் மிகத்தீவிர விவாதங்கள் அசாத்தியம் எனக் கண்டுள்ளேன். ஆகையால் நான் ஆர்வமுள்ள மிகச்சில மாணவர்களுக்கு மட்டுமேயான சிறப்பு வகுப்புகளையும் நடத்துவேன். நாங்கள் ஒரு பிரதியை சேர்ந்து வாசித்து ஆழமாய் விவாதிப்போம். பொதுவாக வகுப்பில் பேசாதவர்கள் இங்கு மிகுந்த ஆர்வத்துடன் பேசுவதை கவனித்துள்ளேன். இவ்வகுப்புகள் மிகுந்த திருப்தியை அளிப்பவை. இவை எண்பது, தொண்ணூறுகளின் சிறுபத்திரிகை கூட்டங்களைப் – ஒழுங்கற்ற அடிதடி கூட்டங்களைப் – போன்றவை. பெரிய வகுப்புகள் இன்றைய ஒழுங்கான பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தப்படுகிற இலக்கிய கூட்டங்கள். (பி.ஆர்.ஓ, சிறப்பு பேச்சாளர், வரைவு, லோகோ, அட்டவணை, பயண திட்டங்கள், மதிய உணவு, தேநீர் ஆகியன உள்ளிட்ட, மது அருந்தவோ சிகரெட் புகைக்கவோ அரட்டை அடிக்கவோ குறுக்கிட்டு மறுத்துப் பேசவோ அனுமதியற்ற கூட்டங்கள்.)
இக்கூட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தொழில்நுட்ப, சமூகமாக்கல், மேலாண்மை திறன்கள் கொண்டவர்கள். பசையானவர்கள். ஆகையால் இந்த இலக்கிய அமைப்புகளை இவர்கள் இன்று ஒருங்கிணைக்கையில் நடத்துகையில் அவை கார்ப்பரேட்டுகளாய் மாறுகின்றன. (கார்ப்பரேட் என்றாலே கெட்டவர்கள் என நான் கூறவில்லை.) கார்ப்பரேட்டுகளின் அடிப்படை நோக்கம் விரிவாக்கமும் உற்பத்தியும் அதன்வழி லாபமும். தமிழில் இலக்கிய கார்ப்பரேட்மயமாதல் முதல் காரியத்தை செய்து விட்டது. புத்தக பிரசுரத்தை இந்த அமைப்புகள் தீவிரமாய் எடுத்து சென்று, நூல் விநியோகத்தை சிறப்பாய் செயல்படுத்துமானால் இலக்கிய விழுமிய உற்பத்தியும் அமோகமாய் நடக்கும். (நான் இதை நக்கலாய் சொல்லவில்லை).
சிறுபத்திரிகைகளின் காலத்தில் இருந்து நாம் இன்று எங்கு வந்து நிற்கிறோம் என எண்ணினால் வியப்பாக உள்ளது!
கார்ப்பரேட்டுகள் நம் காலத்தின் தவிர்க்க இயலாத அம்சம். நான் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதன் தீமைகளைக் களைந்து நன்மைகளை உச்சபட்சமாய் அடைய நாம் முயல வேண்டும்.
இந்த சமகால பிரம்மாண்ட கூட்டங்களின் சமூக கலாச்சார பயனை நான் மறுக்கவில்லை. இவை ஏன் இப்படி இருக்கின்றன என்பதையே அலச முயல்கிறேன். 

Comments