“90ளின் தமிழ் சினிமா” பேட்டி (2)Image result for pa ranjith madras

(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

3.   இவ்வளவு மக்கள் கவனம் பெற்று வந்தாலும், அதற்கு ஏற்ற பொறுப்புணர்வுடன் தமிழ் சினிமா உலகம் நடந்து கொள்கிறதா?

ஆர். அபிலாஷ்: சினிமா போன்ற வெகுஜன ஊடகமோ இலக்கியம் போன்ற தீவிர ஊடகமோ பொறுப்புணர்வு கொள்ள அவசியம் இல்லை என்பது என் கருத்து. படைப்பாளி சமூகத்தை வழிநடத்துகிறான், சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறான், ஆகையால் அவன் சமூக தீமைகளை எதிர்க்க வேண்டும், முறியடிக்க வேண்டும் என்பது ஆரம்ப கால மார்க்ஸியர்களின் நம்பிக்கை. 1922இல் லெனின் சோவியத் சினிமாவை எப்படி எடுக்க வேண்டும் என்பது பற்றி ஒரு அதிகாரபூர்வ குறிப்பை வெளியிட்டார். அதில் இயக்குநர்கள் தம் அரசின் கொள்கைகளை ஆதரிக்கும் விதமாய் மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்றும், அதை தன் கட்சி கண்காணிக்கும் என்றும் கூறுகிறார். ஏனெனில் மக்கள் சித்தாந்தத்தின் படி வாழ்கிறார்கள், சித்தாந்தத்தை மக்களிடம் பரப்பும் முக்கிய பணியை சினிமா எனும் ஊடகம் சிறப்பாய் செய்ய முடியும் என அவர் நம்பினார். நம்மூர் மார்க்ஸியர்கள் பண்பாட்டு நிலையில் இதை மென்மையாய் இன்றும் வலியுறுத்துகிறார்கள்.

மார்க்ஸியர்களே நம் மாநிலத்தில் இலக்கியத்துக்கும் கருத்தாக்கங்களுக்கும் உரம் போட்டவர்கள். ஆக, இன்றும் யாராவது ஒரு வாசகரோ சித்தாந்தவாதியோ எழுத்தாளனோ படைப்பு என்பது பிரச்சாரம் எனும் கருத்தை வலியுறுத்துவதை நாம் பார்க்கிறோம். எனக்கு இந்நிலைப்பாட்டுடன் உடன்பாடில்லை.
சமூகத்தில் பல்வேறு உணர்வு, பண்பாட்டு, கருத்து நிலைகள் ஊடாடுகின்றன. அவற்றுக்கு வெளிப்பாட்டு வடிவம் ஒன்றை ஒரு கலைஞன் அளிக்கிறான். சாதி பெருமிதத்துக்கு ஒரு படம் வெளிப்பாட்டை அளிக்கிறதென்றால் (தேவர் மகன்) சாதியத்தை மீறி சமூகம் செல்ல வேண்டிய பாதையையும் ஒரு படம் வலியுறுத்துகிறது (மெட்ராஸ், கபாலி). இரண்டு படங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தொண்ணூறுகளில் கமலும் பாரதிராஜாவும் ரெண்டாயிரத்தில் சசிகுமாரும் இங்கு வலுவுற்றிருந்த சாதிய குரல்களை விவாதித்ததனால் தான் ரஞ்சித் போன்ற ஒருவர் தோன்றி அதற்கு எதிர்குரலை, தலித் நுண்ணுணர்வை சினிமா மொழிக்கு கொடுக்க முடிந்தது. ரஞ்சித்தின் படங்களும் சமூகத்தை கால் இஞ்ச் கூட திருத்தி விடும் என நான் நம்பவில்லை. ஆனால் உரையாடலுக்கு அவை வழிவகுக்கிறது. மாறுபட்ட திரைமொழியை, ஒலி மற்றும் ஒளி பிம்பங்களை நம் அரசியல் பண்பாட்டு களத்திற்கு அவை அளிக்கின்றன.
மக்கள் இதையெல்லாம் கண்டு கைதட்டி விட்டு வாழ்க்கையை தொடர்வார்கள். மனிதன் சிந்தித்து அதை செயல்படுத்தி வாழ்வதில்லை. சூழலும் உள்ளுணர்வும் அன்றாட சவால்களுமே நடப்பு வாழ்வை தீர்மானிக்கின்றன. எண்ணங்களோ கருத்துக்களோ அல்ல.
சமூக நீதிக் கருத்துக்கள் கொண்ட, சரியான அரசியல் மொழி கொண்ட பத்து படங்கள் கொடுத்து ஒருவரால் இச்சமூகத்தை திருத்தி விட முடியுமென்றால் இவ்வுலகமே சொர்க்கமாய் இருக்குமே! துரதிஷ்டவசமாய், வாழ்க்கை அத்தனை எளிதில்லை.

இதற்கு மாறாகவே உண்மை இருக்க வேண்டும் என நாம் ஆசைப்படுகிறோம். வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது போல் சமூகத்தையும் சுத்தமாக்கலாம் என விழைகிறோம். ஆனால் அது உண்மையில் சாத்தியமில்லை. நமது கருத்துக்களும் மாற்றுக்கருத்துக்களும் பண்பாட்டு வெளிக்குள் மட்டுமே உழல்கின்றன. அதைக் கடந்து அது வாழ்க்கையை போய் தொடுவதில்லை.
உதாரணத்திற்கு, திராவிட இயக்கம் இங்கு தோன்றி உச்சம் பெற்ற காலத்தில் கலைஞர், எம்.ஜி.ஆர், எம்.ஆர் ராதா படங்களில் முற்போக்கு பகுத்தறிவு வாத படங்கள் நிறைய எடுக்கப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றன. பண்பாட்டுத் தளத்தில் ஒரு வலுவான உணர்ச்சிகரமான பகுத்தறிவு கதையாடல் ஒன்று இதனால் உருவானது. இந்த கதையாடல் பின்னர் அரசியல் தளத்திற்கு சென்று கோலோச்சியது. இது அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் முதல்வர்கள் ஆக உதவியது. ஆனால் தமிழகம் அன்று முதல் இன்று வரை கோயில்களின் நிலமாகவே உள்ளது. இங்குள்ள பக்தர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. திமுக அதிமுக தொண்டர்கள் இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமல்ல மரபான பல சடங்குகளை தீவிரமாய் பின்பற்றுபவர்களும் தாம். நீங்கள் இன்றும் சந்துக்கு ஒரு பிள்ளையார் கோயிலை காண்கிறீர்கள். பெரியாரால் ஏன் அத்தனை பிள்ளையார் கோயில்களையும் காணாமல் அடிக்க முடியவில்லை?
இதை அரசியல் சித்தாந்தம் மற்றும் இயக்கத்தின் தோல்வியாக நான் காணவில்லை. இது இப்படித் தான் இருக்க முடியும் என்கிறேன். உலகம் முழுக்க நிலை இதுவே தான்.
ஆனால் தமிழகம் பக்தர்களின் மாநிலமாய் இருந்தாலும் பாஜகவால் இங்கு காலூன்ற முடியவில்லை. ஏனெனில் மதவாதம் என்பது வாழ்க்கை நிலை அல்ல. அது ஒரு அரசியல் கதையாடல். இங்கு ஏற்கனவே பகுத்தறிவு கருத்தாடல் வலுவாக உள்ளது. அதை முறியடித்து இந்துத்துவ கருத்தாடலால் இங்கு முன்வர இயலாது. ஒரு வனத்துக்கு ஒரு சிங்கம் தான். கோயில்களில் திரளும் மக்களைக் கொண்டு பாஜக இங்கு எந்த தன்னம்பிக்கையும் பெற முடியாது. ஏனெனில் நடப்பு வாழ்க்கை வேறு சித்தாந்த கதையாடல்கள் வேறு.


Comments