முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் (1)


Image result for divorce
சமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா? ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.”

“அவர் என்ன சொன்னார்?”
“அவர் என்ன சொல்வதற்கு? எல்லா கணவர்களையும் போல முரண்டு பிடித்தார். என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். மிரட்டினார். அடிக்க வந்தார். அடுத்த நாள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தார். மறுநாள் வந்து என்னிடம் அழுதார். ஆனால் அவரை விட்டு விலகுவது என நான் அப்போது உறுதியாக தீர்மானித்திருந்தேன். இப்போ பிரிஞ்சு தனியா வந்திருக்கேன். டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்கேன்.”
“அவருக்கு உங்களுடன் இருக்க விருப்பம் இருந்ததா?”
“ஆண்கள் என்றுமே மனைவியின் நலன், தேவை, பிரச்சனை பற்றி கவலைப்பட்டதில்லை. அவர்களுக்கு நான் ஒரு உடைமை. ஓட்டையோ உடைசலோ இருக்கட்டுமே என்பது அவரது அணுகுமுறை. நீ பார்த்திருப்பாயே, ரெண்டு பெண்டாட்டி வைத்திருக்கிற ஆண்கள் இரண்டு பெண்களையும் தக்க வைக்கவே ஆசைப்படுவார்கள் – ஒருவரிடம் திருப்தி இல்லை என்றாலும் கூட. அது ஒரு டிப்பிக்கல் ஆண் நிலைப்பாடு.”
நான் மீளவும் கேட்டேன்,
“அவருக்கு உங்கள் மீது விருப்பமில்லையா?”
அவர் எரிச்சலானார், “ஏன் திரும்பத் திரும்ப கேட்குறே? அவருக்கு விருப்பமிருந்தா தான் என்ன? நான் சந்தோஷமா இல்ல. என் சந்தோஷம் முக்கியம் இல்லையா? ஏன் அவரோட வசதிக்காத இந்த உறவை நான் சகிச்சுக்கணும்?”
திருமண உறவில் தனிநபர் திருப்தி முக்கியம் என்கிற தரப்பே என்னுடையதும். ஆனால் அப்படி ஒருவருக்கு அதிருப்தி என்றால் அந்த உறவை காப்பாற்ற சிறிய முயற்சிகளையாவது அவர் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இன்று நாம் அத்தகைய சகிப்புத் தன்மையை இழந்து வருகிறோம் என்பது ஒரு பக்கம் என்றால், எதற்கு மணவாழ்வை முறிக்க வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு தெள்வில்லை என்பது இன்னொரு பக்கம். நான் அத்தோழியிடம் கேட்டேன்,
“நீங்கள் சந்தோஷமாக இல்லைன்னு சொல்றீங்களா? இல்லை திருமண உறவில் நீங்கள் சந்தோஷமா இல்லைங்கிறீங்களா?”
“என்ன ஸ்டுப்பிட் கேள்வி. ரெண்டும் ஒண்ணு தானே?”
“ரெண்டும் ஒண்ணு இல்லீங்க. நீங்க தனிப்பட்ட முறையில் சந்தோஷமா இருக்கிறது வேறே, திருமணத்தில் சந்தோஷமா இருக்கிறது வேறே. ஒன்று இன்னொன்றுக்கு உதவலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.”
“என்ன தான் சொல்றே?”
“நீங்க திருமண வாழ்வில் சந்தோஷமா இல்லைன்னா அதை சரி செய்றதுக்கு முயற்சிக்கலாம். ஆனால் நீங்க உங்க வாழ்க்கையில் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்றால் அது வேறு பிரச்சனை. அதை மண முறிவு மூலம் சரி செய்ய முடியாது.”
“அவரோட நான் மகிழ்ச்சியால் இல்லைங்கிறதுனால தானே என் வாழ்க்கை நரகமாச்சு?”
“சரி இது உண்மைன்னா, அவரை விட்டு பிரிஞ்ச பிறகு ரொம்ப குதூகலமா இருக்கீங்களா?”
“இல்லை இப்பவும் அந்த பாதிப்பு என்னை விட்டுப் போகல”
“அந்த மனச்சோர்வை முழுக்க போயிடுச்சா?”
“இல்லை”
“இல்லைன்னா உங்க சோர்வோட காரணம் அவர் இல்லை தானே? இல்லை என்றால் அவரை பிரிந்த மறுகணம் உங்க வாழ்வே சொர்க்கமாக ஆகணுமே?”
அவர் கோபத்தில் போனை துண்டித்து விட்டார்.

Comments