பிக்பாஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? (1)


 Image result for ramya bigg boss
பிக்பாஸை நான் இந்த இரண்டாம் பருவத்தில் கூடுதல் ஆர்வமாய் பார்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு: நான் இதுவரை எதிர்கொண்டுள்ள பல கார்ப்பரேட் அனுபவங்களுக்கு அது நெருக்கமாக உள்ளது.
 இன்று நம் வாழ்வே கார்ப்பரேட் மயமாகி விட்ட நிலையில், ஒரு நெருக்கடியான சூழலில் நம்மை எப்படியெல்லாம் படுத்துவார்கள், எப்படியெல்லாம் கண்காணிப்பார்கள், நாம் எந்தமாதிரி அபத்தங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை இந்த ஷோ சித்தரிக்கிறது. இது விளையாட்டு தான்; ஆனால் நம் கார்ப்பரேட் போட்டி உலகை அணுக்கமாய் பிரதிபலிக்கும் விளையாட்டு. வரும் பதிவுகளில் இதைப் பற்றி கூடுதலாய் எழுதுகிறேன். முதலில் இவ்வாரம் என்னை அதிர்ச்சியூட்டிய ஒரு விசயம்: ரம்யாவின் வெளியேற்றம்!

பிக்பாஸில் நான் முதலில் நம்பிய ஒன்று ஒரு வன்மமான, மோதல்கள் நிறைந்த சூழலில் ஒருவர் அதிக பாதிப்பில்லாமல் தாக்குப்பிடித்தால் வெளியேறாமல் இறுதி வாரம் வரை நகர முடியும் என்பது. பரஸ்பரம் ஒத்துப் போகாதவர்கள் அதிகம் குற்றம் சாட்டப்படுகிறார்கள்; அவர்களை அதிகம் மற்றவர் பழிக்கிறார்கள். பிக்பாஸ் அவர்களை குறுக்குவிசாரணை செய்கிறார். பொன்னம்பலம் போன்றவர்கள் ஐஷ்வர்யாவை ஒழுக்க விமர்சனம் செய்ததற்கு (வரம்பு மீற்யதற்காக) சிறையில் அடைக்கப்படுகிறார். கெட்டவார்த்தை பேசுவதற்காக பாலாஜி கண்டிக்கப்படுகிறார். அதிகம் புறம் பேசுவதாய் விமர்சிக்கப்படும் வைஷ்ணவின் அதற்காகவே பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகம் வெறுக்கப்படுபவராய் இருக்கிறார். நான் நினைத்தேன்: வைஷ்ணவி நிச்சயம் ரெண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார். ஆனால் நடந்ததோ வேறு: வெளியேறும் நிலையில் அவர் தக்க வைக்கப்பட்டார். இப்போதோ வீட்டுக்குள் மிக அதிகமாய் வெறுக்கப்படுபவராய் இருந்தும், மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இன்றியும், வைஷ்ணவி வெளியேறும் ஆபத்தில் இல்லை; பாலாஜியும் பொன்னம்பலமும் தொடர்ந்து பல வாரங்களாய் காப்பாற்றப்படுகிறார்கள்; ஆனால் அனைவராலும் மிக அதிகமாய் நேசிக்கப்படும், யாராலும் எந்த புகாரும் தெரிவிக்கப்படாத ரம்யாவோ இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார். இது என்ன நகைமுரண்! அபத்தம்!
 இதைப் பார்த்த போது தான் எனக்கு ஒரு விசயம் விளங்கியது: பிக்பாஸ் வீட்டுக்குள் நிலைக்க தேவைப்படுவது அனைவரோடும் சுமூகமாய் செல்லும் சுபாவம் அல்ல.
ரம்யாவுடன் இறுதியாய் உரையாடும் போதும் கமல் ஒன்று சொல்கிறார்: உங்களது பட்டும்படாத குணம் வாழ்க்கையில் உங்களை சிறக்க உதவும்; ஆனால் இந்த போட்டியில் அது எடுபடாது. இதை எளிமையாக இப்படி புரிந்து கொள்ளலாம் – ரம்யாவின் தவறு அவர் யாருடனும் முரண்பட்டு வம்புக்கிழுத்து குடுமிப்பிடி சண்டை போடாதது. வம்படிக்கு போகும் ஆட்கள் இந்த ஷோவை சுவாரஸ்யமாக்குகிறார்கள். ஒருவித பரபரப்பு, நாடகீயம், உணர்ச்சி வேகம் மோதல்களினால் மட்டுமே வருகிறது. இதுவரை இப்படி ரத்தம் கொட்டி, கண்ணீர் சிந்தி, வசைமாரி பொழிந்து, யாருக்கும் கேட்காதபடி உச்சஸ்தாயில் கத்தி இந்த ஷோவை குழாயடி ஜாலி பொழுதுபோக்காக மாற்றியவர்கள் பொன்னம்பலம், பாலாஜி, நித்யா, மஹத், செண்டிராயன், மும்தாஜ் ஆகியோர்.
 இவர்களில் நித்யா மட்டுமே ஒரே சண்டையை திரும்ப திரும்ப போட்டவர். அவர் அலுப்பூட்டவே வெளியேற்றப்பட்டார். யாஷிகா, ஐஷ்வர்யா போன்றோர் தம் குழுக்குள்ளே கும்மியடித்தாலும் அவர்களால் எதிர்குழுவினருக்கு எரிச்சல் ஏற்பட்டது; அவர்களின் உற்சாகம், அத்துமீறல், ஆட்டம் பாட்டம் போன்றவை ஒரு பக்கம் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது; அவர்களை வைத்து பொன்னம்பலம் அடிக்கும் கூத்தும், வைக்கும் ஒழுக்கமீறல் ஒப்பாரிகளும் ஷோவின் ரேட்டிங் ஏற நிச்சயம் உதவியிருக்கும்.
இவர்களில் ரம்யாவுக்கு அடுத்தபடியாய் அஹிம்சைவாதிகள் என்றால் ரித்விகா, ஜனனி ஆகியோர். ஜனனி ஒரு திரை பிரபலம் என்பதால் சில வாரங்கள் தப்பித்து விடுவார். (மும்தாஜையும் அவரது திரை புகழும் பிம்பமுமே காப்பாற்றுகிறது.) அனைவரையும் சமாளித்துப் போகும் சாமர்த்தியசாலி டானியல் இந்த ஷோவின் தேவையை உணர்ந்து அடிக்கடி வம்புகளிலும் ஈடுபடுகிறார். அவரும் இறுதி இரு வாரங்கள் வரை இருப்பார் என நினைக்கிறேன்.

Comments