ஸ்டெர்லைட் படுகொலைகள்: ஒரு புலி, ஹிட்லர் மற்றும் ராஜபக்‌ஷே


Image result for ஸ்டெர்லைட் படுகொலை

தூத்துக்குடி படுகொலைகளின் அதிர்ச்சி விலகாத நிலையில் ஒரு நண்பரிடம் தொடர்ச்சியற்று பல விசயங்களைப் பற்றி பேசி புலம்பியபடி இருந்தேன். நண்பர் என்னிடம் சட்டெனக் கேட்டார், “மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளின் போது போராளிகளை இந்த அதிமுக அரசு நடத்தியதற்கும் இதற்குமான தொடர்பை கவனித்தாயா?”. கவனித்தேன், நியூஸ் 18 டிவி விவாதத்தின் போது ஆரூர் ஷாநவாஸும் அதைக் குறிப்பிட்டார்.

 நான் சொன்னேன், “இரண்டு சம்பவங்களிலும் என்னை ஆச்சரியப்படுத்தியது, ஒருவிதத்தில் வேதனையடைய செய்தது, இதை தவிர்த்திருக்கலாமே எனும் எண்ணம். அரசுக்கு இதனால் நேரடியாய் பயன் இல்லையே, இருந்தும் ஏன் செய்கிறது எனும் ஐயம். இரண்டிலும் பாதுகாப்பற்ற பதற்ற மனநிலையில் உள்ள ஒரு குற்றவாளியின் மூர்க்கம், கண்மூடித்தனமான வெறி, இரக்கமற்ற திட்டமிடலைக் கண்டேன். இதற்கு முன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என வேறு முதல்வர்களின் காலத்திலும் படுகொலைகள் நடந்தன. துப்பாக்கிச் சூடுகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன அல்லது எதேச்சையாய் நடந்ததாய் நம்பப்பட்டன. ஆனால் அவை மோதும் கும்பல்கள் அல்லது தரப்பினரில் ஒருவரை பாதுகாக்க, ஆதரிக்க, வெற்றி பெற வைக்க நடந்தன. அவற்றினால் ஏதோ ஒரு அரசியல் அனுகூலம் இருந்தது. அல்லது போராட்டத்தின் போதான எழுச்சியை கட்டுப்படுத்த அரசுக்கு அக்கொலைகள் அவசியப்பட்டன. இப்படுகொலைகளுக்குப் பிறகு ஆட்சியாளர்கள் மக்களிடம் திரும்ப சென்று வாக்கு கேட்டு போட்டியிட்டு வென்றார்கள். மக்களை ஒட்டுமொத்தமாய் விரோதிகளாய் எண்ணி ஆட்சியாளர்கள் ஒளிந்து பின்னகரவில்லை. ஆனால் தூத்துக்குடி படுகொலைகளால் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் முதலாளிகளுக்கு தற்காலிகமாய் பலன் இருக்கலாம், சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பின் நீதிமன்ற ஆணையை சாக்காக வைத்து ஆலையை அவர்கள் திறக்கும் பட்சத்தில். ஆனால் அரசுக்கு இதனால் என்ன நேரடி பயன்?”
இதைப் பற்றி மேலும் யோசிக்கையில் எனக்கு மூன்று சித்திரங்கள் மனதில் எழுந்தன. 1) காயம்பட்ட ஒரு புலி. 2) ஹிட்லர். 3) ராஜபக்ஷே.
காயம்பட்ட புலி மட்டுமே மனிதர்களை வேட்டையாடும். ஏனெனில் அப்புலியால் மிருகங்களை வழக்கம் போல் வேட்டையாட முடியாது. மனிதரே எளிய இலக்கு. மற்றபடி புலி மனிதர்களை தவிர்க்கும் சற்றே கூச்சமான விலங்கு என்கிறார்கள். அரசியல்வாதிகளும் வேட்டையாடும் மிருகத்தை ஒத்தவர்களே. அவர்களும் தம் வாக்காளர்களை தாக்க மாட்டார்கள். ஆனால் காயம்பட்டு தனிமைப்படும் போது, தமது எதிர்காலம் பற்றின பதற்றம் அதிகமாகும் போது, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை ஏற்படும் போது அவர்கள் ஆபத்தானவர்களாய் மாறுவார்கள். தேவையற்ற மானுட இழப்புகளை, சமூக அழிவுகளை ஏற்படுத்துவார்கள். இறுதியில் அவர்களும் அழிந்து போவார்கள்.
ஹிட்லர் நினைவுக்கு வர காரணம் அவர் தன் ஆட்சியில் எடுத்த உடனே படுபயங்கரமான இனப்படுகொலைகளை நடத்தவில்லை. படிப்படியாக, பல்வேறு பரிசீலனைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் பிறகு தான், முழுமூச்சான யூத இன அழித்தொழிப்பை அவர் ஜெர்மனி முழுக்க நிகழ்த்தினார். அது மட்டுமல்ல, ஹிட்லரது அரசியல் கொள்கையின் மையமாய் யூத வெறுப்பு இருந்தாலும், இன அழிப்பு நடவடிக்கைகளை செலுத்தியது அந்த வெறுப்பு அல்ல.
 1933இல் நாஜிக்கள் அதிகாரத்துக்கு வருகிறார்கள். ஹிட்லர் முதல் வேலையாக பொருளாதாரத்தை வலுப்படுத்தினார்; ராணுவத்தை திடமாக்கினார்; தன் அரசியல் எதிரிகளை அழித்தார். இந்த வேளையில் அவரது கட்சியினரும் ராணுவத்தினரும் ஹிட்லர் ஏன் இன்னும் யூதர்களை தாக்கவில்லை என அதிருப்தி உற்றனர். ஹிட்லர் ஒருவிதத்தில் இவர்களை விட கொடூரமானவர். அவர் தனது உணர்வுகளால் உந்தப்பட்டு முடிவுகளை எடுத்த மனிதர் அல்ல. நடைமுறை சார்ந்த பல சாத்தியங்களை பரிசீலித்தே அவர் ஒவ்வொரு நகர்வாய் செய்தார். இந்த உணர்வற்ற எந்திரத்தன்மையே அவரை வரலாறு காணாத அரக்கனாக்கிற்று, இனவெறுப்பு மட்டுமல்ல.
 1935இல் சமூகம், அரசு வேலை எங்கும் யூதர்களை தனிமைப்படுத்தும் சட்டத்தை ஹிட்லர் நிறைவேற்றுகிறார். 1937 வரை சர்வதேச வணிகம் மற்றும் உலக நாடுகளின் ஆதரவு பாதிக்கப்படக் கூடாது என அவர் யூதர்கள் மீது கைவைக்காமல் இருந்தார். ஆனால் இரண்டாம் உலகப்போர் வெடிக்க நிலைமை தலைகீழானது. ஹிட்லருக்கு உலகை வென்றடக்கும் வெறி யூத அழிப்பு வெறியை விட அதிகமாய் இருந்தது. உலகை ஆக்கிரமிக்க ராணுவத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதற்கு அதிக பணம் வேண்டும். யூதர்களின் சொத்துக்களையும் பணத்தையும் கைப்பற்றும் திட்டத்தை அவர் இப்போது நிறைவேற்றுகிறார். இதை அடுத்து 1938இல் 30,000 யூதர்களை வதைமுகாமுக்கு அனுப்பினார். 1939இல் ஜெர்மனி போலாந்தை கைப்பற்றியது. ஒன்றரை மில்லியன் போலிஷ் யூதர்கள் போர்க்கைதிகள் ஆயினர். இவர்களை எங்கே அனுப்புவது எனும் கேள்வி ஹிட்லரைக் குடைந்தது.
 ஒன்று, யூத வெறுப்பை மூலதனமாக்கித் தான் அவர் ராணுவ செலவுகளையும் தன் படையெடுப்புகளையும் நியாயப்படுத்தினார். ஆகையால் யூதர்களை போலந்தில் இருக்க அனுமதித்து குடிமக்களாய் நடத்த முடியாது. சிறையில் அடைக்க வசதி இல்லை. கூட்டாய் கொல்வதற்கான விஷவாயு முகாம்களை இன்னும் ஹிட்லர் உருவாக்கவில்லை. ஆகையால் அவர்களை சொந்த நாட்டில் வதைமுகாம்கள் அமைத்து அடைத்து வைக்க முடிவெடுத்தார். அங்கு அவர்கள் பட்டினி கிடந்து சாகட்டும் என நினைத்தார்.
 1940இல் ரஷ்ய படையெடுப்பை ஹிட்லர் திட்டமிட்டதும் அங்குள்ள சைபீரிய நிலங்களில் இந்த யூதர்களை அனுப்பி தொலைக்கலாம் என அந்த படையெடுப்புக்கு உணர்ச்சிபூர்வமான காரணம் ஒன்றை அவர் வகுத்தார். ஆனால் ரஷ்ய படையெடுப்பு வெற்றி பெறவில்லை. இது யூதர்களுக்கு மறைமுக சாபமாய் அமைந்தது. 1941இல் விஷவாயு கொண்ட வேன்களை நாஜிக்கள் உருவாக்கினர். யூதர்களை நாடுகடத்தும் திட்டத்தை கைவிட்டு அவர்களை அழிப்பதே நல்ல தீர்வு எனும் முடிவுக்கு அவர்கள் நகர்ந்திருந்தனர். அமெரிக்கா அதுவரை உலகப்போரில் நுழையவில்லை. ஒருவேளை நுழைந்தால் பணயக்கைதிகளாய் உள்ள லட்சக்கணக்கான யூதர்களைக் காட்டி மிரட்டி அமெரிக்காவை பணிய வைக்கலாம் என ஹிட்லர் நம்பினார். அதற்காக, யூதர்களை உயிருடன் வைத்திருப்பது அவசியம் என்றார். ஆனால் இந்த மிரட்டலை பொருட்படுத்தாது அமெரிக்க ராணுவம் களம் இறங்க, ஹிட்லர் முழுமூச்சான யூத அழித்தொழிப்பில் இறங்கினார்.
எட்டு வருடங்களில் மெல்ல மெல்ல படிப்படியாய் யூதர்களை போர் செலவுக்காக, போருக்கான நியாயமாக, போரின் போது பணயக்கைதிகளாய், கச்சாப்பொருட்களாய் ஹிட்லர் பலவாறு பயன்படுத்தி அவர்கள் மனிதர்களே அல்ல எனும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினார். உலகப்போரில் தன் அழிவு நெருங்குவதை அவர் உணர்ந்து கொண்ட வேளையில் (காயமுற்ற புலி) ஒரு முழு அரக்கனாய் மாறி கண்மூடித்தனமான இன அழிப்புக்கு கட்டளையிடுகிறார்.
இதிலிருந்த இரு விசயங்களை நாம் தொகுக்கலாம்:
1)   கொடூரங்கள், நம்ப முடியாத அரச பயங்கரவாதம் உடனடியாய் அல்ல படிப்படியாய் தான் நிகழும். வரலாறு இதை நிரூபிக்கிறது.
2)   கொலை எந்திரமாய் மாறும் ஒரு அரசு உணர்ச்சிகரமான தேவைக்காக, தவிர்க்க முடியாத நிலையில் படுகொலைகளை செய்வதில்லை. மாறாக, அசட்டுத்தனமான, தவிர்க்கக் கூடிய நடப்பு தேவைகளுக்காய் அது மனித உயிர்களை கொத்து கொத்தாய் பறிக்கும். ஹிட்லரின் உண்மையான நோக்கம் உலகை கைப்பற்றுவதுஅதற்கு அவர் இத்தனை யூத உயிர்களை பறித்திருக்க வேண்டியதில்லை. ஆனால் அவர் அதை செய்தார். இந்த அபத்தத்தை எல்லா கொலை எந்திர அரசுகளிடமும் நாம் காண்கிறோம்.
இலங்கை அரசு தமிழர்களை கொன்றொழித்ததும் இது போல் வரலாற்றில் படிப்படியாய், கால் நூற்றாண்டாய் நடந்தேறியது. 2009இல் ஈழப்போரின் போது மக்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டது இந்த நீடித்த அழிவுகள் மற்றும் ஒடுக்குமுறையின் உச்சம் மட்டுமே. அந்த அநீதியை ராஜபக்ஷே செய்ததனால் சிங்கள மக்கள் எந்த நேரடி பலனையும் அடையவில்லை. ஒரு போர் ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும். நிலபுலன்களின் அழிவுக்கு வழிவகுக்கும்; மக்களின் அன்றாட வாழ்வை சீரழிக்கும். ஆளும் தலைமைகள் நிச்சயம் அரசியல் லாபம் பார்த்தன. ஆனால் சுலபத்தில் தவிர்த்திருக்கக் கூடிய ஒரு கொடூரமான, மனிதநேயமற்ற அழித்தொழிப்பை நடத்திக் காட்ட ராஜபக்ஷே அரசு துணிந்ததன் தர்க்க ரீதியான காரணம் என்ன? அதைக் கொண்டு அவர் இலங்கையின் நிரந்த ஆட்சியாளர் ஆகவில்லையே. 2007இல் இலங்கை சர்வதேச சந்தையில் இருந்து போர் செலவுக்காக சுமார் இரண்டு லட்சம் டாலர்களை கடன் வாங்கியது. இலங்கையின் போர் செலவு அக்காலத்தில் 200 பில்லியனை தாண்டியது என்கிறார்கள். இப்போரினால், கால் நூற்றாண்டாய் தமிழர்களை கொன்றித்ததனால் சிங்களவர்கள் அடைந்ததை விட இழந்ததே அதிகம் (தமிழர்களின் இழப்பு அதை விட பலமடங்கானது). ஈழப்போரின் தர்க்கத்தை துல்லியமாய் யாராலும் விளக்க முடியாது. தனது சர்வதேச, உள்ளூர் அரசியல் லாபங்களுக்காக ஈழ மக்களை சோளப்பொரி போல் நடத்துகிற மனநிலையை தான் நாம் ராஜபக்ஷேவிடம் கண்டோம். அதற்கு முன் அதை ஹிட்லரிடம் கண்டோம். இன்று நாம் அதை எடப்பாடி பழனிசாமியிடம் காண்கிறோம்.
இனி தமிழகத்துக்கு வருவோம். தமிழகம் முழுக்க உருத்திரண்டு ஒரு சுனாமி போல் எழுச்சி பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அணுவணுவாய் திட்டமிட்டு நடக்க அனுமதித்தது அன்று தன் நாற்காலி கழிவும் அவலத்தில் இருந்த .பன்னீர் செல்வமே எனும் சந்தேகம் எனக்கு உள்ளது. .பி.எஸ்ஸின் பிம்பம் படுமட்டத்தில் இருந்து மேம்பட்ட நிலைக்கு உயர அப்போராட்டம் நிச்சயம் உதவியது. அதற்காய் வரலாறு காணாத வகையில், தமிழகம் முழுக்க பொது இடங்கள் மக்கள் போராட்டத்துக்காக திறந்து விடப்பட்டன. அனுமதி பெறாத போராட்ட களங்களில் மக்கள் திரண்டு மைய அரசுக்கு எதிராய் கோஷமிடுவதை காவல்துறை விசித்திரமாய் வேடிக்கை பார்த்தது. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் என .பி.எஸ் அறிவித்த பின்னும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இது முதல்வரை எரிச்சல்படுத்தி இருக்கலாம். இது போன்ற சமயங்களில் ஆளும் தலைவர்கள் என்ன செய்வார்கள்? காவல்துறையை ஏவி கூட்டத்தை கட்டுப்படுத்துவார்கள்; போக்குவரத்தை தடை செய்வார்கள். சாதகமான சூழல் இன்றி மெல்ல மெல்ல போராட்ட வேகம் குறைந்து மக்கள் திரளும் எண்ணிக்கை குறையும். சில நாட்களில் அப்போராட்டம் ஆற்றல் இழந்திருக்கும். மக்கள் போராட்டங்களை தமக்கு ஏற்றபடி பயன்படுத்தும் தலைவர்கள் கூட மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்தே அதை செய்வார்கள். ஆனால் .பி.எஸ் போராடும் மக்க்ள் மீது மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுக்க செய்தார். லேசாய் தடியடி நடத்தினாலே சிதறிச் செல்லும் மக்களை சுற்றி வளைத்து அடித்து எலும்பை நொறுக்க செய்தார். இதனால் அவருக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை. எந்த உணர்வு அவரை இப்படி ஒரு வன்மமான முடிவை எடுக்கத் தூண்டி இருக்கக் கூடும்? தனது நிலை அப்போதும் பலவீனமானது, தன் அரசியல் எதிர்காலம் எப்போது வேண்டுமெனிலும் ஆவியாகலாம் எனும் உள்ளார்ந்த அச்சமா? போராட்டம் நீண்டால் தனக்கு எதிராய் அரசியல் சூழல் திரும்பிடுமோ எனும் பதற்றமா? மைய அரசை மேலும் பகைக்கக் கூடாது என நடுக்கமா?
காரணம் எதுவாக இருந்தாலும், மக்கள் ஆதரவு பெற்ற, மக்களை பொருட்படுத்த அவசியம் உள்ள ஒரு தலைவன் செய்கிற செயல் அல்ல அது. மாறாக, தன் தேவைக்காக மக்களை எந்தளவுக்கும் பயன்படுத்தலாம் என எண்ணுகிற ஒரு காயம்பட்ட வேட்டை மிருகமே அப்படி சிந்திக்கும்.
ஸ்டெர்லைட் போராட்டத்தையும் தற்காலிகமாய் நிறுத்தி, ஆலையை இயங்க செய்ய இத்தனை மக்களை எடப்பாடி அரசு ஏன் ஸ்னைப்பர் துப்பாக்கி மூலம் கொன்றழிக்க வேண்டும்? தமிழகத்தில் முதல்முறையாய் ஒரு ராணுவ சூழலை அவர் ஏன் ஏற்படுத்த வேண்டும்? சொந்த மக்களை குறி வைத்து கொன்று தான் அவர் இந்த அற்ப வெற்றியை பெறத் தான் வேண்டுமா? இல்லை. இதை சுமூகமாய் வேறுவகையில் கையாண்டிருக்க முடியும். ஆனால் எடப்பாடி அரசு ஏன் அப்படி முடிவெடுத்தது?
மக்கள் முக்கியமே அல்ல, நாம் வெப்பம் காய அவர்களை குப்பை போல எரிக்கலாம் எனும் மனநிலையே இதன் முதல் பொறி. ஹிட்லரில் இருந்து ராஜபக்ஷே வரை இப்படித் தான் தயக்கமின்றி எந்திரத்தனமாய் யோசித்தார்கள். அவர்களுக்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்குமான ஒரே வித்தியாசம் அவர்கள் தம் மக்களிடையே வேற்று இனத்தவரை மற்றமையாய் கட்டமைத்தார்கள், அழித்தார்கள்; ஆளும் அதிமுக தலைமையோ தம் சொந்த மக்களையே மற்றமையாய் காண்கிறது.
 ஜல்லிக்கட்டு போராட்டத்தை அதிமுக அரசு ரிமோட் கண்டுரோல் மூலம் நிர்வகித்த போதிலிருந்தே இந்த ஆபத்தான அரசியல் முளை விட்டிருக்க வேண்டும். இதன் அடுத்த கட்டம் தான் இப்படி குறி வைத்து மக்களை மாரிலும் வாயிலும் சுட்டு கொன்ற ஸ்டெர்லைட் துன்பியல் அத்தியாயம்.
இந்த அரசு தனக்கு மீதமுள்ள ஆண்டுகளில் அடுத்து என்னென்ன செய்யக் கூடும் என எண்ணினால் எனக்கு பதறுகிறது. தனக்கு அவசியப்படாத போதே இருபதுக்கும் மேற்பட்டோரை தூத்துக்குடியில் திட்டமிட்டு படுகொலை செய்த இந்த அரசு இன்னும் எத்தனை எத்தனை நூறு உயிர்களை பறிக்கும்? இந்த அரசு ஊடகங்களை முடக்கி தன் குற்றங்கள் குறித்த செய்திகள் பரவாமல் தடுக்க இன்னும் எந்த எல்லை வரை செல்லும்? அடுத்து வரும் அரசுகள் அப்பாவிகளின் தோண்டத் தோண்ட தீராத எலும்புக் கூண்டுகளை அள்ளி எடுக்கும் நிலை ஏற்படுமா? எனக்கு இதை எழுதுகையில் உண்மையிலே விரல்கள் நடுங்குகின்றன.
ஜனநாயகம் மட்டுமல்ல அத்தனை மானுட விழுமியங்களும் செத்து விட்ட இருண்ட காலம் இது. தமிழக மக்கள் எல்லோரும் கூட்டாய் இடம்பெயர்ந்து அயல்மாநிலங்களுக்கு தப்பித்து செல்ல ஏதாவது சாத்தியமுண்டா? கடவுளே இன்னும் என்னென்ன காணப் போகிறோம் நாங்கள்?

நன்றி: உயிர்மை ஜூன் 2018

Comments