ஜெயமோகனின் தீரா ஆற்றல்


Image result for ஜெயமோகன்

சில மாதங்களுக்கு முன் பாவண்ணனுடன் உரையாடுகையில் ஜெயமோகனின் வற்றாத ஆற்றலைப் பற்றி பேச்சு வந்தது. தனிப்பட்ட வாழ்வின் அலைகழிப்புகள் மென்னியை நெரிக்காத எழுத்தாளனே இல்லை; அதனால் களைத்து கரை ஒதுங்காத படைப்பாளியே இல்லை. தமிழின் பெரும்படைப்பாளிகள் எப்படியோ இப்படி கண்ணில் மணலை வாரி அடித்து நிலைகுலைக்கும் வாழ்க்கை பிரச்சனைகளை லகுவாய் சமாளிக்கிறார்கள்; அல்லது எதனாலும் எழுத்தை வாழ்க்கை குலையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்களில் ஜெயமோகன் ஒரு ஹை வோல்டேஜ் மின்கம்பி.

 மனிதர் எப்படி ஓய்வில்லாமல் சுழன்று கொண்டே இருக்கிறார் என வியப்பு தோன்றும்? இன்று நாம் அப்படி சுழல்கிறோம், பெரும்பாலானோர், ஆனால் பேஸ்புக்கில், கேளிக்கைகளில்.
 இலக்கியம் போன்று அக உணர்ச்சிகளை குவிக்க வேண்டுகிற, ஆவேசமான உணர்ச்சிநிலைகளை ஏற்படுத்தி தக்க வைக்கிற, மூளை உழைப்பை கடுமையாய் கோருகிற துறையில் அப்படி தொடர்ந்து இயங்குவது மிக மிக சிரமம். அன்றாட வாழ்வின் நெடுந்தொலைவு அலைச்சல்களுக்குப் பிறகு இலக்கிய கூட்டங்களில் அமர்வது தனக்கு மிகவும் ஆசுவாசமான் புத்துணர்வூட்டும் அனுபவம் என பாவண்ணன் குறிப்பிட்டார். அப்போது தான் ஜெயமோகன் பற்றி மேற்கண்டவாறு உரையாடினோம்.
ஜெ.மோவுக்கு இலக்கிய உரையாடல்களைப் பொறுத்த வரையில் இரவு பகல் என இல்லை; எப்போது தீராத ஆற்றல் அவருக்குள் ஒளிச்சுடராய் எரிந்து கொண்டே இருக்கிறது என்றார். நான் தொண்ணூறுகளில் அவரை முதலில் சந்தித்த போது இதைக் கண்டு வியந்திருக்கிறேன். நான் பலமுறை என் நண்பர்களிடத்து சொல்லி சொல்லி அலுக்காத ஒரு நிகழ்ச்சி இது. ஒரு மாலையில் அவரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவரது பேச்சு துவங்கியது. நான் இப்படி திகட்ட திகட்ட இவ்வளவு அறிவார்த்தமாய் ஆழமாய் பேசுகிறவரை முன்பு கண்டதில்லை. ஆனால் விசயம் அதுவல்ல. இரவு மணி எட்டரைக்கு மின்சாரம் போனது. அவர் வீட்டில் அப்போது வேறு யாரும் இல்லை. ஜெ.மோ மிக சுவாரஸ்யமாய் தல்ஸ்தாய் பற்றி பேசிக் கொண்டிருந்தார். யாரென்றாலும் அந்த நொடி பேச்சை நிறுத்தி விளக்கை தேடுவார்கள். ஆனால் ஜெ.மோ பேசிக் கொண்டே போனார். இருளின் ஊடாய் அவரது குரலை மட்டும் பின் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இலக்கிய உரையாடலுக்கு எதுவும் தேவையில்லை, தவிக்கும் இதயத்தைத் தவிர என நான் உணர்ந்து கொண்டேன் அப்போது.
 கன்னிமை கழியாத ஒரு இளைஞனை காமம் அலைகழிப்பது போல் இலக்கியமும் கலையும் அறிவுத் தேடலும் இந்த மனிதனை போட்டுத் தாக்குகிறது என எனக்குத் தோன்றியது. நான் அன்று வீட்டுக்கு சென்ற பின் நள்ளிரவு வரை இதையே யோசித்துக் கொண்டிருந்தேன். தூங்க செல்லும் முன் ஒருநாள் நானும் எழுத்தாளன் ஆவேன் என நினைத்துக் கொண்டேன். எழுதும் ஆர்வத்தினால் அல்ல; புத்தகங்கள் பிரசுரிக்க, புகழ் பெற, விருது வாங்க உத்தேசித்து அல்ல. ஜெ.மோவைப் போல் இவ்வளவு பித்தாக ஒரே விசயத்தில் இருப்பதற்காக. என் வாழ்வை திசைமாற்றிய சம்பவம் அது.
அவர் தனித்து “சொல் புதிது” நடத்திய போதும், ஊட்டி கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்த போது இப்படியான பைத்திய முனைப்பை கண்டிருக்கிறேன். தனியாக ஒவ்வொரு வேலையையும் செய்து முடிப்பார். இப்படி செய்கிற படைப்பாளிகளின் எழுத்துப் பணி தடைபடும்; ஆனால் ஜெமோ இக்கட்டத்தில் கூடுதலாக எழுதுவார்.
எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என ஒருமுறை அவரிடம் வினவினேன். “நான் தேவையில்லாத விசயங்களை தவிர்க்கிறேன். டிவியில் கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. வெட்டி அரட்டைகள் இல்லை…” என்றார்.
ஆனால் இவற்றை மட்டும் கத்தரித்து எறிந்தால் போதுமா? போதாது. எவை தேவையில்லாதவை? இலக்கியத்துக்கு, அறிவு விருத்திக்கு, வாழ்வை அறிவதற்கு தொடர்பில்லாதவை அனைத்தும் தேவையில்லாதவை. எழுத்தாளனாக இருந்தாலும் நாம் செய்ய வேண்டிய அன்றாட காரியங்கள் நிறைய உள்ளன. ஆனால் எழுத்துக்காக அவற்றில் எதையும் எப்போதும் தூக்கிப் போட நாம் துணிய வேண்டும். அப்படி என்றால் எழுத நேரம் நிறைய நிறைய கிடைக்கும். பல சமயம் நம்மால் தவிர்க்க முடிகிற, ஆனால் நாம் தவிர்க்க துணியாத சின்ன சின்ன வேலைகளில் தாம் நம் காலம் விரயமாகிறது. இதை நான் ஜெ.மோவிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.
இப்போதெல்லாம் நான் காலை எழுகையில் இன்று எதை எப்போது எழுத வேண்டும் என முதலில் திட்டமிடுகிறேன். எனது நாள் முழுக்க எழுத்தை நோக்கி முடுக்கி விடப்படுகிறது. எழுத்துக்கு தொடர்பில்லாத பல காரியங்களை செய்தாலும் அவற்றில் என் மன ஆற்றலை செலுத்தாமல் தேக்கி வைக்கிறேன். நான் ஒன்றில் இருப்பேன், ஆனால் உண்மையில் இருக்க மாட்டேன். எழுத்தில் மட்டுமே முழுக்க உண்மையாய் இருப்பேன். மற்ற இடங்களில் இருப்பது போல் பாவனை செய்வேன். அது யாருக்கும் தெரியாத விதம் நன்றாய் நடிப்பேன் – ஒரு புன்னகை, ஒரு தலையசைப்பு போதும், மக்கள் நம்பி விடுவார்கள். என்னை நன்றாய் தெரிந்தவர்களிடம் “இதுவே நான், மாற்றிக் கொள்ள மாட்டேன்” என துணிந்து சொல்ல தயங்க மாட்டேன்.
கடந்த முறை விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது ஜெ.மோ சற்றும் மாறியிருக்கவில்லை எனக் கண்டேன். அவரது பொங்கி நுரைக்கும் மிகை ஆற்றலை தாள முடியாமல் விழா ஒருங்கிணைப்பாளர்கள் துவங்குவதை கவனித்தேன். அவரிடம் இருந்து எப்போதெல்லாம் கண்ணில் படாமல் விலகி இருக்க வேண்டும், எப்போது அவரிடம் பேச வேண்டும், எப்படி அவரை சமாளிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை அப்படி கச்சிதமாய் இயங்க வைக்கும் மின்கலன் ஜெ.மோ தான் – சார்ஜ் செய்ய தேவையில்லாத மின்கலன்.


Comments