ஒரு பின்நவீனத்துவ டீக்கடை


Image result for tibetan men

அது எங்கள் பல்கலையின் பின்னால் உள்ள நெரிசலான சாலையில் உள்ள டீக்கடை. எப்போதும் கூட்டம் மொய்க்கும் கடை. அங்குள்ள தேநீரின் சுவை தனித்துவமானது. அந்த சுவைக்காகவே அர்ப்பணிப்புடன் தேநீர் விசுவாசிகள் எங்கிருந்தோ எல்லாம் வருவார்கள்; திரளாய் படையெடுப்பார்கள். கண்ணூர் பகுதி இனிப்பு வகைகளை புதிது புதிதாய் காட்சிக்கு வைப்பார்கள் – உண்ணியப்பம், பழம்பொரி, மோதகம், இலையப்பம் மாதிரியான ஆக்மார்க் கேரளா தின்பண்டங்கள்.


கடையின் பெயர் மலபார் கபே. வழக்கம் போல் சேட்டன்களே நடத்தி வந்தார்கள். கடந்த சில மாதங்களாய் ஒரு மாற்றம் – வடகிழக்கிலிருந்து ஜாக்கிசானும் அவரது தம்பியும் வந்து டீ ஆற்றிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த சூழலில் அவர்கள் நின்று புழங்குவதே விசித்திரமாய் பட்டது. அவர்களுக்கு மலையாளமோ கன்னடமோ தெரியாது. அரைகுறை ஆங்கிலமும் இந்தியுமே. இன்று ஜாக்கிசான் போடும் தேநீரை சுவைக்க சென்றேன். ஆச்சரியம் பாருங்கள் அதே சுவை குன்றாத தேநீர். யார் ஆற்றினாலும் தேநீரின் தரம் மாறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பிராண்ட் பிராண்ட் என்கிறார்களே அது ஒரு எளிய டீக்கடையிலும் செயல்படக் கூடும் என்பதைக் கண்டேன். KFC போன்ற கடைகளில் யார் டீலர்ஷிப் எடுத்து செய்தாலும் உலகம் முழுக்க ஒரே சுவை தான் இருக்கும். அப்படி ஒரு தரப்படுத்துதல்! நகல் எடுப்பது போன்ற சீரான சுவை.
 எளிய பயிற்சியும் தயாரிப்பு வரைமுறைகளும் பின்பற்றப்பட்டால் கேரளா சேட்டன்களின் கடையை யார் வேண்டுமெனிலும் நடத்தலாம். நாளை ஒரு வெள்ளைக்காரர் நின்று டீ ஆற்றிக் கொண்டிருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கேரள மண்ணின் அசல் சுவையை அவர் அநாயசமாய் கொண்டு வந்து விடுவார்.

Comments