நீங்க சொன்னா தலைகீழாத் தான் இருக்கும் (1)


Naran
எங்கள் ஊரைச்சுற்றி மலைத்தொடர். மலையில் இருந்து இறங்கி வரும் குரங்குகள் மரத்தில் ஏறி மாங்கனிகளை பறித்து வீசும். சில நேரம் அணில் கொய்யாப் பழங்களை கடித்து கீழே போடும். இப்படி அவை நிராகரிக்கும் கனிகள் வெகுசுவையாக இருக்கும். தமிழ் விமர்சகர்கள் யாரையாவது வரிந்து கட்டிக் கொண்டு வம்புக்கிழுத்தால் என் மனதுக்குள் இந்த கனிகள் தாம் தோன்றும்.
நம் விமர்சகர்கள் யாரையாவது சாடினால் நான் தள்ளி நின்று சில நொடிகள் யோசிப்பேன். எந்த படைப்பையாவது கிழித்து தொங்கப் போட்டால், “அப்போ இது நல்ல படைப்பாத் தான் இருக்கும் போல” என நினைத்துக் கொள்வேன்.
இப்படியாக, சமீபத்தில் கடித்து மண்ணில் வீசப்பட்ட கனியான வார்ணாசி சிறுகதையை வெகு நம்பிக்கையுடன் படித்தேன். கதை என்னை ஏமாற்றவில்லை.
 நரன் ஒரு புதிய களத்தை, தனக்கு பரிச்சயமில்லாத சமுதாயத்தில் இருந்து ஒரு கதையை எடுத்திருக்கிறார். சரளமான கதையோட்டம். நிறைய அழகான காட்சி துண்டுகள். பிணத்தை ஏற்றிப் போகும் வாகனத்தில் பின்னங்கதவுகள் நெஞ்சைப் பிளந்து வா என அழைப்பது போல் திறந்திருப்பதாய் ஓரிடத்தில் சொல்கிறார். இது போல் காட்சிபூர்வமான நிறைய இடங்கள் துலங்குகின்றன. இது எனக்கு பிடித்திருந்தது.
இக்கதை மீதான விமர்சனம் இது அழுகாச்சியாக இருக்கிறது என்பது. ஒரு பெண்ணின் கணவன் விபத்தில் சிதைந்து மரணத்துக்கு காத்திருக்கும் நாட்களில் அவளை வெகுவாக துன்புறுத்தி மனரீதியாய் வதைத்து இறுதியாய் சாகிறான். அவளிடம் ஒரு வாக்குறுதி பெறுகிறான் – அவனது பிணத்தை வாரணாசியில் தகனம் செய்வதாய். அதற்கான அவளது பயணமே மொத்த கதையும்.
இப்படியான ஒரு கதையை இரண்டு விதமாய் எழுதலாம்: ஒன்று கண்ணீர் பிசுபிசுக்க. இன்னொன்று, ரொம்ப முடுக்காக, முறுக்கேற்றிய மொழியில் உணர்ச்சியே காட்டாமல்.
 ஒன்று நாடகீயம் (லா.ச.ரா பாணி); மற்றது, கசப்பும் துயரமும் ஓசையெழுப்பாது பின்னால் வந்து உக்கிரமாய் வாசகனின் தலையில் அறையும் வண்ணமான எழுத்து. (அசோகமித்திரன் பாணி). ஒன்று நெகிழ வைக்கும்; இன்னொன்று மௌனமாய் மனம் கசியவும் வாழ்வை குறித்த வியந்து திக்கித்து நிற்கச் செய்யும்.
இரண்டுமே சரி தான். என்னைப் பொறுத்த மட்டில் ரெண்டுமே ஏற்புடையதே. நரன் முதல் பாணியை தேர்ந்தெடுத்திருப்பது ஒன்றும் குற்றமல்ல.
பெண்ணின் கணவன் மரண படுக்கையில் இருக்கையில் அதிகமாய் அழுகிறான், அரற்றுகிறான். ஆனால் அப்பெண்ணோ மௌனமாய் எதிர்கொள்கிறாள். கதையோட்டத்தை பொறுத்தமட்டில், அவனது ஆர்ப்பாட்டத்தை அவளது நிச்சலம் மட்டுப்படுத்துகிறது.
கதையின் இரண்டாம் பகுதி இப்பெண்ணின் அக விடுதலை பற்றியது. குடும்பப் பிணைப்புகளில் இருந்து விடுபட்டு மெல்ல மெல்ல உலகின் வெவ்வேறு வண்ணங்களை, சிறகடிக்கும் பட்டாம்பூச்சி தருணங்களை, அவள் தன் கையில் ஏந்தி ரசிக்கும், தன்னை அறியும் மாற்றம் பற்றியது. இந்த இடம் கேட் சோப்பின் எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளரின் சிறுகதையான “ஒரு மணிநேரத்தின் கதை”யை (The Story of an Hour) நினைவுபடுத்தியது.
“வார்ணாசியின்” சில குறைகளுக்கு அடுத்து வருகிறேன்.
1)   நரனுக்கு கதையை துவங்கின சரளத்துடன் முடிக்க இயலவில்லை. ஒரு பக்கத்துக்கு முன்பே கதை முடிகிறது. ஆனால் அவர் நீட்டிக்கிறார். ஒரு கூர்மையான வசனத்துடனோ பளிச்சென்ற காட்சியுடனே ஒரு கவித்துவ வரியுடனே அவர் இன்னும் சுருக்கமாய் முடித்திருக்கலாம்.
2)   வாகன ஓட்டுநர் நட்ராஜின் பாத்திர வார்ப்பு இருளில் மெல்ல மெல்ல ஒளிபெற்று துலங்கி வரும் ஒரு சிற்பத்தைப் போன்றது. அவரது பாத்திரம் பெரிய ஆகிருதி கொண்டது என்பதால் ஒரு தனி சிறுகதைக்கானது. இக்கதையில் உண்மையில் ரெண்டு பேருக்கு இடமில்லை. ஆனால் ஒரு சிற்ய இருக்கையில் ரெண்டு பேர் இடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது போல் அப்பெண்ணும் ஓட்டுநரும் கதைக்குள் இடம்பிடித்து நெருக்குகிறார்கள்.
3)   நட்ராஜ் சட்டென இன்னொருவனாய் தென்படுகிறான்; அவனது கனிவான முதிர்ச்சியான பரிமாணம் எதிர்பாராமல் இருக்கிறது. அவனது இந்த உருமாற்றத்துக்கான முன்னோட்டத்தை நரன் சரியாய் வழங்கவில்லை எனப்படுகிறது. இது ஒரு தொழில்நுட்ப பிழை மட்டுமே.
4)   பிராமணக் குடும்பத்து மாந்தர்களின் சம்பாஷணை, அவர்களின் பண்பாட்டு சுபாவம், உடல்மொழி இது போன்ற நுணுக்கங்கள் கதைக்குள் சரியாய் வரவில்லை.
குறையில்லாத கதை ஏது? நான் சொல்லியிருப்பது மிக எளிய குறைகளே. எனக்கு இக்கதை பிடித்திருக்கிறது நரன். தொடர்ந்து எழுதுங்கள்!

Comments